ஓவியங்கள்: சேகர்
##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
இது சூப்பர் ரூட்!
மதுரையிலிருந்து, சென்னை செல்லும் ரயிலில் நடந்த விஷயம் இது. இரவுவேளை... ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தனர். கடைசியில் நானும், எதிர் ஸீட் பெண்மணியும்தான். நான் 'குட்நைட்’ சொல்லி கண்கள் செருகும் சமயம், அந்தப் பெண்மணி, ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு ஷர்ட்டை எடுத்து, அணிந்து உறங்க ஆயத்தமானார்.
மறுநாள் காலை, ''இது என்ன புது ரூட்?'' எனக் கேட்டேன். அவருடைய பதில்... ''புடவையை மடிப்புக் கலையாமலிருக்க பின் பண்ணிவிடுவதால், விலகினால், ஆழ்ந்த தூக்கத்தில் உணர முடியாது. பிறருக்கும் தர்மசங்கடமாக இருக்கும். நிம்மதியான தூக்கத்துக்கு நான் கடைபிடிக்கும் வழி இது. எல்லோரும் விழித்திருக்கையில், ஷர்ட்டை அணிய தயக்கமாயிருப்பதால், லேட்டாக போடுகிறேன்'' என்றார். கூடுதலாக அவர் தந்த விவரம்... கட்டட வேலை செய்யும் பெண்மணிகளைக் கவனித்து, இந்த ஐடியா வந்ததாம். 'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா’ என்று மனசுக்குள் வியந்த நான், ''இது சூப்பர் ரூட்!'' என்று சொல்லி கைகுலுக்கி பாராட்டினேன்.
- என்.கோமதி, நெல்லை
பூஜை நாகரித்தை புறக்கணிக்கலாமா..?!
சபரிமலைக்குப் போகும் குடும்ப நண்பர் பூஜைக்கு எங்களை அழைத்திருந்தார். அங்கே, ஐயப்பனைப் போற்றும் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன. படி பூஜை, படி பாட்டு, தீப ஆராதனை... அத்தனையும் அற்புதம்! என் அருகில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. அதில் ஒருவர்கூட பூஜையைக் கவனிக்காமல் வீண் பேச்சு பேசிக்கொண்டே இருந்ததோடு, 'செல்’லில் பேசும் வேலையும் செய்தனர். மேலும், தீப ஆராதனை பிரசாதம்கூட பெறாமல், அன்னதான கூடம் சென்று காத்திருந்து, முதல் பந்தியில் சாப்பிட்டனர்.
பூஜைக்கான மரியாதையைக் கொடுக்க தெரியாத இப்படிப்பட்டவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ... ஐயப்பனுக்குத்தான் வெளிச்சம்!
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82

பட்ஜெட்டை பதம் பார்த்த 'கிஃப்ட் கூப்பன்’!
கோயம்புத்தூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்குச் சென்றோம். வழக்கம்போல் பல மணி நேரம் செலவழித்து, ஆறாயிரம் ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்தோம். பில்லுக்கு பணம் வசூலிக்கும் இடத்திலிருந்த பெண், ''நீங்க பொருள் வாங்கிய தொகைக்கு, முப்பது ரூபாய் கிஃப்ட் கூப்பன் உள்ளது. கீழ்தளத்திலுள்ள எங்கள் ஜெனரல் ஸ்டோரில் சென்று ஏதேனும் பொருள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார். கீழ்தளத்தில் இறங்கினால்... அடேங்கப்பா, எவ்வளவு வெரைட் டியான பொருட்கள்! 'எதை வாங்குவது... எதை விடுவது’ என குழம்ப வைக்கும் விதத்தில் அழகழகாக குவித்திருந்தார்கள். நாலைந்து பொருள் எடுக்கலாம் என கை வைத்தோம் கடைசியில் பில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆகிவிட்டது. முப்பது ரூபாய் இலவசத்துக்கு ஆசைப்பட்டு, பட்ஜெட்டில் 2,000 ரூபாய் எகிறிவிட்டது. நல்ல வியாபார தந்திரம்! நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்!
- ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்
இப்படியும் தண்டிக்கலாம்!
பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, பெரியவர் ஒருவர், அருகில் நின்றிருந்த ஒருவரின் காலை தவறுதலாக மிதித்துவிட்டார். 'சாரி’ சொல்லி நகர்ந்த பெரியவரை, அந்த நபர் கீழ்த்தரமாக திட்டித் தீர்த்தார். எதுவும் கூறாமல் நகர்ந்த பெரியவர், அருகே உள்ள கடையில் ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். அப்போது, அவருடைய சட்டையில் 'புளிச்’சென்று துப்பப்பட்ட வெற்றிலைச் சாறு விழுந்தது. இதைச் செய்தவர், சற்று முன் தெரியாமல் காலை மிதித்ததற்காக அந்தப் பெரியவரைக் கண்டபடி திட்டியவர் தான். தான் துப்பியது அந்தப் பெரியவர் மீதுதான் என்றதும்... திகைத்து போய், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
சட்டையில் பட்ட கறையை கர்ச்சீஃப்பால் துடைத்தவாறு நகர்ந்தார் பெரியவர். மனம் பொறுக்காமல், ''சற்று முன் திட்டியவர், இப்போது உங்களிடம் நடந்து கொண்ட விதம் கொஞ்சமும் சரியில்லை. இதைக் கண்டித்து நீங்கள் ஏதாவது சொல்லியிருக்க வேண்டாமா?'' என்று கேட்டேன்.
''நான் கேட்டிருந்தால், சீக்கிரம் மறந்துவிடும். கேட்காமல் விட்டால், குற்ற உணர்ச்சி அவரை வெகுநாள் துளைக்கும்'' என்றார்.
நிஜம்தானே!
- எல்.மகாதேவன், கோவை