தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா
##~## |
டெர்பிகள் கேபின் 24 மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தின. குண்டுகள் போல எதுவும் துளைக்கவில்லை. ஒளிரும் மின் இழைகளை, கேபினை நோக்கிச் செலுத்தியபடி இருந்தன. உள்ளே இருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், கலவரப்படுத்தியது. அவை பறந்துகொண்டே சுற்றிச் சுற்றி வந்தன. அவை வைத்திருந்த ஆயுதங்களில் இருந்து ஒளிக்கற்றைகள் சீறின. இன்னும் சில சிறிய டெர்பிகள் அங்கே இருந்தன. அசெக்ஸுவல் உயிரினங்கள் என்பதால், மூத்த டெர்பிகளில் இருந்து கிளைத்துப் பிரிந்த குட்டிகள் அவை. அவையும்கூட சிறிய கதிர்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்தன.
கேபினுக்குள் இருந்தவர்கள் கையறு நிலையில் தவிக்க மட்டுமே முடிந்தது. உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுமா, விழுங்கிவிடுமா, எரித்துவிடுமா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் 'அம்மாவுக்குத் தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. பயப்பட வேண்டாம்’ என்ற ஒரே பதிலையே சொல்லியது வண்டு. இந்த மண்ணாங்கட்டி மெஷினை நம்பி எந்தப் புண்ணியமும் இல்லை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர்.
உயிர் பயம் என்பதன் அதிகபட்ச அர்த்தம் புரிந்தது. அலறுவதோ, அழுவதோ பலன் தராது என்ற நிலையில், திரௌபதி போல அவரவர் கடவுள்களை எண்ணி, தலைக்கு மேல் கையைத் தூக்காத குறை. பயம் முற்றி அபயம் தேடினர்.
பூனையின் வாயில் வசமாகச் சிக்கிக்கொண்ட எலிகள், பெரும்பாலும் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை; தப்பிக்கும் யோசனை இன்றி, சாந்தமாக பூனையைப் பார்த்துக்கொண்டிருக்கும். அப்போது எலியின் கண்களில் கரைகண்ட ஞானம் தெரியும். கேபின் 24-க்குள் இருந்தவர்களின் கண்களில் கிட்டத்தட்ட அது தெரிந்தது.

அனைவரும் ஒட்டுமொத்தமாக மேல் லோகமோ, பக்க லோகமோ போக வேண்டியதுதான் என்று உயிரைப் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஜிவ்... ஜிவ்... என நான்கு விமானங்கள் அந்த டெர்பிகளை நோக்கி வந்தன.
''அம்மாவின் அதிரடி ஆரம்பம்'' -வண்டுவின் இயந்திரக் குரலிலும் குஷி வெளிப்பட்டது. டெர்பிகள் அவற்றைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிதறி ஓட எத்தனித்தன. திசைக்கு ஒன்றாக அவை பிரிந்து பறந்தன. துரத்தி வந்த விமானங்கள் சட்டெனச் சுதாரித்தன. ஆளுக்கு ஒன்றைத் துரத்தாமல் இரண்டு டெர்பிகளை மட்டும் குறிவைத்து பின் தொடர்ந்தன.
வானத்தில் முரட்டுப் பாய்ச்சல். சில விநாடிகளில் பார்வையைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்டன. யார் யாரைத் துரத்துகிறார்கள் என்பதுகூட தெரியவில்லை.
வண்டு, ''யாரும் பயப்பட வேண்டாம். அவை கெப்ளர் 78பி-யில் இருந்து நம்மைப் போலவே இந்தக் கிரகத்துக்கு வந்தவை. நமது கேபின் சுவர்கள் அவற்றின் காஸ்மிக் அஸ்திரங்களைச் சுலபமாகச் சமாளிக்கக்கூடியவை. அவற்றின் பெயர் டெர்பி. அவற்றைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் ஒரு டெர்பி நமக்குச் சிக்கியிருக்கிறது. மொத்தம் எட்டு டெர்பிக்கள் இங்கே இப்போது இருக்கின்றன. அம்மாவின் ஆசியோடு அவற்றை அழிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன'' என்றது.
''பேசாமல் பூமியிலேயே செத்திருக்கலாம். அங்கேயாவது 10 வருஷத்துக்கு கியாரன்டி இருக்கிறது. குடும்பம், பிள்ளை குட்டிகளோடு நிம்மதியாக நாட்களை எண்ணிக்கொண்டிருந்திருப்போம்'' ஹென்ரிச் சொன்னான்.
''இங்கே எல்லோருக்கும் 300 வருட கியாரன்டி. கூடுதலாக 290 வருஷங்கள்!''
''பூமி, அழியப்போகிறது என்பதையே நான் நம்பவில்லை. ஏற்கெனவே ஸ்கைலாப் விழுந்து நொறுங்கி உலகம் அழியும் என்றீர்கள். ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் உலகம் அழியும் என்றீர்கள். மாயன் காலண்டர்படி 2012-ல் அழிந்துவிடும் என்றீர்கள்...''
''அதை எல்லாம் நாங்கள் சொல்லவில்லை'' என்றது வண்டு.
''இப்போது மட்டும் என்ன வித்தியாசம்?'' என்றாள் அகி. விளையாட்டு வீராங்கனையான அவளிடம் மட்டும் இன்னும் துணிச்சல் மிச்சம் இருந்தது.
''அவை எல்லாம் பரபரப்புக்கான குருட்டாம் பாடங்கள். இது விஞ்ஞானம்!''

''ஆனால் எல்லாம் மர்மமாக இருக்கின்றன. எதிர்க்கிறவர்களை எல்லாம் மூளைச்சலவை செய்கிறீர்கள். கொன்றுவிடுவீர்கள் என்றும் அச்சமாக இருக்கிறது!''
''யாரையும் கொல்லவில்லை. எல்லோரும் சலவைக்குப் பிறகு 581 ஜி-க்காக இரவு பகலாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் நாம் கிரகத்தில் இறங்கி வீடு கட்டி, தோட்டம் இட்டு குடியிருக்கப் போகிறோம். நடுவில் இந்த டெர்பிக்களால் சின்ன சிக்கல். அவ்வளவுதான்.''
''நம்பவைக்க முடியுமா?''
''ஒரு நொடியில்...''
திரையில் தோன்றிய காட்சியில் அகிலன், வஸீலியேவ், கேத்ரின், ஆலீஸ்... ஆகியோர் அக்ரோ பிரிவில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இன்னொரு திரையில் கார்ட்டர், கேப்ரியல். அவர்கள் அனராய்டு பாக்டீரியாவை அழிப்பதற்கான ஆய்வில் இருந்தனர். ஸ்பெக்ட்ரா அனாலிஸிஸ் கருவிகளில் கெப்ளர் 78பி-யின் ஜாதகத்தை ஆராய்ந்துகொண்டிருந்தார் மைக்கேல். எல்லோர் முகங்களிலும் தீவிர உழைப்பு தெரிந்தது.
''வாழ்க்கையை நெருங்கிவிட்டோம் என்று புரிகிறதா? கேத்ரின் சாப்பிடுவது அவர்களே இங்கு பயிர் செய்த இயற்கைத் திராட்சை. இதே வேகத்தில் போனால் சீக்கிரம் தனித்தனி குவார்ட்டஸ் ஒதுக்கி, நீங்களும் இயற்கை முறையில் குழந்தைகள் உருவாக்கும் பணியைத் தொடங்கிவிடலாம்!''

கேபின் 1001-ல் வினோதினியைச் சமாளிப்பது வண்டுக்குப் பெரும்பாடாக இருந்தது. அவள் அடிக்கடி அழுதாள். இந்த நிமிஷமே அகிலனைப் பார்க்க வேண்டும் என்றாள்.
டால்பின் பச்சைக் குத்திய இன்னொருவனைப் பற்றி வண்டு சொல்லிய அந்த விநாடியே பூமியில் இருந்து மக்களைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் எடுக்கும் முயற்சியை ஏற்றுக்கொண்டாள். அந்தக் காரணத்துக்காகத்தான் அகிலனும் தானும் இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
இங்கு காதல் தடை செய்யப்பட் டுள்ளது என்ற வாதத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
''காதல் தேவை இல்லை என்றால், வாழவும் தேவை இல்லையே!'' என்றாள்.
வண்டுக்கு அந்த வார்த்தை புரியவே இல்லை. அது ஆக்ஸிஜன் போலவா என்று திருப்பிக் கேட்டது.
''ஆக்ஸிஜன் இல்லாமலும் இருந்துவிடலாம். காதல் இல்லாமல் இருக்கவே முடியாது'' என்றாள். நெகிழ்ந்துபோவது, நினைத்து ஏங்குவது போன்ற பூலோக சென்ட்டிமென்ட்களை இந்தக் கிரகத்தில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதைத்தான் வண்டு வந்ததில் இருந்து சொல்லிக்கொண்டிருந்தது.
அதற்குள் பயிற்சிக்கான நேரம் ஆகிவிடவே, எல்லோரும் அவரவர் ஸ்பேஸ் ஷூட்டை அணிந்துகொண்டு 581ஜி-க்கான ஈர்ப்பு விசைக்கு ஏற்ப நடை பழக ஆரம்பித்தனர். அகிலனைச் சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்ற ஒப்பந்தத்தின் பேரில்தான் வினோதினி பயிற்சிக்குத் தயாரானாள்.

சத்யவான் சாவித்திரிக்கு இணையாக அகிலன், வினோதினி காதலை இந்திய பத்திரிகைகள் சிலாகித்தது வினோதினிக்கு நினைவுக்கு வந்தது. எமனிடம் போய் சத்யவானைக் காப்பாற்றியது போலவே இந்த எமலோகத்தில் இருந்து அகிலனை மீட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். காதலுக்கு அந்த வலிமை இருப்பதை உணர்ந்திருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை, ஒரே ஆதாரம், காதல் மட்டும்தான். அதற்காகத்தான் அவள் தொடர்ந்து வாழ்ந்தாள்.
அவள் மட்டும்தான் அங்கு வந்திருந்தவர்களில் தனக்காக அழவில்லை. அவள் அகிலனுக்காக அழுதாள். புதிய கிரகமும் புதிய வாழ்க்கையும் புதிய அச்சமும் அவளை மேலும் மேலும் அகிலனுக்காக ஏங்கவைத்தன. இது ஒரு வினோதமான வியாதிதான் என்று வண்டு எச்சரித்தது. உனக்குப் பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தமாஷ் பண்ணியது. ஆனால், இந்த மாதிரி வேடிக்கைக்கு எல்லாம் சிரிக்கும் நிலையில் இல்லை வினோதினி.
அங்கிருக்கும் 41 ஆயிரம் பேர் எப்படி நினைக்கிறார்களோ, அதைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை. இந்தக் கிரகத்துக்கான வாழ்க்கைமுறையை வடிவமைத்ததில் உள்ள கோளாறு அவளுக்குப் புரிந்தது. அன்பைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டு, மனித இனத்தைக் காப்பாற்றுவதில் உள்ள இயந்திரத்தனத்தைச் சுட்டிக்காட்ட விரும்பினாள். யாரிடம் சுட்ட வேண்டும் என்பதுதான் வெறுமையாக இருந்தது.
வண்டு வெகுசிரத்தையாகக் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, ''ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதனால் 20 நிமிடங்கள் வரை வாழ முடியும். காதல் அப்படி இல்லை. 'காதல் என்று தனியாக எதுவும் இல்லை. அது காமத்தின் முன்னும் பின்னும் பூசப்படும் தற்காலிக பேட்ச் ஒர்க்’ என்று என் டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றது.
''மண்டு... உனக்கு யார் வண்டு என்று பெயர் வைத்தது?'' - வினோதினி முடிப்பதற்குள்ளாகவே ''ஆலிஸ்... இப்போது அகிலனோடு ஆராய்ச்சியில் இருக்கிறாள்'' என்றது.
''யார் அவள்?'' என்றாள் வினோதினி கோபமாக.
''லண்டனில் இருந்து வந்த அந்தக் கவிதாயினி... அவள் எழுதிய ஒரு கவிதை சொல்லவா?''
''கடலைக் காய்ச்சி உருவாக்கிய
ஒரு துளி கண்ணீர்...
முழு நிலவைச் செதுக்கி உருவாக்கிய புன்னகை...
அனைத்தும் உனது...''
''போதும் நிறுத்து'' என்றாள் வினோதினி.
அந்தக் கணத்தில் முதன்முதலாக அவளுக்கு அந்த அச்சம் வந்தது. அகிலனுக்குத் தன்னைப் பற்றிய நினைவு இருக்குமா? அவள் அழ ஆரம்பித்தாள். பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிலர் அவளைத் தேற்றுவதற்காக, பயிற்சியை நிறுத்திவிட்டு நெருங்கி வந்தனர். பூமியில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்தத் தலைவலியைப் பற்றி அம்மாவுக்கு ரிப்போர்ட் அனுப்பி, உடனடி மூளைச்சலவைப் பிரிவுக்கு சிபாரிசு செய்தது வண்டு!
- ஆபரேஷன் ஆன் தி வே...