மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஓவியங்கள்: சேகர்

##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

200 

ரூபாய் நோட்டை, 'நோட்’ பண்ணுங்க!

தோழியுடன் காய்கறி மார்க்கெட் செல்வதற்காக அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள், தன் பர்ஸில் உள்ள 500 ரூபாய், 100 ரூபாய் தாள்களின் எண்களைக் குறித்துக் கொண்டிருந்தாள். காரணம் கேட்டபோது, அவள் சொன்ன முந்தைய அனுபவம்... நம் அனைவருக்குமே ஒரு பாடம்!

ஒரு தடவை, கூட்டம் மிகுதியாக உள்ள கடையில் காய்கறிகளை வாங்கியவள், 500 ரூபாய் தாளை நீட்ட, கடைக்காரரோ அதை வாங்கிப் போட்டு வேறொருவருக்கு வியாபாரத்தை கவனித்த பின், நூறு ரூபாய்க்கான சில்லறையை கொடுக்க, 500 ரூபாய் கொடுத்ததாக கூறியிருக்கிறாள். '100 ரூபாய்தான்' என்று அவர் அடித்துப்பேச, 500 ரூபாய் என்பதை இவளால் நிரூபிக்க இயலவில்லை. அதிலிருந்தே மார்க்கெட், கடை என்று செல்லும்போது கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் எண்களைக் குறிப்பெடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினாள் தோழி.

- ஹெச்.ரேச்சல், சேலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

பேருந்து பயணிகள் கவனத்துக்கு!

ரண்டு பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை 'கண் எரிகிறது' என்று திடீரென அலறி துடிக்க... பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி முகம் கழுவியபோதும் கண்களைத் திறக்க முடியாமல் ஒரே அழுகை. காரணம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நின்றிருந்த ஒருவர், சற்று முன்பாக பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு காகிதச் சுருளை எடுத்துக் காண்பித்து, ''வெள்ளரிக்காயில் போட்டு சாப்பிட கொடுத்த உப்பு - மிளகாய்த்தூள் மீதத்தை தூக்கி அலட்சியமாக எறிகிறார்கள்... அது குழந்தையின் கண்ணில் பட்டுவிட்டது’' என்று விளக்கினார்!

பேருந்தில் பயணம் செய்பவர்களே, இனியாவது இதுபோன்ற தவறுகளைச் செய்யாதிருப்பீர்களாக!

- சாந்தகுமாரி ஜெயராஜ், திருச்சி

பாராட்டுக்குரிய 'சார்ட்’!

தோழியின் கணவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கின்றனர். சமீபத்தில் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி, ஆச்சர்யப்பட வைத்தது. ஹாலில் ஒரு பெரிய சார்ட் பேப்பரில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் பெயரை எழுதி (ஆண், பெண் வித்தியாசமின்றி)... அவர்கள் அந்த வாரம் செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக பிரித்து எழுதி இருந்தனர். அதன்படியே விருந்தினரை உபசரிக்கும் பணியை அந்த வாரம் ஏற்றிருந்த 10 வயது சிறுவன், என்னை அழைத்து அமர வைத்து தண்ணீர் தந்து வரவேற்றது வியப்பாக இருந்தது; மற்றொரு சிறுவனும், பெண்ணும் ஹாலில் இருந்த குப்பைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

'இப்படி வேலைகளை பிரித்துத் தருவதால், சிறுவயதிலேயே உடம்பு வளைந்து வேலை செய்யும் பண்பு வந்துவிடுகிறது' என்று தோழி கூறினார்.

விளையாட்டுப் பிள்ளைகளை, அவர்களின் போக்கிலேயே விட்டு, நல்ல பண்புகளை வளர்க்கும் இம்முறை பாராட்டுக்குரியதுதானே!

- சுபா, சேலம்