மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 11

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

##~##

 ந்திருக்கும் எதிர் உயிரிகள் பற்றி, மினிமம் எச்சரிக்கைகளை மட்டுமே சொல்லியது வண்டு. அவை, மனிதர்களோடு எந்தவிதத்திலும் இயைந்து போகவில்லை என்பதோடு, ஆபத்தானவை என்றும் இனம் பிரித்திருந்தது. அங்கு வந்து சேர்ந்திருக்கும் வேற்றுக் கிரக கிரியேச்சர்கள் பற்றி, அம்மாவுக்குப் பூமியில் இருந்தும் சில விவரங்கள் வந்திருந்தன.

'அவை சிவிலைஸ்டு ஏலியன்கள். நைட்ரஜன் உண்டு வாழ்பவை. மனிதர்களைப் போல நைட்ரஜனை, தாவரங்கள் மூலம் பெற்று அமினோ அமிலமாக மாற்றி சக்தி பெற வேண்டிய தேவை இல்லாதவை. அவற்றின் உணவு, ஆயுதம் எல்லாமே நைட்ரஜன்தான். இவை மட்டும்தானா இன்னும் வருமா? தெரியாது. அவற்றின் பின்னணி தெரியாமல் எதுவும் செய்ய வேண்டாம்’ என்றே பூமியில் இருக்கும் விஞ்ஞானக் கழகத்தினரும் சொல்லியிருந்தனர். இப்போது 'அழித்துவிடுங்கள்’ என்று ஒரு வரி உத்தரவு வந்திருந்தது.

அம்மாவுக்குக் கூடுதலாக இந்தப் பணி. ஆபத்து இல்லாத கிரகம் என்று தீர்மானித்துதான் மக்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர். இந்த மாதிரி நேரத்தில் உடனடியாக சூழ்நிலையைக் கிரகித்து, நாம் இடும் ஆணைகளைக் கேள்வி கேட்காமல் செயல்படுத்தும் ஆட்கள் தேவை. வந்திருந்த 40 ஆயிரத்து சொச்சம் பேரில் சூழ்நிலையைக் கிரகிக்கும் ஆட்கள் குறைவு. அதிலும் நமது ஆணைகளை ஏற்றுச் செயல்படுபவர்கள் அதனினும் குறைவு. நிலைமையை எதிர்கொள்வதற்கு இங்குள்ள விஞ்ஞானிகளின் உதவியை நாட வேண்டியிருந்தது.

'அழித்துவிடுங்கள்’ என்றால்... எப்படி? இங்கு போர் புரிவதற்கான எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. பூமியில் மீண்டும் அழுத்திக் கேட்டபோது, கேப்ரியல், மைக்கேல், கார்ட்டர் ஆகியோரின் உதவியை நாடும்படி சொல்லி விட்டனர். மூவரும் நாசாவில் பணியாற்றியவர்கள்.  

ஆபரேஷன் நோவா - 11
ஆபரேஷன் நோவா - 11

மூவரையும் மத்தியக் கேந்திரத்துக்கு அழைத்து வந்திருந்தனர். 'அம்மா எதற்காக அழைத்தார்?’ என யூகிக்க முடியாமல், மூவரும் காத்திருந்தனர். கார்ட்டருக்குத்தான் குழப்பம் அதிகமாக இருந்தது. தண்டனைக்காகவா எனத் தெரியவில்லை. ஏடாகூடமாக ஏதாவது பேசிவிட்டோமா எனப் பின்னோக்கிப் பார்த்தார். 'நாம் ஒன்றும் அடிமைகள் இல்லை’ என்று ஒருதரம் ஹென்ரிச்சிடம் வீராவேசமாகச் சொல்லியது நினைவுக்கு வந்தது.

ஏற்கெனவே அகிலன், ஆலீஸ், வசிலியேவ், கேத்ரின்... ஆகிய நால்வரும் மூளைச்சலவை செய்யப்பட்டு புத்தம் புதுசாக வந்தனர். அவர்கள் பழைய நிலைமைக்கு வருவதற்கு ஒரு மாதமாவது ஆகும். மூளையில் ஷார்ட் டைம் மெமரி, லாங் டைம் மெமரி நியூரான்களின் திறனைப் பொறுத்துதான் தேறி வருவார்கள். இந்த நிலைமையில் இவர்கள் அழைக்கப்படவே இயல்பாக இந்த அச்சம். 'மத்தியக் கேந்திரம்’ என்ற வார்த்தைகளே கார்ட்டருக்கு கொலைக்களம் மாதிரிதான் காதில் விழுந்தது. அது ஓர் அறையா, அரங்கமா என அறுதியிட முடியவில்லை.

மூன்று பேரும் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். கேப்ரியல், அம்மாவின் கையாள். மைக்கேல், சலவைப் பிரிவுக்குப் போய் வந்ததில் இருந்து ஒருவித ஞான நிலையிலேயே இருந்தார். திகிலில் இருந்தது கார்ட்டர் தான். அந்த நேரத்தில் அவர்களின் முன்னே அந்த ஒளித்தடம் தெரிந்தது. அது அம்மாவின் வருகை என அறிந்திருந்ததால் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். முதலில் சிக்னல் கிடைக்காத டி.வி. போல ஒளிப் பிசிறுகள் தோன்றி, பிறகு அம்மாவின் உருவம் நிதானத்துக்கு வந்தது.

கார்ட்டர் வாயடைத்துப் போனார். அவர் இப்போதுதான் முதல்முறையாக அம்மாவைப் பார்த்தார்.

''நீ... நீங்கள்?'' என்று தடுமாறினார்.

''அம்மா'' என்றார் அம்மா.

அம்மா எனப்பட்டவரை அந்த மூவரும் 'பேத்தி’ என்றே அழைக்கலாம். அத்தனை இளம் அம்மா.

''நீ ரோஸிதானே? ரோஸி... ஐயோ! நீ ஏன் இப்படி இருக்கிறாய்?'' என்று தடுமாறிய கார்ட்டர், ''மைக்கேல், உங்கள் பெண் ரோஸி'' என்றார் அவரை நோக்கி.

சலவைத் துறையில் சென்டிமென்ட் நினைவுப் பகுதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருந்த மைக்கேல், ''ஆமாம்... அதற்கென்ன?'' என்றார்.

''என்னுடைய பதிலும் அதே கேள்விதான். ஆமாம் அதற்கென்ன?'' என்றார் அம்மா.

''இதற்காக யாரும் வீணாக அதிர்ச்சி அடைய வேண்டாம். அதற்கு இப்போது நேரம் இல்லை. நாம் பூமியில் இருந்து உயிர் பிழைக்க வந்திருக்கிறோம். 41 ஆயிரம் பேரைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அத்தனை பேரின் உணவு, உறையுள், உயிர் வாழும் சந்தர்ப்பம் இவைதான் இப்போது முக்கியம். செயற்கை உணவோடு, இயற்கை உணவும் இனிமேல் கிடைக்கும். அதில் எல்லாம் பிரச்னை இல்லை. ஆனால்...'' என்று குரல் நடுங்க ஏதோ சொல்ல நினைத்தார் கேப்ரியல்.

ஆபரேஷன் நோவா - 11

''நான் விளக்குகிறேன் கேப்ரியல்...'' என்ற அம்மாவின் முகத்தில் தடுத்தாட்கொண்ட பெருமிதம்.

''பூமியில் இருந்து நாம் வந்ததுபோலவே இன்னும் ஒரு கிரகத்தில் இருந்து வேறு உயிரினங்களும் இந்தக் கிரகத்தைச் சொந்தம் கொண்டாட நினைக்கின்றன. சில வருடங்களுக்கு முன் நாசா ஆய்வுக்கூடத்தில் நாம் அடையாளம் கண்ட வாழ உகந்த கோளில் இருந்துதான் அவை வந்திருக்கின்றன. கெப்ளர் 78 பி. நம் துரதிர்ஷ்டம்... அவற்றுக்கு வாழ்வதற்கு மட்டும்தான் தெரியும். வாழ்வை அனுபவிக்கும் பழக்கம் அவற்றிடம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், அவற்றிடம் கேமரா உண்டு. அவற்றை வைத்து சினிமா எடுப்பது இல்லை. கண்காணிப்புக்கு மட்டும்தான்.''

அம்மாவின் கையில் இருந்த காம்ஸ்லேட்டில் அந்த ஏலியனைக் காட்டினார்.

''ஏன் இங்கே வந்திருக்கின்றன?'' - மைக்கேல் கேட்டார். அவரிடம் மகளைத் தேடிப் புலம்பிய பாசத்தின் தடயமே இல்லை.

''அவை, நைட்ரஜன் புசிப்பவை. நைட்ரஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இங்கே வந்திருக்கின்றன.''

''நேரடியாக நைட்ரஜனைப் புசிக்குமா?'' என்றார் மைக்கேல்.

''ஆமாம். இங்கே இவ்வளவு நைட்ரஜன் இருப்பது தெரிந்ததும் கொள்ளை ஆசையோடு முகாமிட்டிருக்கின்றன. அவை அசெக்ஸுவல் உயிரினங்கள். இரண்டாகப் பிரிந்து பல்கிப் பெருகுவதாகத் தெரிகிறது.''

''ஓ காட்!'' என்றார் கார்ட்டர்.

''அவரிடம் எல்லாம் முறையிட முடியாது. வேகமாக அவற்றை அழிக்க வேண்டும். கெப்ளர் 78 பி-யில் இருந்து அவற்றின் சுப்பீரியர்கள் வருவதற்குள்.''

மூவரும் யோசிக்கிறார்களா, சோர்ந்து விட்டார்களா எனத் தெரியவில்லை. அமைதியாக அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

''அவற்றுக்கு உணவு, எரிபொருள் எல்லாமே நைட்ரஜன் என்கிறீர்கள்... அப்படித்தானே? அப்படியானால் இங்கு இருக்கும் நைட்ரஜன் அளவைக் குறைக்க முடியுமா?'' என்றார் கேப்ரியல்.

''மிஸ்டர் கேப்ரியல், இது பூமியைவிட பெரிய கிரகம். காற்றில் 80 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கிறது. நடக்கிற கதை இல்லை. அவை நேரடியாக நைட்ரஜன் புசிப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. விடையும் அங்குதான் இருக்க வேண்டும்'' மைக்கேல் நாசாவில் பணியாற்றிய முனைப்போடு பேசினார்.

''ஆமாம். நைட்ரஜன் மூலக்கூறுகளை அமினோ அமிலங்களாக மாற்றுவதன் மூலம்தான் உணவாக்க முடியும். அவற்றுக்கு அதற்கான சிஸ்டம் அவற்றின் வயிற்றில் இருக்கிறது.''

''தாவரங்களின் வேர்களைச் சுற்றியுள்ள பாக்டீரியாக்கள், நைட்ரஜன் மூலக்கூறுகளை அணுக்களாக உடைத்துத் தருகின்றன. அவற்றின் உடம்பிலே அந்த பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கலாம்'' என்றார் கேப்ரியல்.

''நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கார்ட்டர்?''

''எனக்கு நினைக்கும் சக்தியே போய்விட்டது. பூமியில் இருந்து வந்துசேர்ந்த அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. இப்போது ஏலியன் பயம் வேறு சேர்ந்துகொண்டது.''

''இரண்டு நாள் பயிற்சியாக சலவைத் துறைக்குப் போய் வருகிறீர்களா? மைக்கேலைப் பாருங்கள் எவ்வளவு உற்சாகமாக மாறிவிட்டார்?'' - அம்மா கேட்டதும் பதறிப்போனார் கார்ட்டர்.

''அதெல்லாம் தேவை இல்லை. சமாளித்துவிடுவேன்'' என்றார் போலி மிடுக்கோடு.

ஆபரேஷன் நோவா - 11

மூவரின் மனதிலும், நைட்ரஜன் மூலக்கூறை அணுக்களாக உடைக்கும் அந்த பாக்டீரியாவை அழிப்பது எப்படி என்ற சிந்தனைச் சீற்றம்.

''ஆக்சிஜன் இருக்கும் இடங்களில் அனரோபிக் பாக்டீரியாக்கள் வசிப்பது இல்லை'' என்றார் கார்ட்டர். தான் இயல்பாகத்தான் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு.

''சூப்பர்'' என்றார் மைக்கேல்.

அம்மா, கார்ட்டரைப் பார்த்துச் சிரித்தார். ''குட்... நல்ல யோசனை. ஆக்சிஜன் பிரயோகித்துப் பார்க்கலாம். வேறு வாய்ப்புகளையும் யோசியுங்கள். வேகம்... வேகம்... இல்லையென்றால் நாம் எல்லோரும் அழிவது நிச்சயம்.''

''கெமிஸ்ட்ரி ஆய்வு அறிஞர்கள்...'' என வாய் எடுத்தார் மைக்கேல்.

''தயாராக இருக்கிறார்கள்.''

அம்மா, ரோபோ பெண்ணை அழைத்து அவர்களை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தார்.

மூவரும் அந்த அந்தப் பெண்ணின் பின்னால் நடந்தனர். கண்ணாடித் தடுப்புகள் ரோபோ பெண்ணுக்குப் பணிந்து திறந்தன.

மைக்கேல், துக்கத்தின் சாயல் இல்லாமல் கடமை உணர்வோடு முதல் ஆளாக நடந்துகொண்டிருந்தார். கார்ட்டர், அவரைப் பரிதாபமாகப் பார்த்தார். தன் மகள்தான் 'அம்மா’ என்பதை உணரக்கூடிய நிலையில் அவர் இல்லை. ரோஸி ஏன் இப்படி ஓர் எந்திரமாகிப்போனாள் என்பதும் அவருக்குப் புரியவில்லை!

டெர்பிகளுக்கு, ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. 'அம்மா’ என்ற கதாபாத்திரம் மட்டும் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருப்பது வினோதமாக இருந்தது. அந்த உருவம் மட்டும் உள்ளீடற்றதாகவும் இருந்தது. தீர்த்துக்கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளின்போது இந்தச் சிக்கல்கள் வளர்ந்தன. ஒரு அம்மாவை மட்டும் கொன்றால், எல்லா அம்மாக்களும் மறைந்துவிடுவார்களா? அல்லது எல்லா அம்மாக்களையும் தனித்தனியாகக் கொல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

''தாக்கிப் பார்க்கலாம்'' என்றது இரண்டு. அனைத்து டெர்பியும் போதுமான சக்தி அளிக்கும் எரிபொருள் இருக்கிறதா என்று சோதித்துவிட்டு, கேபின் 24 -ஐ ஒரு சுற்று சுற்றி வந்தன.

''செயல்படு... தீர்'' என்றது ஒன்று.

ஐந்து டெர்பிகளும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை கேபினை நோக்கி இயக்கின. ஒளிக்கற்றைகள் கேபின் சுவர்களில் பட்டுத் தெறித்தன!

- ஆபரேஷன் ஆன் தி வே...