Published:Updated:

உயிர் மொழி - 22

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

தந்த சர்ட்டிஃபிகேட்!

 ##~##
தி மனிதர்கள் பிறவி வேட்டுவர் கள் அல்ல. சிங்கம், புலி, கரடி மாதிரியான வம்சாவழி வேட்டுவ விலங்குகளைப்போல, நீண்ட நகம், கூரிய பற்கள், மின்னல் வேகம் போன்றவை மனிதர்களுக்கு இல்லை. அவர் களிடம் இருந்தது எல்லாம், ஏதோ கொஞ்சம் புத்தி, சின்ன கல் ஆயுதங்கள்... இவ்வளவுதான். இந்த சொற்ப ஆயுத பலத்தோடு, பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாட வேண்டும் என்றால், அறிவுள்ள யாராவது முன்வருவார் களா? 'ரொம்ப ஆபத்தாச்சே, ஆளை விடுங் கப்பா சாமி. நான் பாட்டுக்கு குகையிலேயே கிடக்குறேன்!’ என்றுதானே அவன் நினைத்துஇருக்க வேண்டும்? ஆனால், ஆதிமனித ஆண், இந்த சொற்ப ஆயுத பலத்தோடு வேட்டைக்குப் போகத் தயாராகவே இருந்தான். ஏன்?

இப்படி அவன் வேட்டைக்குப் போகாவிட் டால், பெண்கள் யாரும் அவனை மதிப்பதாக இல்லை + பிற ஆண்களும் அவனுக்கு மரி யாதை தருவதாக இல்லை. ஆக, பெண்களின் ஆதரவு, ஆண்களின் அங்கீகாரம்... இரண்டும் தான் எல்லா காலத்திலும் ஆண்களை ஊக்கு விக்கும் அம்சங்களாக இருந்து உள்ளன. அத னால்தான், வேட்டை மாதிரியான கஷ்டமான காரியங்களில் ஈடுபட்டு, தன் fitness for survival-லை காட்டிக்கொள்ளத் துணிந்தார்கள் ஆண்கள்.

உயிர் மொழி - 22

இதைத்தான் Handicap Principle என்கிறார் பரிணாம உயிரியல் நிபுணர் அமேட்ஸ் ஸஹாவி. இது என்ன விதி? உதாரணத்துக்கு மிகக் கனமான தந்தங்களைக்கொண்ட ஓர் கடா யானையை எடுத்துக்கொள்வோம். அவ் வளவு கனமான தந்தத்தை வளர்த்துக்கொள்வதே ரொம்பக் கஷ்டம். அதைச் சுமந்துகொண்டு காடுகளில் பல மைல் தூரம் தினமும் நடப்பதும், பகைவர்கள் வந்தால் ஓடித் தப்பிப்பதும் ரொம்பப் பெரிய இம்சை. இப்படி தன்னை ஹாண்டிகேப் (ஊனப்படுத்தி) செய்து, பராமரிக்க அதிக எரிபொருள் செலவா கும். காஸ்ட்லியான தந்தத்தைப் பரா மரிப்பதும் கஷ்டம். இத்தனை கஷ்டங் கள் இருந்தும் ஆண் யானைகள் தந் தத்தை வளர்த்துக்கொள்கின்றனவே... ஏன்?

'இவ்வளவு எரிபொருளைச் செலவழித்து, கஷ்டமான காரியத்தைத் தொடர்ந்து செய்து, இன்னும் பிழைத்துக் கொண்டு இருக்கிறேன் என்றால், என்னுடை யவை எவ்வளவு ஃபிட்டான மரபணுக்கள் பாருங்கள்!’ என்று காட்டும் ஒரு சான்றிதழ்தான் அந்தத் தந்தங்கள். சுலபமாகச் சாதிக்கக் கூடிய வற்றில் நிறைய போங்காட்டம் இருக்கும். ஆனால், கடினமானது என்றால், நிஜமாகவே உயர்ரக சரக்கு இருந்தால்தான் முடியும். தன்னி டம் இருக்கும் மரபணுக்கள் உண்மையிலேயே மிக உயர்ந்த ரகமானவை என்று காட்டிக்கொள் ளவே ஆண் விலங்குகள் இப்படி மெனக்கெடு கின்றன. சொல்லி வைத்தாற்போல பெண் விலங் குகளும் இப்படிச் சாதிக்கும் ஆண்களாகப் பார்த்துதான் கூடிக் குட்டி ஈனுகின்றன. இது தான் இயற்கையின் விதி என்றால், மனிதப் பெண்களும் இதற்குக் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும்?

உயிர் மொழி - 22

அதனால்தான், ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்வதற்கு அரிதான காரியங்களைச் செய்து காட்டும் ஆண்களாகப் பார்த்து கூடிக்கொள் கிறார்கள் பெண்கள். அதனால்தான், ஆயுதங்கள் இல்லாத காலத்தில், வீரமாக வேட்டைக்குச் செல்வதை ஒரு ஹை கிளாஸ் நடத்தை என்று பாரட்டினார்கள் பெண்கள். ஆனால், அதே பெண்களோ, ஆயுதங்கள் மிகச் சுலபமாகக் கிடைக்கும் இந்தக் காலத்தில், 'எதற்கு எடுத்தாலும் வெட்டிடுவேன், குத்திடுவேன்னு காட்டுமிராண்டி மாதிரி என்ன இது அசிங்கமா? அமைதியா இரு. அதுதான் வீரம்!’ என விதிகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, புது நிபந்தனைகளை விதிக்கின் றனர்.

இதே Handicap Principle  என்கிற விதியை அனுசரித்துத்தான் மனித ஆண்கள் இன்றும் மிக பகட்டான, அதிக செலவு பிடிக்கும் நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு சராசரி ஆண் மகன்,விலை குறைவான வாகனம் பல இருந்தாலும், இருப்பதி லேயே அதிக எரிபொருள் செலவாகும், உயர் பராமரிப்பு வாகனத்தைத்தான் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது இதனால்தான். அதனால்தான் புகாட்டி, லம்போகினி, மெர்சிடீஸ், ஹம்மர் மாதிரியான மிக அதிக விலை உயர்ந்த வாகனங்களை உரிமையாக்குவதைத் தன் வாழ் வின் லட்சியமாகக்கொண்டு இருக்கிறார்கள் பல ஆண்கள். 'இவ்வளவு ஹை மெயின்டனென்ஸ் சமாசாரத்தை நான் அநாயாசமாக உபயோகிக்கி றேன் என்றால், நான் எப்பேர்ப்பட்ட ஜித்தன் என்று தெரிந்துகொள்’ என்பதுதான் இவர்கள் நடத்தையின் உள் கருத்து!

தன்னை இப்படி ஒரு பெரிய ஜித்தன் என்று காட்டிக்கொண்டால், பெண்கள் எல்லாம் வந்து தன்னோடு ஒட்டிக்கொள்வார்கள், ஆண்கள் எல்லாம் தன்னை 'அடேங்கப்பா... பெரிய ஆளுடா இவன்!’ என்று மிரண்டு மதிப்பார்கள் என்பது ஆண்களின் கணக்கு. மற்றவர்கள் இவனை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன? அதற்காக ஏன் இவன் இவ்வளவு சிரமங் களை மேற்கொள்கிறான்? புகாட்டியும், மெர்சிடீ ஸும் இல்லை என்றால், இவன் செத்தா போய் விடுவான் என்றெல்லாம் கேட்கத் தோன்றலாம். இதற்கு ஆண்களைக் குறை கூறி அர்த்தம் இல்லை. காரணம், அவர்களுக்கே தெரியாது, இது அவர்கள் உடம்பில் ஊறும் டெஸ்டோஸ் டீரான் படுத்தும் பாடு என்று!

டெஸ்டோஸ்டீரான் என்பது ஆண்மைப்படுத்தும் ஹார்மோன். இது இருந்தால் உடலும், மூளையும், மனமும் பேராண்மை பெற்றுவிடும் என்பதுபற்றி நாம் ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். டெஸ்டோஸ்டீரானின் இன்னொரு மிக நுணுக்கமான தன்மை, இது உடம்பில் dominance என்கிற ஆதிக்க மனப்பான்மையைத் தூண்டுகிறது. அதனால், தன் கூட்டத்தில் தானே முந்தியிருக்க வேண்டும் என்கிற வேட்கை ஆண் களுக்கு வந்துவிடுகிறது. இப்படி முந்தி இருப்பதை அவன் உணர்ந்துவிட்டால், அவனுக்கு இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் சுரக்க ஆரம்பித்துவிட, இதுவே பெரிய போதையைத் தந்துவிடுகிறது.

உயிர் மொழி - 22

இந்தப் போதையை நீடித்துக்கொள்ள இவன் தொடர்ந்து மற்ற ஆண்களை முந்திக்கொண்டே இருக்க வேண்டும். திடீரென தோற்றுப்போனால், அவனது டெஸ்டோஸ்டீரான் அப்படியே பல்டி அடித்து, மிகக் குறைந்த அளவுக்குப் போய்விடும். அத்துடன் அது தந்த போதை, துணிச்சல், தன்னம்பிக்கை எல்லாமே காணாமற் போய்விட, இதனால் ஆண்கள் அடையும் மன உளைச்சல் ரொம்பவும் துயரமானது. இந்தத் துயரில் இருந்து தம்மைக் காப்பற்றிக்கொள்ளவே ஆண்கள் எப்போதும் முந்திக்கொண்டு, பிறரது மதிப்பு மரியாதையைப் பெற ரொம்ப மெனக் கெடுகிறார்கள். இதற்காக, கடினமான காரியங் களை எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்கள். பெண்களும், 'வசதியாப் போச்சு’ என்று ஆண்களுக்குக் கொம்பு சீவி விட்டு, அவர்களை மேலும் மேலும் ஊக்குவிக் கின்றனர். டெஸ்டோஸ்டீரானின் தூண்டுதல் + பெண்களின் ஊக்கம், இரண்டும் சேர்ந்து ஆண்கள் தமக்குள் போட்டியிட்டுக்கொள்ள, பின்புலத்தில் அமைதியாகக் காத்திருந்து, போட்டிகளில் தோற்கும் ஆண்களை எல்லாம் அப்படியே வடிகட்டிவிட்டு, ஜெயிக்கும் ஆண் களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களது மர பணுக்களை அடுத்த தலைமுறைக்கு பார்சல் கட்டிவிடுகிறார்கள் பெண்கள்.

அப்படியானால் தோற்றுப்போன ஆண்கள் என்ன செய்வார்கள்?

(காத்திருங்கள்...)