அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
சில்லறை காசு... உங்கள் உரிமை!
நான் சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்கு பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது என் அருகில் உட்கார்ந்திருந்த சின்னப் பெண் ஒருத்தி, டிக்கெட் எடுத்துவிட்டு, கண்டக்டரிடம் ஒரு ரூபாய் மீதி கேட்டாள். ''பொல்லாத ஒரு ரூபாய்... சில்லறையெல்லாம் இல்லை!'' என்று சிடுசிடுத்துவிட்டு,

என்னிடம் வந்தார் கண்டக்டர். நான் வேண்டுமென்றே ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்தேன். உடனே, ''ஒரு ரூபாய் குறையுது மேடம்'' என்றார். ''ஒரு ரூபாய் எல்லாம் ஒரு காசா சார். அதுக்கு மதிப்பே இல்லைனு இப்பதான் அந்த பாப்பாகிட்ட சொன்னீங்களே...'' என்று சட்டென்று கேட்டேன். நொந்து போனவர், ''ஸாரி மேடம்... அந்த பாப்பாகிட்ட நீங்க ஒரு ரூபாய் கொடுத்துடுங்க'' என்று முகத்தில் அசடு வழியச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அந்த சின்னப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருக்க... ''நீ ஏன் உன் உரிமையை விட்டுக் கொடுக்கணும். தைரியமா கேள். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்றெல்லாம் வெட்கப்படாதே...'' என்று சொல்ல... தலையாட்டிக் கொண்டாள்.
- பி.கவிதா, கோவிலாம்பூண்டி
இந்த 'தியாகம்’ வேண்டாமே..!
என் தோழி ஒருத்தி, தொடர்ந்து அதிக சோர்வுடன் இருப்பதை பலமுறை கவனித்த நான், கைராசியான பெண் டாக்டர் ஒருவரை பார்க்கச் சொன்னேன். சில சோதனைகளுக்குப் பின்... ''கர்ப்பப்பையில் கட்டி உள்ளது. உடல் உபாதைகளுக்கு காரணமே இந்த கட்டிதான். உடனே ஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டும்'' எனக் கூறி, ஹாஸ்பிட்டல் செலவுத் தொகையையும் குறித்துக் கொடுத்திருக்கிறார் டாக்டர். அதைக் கண்டு மிரண்ட தோழி, 'இது பணம் பெருக்குவதற்கான வழி’ என்று முடிவு செய்து, 'வலியைப் பொறுத்துக் கொள்வோம்’ என அதை அலட்சியப்படுத்தினார்.

மூன்று மாதம் உருண்ட நிலையில், தோழியின் சிரமங்கள் அதிகமாவதைப் பார்த்த நான், ''வேற டாக்டர்கிட்ட பார்க்கலாம். அவரும் கட்டி இருப்பதை உறுதிப்படுத்தினால் ஆபரேஷன் செய்து கொள்ளலாம்'' என வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். அங்கேயும் அது உறுதியாக... பிறகு கணவரிடம் விஷயத்தைக் கூறி ஆபரேஷன் செய்துகொண்டவள், இப்போது புதுப்பொலிவோடு சுகமாக இருக்கிறாள்.
தோழிகளே... நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான், குடும்பத்தினரை நன்கு கவனித்துக் கொள்ள முடியும். ஏதோ 'தியாகம்’ செய்வதாக நினைத்து, உடல் சார்ந்த பிரச்னைகளை அலட்சியப்படுத்தினால், அது நம்மையும், இல்லத்தினரையும் பெரும் துயரத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்பதுதானே உண்மை!
- எஸ்.பரிமளா, கோபிசெட்டிபாளையம்
முடிந்தது திருமணம்... முடியவில்லை வரன் தேடல்?!

எங்களுக்குத் தெரிந்த உறவினரின் பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், அதற்குப் பிறகும் 'மணமகள் தேடலில்' இருக்கும் பலரிடமிருந்தும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அடிக்கடி போன்கள் வந்து கொண்டே இருந்தன. காரணம்... வரன் தேடியபோது அந்தப் பெண்ணின் போட்டோ, பயோடேட்டா, போன் நம்பர் என்று எல்லாவற்றையும் பெற்றுச் சென்ற தரகர், பலரிடமும் அதை தந்திருந்ததுதான். ஒரு கட்டத்தில் அந்தத் தரகரிடம் சென்று போட்டோ, மற்ற விவரங்களை எல்லாம் திரும்பப் பெற்றதோடு, பெண் பற்றிய விவரங்களை யார் யாருக்கெல்லாம் அவர் கொடுத்திருந்தாரோ... அத்தனை பேரிடமும், திருமணம் முடிந்துவிட்ட விஷயத்தை அவர் மூலமாகவே சொல்ல வைத்த பிறகே... போன் வருவது ஓய்ந்தது.

வரன் பார்க்கும் பெற்றோர்களே... திருமணம் முடிந்ததும் போட்டோ, பயோடேட்டாக்களை தரகர்களிடமிருந்து உடனடியாக திருப்பி வாங்குவதோடு... தரகர் மூலமாகவே 'முற்றுப்புள்ளி'யும் வைத்துவிடுங்கள்!
- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்
இது 'மரியாதை’யா..?
அண்மையில் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். பாட்டு, கவியரங்கம், பட்டிமன்றம் என பல நிகழ்ச்சிகள் அருமையாக நடந்தேறின. கடைசியில் அவற்றில் பங்குபெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. உயர்பதவியில் இருப்பவர்களுக்கு விலையுயர்ந்த சால்வையும், பதவியில் குறைவானவர்களுக்கு சின்ன துண்டும் போட்டு 'மரியாதை’ செய்தது... முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது. 'விழா' என்று சொல்லி ஊரையே கூட்டிவிட்டு, இப்படி பாகுபாடு காட்டுவது தவறான அணுகுமுறை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?!
- இ.டி.ஹேமாமாலினி, சென்னை-23