ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

குளத்தில் விழுந்த பந்து!

ப.நீதிமணி பிள்ளை

##~##

நான்கு சிறுவர்கள், ஒருவர் மீது ஒருவர் பந்தை வீசி விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், அந்த விளையாட்டு சலித்துப்போனது. 'பந்தை யார் ரொம்பத் தூரம் வீசுவது’ என்ற போட்டி தொடங்கியது.

உடம்பை எதிர்ப்பக்கம் சாய்த்துப் பலத்தைத் திரட்டி, மாறி மாறிப் பந்தை வீசினார்கள். அதில் ஒருவன் திசை மாற்றி வீச, பந்து புதர் மறைவில் இருந்த குளத்தில் விழுந்தது.  புதரில் நுழைந்து, பந்தைத் தேடப் பயம். பெரியவர்கள் யாரையாவது அழைத்துவரலாம் எனப் புறப்பட்டார்கள்.

பந்து விழுந்தபோது, அந்தக் குளத்தின் மேற்பரப்பில் ஓர் ஆமை நீந்திக்கொண்டிருந்தது. தவளைகளும் ஆங்காங்கே இருந்தன. பந்து விழுந்ததும் அந்த ஆமையும் தவளைகளும் மிரண்டு தண்ணீரின் ஆழத்துக்கு ஓடின.

ஆமை கொஞ்சம் தைரியசாலி. உள்ளே சென்று குளத்தின் மேற்பரப்பைப் பார்த்தது. ஒரே ஆச்சர்யம். 'குளத்தில் விழும் கெட்டியான பொருள்கள் தானாகவே தண்ணீரில் இறங்கி தரைக்குச் சென்றுவிடும். இது மட்டும் மிதக்கிறதே எப்படி?’ என்று குளத்தின் மேற்பரப்புக்கு வந்தது.

தூரத்தில் இருந்தபடி பந்தை உற்றுப் பார்த்தது. 'இது உயிருள்ளதா... உயிரற்றதா?’ என்ற கேள்வி ஆமைக்கு எழுந்தது. தன் அசைவுகளை இது கவனிக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, உடம்பை அப்படியும் இப்படியுமாக அசைத்தது.

பிறகு, தூரத்தில் இருந்து எச்சரிக்கையுடன் ஒரு சுற்று சுற்றி வந்தது. பந்து அமைதியாக இருந்தது. அடுத்து, பந்தைக் கொஞ்சம் நெருங்கி, முன்னங்கால்களை வேகமாக அலசி, தண்ணீரில் சலசலப்பை ஏற்படுத்தியது.  அதைப் பார்த்ததும்  தவளைகளும் நண்டுகளும் மேலே வந்து, ஆமையுடன் சேர்ந்து கொண்டு தண்ணீரில் சலசலப்பை ஏற்படுத்தின. பந்து அவர்களை எதுவும் செய்யவில்லை.

குளத்தில் விழுந்த பந்து!

பந்தின் அருகில் சென்ற ஆமை, அதைத் தொட்டுப்பார்த்தது. 'சரி, இதனால் ஆபத்து எதுவும் இல்லை. இது ஓர் உயிரற்ற பொருள்’ என்று தெரிந்துகொண்டது.

தண்ணீரில் மிதக்கும் அந்த அதிசயப் பொருளைக் குட்டிகளிடம் காட்ட, எடுத்துச்சென்றது. ''பிள்ளைகளே... உங்களுக்காக நான் ஒரு அதிசயப் பொருளைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்றது தாய் ஆமை.

பந்தைப் பார்த்த குட்டிகள், ''எங்கிட்டக் கொடுங்க... எங்கிட்டக் கொடுங்க...'' என்று கைகளை நீட்டின. அவற்றைச் சமாதானப்படுத்தி, ''ஒவ்வொருவராகப் பாருங்கள்'' என்று ஒரு குட்டியிடம் கொடுத்தது தாய் ஆமை.

அந்தக் குட்டியால் பந்தைக் கெட்டியாகப் பிடிக்க முடியவில்லை. பந்து கை நழுவி, விர்...என மேலே எழுந்தது. அதைப் பிடித்துத் தொங்கியபடியே குட்டியும் மேலே போனது.

இதை, அங்கே இருந்த உயிரினங்கள் வாய்பிளந்து பார்த்தன. 'ஆகா... உயிரே இல்லாமல் நீந்துகிறது. இறக்கை இல்லாமல் மிதக்கிறது. இது கடவுள் அனுப்பிய விசித்திரப் படைப்புதான்’ என்று வியந்தன.

தாய் ஆமைக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே கரைக்கு வந்து அந்தப் பந்தைப் பிடித்தது.  அதன் மேல் ஒரு குட்டியைப் படுக்கவைத்து, தரையில் தட்டியது. பந்து மேலே எழும்ப, அந்தக் குட்டியும் உற்சாகமாய் மேலே சென்று திரும்பியது.

இப்படியே ஒவ்வொரு குட்டிக்கும் விளையாட்டுக் காட்டியது. இதைப் பார்த்த தவளை மற்றும் நண்டுகள், ''எங்க பசங்களையும் விளையாட்டில் சேர்த்துக்கங்க'' என்றன.

தாய் ஆமை சம்மதித்தது. குட்டித் தவளைகளும் நண்டுகளும் பந்தின் மேல் உற்சாகப் பயணம் செய்தன.  எல்லாம் விளையாடிக் களைத்துப்போயின. அதன் பிறகு, தண்ணீரில் மிதந்த அந்தப் பந்தை, மீன்களும் தண்ணீர்ப் பாம்புகளும் மூக்கால் உருட்டி விளையாடின.

குளத்தில் விழுந்த பந்து!

கொஞ்ச நேரத்தில்... பந்தைத் தொலைத்த சிறுவன், தன் அக்காவுடன் வந்தான். சத்தம் கேட்டதும் குளத்து உயிரினங்கள் தண்ணீருக்கு அடியில் ஓடி ஒளிந்தன.

சிறுவனும் அவன் அக்காவும் ஒரு நீளமான குச்சியால், பந்தைத் தள்ளித் தள்ளி கரைக்குக் கொண்டுவந்தார்கள். ''உனக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இனி அவர்களுடன் விளையாடாதே. யாருக்கும் பந்தைக் கொடுக்காதே'' என்றாள் அக்கா.

''நம்மிடம் இருக்கும் ஒன்றை, நாமே அனுபவிப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? நான்கு பேருக்குக் கொடுத்து, அவர்களையும் மகிழ்ச்சியில் பங்கெடுக்க வைப்பதுதானே சிறந்தது'' என்றான் தம்பி.

''அய்யா, குட்டி மகானே... இதை எல்லாம் நல்லாப் பேசு. பந்தைத் தேடுவதற்கு மட்டும் என்னைக் கூப்பிடு'' என்றாள் அக்கா, செல்லக் கோபத்துடன்.

தன்னுடைய நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், முகம் தெரியாத வேறு நண்பர்களின் சந்தோஷத்துக்கும் அந்தத் தம்பி உதவி இருக்கிறான் என்பது தெரியாமலே அவர்கள் கிளம்பினார்கள்.

குளத்தில் இருந்த ஆமைக் குட்டிகளின் கண்களில், அந்தப் பந்தை இழந்த ஏக்கம் தெரிந்தது. ஆனாலும், அந்த நாள் அந்தக் குளத்து உயிரினங்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.