தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா
##~## |
ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அதை அடைத்துவைத்திருந்தனர். அதன் கண்களில் நிரந்தரமாகவே கோபச் சிவப்பு குடியிருந்தது. நைட்ரஜன் பற்றாக்குறையால் அது சோர்ந்திருந்தது. பிறந்து சில நாட்களே ஆகியிருந்த குட்டி. நைட்ரஜன் போதாமல் அது சீறும்போது, மின் கதிர்கள் எதுவும் வரவில்லை.
பிடித்துவந்த இவ்வளவு நேரத்தில் இப்போதுதான் அதை நெருங்கிச் சென்று பார்க்க முடிந்தது. ஒன்றே கால் அடி நீளம்தான் இருந்தது. உடும்பு போல கனத்த தோல். கையா, இறக்கையா, வாலா என இனம் பிரிக்க முடியாதபடி எல்லாப் பக்கமும் சதை ஜடைகள் தொங்கின. அது நைட்ரஜனை எப்படி ஜீரணிக்கிறது என்பதை அறிவதில், மைக்கேலும் கேப்ரியலும் தீவிரமாக இருந்தனர்.
இன்குபேட்டரில் உயிருக்குப் போராடும் குழந்தை போல துடித்தது அது. இறந்துவிடப் போகிறது என்று பயந்தார் மைக்கேல். இறந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால், இந்தக் கையடக்க டெர்பியை ஆராய்ந்துதான் மற்றவற்றைக் காலி செய்ய வேண்டும். அவை பெருகுகிற வேகத்தைப் பார்த்தால் சீக்கிரமே டவுசர் கிழிந்துவிடும் போல இருந்தது.
கேதரின், மரபியல் ஆய்வு விஞ்ஞானி என்பதால், அவளிடமும் ஜெனிட்டிக் சாம்பிள்கள் கொடுத்து ஆராயச் சொல்லியிருந்தனர். கேபின் 432-ல் இருந்து உயிர்வேதியியல் டாக்டர் ழீன் அழைக்கப்பட்டிருந்தாள். அவள் மானுடவியல் துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றவள்.
ழீனுக்கு ஆச்சரியமான முகம். அவளைப் பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படும்படியான முகம் என்ற அர்த்தத்தில் இல்லை. அந்தக் கணம்தான் எதையோ பார்த்துத் திகைத்தது மாதிரி எப்போதும் இருப்பாள். 'அந்தப் பேப்பர் வெயிட்டை எடு...’ என்றாலும் திகைப்பாள். 'பூகம்பம்’ என்றாலும் அதே. ஒரு முறை அவளைப் பார்ப்பவர்கள், மறுமுறையும் அந்த ஆச்சரியத்தைப் பார்க்க விரும்புவார்கள்.

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அவளுடைய ஆராய்ச்சிக்கு இரண்டு முறை நோபல் நெருங்கிவந்தது. அவளுக்கு முன்னால் வயதானவர்கள் நிறையப் பேர் வரிசையில் இருப்பதை உத்தேசித்து, இரண்டு நாமினேஷன்களிலும் தவிர்க்கப்பட்டதாக அறிவியல் உலகில் ஒரு தகவல் உண்டு. அதற்காக அவள் வருந்தியது இல்லை. இந்த முறை யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று கேட்டு சந்தோஷப்பட்டுக்கொள்வாள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்ததற்காக ரொம்பவே சந்தோஷப்பட்டாள். அவளுடைய அடுத்த ஆராய்ச்சி, தமிழ்நாட்டின் மீதுதான் இருந்தது. அத்திரம்பாக்கம் செல்ல, இந்தியாவுக்கு விசா எடுக்க இருந்த நேரத்தில்தான் இங்கே கடத்தப்பட்டாள். உலக மானுட வரலாற்றையே மாற்ற இருந்தாள். அவளுடைய நோக்கத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாகப் பார்க்கலாம். இப்போது டெர்பி!
கம்ப்யூட்டரில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு டி.என்.ஏ. கோடிங்குகளை அலச வேண்டியிருக்கும். அவற்றின் ஏ.ஜி.சி.டி. ஏணியே வேறு மாதிரி இருந்தது. ஐந்தாவதாக இன்னோர் அமினோ இருந்தது. ஒருவேளை அவற்றின் இயந்திரத்தன்மையைச் சொல்லும் மூலக்கூறாக இருக்கலாம். ழீன், அந்த அமினோவின் வேதியியல் குணங்களைப் பகுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நைட்ரஜனை எப்படி அணுவாக உடைப்பது போன்ற இயந்திரக் குணங்கள் அதன் உடம்பின் எந்தப் பாகத்தில் நடக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.

அந்த நேரத்தில்தான் கார்ட்டர், டெர்பியின் கவலைக்கிடமான நிலைமையைக் கவனித்தார். அது இறந்துவிட்டதோ என்றுகூட அவருக்குச் சந்தேகமாக இருந்தது. சற்று நேரத்துக்கு முன் அதன் கண்கள் நிமிடத்துக்கு ஒரு முறையேனும் அசைந்தபடி இருந்தன. இப்போது நிலைகுத்தி இருக்கவே, நைட்ரஜன் கொடுத்தால்தான் அதன் உயிரைத் தக்கவைக்க முடியும் என்று உத்தேசித்த கார்ட்டர், குடுவைக்குள் நைட்ரஜன் வாயுவைக் கொஞ்சமாகச் செலுத்தினார். அசையவே இல்லை அது. ஜுரம் கண்ட பச்சைக் குழந்தை போல கிடந்தது. 'பிழைக்குமா?’ என பரிதாபமாக நெருங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.
திடுதிப்பென்று துடித்து எழுந்தது. கண்ணில் சிவப்புக் கூடியது. இறக்கை அமைப்புகளை முள்ளம்பன்றி போல விரைத்துக் காட்டியது. கார்ட்டர் சற்றே பதறி, பின் நகர்ந்தார். இறக்கைகளைப் படபடவென அடிக்க ஆரம்பித்தது. கண்ணாடியில் இரண்டு முறை முட்டி கீழே விழுந்தது. கண்ணாடிக் குடுவையை உடைக்காத குறையாகச் சுழன்றது. உயர் டெசிபலில் கத்தியது.
டெர்பி இவர்களைப் பார்த்து அஞ்ச, இவர்கள் டெர்பியைப் பார்த்து அஞ்ச... டெர்பி, இந்தப் பதற்றத்துக்கு ஏற்ப மேலும் ஆவேசமாகச் சுழன்றது. ஐந்து பேரும் எங்கே ஓடுவது என்ற இலக்கு இல்லாமல் புறப்பட்ட இடத்துக்கே சுற்றிச் சுற்றி ஓடிவந்தனர். சில சாதனங்கள் கீழே விழுந்து நொறுங்கின. கேதரின், எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் ஒரு டேபிளின் மீது ஏறி நின்றாள்.
நல்லவேளையாக நைட்ரஜன் செல்லும் குழாயை நிறுத்தினாள் ழீன். நைட்ரஜன் நின்ற வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. சட்டென டெர்பியின் ஆவேசம் நின்றது. ஆசுவாசப்படுத்திக்கொள்வது போல ஐந்து பேரையும் நோட்டம் இட்டது. யாரையோ குறி வைக்கப்போவது போல இருந்தது. அது யாரைப் பார்க்கிறதோ, அவர் கூடுதலாகப் பயந்தார். சீக்கிரமே சக்தி குறைய ஆரம்பித்து, மெள்ள மெள்ள ஒடுங்கி, சுருண்டு படுத்தது. அதன் கண்கள் மட்டும் சுற்றி நின்றிருந்தவர்களை மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தன.
''அரை மணி நேரத்துக்கு ஒரு நிமிடம் கொடுத்தால் போதும். அதற்கு மூச்சு, உணவு இரண்டுமே நைட்ரஜன்தான். உடனடி எரிபொருள். பார்த்தினோ ஜெனிசிஸ் டைப் அசெக்ஸுவல்'' என்றாள் ழீன்.
கீழே இறங்கி வந்த கேதரீனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, ''என்ன சொல்கிறது ஜீன் ஏணி?'' என்றாள் கேஷ§வலாக.
மைக்கேலை, கார்ட்டர் கைத்தாங்கலாக அழைத்துவந்து உட்கார வைத்தார்.
மைக்கேல் உறுதியாகச் சொன்னார். ''இவற்றை அனராய்ட் பாக்டீரியாவை அழிப்பதன் மூலம் அழிக்க முடியாது. செடிகளின் வேர்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், இத்தனை வேகமாக நைட்ரஜன் மூலக்கூறுகளை அணுக்களாக உடைப்பது இல்லை. இவற்றின் சமாசாரம் வீரியமாக இருக்கிறது. வேகம்... படுவேகமாக உடைக்கிறது. சக்தியும் அதிகம். பெருகும் வேகமும் அதிகம். சீக்கிரமே அழித்து ஒழிக்க வேண்டும். பூமிக்குத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது பழையபடி பூமிக்குத் தப்பி ஓடுங்கள்'' என்றார்.

அம்மா, தீர்மானமாகச் சொல்லிவிட்டார், 'சலவைப் பிரிவுக்கு மக்களை இனி அனுப்ப வேண்டாம்’ என்று! அப்படி அவர் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணம் இருந்தது. இதுவரை சலவை செய்யப்பட்ட அகிலன், வஸிலியேவ், கேதரின், ஆலீஸ், மைக்கேல் ஆகியோரின் நினைவுக் குறிப்புகளில் போராட்டக் குணங்களோடு சேர்ந்து வேறு சில நினைவுகளும் அழிவதை அம்மா உணர்ந்தார்.
'வினோதினியை மூளைச்சலவைக்கு உட்படுத்த வேண்டாம்’ என்று கூறிவிட்டார். மேலும், 'அகிலனுடன் சேர்த்துவைப்பதில் ஆட்சேபணை இல்லை’ என்றும் சொன்னார். அகிலனின் நினைவுக் குறிப்பில் காதல் பகுதி அழிந்துபோயிருக்கலாம் என்ற சந்தேகம் அம்மாவுக்கு இருந்தது. கொஞ்ச நாளில் மீண்டும் வரலாம்; வராமலும் போகலாம். 'அகிலனுக்கு எப்படி இருக்கிறது?’ என்று சோதிப்பதற்காகவும் வினோதினியை உடனடியாக அங்கே அனுப்பிவைப்பது நல்லது என்று முடிவெடுத்தார். அவனுக்கு நினைவு திரும்பிவிட்டால் ஜி.எல். 581-ஜி விதி எண் 16-ன்படி ஒரு வாரத்துக்கு மேல் ஒருவரையே தொடர்ந்து காதலிக்கக் கூடாது என்பதை நினைவில்கொள்ளுமாறு வண்டுவிடம் தெளிவாக வலியுறுத்திவிட்டு, ''வினோதினியை அகிலனுடன் பணியாற்றுவதற்கு அனுப்பலாம்'' என்று கூறினார்.
அகிலனின் அக்ரோ பிரிவில் வினோ அனுமதிக்கப்பட்டாள். சொல்லப்போனால் அது ஒரு துன்பியல் நாடகம் போலத்தான் இருந்தது.
அகிலனைப் பார்த்த வினோதினி, பரவசப்பட்டாளா, பரிதாபப்பட்டாளா என்று வரையறுப்பது கடினம். இனி எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தாள். போன உயிர் திரும்பி வந்தது, பட்ட மரம் துளிர்த்தது போன்ற பல உதாரணங்கள் அலைமோதின. அவள் கண்களில் கனமழை. ஓடிவந்து அணைத்துக்கொள்ளும் முடிவில்தான் அகிலனை நெருங்கி வந்தாள். அகிலனின் கண்களில் பதில்வினையாக எந்தவித ஏக்கமோ, பாசமோ இல்லை. அவன் சலனம் இல்லாமல் பார்த்தான். வினோ, அவனை அணைப்பதற்கு முன் யோசித்தாள், 'இது அகிலன்தானா? அவனைப் போலவே வேறு ஒருவனா?’
அவன் கேட்ட கேள்வி அந்தச் சந்தேகத்தை உறுதிசெய்வதாக இருந்தது. வினோவைப் பார்த்த அகிலன், ''கேபின் 1001-ல் வந்த விருந்தாளி நீங்கள்தானா?''
அகிலனுடன் இன்னும் இரண்டு பெண்கள் இருந்தனர். வினோதினியை அவர்கள் இருவருமே கண்களால் எடைபோடுவது போல பார்த்தனர். சிவப்புத் தோலும் பூனைக் கண்களுமாக இருந்த அந்த இரண்டு பெண்களும் அகிலனின் மனதை மாற்றிவிட்டனர் என்ற இயல்பான கோபமும் சந்தேகமும்தான் வினோதினிக்கு உடனடியாக உதித்தது.
'இவள் ஏன் இப்படித் தவிப்போடு பார்க்கிறாள்?’ என்றுதான் ஆலீஸ் நினைத்தாள்.
''இதில் ஆலீஸ் யார்?'' என்று கேட்டாள் வினோ.
தன் பெயர் எப்படித் தெரியும் என்ற அதிர்ச்சியில் ஆலீஸ் ஆச்சரியத்தில் உறைந்து நிற்க, கேதரின், ''இவள்தான் ஆலீஸ்...'' என்று அடையாளம் காட்டினாள்.
ஆலீஸ் சந்தோஷமாக முன்னே வந்து அவளுடன் கைகுலுக்கத் தயாரானாள். ஆனால், வினோதினி கைகுலுக்கத் தயாராக இல்லை. கைவிரல்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
''இவளை உனக்கு முன்னரே தெரியுமா?'' என்றாள் கேதரின்.
''இவளையும் தெரியும். இவள் அகிலனை மயக்கிவைத்திருப்பதும் தெரியும்'' என்றாள்.
வினோதினி என்ன சொல்கிறாள் என்பதை ஆராயும்விதமாக நெற்றியைச் சுருக்கிப் பார்த்தாள் ஆலீஸ்.
''நீ என்ன சொல்றே?'' என்றாள்.
''இப்ப புரியும்'' கோபமாக முஷ்டியை உயர்த்தியபடி ஆலீஸ் மீது பாய்ந்தாள் வினோ.

பூமியில் அந்த உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழில் அன்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் எழுதியிருந்தார். 'பரிதாபத்துக்குரிய 41 ஆயிரம் பேர்’ என்பது கட்டுரையின் தலைப்பு. அதன் முதல் வரி இப்படி ஆரம்பித்து இருந்தது.
'மரணத்தின் விளிம்பில் இருக்கின்றனர் அவர்கள். எந்த நிமிடமும் அவர்கள் இறந்துபோவார்கள். அந்த மரணம் எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. அவர்களுடைய மரண ஓலம் நமக்குக் கேட்கப்போவது இல்லை. இந்நேரம் இறந்துபோயிருக்கலாம் அல்லது இறந்துகொண்டிருக்கலாம். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், காப்பாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. வாழ்வில் கடைசித் துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும் நான், இந்த உண்மைகளை உலகுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.’
பால்கனியில் உட்கார்ந்து கையில் காபியும் பேப்பருமாக அதிகாலையில் அதைப் படித்த முதல் வாசகர், நடிகர் ஆர்னால்ட் ஸ்வாஷ்நெகர். கவர்னராக இருந்த காலத்தில் ஏற்பட்டுவிட்ட பழக்கம். இது ஏதாவது நையாண்டிக் கட்டுரையாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால், அடுத்த சில விநாடிகளிலேயே அதை உலகத்தில் பல லட்சம் பேர் படித்துவிட்டனர். சடுதியில் அது மில்லியனாக உயர்ந்தது.
''அவசரப்பட்டுவிட்டீர்கள் சார்லஸ்'' என்று ஒபாமா, அவரிடம் போனில் சொன்னார்.
அப்போது இந்தியா, உறங்குவதற்குத் தயாராகி இருந்தது; ஆனால் உறங்கவில்லை!
- ஆபரேஷன் ஆன் தி வே...