மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 7

களிமண்ணை நம்பி... கார் கம்பெனியை கைவிட்டு... கலக்கல் வருமானம் தரும் களிமண் நகைகள்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

##~##

 'டெரகோட்டா ஜுவல்ஸ்’ எனப்படும் களிமண் நகைகள் செய்யும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சென்னை, மடிப்பாக்கம், உமா ஜானகிராமன், இங்கே அதை நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

''கும்பகோணத்துப் பெண்ணான எனக்கு, ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி கத்துக்கணும்னு ஆசை. குடும்பத்தோட சென்னைக்கு வந்து செட்டில் ஆகி டபுள் எம்.ஏ. (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், எகனாமிக்ஸ்) முடிச்சேன். அப்போதான் சாந்தோம்ல இருக்கற இன்ஸ்டிடியூட்ல ஸ்பானிஷ் மொழி கத்துக்கறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. சான்றிதழ் வாங்கின கையோட, கார் தயாரிப்பு நிறுவனத்துல ஸ்பானிஷ் எக்ஸ்பர்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நேரத்துலதான் துபாய் தோழி சங்கீதா ஸ்ரீபதி, 'களிமண் நகைகளுக்கு துபாய்ல நல்ல வரவேற்பு இருக்கு. நீ எங்காவது கிளாஸ் போய் கத்து வெச்சுக்கோ. நான் உன்கிட்ட கத்துக்கிறேன்’னு சொன்னாங்க. அதுக்காகவே இதை கத்துக்கிட்டு, நகைகள் செய்து அவங்களுக்கும் அனுப்பி வெச்சேன். அதெல்லாம் அங்க நல்ல விலைக்குப் போகவே, நம்ம ஊர்லயும் இதையே ஒரு தொழிலா எடுத்து செய்யலாம்கிற ஐடியா உதயமாச்சு.

என்னதான் ஜுவல்லரி மேக்கிங் கிளாஸ்களுக்குப் போனாலும், சில முக்கியமான விஷயங்களை மட்டும் கத்துத்தராம விட்டுடுறாங்க. அதனால, ஏ டு இஸட் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு, செங்கல் சூளைக்கும் போய் களிமண்ணை சுடற இறுதி கட்டம் வரை கத்துக்கிட்டேன். 'டெரகோட்டா ஜுவல்ஸ்’ செய்து விற்பனை செய்யறதோட... வகுப்பும் எடுக்க ஆரம்பிச்சேன். வந்த வருமானம், கார் கம்பெனி வேலையையே கைவிடுற அளவுக்கு தைரியம் கொடுத்துச்சு. 'களிமண்ணை நம்பி கார் கம்பெனியை கைவிடறியே..?’னு நண்பர்கள் அறிவுரை சொன்னாங்க, ஆத்திரப்பட்டாங்க. ஆனா, களிமண்ணை நான் ரொம்பவே நம்பி, களத்துல இறங்கினேன். நேரடி ஆர்டர்கள், ஆன்லைன் விற்பனை, வகுப்புகள்னு என் டைரி எப்பவும் என்கேஜ்டுதான்!'' என்று சிரிக்கும் உமாவின் படைப்புகள், 'மண் மேட் ஜுவல்ஸ்’ என்கிற பெயரில் வலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

கைகொடுக்கும் கிராஃப்ட்!  - 7

நெக்லஸ் செட்டை அழகுற செய்து காட்டினார் உமா.

ஜுவல் செய்து முடித்த பிறகு, ''இந்தத் தொழில்ல தீவிரமா இறங்கி வேலை செய்தா... சாதாரணமாக மாசம் 30 ஆயிரத்துல இருந்து 40 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும். நான் இங்க செய்து காண்பித்திருக்கிற காதணியுடனான நெக்லஸ் செட் 3,000 ரூபாய் வரை விலை வெச்சு விற்பனை செய்யலாம். இதேபோல பிரேஸ்லெட், கொலுசு, மோதிரம், வளையல், நெத்திச்சுட்டினு நகைகள் மட்டுமில்லாம... ஹேர் கிளிப்ஸ், சேலை பின், போட்டோ ஃபிரேம், கீ - செயின், ஃப்ரிட்ஜ் மேக்னட், வால் ஹேங்கர்ஸ்னு நம்மளோட கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தினா... விற்பனை ஜோர், வருமானம் ஜோரோ ஜோர்!'' என்றார் உமா, உற்சாகமாக!

தேவையான பொருட்கள்:

ளிமண் - பாக்கெட்டாக கடைகளில் கிடைக்கிறது (காற்றாடி, கதவு, ஜன்னல் என காற்றடிக்கும் இடத்தில் பிரித்து வைக்க வேண்டாம், ஈரப்பசை போய்விடும்), ஊசி அல்லது பல் குத்தும் குச்சி, மொசைக் டைல்ஸ் ஒன்று (கீறல்கள் இன்றி சுத்தமானதாக இருக்க வேண்டும்), 12 செட் கார்விங் டூல்ஸ் (ரீஃபிள் தீர்ந்த பேனாக்கள், மூடிகள் என வீட்டில் இருக்கும் வேஸ்ட் பொருட்களையும் பயன்படுத்தலாம்), ரோலர், கிளே மோல்டு, நைக்ரோம் ஒயர் (Nichrome wire), நோஸ் பிளேயர் மற்றும் கட்டர், மண் அடுப்பு அல்லது குமுட்டி அடுப்பு, மரக்கரி, அக்ரலிக் அல்லது மெட்டாலிக் பெயின்ட் (விரும்பிய வண்ணங்களில்), பிரஷ், கறுப்புக் கயிறு (மணிகளைக் கோக்க), காதணிக்கான கொக்கிகள்.

கைகொடுக்கும் கிராஃப்ட்!  - 7

செய்முறை:

படம் 1, 1a: நைக்ரோம் ஒயரை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

படம் 2: சிறிது தண்ணீர் தொட்டு, களிமண்ணை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

படம் 3, 3a: களிமண் உருண்டைகளில் நைக்ரோம் ஒயர் துண்டுகளைச் செருகவும்.

படம் 4, 4a: இப்போது, டாலர் செய்வதற்குத் தேவையான அளவில் களிமண்ணை உள்ளங்கையில் வைத்து உருட்டி, டைல்ஸ் மீது வைத்து சப்பாத்தி போல் இட்டு, மோல்டு செய்யவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்!  - 7

படம் 5, 5a, 5b: கார்விங் டூல்ஸ் உதவியோடு, சுற்றிலும் இருக்கும் பிசிறுகளை நீக்கி, மேற்புறத்தின் கால் பகுதியை படத்தில் உள்ளது போல வெட்டிவிடவும். அதன் மீது ரசனைக்கு ஏற்றாற்போல... பூ போன்ற விருப்பமான வடிவங்களை வரையவும்.

படம் 6: ஏற்கெனவே கம்பி செருகி வைத்திருக்கும் உருண்டைகளை எடுத்து, டிசைன் செய்த பெரிய டாலரைச் சுற்றி செருகவும்.

படம் 7: நைக்ரோம் ஒயரை சிறிதளவு கட் செய்து, கொக்கி போல செய்து கொள்ளவும். இதை டாலரின் மேற்புறத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு செருகவும்.

படம் 8: செயினில் கோக்கும் பீட்ஸ் செய்யத் தேவையான அளவு களிமண்ணை எடுத்து, கைகளால் உருட்டி, அதனுள் ஊசி அல்லது டூத்பிக் உதவியோடு ஓட்டை போடவும்.

(இந்த டாலர் செயினுக்கு பொருத்தமான காதணியை இதே போன்ற முறையில் தயார் செய்யவும். இந்த காதணி மற்றும் டாலர் செயின், குறைந்தது 2 அல்லது 3 நாட்கள் காய வேண்டும். பின்பு அடுப்பில் மரக்கரியோடு போட்டு எரியவிடவும். சிறிது நேரம் எரியவிடப்பட்டு எடுக்கப்படும் இந்த களிமண் டிசைன்கள் செங்கல் நிறம் அல்லது கறுப்பு நிறத்தில் இருக்கும்.)

படம் 9, 9a: இதை எடுத்து உங்களின் கற்பனைத்திறன் மற்றும் ரசனைக்கு ஏற்றாற்போல் வண்ணம் தீட்டவும்.

படம் 10,10a: பிறகு, கறுப்புக் கயிறை பயன்படுத்தித் தயாராக செய்து வைத்துள்ள பொருட்களை கோக்கவும். கடைசியில் ஒரு மணியைச் செய்து அதனை இறுதியில் கோத்து முடிச்சிடவும். இது ஜுவல்லரியின் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு உதவியாக இருக்கும். இதேபோல காதணிகளுக்கும் இறுதியில் இணைப்பு கம்பிகளை இணைத்து கொக்கிகளை மாட்டி முடிக்கவும்.

இப்பொழுது அழகான டெரகோட்டா ஜுவல்லரி செட் ரெடி!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...