மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 14

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

##~##

லகம் அழியப்போகிறது என்பது மனிதனின் ஆதி அச்சம். ஒவ்வொரு பெருமழையின் போதும் அன்றே கடைசி போல பயந்தவன். கடல் பொங்கியபோது, காடு எரிந்தபோது, நிலம் நடுங்கியபோது, புயல் வீசியபோது... அவன் ஆகாயத்தை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்தினான். இப்போது டோபா..! உண்மையிலேயே உலகைக் குலுக்கி நிர்மூலமாக்கப்போகும் எரிமலை. விஞ்ஞானி சார்லஸ் ஆதாரபூர்வமாகச் சொல்லிவிட்டார். அதற்காக இங்கிருந்து 41 ஆயிரம் ஆய்வுக்கூட எலிகள், தண்ணி இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது போல மாற்றப்பட்டிருக்கிறார்கள். மக்கள், பரவலாக - விதம்விதமாகப் பயந்தனர்.

விஞ்ஞானப் பேராசிரியரின் செய்தி வந்த அடுத்த     12 மணி நேரத்தில், அது உலகம் தழுவிய பேரச்சமாக மாறியது. ஏறத்தாழ எல்லா மதத் தரகர்களும், உலகம் அழியப்போவதையும் அதற்குள் தங்கள் கடவுள்களிடம் சரணாகதி அடைந்துவிடுமாறும் கோரினர். இரவோடு இரவாகவோ, பகலோடு பகலாகவோ, அடுத்த ஆறு மாதங்களுக்கான ஜீவனோபயத்துக்கான வழி பிறந்த சந்தோஷத்தில் பலர் முக்திக்கான கூட்டங்களை நிகழ்த்த ஆரம்பித்தனர். இந்த அச்ச வர்த்தகத்தில் அங்கிள் சாம், பாரத மாதா என எந்தப் பாகுபாடும் இல்லை.

மக்களின் இயல்பான உயிர் பயம், ஒரே நாளில் உச்சம் தொட்டது. விஞ்ஞானி சார்லஸ் இப்படி அவசரப்பட்டிருக்கக்கூடாது என்று ஒபாமா பதறியது பலவிதங்களில் சரிதான். பூமி தறிகெட்டுச் சுழன்றது. மக்கள் கிறுகிறுத்துக் கிடந்தனர். பட்டத்தின் பிடிமானம் மெல்லிய நம்பிக்கை நூலில்தான் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஆபரேஷன் நோவா - 14

அடுத்த 24 மணி நேரத்தில் மீடியா என்ன செய்ய வேண்டும் என்று உலகத் தலைமைகள் முடிவெடுத்தன. மக்களைக் காக்க ஒரே வழி சினிமா. அன்றுதான் ரிலீஸான படமாக இருந்தாலும் அதை டி.வி-யில் ஒளிபரப்புமாறு உலகம் முழுக்க வலியுறுத்தப்பட்டனர். இலங்கையில் பிரபாகரன் இறந்துபோனதாகச் செய்தி வந்தபோது தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தனுஷ், விஜய் நடித்த புதிய படங்களை ஒளிபரப்பியது நல்ல விளைவைத் தந்ததாக உளவுத் துறை ஐடியா கொடுத்தது. அதைவிட வேகமான திசைதிருப்பல் தேவைப்பட்டது. பல சேனல்களில் ஒரே ஒரு மனிதன் ஒரு நாட்டையோ, உலகத்தையோ காப்பாற்றுகிற அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின.

ஆபரேஷன் நோவா - 14

உலக சேனல்கள் அனைத்திலும், சார்லஸ் ஆறு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்த செய்தி பல்வேறு ஆதாரங்களுடன் ஒளிபரப்பாகின. மனநல மருத்துவமனையின் உள்ளே செல்வது, வெளியே வருவது, அவர் சாப்பிட்டு வந்த மருந்துகளின் பட்டியல் எல்லாவற்றையும் ஒரு சேனல் புட்டுப் புட்டு வைத்தது. அவருக்கு இப்போது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதையும் காட்டின. விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும், கடந்த ஒரு வருடமாகவே அவர் பல்வேறுவிதமாக உளறி வருவதாகவும், அப்படியெல்லாம் இல்லை இது அமெரிக்காவின் சூழ்ச்சி என்றும் தனித்தனி டேபிள்களில் உட்கார்ந்து கருத்து மோதினார்கள்.

எப்போதும்போல உலகம் அழியும் புரளிகளின்போது ஹாலிவுட்டில் அதை அடிப்படையாக வைத்து சில திகில் படங்கள் தயாராகும். அப்படியான முயற்சியில் இருந்த '2025 - எண்ட் ஆஃப் த எர்த்’, 'தி அதர் பிளானெட்’ போன்ற படங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

சார்லஸ் எழுதிய ஒரு வார இடைவெளியில் இவ்வளவும் நடந்துகொண்டிருக்க, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்தில் ஏறத்தாழ 20 பேர் இருந்தனர். நாசா, பென்டகன், சி.ஐ.ஏ., முப்படைத் தளபதிகள்... என உயர்நிலைப் பின்னல். ஒபாமா நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

''இன்னும் இந்த பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்?''

''சுமார் ஒன்பது ஆண்டுகள்.''

''581 ஜி-ல் வாழ்வதற்கான ஏற்பாடுகள் தயாரா?''

''ஆர்கானிக் உணவுகள், ஆக்சிஜன் செறிவூட்டல் போன்றவை நம்பிக்கை அளித்துள்ளன. புதிய மனிதன் பிறந்து புஷ்டியாக வளர்ந்து வருகிறான். மக்கள் இன்னும் இரண்டு மாதங்களில் கலங்களைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால்...''

''கடைசியாக உச்சரித்த வார்த்தை, எனக்குப் பிடிக்காதது'' - ஒபாமா சிரித்தார். அனைவரும் அதை ரசித்தவிதமாக மெல்லிய புன்னகை பூத்தனர்.

ஆபரேஷன் நோவா - 14

''அங்கு வந்திருக்கும் 'டெர்பி’ என்ற ஏலியனை இந்த வாரத்துக்குள் அழித்துவிட முயற்சி செய்து வருகிறோம்!''

''முடிவு செய்திருக்கிறோம்!'' - ஒபாமா திருத்தினார். அனைவரும் முந்தைய புன்னகையை ரிபீட் செய்தனர்.

மிஸ்டர் பிரெசிடென்ட் என்ன சொல்லப் போகிறார் என்பதை யூகித்து மற்றவர் பதில் சொல்வதும், மற்றவர் சொல்லப்போகும் பதில்களை யூகித்து பிரெசிடென்ட் அதற்கு அடுத்த கேள்விக்கு மாறுவதும் தொடர்ந்தது. ஒவ்வொரு கேள்வி-பதிலுக்கும் இடையில் நிறைய உரையாடல்கள் மௌனங்களால் நிகழ்ந்தன. அதுவும் சில இடங்களில் கண் இமைக்கும் மௌன நேரம்தான்.

சிரித்தபடி, ''இனி 581-ஜிக்கு டிக்கெட் போட்டுவிடலாமா?'' என்றார்.

''இப்போதுதான் சார்லஸை மனநலக் காப்பகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். அவர் ஆறு மாதங்களாகவே பைத்தியமாக இருப்பதாகச் சொன்னதில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம். இந்த நேரத்தில் 581-ஜிக்குப் போவதற்கு டிக்கெட் என்றால், ஜனங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். ஒரு வருடம் போகட்டும்!''

''போகட்டும். அதுவரை சிறிய போர்கள் ஏதாவது ஏற்பாடு செய்தால் போதும்... மனித உரிமையை மீறும் ஏப்பசாப்பையான நாடு எதையாவதைக் குறித்துக்கொடுங்கள்... மீடியாவும் மக்களும் பாப்கார்ன் கொறிக்க!'' என்று அட்டகாசமாகச் சிரித்தார்.

கூட்டத்தில் அதன் பிறகு விவாதிக்கப்பட்டவை, இந்தக் கதைக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்கள் என்பதால்... 581-ஜிக்கு ஒரு ஜம்ப்!

சொல்லப்போனால் 581 ஜி-யில் நடந்த முதல் காதல், மோதல் வினோதினி - ஆலீஸ் இடையே நடந்தது. ஆனால், வினோதினியின் கோபத்தில் ஒரு நியாயமும் இல்லை. அது அவளுக்குத் தெரியவும் இல்லை. கேதரினும் அகிலனும் சேர்ந்துதான் அவர்களைப் பிரித்தனர். அகிலன் கேட்ட கேள்வி, அவளைத் தெளிவாக்கியிருக்க வேண்டும்.

''நீங்க யாரு? எதுக்காக வந்ததும் முதல் வேலையா அடிக்க இறங்கிட்டீங்க?''

'நீங்க யாரா? விளையாடுகிறானா? எத்தனை மாதப் போராட்டம்? ஊரைவிட்டு உறவைவிட்டு ரோடு ரோடாக இறங்கிப் போராடி... நாடுவிட்டு... பூமிவிட்டு வந்தால் இப்படியா கேட்பான்? கிண்டல் செய்கிற நேரமா?’

அவள், அவனைத் தள்ளிவிட்டபடி சற்று தூரம் போய் அமர்ந்து, பொறுமையாக அழுதாள். அழுது அழுதுதான் ஆற்றவேண்டியிருந்தது. கண்ணீரால் கரைக்கவேண்டிய சோக மலை. அப்படியே தரையில் அமர்ந்து ஓவென அழ ஆரம்பித்தாள்.

கேதரின் எழுந்துபோய், ''என்ன ஆச்சு உனக்கு?'' என்றாள்.

ஆலீஸும் ''யார் நீங்கள்... என் மீது என்ன கோபம்?'' என்றாள் பாந்தமாக.

அகிலனோ, இது ஏதோ பெண்கள் விவகாரம் என்பதுபோல் விலகி நின்று வேடிக்கை பார்த்தான். சத்யவான்- சாவித்திரி என்று நினைத்திருந்த ஜோடி, துஷ்யந்தன்- சாகுந்தலையாக மாறிவிட்ட காட்சி அது!

வினோவைத் தேற்ற முடியாமல் கேதரினும் ஆலீஸும் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் வண்டு, 'விஷயத்தைப் போட்டு உடைத்துவிடலாமா?’ என்று நினைத்தது. ஆனால், அம்மாவின் உத்தரவு அதைத் தவிர்க்கச் செய்தது. அகிலனுக்குக் காதல் நினைவுகள் திரும்புகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவதற்கான ஒரு பரீட்சை இது.

ஏமாற்றத்தைக் கண்ணீராக வெளியேற்றிக் கொண்டே இருந்தாள் வினோதினி. மற்ற நால்வருக்கும் வேலையே ஓடவில்லை. நடுவிலே ஒருத்தி உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பது அவர்களின் வேலையைப் பாதித்தது.

வினோ, அழுகை ஓய்ந்து களைத்துப்போய் இருந்தாள். கண் இமைகள் ஈரம் சுமந்து ஒட்டியிருந்தன. அவளுக்கு சில திராட்சைகளையும் கொஞ்சம் வேர்க்கடலையும் கொண்டுவந்து கொடுத்தாள் ஆலீஸ்.

''அடையாளம் தெரியாமல் என்னைத் தாக்கிவிட்டீர்கள் என்று புரிகிறது... மனதை வருத்திக்கொள்ள வேண்டாம்'' என்றாள்.

''அடையாளம் தெரியாமல்போனது அகிலனுக்குத்தான்'' என்றவள், அகிலனை நோக்கி, ''ஏன் என்னைச் சித்ரவதை செய்கிறாய்? அகிலன், என்னை நிஜமாகவே தெரியலையா?''

ஆபரேஷன் நோவா - 14

வெர்டிகல் ஹைட்ரோபோனிக்கில் ஆரஞ்சு செடிகளுக்கு நுண்ணூட்டம் செய்துகொண்டிருந்த அகிலன், அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் 'அட, இது என்ன புதுக் கதை?’ என்ற மூன்றாம் மனித ஆர்வம்தான் இருந்தது.

''பூமியில் நாங்கள் இருவரும் காதலித்தோம்'' என்று ஆரம்பித்து ராயப்பேட்டை மார்ச்சுவரி, இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்த அகிலன் விவகாரம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். அகிலனுக்கு ஒரு புள்ளியாக ஏதோ நினைவு வந்தது. சத்யம் தியேட்டரில் படம் பார்க்கப் போனதும் டால்பின் டாட்டுவூம் மட்டுமான புள்ளி.

தன் பொருட்டு இவ்வளவு போராடியவளா என்ற பரிதாபம் மட்டும் அவனுக்குள் எழுந்தது. அகிலன் நெருங்கிவந்து அவளைக் கைபிடித்துத் தூக்கினான். ''மன்னித்துக்கொள்ளுங்கள். நிஜமாகவே நீங்கள் என் நினைவில் இல்லை. அளவுக்கு மீறிய பாசம் இங்கே தடை செய்யப்பட்டுள்ளது. காதலும்கூட. நம் எல்லோருடைய ஒரே லட்சியம், இப்போது அம்மாவுக்குத் துணை நிற்பதுதான். வேறு சிந்தனை வேண்டாம்'' என்றபடி, ''உங்கள் பெயர் என்ன?'' என்றான் பணிவான குரலில்.

டாக்டர்கள் மைக்கேல், கேப்ரியல், கார்ட்டர், ழீன் ஆகியோர் இரண்டு நாட்களாகத் தூங்கவில்லை. டெர்பி விஷயத்தில் ஒரு முக்கியமான தடயத்தை ழீன் சொன்னாள்.

''மின்னல் வெட்டும்போது ஏற்படும் உயர் மின்சக்தியால் நைட்ரஜன் மூலக்கூறுகள் அணுக்களாக உடையும். டெர்பிகளுக்கான அமினோ அமிலங்கள் தடையில்லாமல் உடனடியாகக் கிடைப்பது இந்த மின்னல்களால்தான்.அவற்றின் உடலில், அதாவது வயிற்றில் தொடர்ச்சியாக மின்னல்கள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. நைட்ரஜன் இல்லை என்றால் அவை இறந்துபோகும்; அல்லது அந்த மின்னல்களைத் தடுத்தாலும் இறந்துபோகும்!'' - ழீன் சொன்ன இந்தத் தகவல் எதோ ஒருவிதத்தில் வாழ்வதற்கான வழியைக் காட்டியது.

மைக்கேலும் வழிமொழிந்தார், ''ஆமாம். அந்த மின்னல்களை ஒழிப்பதுதான் ஒரே வழி''

''ஒழிப்பதா... மின்னல்களையா?'' கார்ட்டருக்கு மண்டை காய்ந்தது. 'பெற்ற மகளை அடையாளம் தெரியாமல்போன அப்பனிடம் இன்னும் என்னென்ன யோசனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ’ என்று ஒரு கணம் யோசித்தார். ''ஏன் அவற்றைச் சுட்டுத் தள்ள முடியாதா?'' என்றார்.

''வாய்ப்பே இல்லை. இந்திய புராணத்தில், 'மகிஷாசுரன்’ என்ற ஓர் அரக்கன் வருவான். அவனை எத்தனைத் துண்டுகளாக வெட்டினாலும் அத்தனை மகிஷாசுரனாக மாறிவிடுவான். டெர்பி கிட்டத்தட்ட அப்படித்தான். சிதைத்தால் வேகமாகப் பெருகும்!''

மின்னலைக் கொல்வது எப்படி என்று யோசிப்பது வேடிக்கையாகத்தான் இருந்தது. ''மரபுச் சங்கிலியில் மாற்றம் செய்தால் சாத்தியமா என்று பார்க்கிறேன். ஏன் இன்று கேதரின் வரவில்லை?'' என்றாள் ழீன்.

''வெர்டிக்கல் அக்ரோ பிரிவில் திசு வளர்ப்பில் வேலை பாக்கி இருந்தது. அதனால்தான் போயிருக்கிறாள். அதுவும் இல்லாமல் நாளை அவளுக்கும் அகிலனுக்கும் வெல்க்ரோ நடக்கப் போகிறது'' என்றார் கார்ட்டர்.

''ஏன் இன்னொரு குழந்தைக்கா? முதல் குழந்தையைப் பார்த்துவிட்டு ஆரம்பிக்கலாமே!'' என்றார் மைக்கேல்.

''இதில் குரோமசோம் இணைப்பு இல்லை. அவர்களின் அக்ரோ சாதனையைக் கொண்டாடும் விதமாக அம்மாவின் பரிசு. ஆலீஸ், வஸீலியேவுக்கும் உண்டு!''

''ஓ'' என்றார் கார்ட்டர்.

- ஆபரேஷன் ஆன் தி வே..