மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 10

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

##~##

 விழிப்பு வந்தபோது ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் வினோதினி. அது எந்த இடம் என சுதாரிக்க முடியவில்லை. உட்கார்ந்தால் தலையில் இடிக்கக் கூடாது என திட்டமிட்டுக் கட்டப்பட்ட சிறிய படுக்கை அறை. சிறிய வெளிச்சம். அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறோமா என்ற இயல்பான சந்தேகம் வந்துபோனது. அது ஹாஸ்டல் வாசனை இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அசைவற்றுப் படுத்திருந்தாள். அசைய முடியவில்லை என்பதுதான் காரணம்.

அறுந்து அறுந்து விழுந்த நினைவுகளை ஒட்டவைக்க அவள் முயன்றாள். மிகுந்த சோர்வாக இருந்தது. படுக்கையில் பரவிக்கிடக்கிறோம் என்ற அனிச்சை உணர்வில் உடையைச் சரிப்படுத்த நினைத்தாள். உடை என்று எதுவும் இல்லையோ என்ற அச்சம் அலைமோதியது. சக்தியைத் திரட்டி விருட்டென எழுந்து பார்த்தாள். நீல நிற ஜெர்க்கின் போன்ற அவளுக்குச் சம்பந்தமில்லாத இறுக்கமான உடை. அந்த அதிர்ச்சியே அவளை இயக்கியது. மூளையில் ஆக்ஷான்கள் துளிர்த்தன.

அகிலன், ஊர், வேலை, இன்ஸ்பெக்டர் என அடுத்தடுத்து அணிவகுத்தன(ர்). சுடிதார் எடுக்கப் போனது நினைவுவந்தது. 'சுமி... சுமி எங்கே?’ - எழுந்து நிற்கப் போராடிய நேரத்தில், மேலே இருந்த கண்ணாடிக் குமிழ் போன்ற மூடி தானாகவே திறந்து மேலே மேலே உயர்ந்தது. அவள் மெள்ள தன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். அது ஓர் உள் விளையாட்டு அரங்கம் போல பிரமாண்டமாக இருந்தது. அவளைப் போலவே வரிசையாக பலரும் படுக்கையில் இருந்தனர். சிலர் எழுந்து அவளைப் போலவே பேதலித்தனர்.

அதே நேரத்தில், 'பூமியில் இருந்து வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு வணக்கம்’ என்றது ஒரு குரல்.

திடீர் குரலும் குரல் சொன்ன தகவலும் சிலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு எரிச்சலாகவும் இருந்தது.

ஆபரேஷன் நோவா - 10

வினோதினி, இதுபோன்ற விளையாட்டுகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

குரல் வந்த திசையை அனுமானிக்க முடிய வில்லை. குரல் அவர்களிடம் இருந்தே வந்தது போலத்தான் ஒவ்வொருவரும் நினைத்தனர்.

வண்டு, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டது. லாங்குவேஜ் கன்வெர்ட்டர், ஜி.எல். 581 பற்றி சிறு குறிப்பு வரைந்துவிட்டு, பூமியில் ஏற்படப்போகும் ஆபத்தையும் சொல்லியது வண்டு.

வினோதினி 'என்ன இது உளறல்’ என்ற பாவனையில், பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தாள். இடதுபுறம் ஓர் ஆங்கிலேயனும் வலதுபுறம் ஓர் ஆங்கிலேயியும் இருந்தனர். மேற்கத்திய நாட்டினரை நாடு பிரித்து அடையாளம் காணுவது அத்தனை சுலபமாக இல்லை. அவர்கள் துணிக்கடைக்கு வந்ததுமாதிரியும் தெரியவில்லை. 'இது எல்லாம் யாருடைய விளையாட்டு’ என யோசித்தபடி, பொறுமையாக இருந்தாள் வினோதினி.

ஒவ்வொரு கேபினும் வந்து சேரும்போது அதில் உள்ளவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதில் வண்டுக்கு ஒரு பக்குவம் ஏற்பட்டிருந்தது; பொறுமை அதிகரித்திருந்தது. மனிதர்களைச் சமாளிப்பதில் செயற்கை அறிவு பலப்பட்டிருந்தது.

தன்னை 'வண்டு’ என அறிமுகப்படுத்திக் கொள்வதில் இப்போதெல்லாம் மகிழ்ச்சி அடைந்தது. தன் ஈகியம் பிட் புராஸஸரின் வேகத்தையும் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தது.

வினோதினி, ''அது என்ன 'ஈகியம்’?'' என்றாள்.

''அது ஒரு தமிழ் வார்த்தை. ஒன்றின் அருகே 12 சைபர்களைப் போட்டால் அந்த எண்ணுக்குப் பெயர்தான் 'ஈகியம்’. தமிழர்கள், 20 சைபர்கள் வரை எண்ணுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். உலகில் அத்தனை பழமையான எண் எந்த மொழியிலும் இல்லை. அதனால்தான் சூட்டினோம்.''

ஆபரேஷன் நோவா - 10

''நானும் தமிழ்தான்'' என்றாள் வினோதினி.

''தெரியும். சந்தோஷப்படுவாய் என்றுதான் சொன்னேன். உன்னைப் போலவே டால்பின் டாட்டூ குத்திய இன்னோர் ஆளைப் பற்றி சொன்னால் இன்னும் சந்தோஷப்படுவாய்'' என்றது.

வினோதினி திகைப்புடன், ''அகிலனா?'' என்றாள்.

சுற்றியிருந்த மற்ற சிலர், வினோதினி காற்றுடன் பேசிக்கொண்டிருப்பதை வைத்து ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தனர். சிலர் புலம்பலும் கோபமுமாக இருந்தனர்.

வண்டு, ''அகிலன் இப்போது சலவைப் பிரிவில் இருக்கிறான். அம்மாவை எதிர்த்துப் புரட்சி செய்த சிலர், சலவைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டனர்'' என்றது.

''என்னது... புரட்சி செய்தானா? புரட்சி செய்தால் லாண்டரி கடையில் வேலை செய்ய வேண்டுமா?''

''சலவை என்றால்... மூளைச் சலவை. புரட்சியை அழித்துவிட்டுத் திருப்பி அனுப்பி வைப்பார்கள்'' வண்டு பொறுமையாகச் சொன்னது.

டர்த்தியான பள்ளத்தாக்கு. நாய்க்குடை போல கவிந்திருந்த மரங்களால் பகல் நேரத்திலும் அங்கு இருள் படர்ந்திருந்தது. இரண்டு மலை அடுக்குகளுக்கு இடையே ஓடியது ஒரு சிறிய ஓடை. பூமியில் இல்லாத வினோதத் தாவரங்கள் அங்கே இருந்தன. அவை தாவரங்கள் என்பதற்கான ஒரே ஆதாரம், அவை மண்ணில் இருந்து வளர்ந்து வந்தவை என்பதுதான். மற்றபடி ஏதோ கிராஃபிக் டிசைனரின் கைவண்ணம்போல இருந்தது அந்தப் பகுதி. ஓடையை ஒட்டி குகை போன்றதொரு பாறை இடுக்கு.

கெப்ளர் 78பி கிரகப் பருந்து ஜந்துகள் நான்கும் அங்கே முகாமிட்டு இருந்தன. அவை 'டெர்பி’ என்று தங்கள் இனத்தை அழைத்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண். 565600 என்பது அவற்றின் குடும்ப எண். இங்கே வந்திருக்கும் நான்கும் அவர்கள் எண்ணில் 1, 2, 3, 4 என தங்களைக் கணித முறையில் அழைத்துக்கொண்டன. பேரும் புகழும் கடமைக்கு எதிரி என்பது கெப்ளர் 78பி-யில் பொதுவிதி. யாருக்கும் பெயரும் இல்லை; புகழும் இல்லை. எல்லா சாதனைகளும் 'கடமை’ என்ற பிரிவில் அடங்கும். கடமையைச் செய்துவிட்டு அதற்கான பலனை எதிர்பார்க்கும் உயிரினங்களாக அவை உருவாகியிருந்தன.

அவற்றின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் வேலைக்காரத் தேனீக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வேலைக்காரத் தேனீ எத்தனை நூறு மைல்கள் சென்றாவது தேனைக் கொண்டுவந்து சேர்க்கும். எதிராளிகள் வந்தால், போராடி உயிரைவிடும். டெர்பிகள் கிரகம்விட்டு கிரகம் போய் நைட்ரஜன் தேடும்; தகவல் சொல்லும். இவை தவிர தொழில்நுட்ப டெர்பிகள், ஆய்வு டெர்பிகள் என இன்னும் சில ரகங்கள் இருந்தன. சாதி, மதம் இல்லை; உயர்வு தாழ்வு இல்லை. கடமைப் பிரிவு மட்டும்தான். யாருக்கும் அங்கே சிலைகள் வைக்கப்படுவது இல்லை. பேனர்கள், போஸ்டர்கள், முதுகில் குத்துதல், காதுகுத்துதல் எதுவும் வழக்கத்தில் இல்லை.

தண்ணீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு, சரியாக இருப்பதாகச் சொன்னது டெர்பி ஒன்று. மண், நீர் இரண்டிலும் போதுமான அளவு நைட்ரஜன் இருப்பது அவற்றுக்கு சந்தோஷம் அளித்தது. பல்வேறு கோள்களில் இப்படி இறக்கிவிடப்பட்ட நான்கு டெர்பிகளும் அங்கே நைட்ரஜன் இருக்கிறதா என்று சோதித்துவிட்டு தயாராக இருக்க வேண்டும். இறக்கிவிட்டுப்போன கெப்ளர் ஸ்பேஸ் ஷிப், மீண்டும் 42 நாட்கள் இடைவெளியில் வரும். நைட்ரஜன் இருக்கும் தகவலைச் சொன்னால் குடியேற்றத்துக்கான இன்னும் கொஞ்சம் டெர்பிகள் வந்து சேரும். இல்லையென்றால், இந்த நான்கு டெர்பிகளும் வந்த மாதிரியே ஸ்பேஸ் ஷிப்பில் ஏறி அடுத்த கோள் நோக்கிப் போகும்.

நைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஜி.எல். 581-ஐ தாம் பயன்படுத்தலாம் என்று நான்கு டெர்பிகளும் முடிவெடுத்திருந்தன. ஸ்பேஸ் ஷிப் வருவதற்கு இன்னும் அவகாசம் இருந்தது. அதற்குள் இங்கிருக்கும் மனிதர்களை அப்புறப்படுத்திவிடுவது நல்லது என்று உறுதிசெய்திருந்தன.

ஆபரேஷன் நோவா - 10

மனிதர்களின் போக்குகள் அவற்றுக்கு வித்தியாசமாக இருந்தன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள், தனித்தனி வருத்தங்கள் இருப்பது அவற்றுக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. பரஸ்பர அவநம்பிக்கையோடுதான் இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கிறார்களோ என நினைத்தன. ஆனால், அது பற்றி ஆராய்ச்சி செய்ய அவற்றுக்கு அவகாசம் இல்லை.

அவற்றின் இறக்கை போன்ற பிடிமானத்தில் அந்த உலக்கை ஆயுதம் இருந்தது. உடலில் உள்ள அபரிமிதமான நைட்ரஜன் மூலம் அதை இயக்கின. வெறுப்பில் அங்கே தூரத்தில் போய்க்கொண்டிருந்த ஒரு க்ரீனியை 'ஸ்ஸ்ஸ்...’ என்று சுட்டது டெர்பி நான்கு. க்ரீனி இருந்த இடத்தில் சாம்பலும் சற்று கார்பனும்தான் மிச்சம்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வேண்டிய அளவுக்கு விலகி இருக்கிறார்கள் என்பது அவற்றுக்கு வசதியாகத்தான் இருந்தது. டெர்பி ஒன்று சொன்னது, ''கூடி வாழ்வதோ, வேலைகளைப் பகிர்ந்துகொள்வதோ இவர்களிடம் இல்லை. தனித்தனியாகத் திட்டமிடுகிறார்கள். பிறகு, கூடுகிறார்கள்; குழப்பிக்கொள்கிறார்கள்.''

நான்கும் தலையோடு தலை உரசி, ''சில் சில்'' என்றன. எகத்தாளமாகச் சிரிப்பதாக அர்த்தம்.

மூன்று, ''அப்படியானால் இவர்களைத் தீர்த்துக்கட்டுவது சுலபம்'' என்றது.

''இல்லை'' என்றது இரண்டு. ''அத்தனை பேரையும் தீர்த்துக்கட்ட வேண்டியது இல்லை. அவ்வளவு ஆயுதங்கள் நம்மிடம் இல்லை. ஒரே ஓர் ஆளைத் தீர்த்துக்கட்டினால் போதும். மற்ற அனைவரும் தானாகவே இறந்துபோய் விடுவார்கள்.''

''யார் அந்த ஓர் ஆள்?''

''அவரை இவர்கள் 'அம்மா’ என்று அழைக்கிறார்கள்.''

அனைத்தும் மீண்டும், ''சில் சில்'' என்றன தலையோடு தலை உரசி.

- ஆபரேஷன் ஆன் தி வே...