தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா
##~## |
சென்னை மீர்சாகிப் பேட்டை ஏரியா. உலகில் பின்னாளில் லாரிகள் உருவாகும் என்ற உத்தேசம் இல்லாமல் ஜனித்த தெரு. அநியாயக் குறுகல். மக்கள், மாடுகள், நாய்கள் சமரசமாக நடமாடிக் கொண்டிருந்தனர். அடிபம்பு, அரசியல் கொடிக் கம்பங்கள் போக இடுக்கான அந்த வீட்டின் முன் மூன்று சைக்கிள்கள் இருந்தன. அந்த வீட்டுக்கான மாடிப்படி, தெருவில் இருந்தே தொடங்கியது. அதில் ஒருவர் ஏறிச் செல்லும்போது இன்னொருவர் எதிரே இறங்க முடியாது. மேலே போனால் சிறிய அறையில் அது முடியும். அங்கே 15 இளைஞர்கள் இருந்தனர். சிலர் சிகரெட் பிடித்தனர்.
புகை பிடிக்காதவர்களும் சிகரெட் கங்குகள்போல கோபமாக இருந்தனர். ஓர் இளைஞன் பேசத் தொடங்கினான்.
''தோழர்களே, சார்லஸுக்கு பைத்தியக்காரன் பட்டம். மனிதர்களை வேறு கிரகத்துக்குக் கடத்திச் சென்றதாகச் சொன்ன உலகின் மகத்தான விஞ்ஞானிக்கு நேர்ந்த கதி, நமக்குச் சொல்லும் பாடம் என்ன? உலகில் யாரெல்லாம் வாழ வேண்டும் என்பதை ஆதிக்க நாடுகள் முடிவு செய்கின்றன. இதுவரை பல லட்சம் மக்கள் கடத்தப்பட்டு கிட்னி, கண், இதயம் போன்ற அவயங்களுக்காகத் தனியே ஓர் இடத்தில் வளர்க்கப்படுகிறார்கள். தேவைப்படும்போது அவயங்களை எடுத்துக்கொள்வார்கள். இதற்குத்தான் இந்த ஏற்பாடு. தமிழ்நாட்டில் அகிலன் என்பவனைக் காணவில்லை என ஒரு பெண் போராடினாள். நினைவிருக்கிறதா?''
'ஆமாம்’ என அசைந்தன 14 தலைகளும்.
''வினோதினி என்கிற அந்தப் பெண்ணையும் இப்போது காணவில்லை. வேறு கோளில் மனித உறுப்புகள் தயாரிக்க மனிதர்களைக் கடத்திச் செல்லும் இந்த அநியாயத்துக்கு எதிராக மாணவர்கள் திரள வேண்டும். நாம்தான் அவர்களைத் திரட்ட வேண்டும். தமிழகத்தில் உருவாகும் இந்த எழுச்சி... உலகம் முழுதும் பரவ வேண்டும்.''

எதிரில் இருந்த அனைவரும் தீவிரமாக ஆமோதித்தனர்.
டாக்டர் ழீன் ஒரு விஷயத்தில் தெளிவாகிவிட்டாள். டெர்பிகளின் வயிற்றுக்குள் ஏற்படும் இடைவிடாத சிறு சிறு மின்னல்கள்தான் அந்த உயிரினத்தின் ஆதாரம். அங்கேதான் இருக்கிறது அதன் உயிர். நைட்ரஜனை அணுக்களாகப் பிரிக்கும் ஆர்கானிக் மின்னல்கள். ஆழ்கடல் மீன்கள் சில, டார்ச் அடித்துக்கொண்டு உயர்மின் அழுத்தங்களோடு உலா வருவதைப் போல இவையும் மின்சார பலத்தால் இயங்கும் உயிரினங்கள். சுருக்கமாக... மின்சாரம் தடைபட்டால் அவை இறக்கும். 14 மெகாபைட்டுக்குப் பக்கம் பக்கமாக கெமிக்கல் ஈகுவேஷன் எழுதிப்பார்த்துவிட்டாள். அந்த மின்னல்களை அழிப்பது டாக்டர் ழீனுக்கு சவாலாகத்தான் இருந்தது.
சவாலில் ஜெயித்தால் அம்மாவின் பரிசு கிடைக்கும் என்றது வண்டு.
41 ஆயிரம் பேரும் ஏதோ ஒரு வகையில் இந்தக் கிரகத்துக்காகப் பணியாற்றி வருகிறார்கள். எல்லோருமே ஒருவகையில் சாதனையாளர் கள்தான். அதனால் மக்களின் பாலியல் தேவைகள் இனிமேல் வாரத்துக்கு ஒரு தரம் வெல்க்ரோ இணைப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்ற தகவல்தான் அவளைப் பாடாய்ப்படுத்தியது. 'இயற்கையோடு அதிகமாக விளையாடுவது விபரீதமான முடிவுகளைத் தரும்’ என்று எச்சரித்துப் பார்த்தாள். 'காதலை அகற்றுவதால், மோசமான விளைவுகள் ஏற்படும்’ என்று விளக்கினாள். அம்மாவுக்கு ழீன் சொல்வதில் உடன்பாடு இல்லை. காதலால் நேரமும் காமமும் விரயமாவதாகவும் அதன் பொருட்டு விரோதங்கள், மன உளைச்சல்கள், திராபையான இலக்கியங்கள்... எனச் சங்கிலித் தொடராகப் பிரச்னைகள் உருவாவதாகவும் சொன்னார்.
'அம்மா என்ன பெண்தானா?’ என்ற நியாயமான கேள்வி, ழீனுக்கு முதல் நாளில் இருந்தே குடைந்தது. அந்தக் கேள்வி இப்போது குட்டிப் போட்டு இன்னும் சிலவாகச் சேர்ந்துவிட்டன. முக்கியமாக 'அம்மா’ என்ற அதிகார மையத்தின் மீது ஒருசில கேள்விகள் இருந்தன. மிக எளிமையான முதல் கேள்வி, அவர் யார்? அவருக்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரத்தைக் கொடுத்தது யார்? அதிகாரத்தைக் கொடுத்த அந்த அதிகார மையம் 581-ல் இருக்கிறதா, பூமியிலா? நிர்வகிப்பது தனியார் அமைப்பா, அரசுகளா? லாபத்துக்காக இயங்குகிறதா? அப்படியானால் என்ன மாதிரியான லாபம்?
டெர்பி ஆராய்ச்சியோடு இவையும் சேர்ந்துகொண்டன!

உண்மையில் அவள் விரும்பிச் செய்ய நினைத்த ஆராய்ச்சியே வேறு. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பிறந்த ஆதிமனிதனை ஆராயும் ஆய்வாளர்கள், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அதிரம்பாக்கத்தில் வாழ்ந்த மனிதனை உதாசீனப்படுத்துவது ஏன்? 3,000, 4,000 ஆண்டு கிரேக்க, சுமேரிய நாகரிகத்தைச் சிலாகிக்கும் ஆய்வாளர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிச்சநல்லூர் மக்களை ஆராயாமல் விட்டது ஏன்? தமிழர்கள் என்பவர் யார்? மனித குலம் தொடங்கிய உடனே நாட்டை ஆண்ட அந்த மனிதக் கூட்டம், நாடே இல்லாமல் போனது ஏன்? இந்தியக் கடற்கரை எங்கும் புதையுண்டுபோன நாகரிகத்தின் கண்ணிகளைச் கோப்பது எப்படி என்பதுதான் அவளுடைய நிரந்தரமான ஆசைகளாக இருந்தன.
பூமிவிட்டு 581ஜி-க்கு வந்த பிறகு, அவளுடைய அந்த ஆராய்ச்சிக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. மனித நாகரிகம் எங்கே தோன்றியது என்பதுதான் இப்போது முக்கியமா? மனிதன், நாகரிகம் என எல்லாமே அந்தலை சிந்தலையாகிவிட்ட இந்தப் புதிய கோளத்தில், அந்த ஆராய்ச்சியைத் தொடர முடியாமல் போனதும், அதை நிரூபிப்பதில் என்ன பலன் இருக்க முடியும் என்றும் இருந்தது. மனித இனம் தழைத்தால், ஒருவேளை தனக்குப் பின்னால் வரும் யாராவது ஒருவர் மனித நாகரிகம் பூமியில் தொடங்கியது என்பதைக்கூட பொருட்படுத்துவார்களா என்று தெரியவில்லை.
'நாம் பூமியில் பிறந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயேகூட வாழ்க்கையைத் தொடர முடியும்தானே? பிறகு எதற்கு பூமியின் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும்?’ என்று அம்மா அதை ஒரு வரியில் நிராகரித்துவிட்டார்.
டெர்பியை ஆராய்வதைவிட அம்மாவை ஆராய்வதுதான் மனித குலத்துக்கு மிகவும் முக்கியம். ழீனுக்கு அது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அம்மாவின் உலகத்தில் அம்மாவின் ஆய்வுக்கூடத்தில் அதைச் செய்வதில் கடும் சிக்கல் இருந்தது. மைக்கேல், அகிலன், கேத்ரின், ஆலீஸ்... போன்ற சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு அடிமைகள் போல கிடப்பதை அவள் பார்த்தாள். நினைவுகளை அழித்துவிடும் இந்த விபரீதங்கள், தனக்கும் நேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடக் கூடாது.
எல்லா யோசனைகளோடும் ழீன் தன் கடமையில் கவனமாக இருந்தாள். டெர்பிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் மட்டுமே நைட்ரஜன் அளிக்கப் பட்டது. தெளியவெச்சு தெளியவெச்சு அடிக்கும் டெக்னிக்! நைட்ரஜனோடு வேறு சில டாக்ஸிக் சாமாசாரங்களை உட்படுத்திப் பார்த்தபோதும் அது இறப்பதற்கான ஆரம்பக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவையும் உணவாக ஜீரணிக்கப்பட்டன. அவளுடைய மெடுலா தளத்தில் சின்ன ஸ்பார்க்.
''கண்டுபிடித்துவிட்டேன்... டாக்டர் மைக்கேல். இந்த ஜீவனை அழிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து விட்டேன்...'' என்றாள் மிகுந்த உற்சாகத்தோடு. மைக்கேல், கார்ட்டர், கேப்ரியல் மூவரும் புதையலைக் கண்ட மாதிரி பார்த்தனர்.
அக்ரோ முயற்சியில் வெற்றி கண்டதற்காக அம்மா நால்வருக்கும் பரிசு அளிக்கப்போவதாக வண்டு முதலில் அறிவித்தது. இந்த வனாந்திர கோளில் 'பரிசு’ என்பதன் அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது வினோதினிக்கு. என்ன பரிசைக்கொண்டு மனிதர்களைச் சந்தோஷப்பட வைத்துவிட முடியும்? வண்டு வழிகாட்டுதலுக்கு ஏற்ப, நால்வரும் இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து நின்றனர். கேத்ரின் அவளுடைய சட்டையின் கைப் பகுதியில் இருந்து எதையோ எடுத்து அகிலனின் கைப் பகுதியில் இணைத்தாள். அதே போல ஆலீஸும் வஸீலியேவும். தியானம் போல சில நிமிடங்கள் நின்றுவிட்டு புன்னகையோடு பிரிந்தனர்.
ஏதோ போதைப் பொருளை அவர்களுக்குள் செலுத்துவதாகத்தான் வினோதினி பயந்தாள்.
அவர்களின் முகங்களில் சற்றுமுன் இல்லாத ஏதோ ஒரு மகிழ்ச்சி பூசப்பட்டிருந்தது. கண்களில் ஒரு சரணாகதித்தன்மை இருந்தது.
''என்ன பரிசு அது?'' என்று வாயைவிட்டே கேட்டாள்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, வண்டு, ''அந்தப் பரிசு எப்படி இருக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஒருவகையில் மூளை சம்பந்தப்பட்டது. அங்கு நடக்கும் சிறிய எலெக்ட்ரிசிட்டி. ஏதாவது சாதிக்கும்போது, அது உனக்கும் கிடைக்கும்'' என்றது அதற்குப் புரிந்த வரையில்.
ஹெராயின், அபின், பிரவுன் ஷ§கர்... என கலவையாக ஓர் அச்சம் உருவானது. அகிலனைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் இன்னொரு பரிசுக்காக அடுத்த சாதனையில் மூழ்கியிருந்தான்.
வஸீலியேவ், கேத்ரின் இருவரும் அவனுக்குத் துணையாக சிறுதானிய உற்பத்திக்கான செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தனர். மிகக் குறைவான தண்ணீர் இருந்தாலே இந்தக் கோளில் இருக்கும் அனைவருக்குமான உணவைப் பறிமாற முடியும் என்று அம்மாவிடம் சொல்லி அனுமதி வாங்கியிருந்தான். அடுத்த மாதம் கோளின் புது மனிதன் பிறக்கும் நாளில் எல்லோரும் கிரக மண்ணில் கால் பதிக்க ஏற்பாடு செய்வதாக அம்மா சொல்லியிருந்தார். அதற்கு முன்னால் ஏகப்பட்ட கடமைகள் அவர்கள் முன் இருந்தன.
ஆலீஸ்தான் வினோதினியின் அருகே இருந்து தேற்றிக்கொண்டிருந்தாள்.
''இந்தியாவில் பலரும் கற்பைப் போற்றுவார்கள் என்று தெரியும். அது உடல் சம்பந்தப்பட்டதா... மனம் சம்பந்தப்பட்டதா?''
ஆலீஸின் இந்தத் திடீர் கேள்வி, வினோதினியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
''எதற்கு திடீரென்று இப்படிக் கேட்கிறாய்?''
''மனித குலம் ஒரு வசதிக்காகக் கண்டுபிடித்த நம்பிக்கை...'' ஆலீஸ் முடிப்பதற்கு முன்பே வினோதினி கோபமானாள், ''என்னது வசதியா?''
''பல நாடுகளில் ஆணும் பெண்ணும் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்கிறார்கள். மனசு எப்போது சரி என்கிறதோ, அப்போது கல்யாணம் செய்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல... சீனாவிலும் இது பரவலாகி வருகிறது.''
''வளர்ந்த நாடுகள், கலாசாரத்தைத்தான் முதலில் உடைக்கின்றன.''
''ஆப்பிரிக்கா வளராத நாடுதானே? அங்கே ஒரு பழங்குடியினர் கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் பெண்ணைக் கற்புக்கரசியாக நினைக்கிறார்கள். அதாவது அவளுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கிறது என்று உறுதியாவதால், அவளை மணக்கப் போட்டியும் அதிகம் இருக்குமாம். இதைத்தான் நான் வசதியான நம்பிக்கை'' என்றேன்.
''என்ன சொல்ல வருகிறாய்?'' என்றாள் வினோதினி.
''நாம் அந்த நம்பிக்கைகளில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். வேறு கோளில். புதிய நம்பிக்கைகள் இங்கே பின்பற்றப்படுகின்றன. நாமும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.''
''இங்கே உருவாகும் நம்பிக்கைகள் பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்றாள் வினோதினி.
''கவலைப்படமாட்டாய் என்றால் ஒன்று சொல்கிறேன். சற்று நேரத்துக்கு முன் எங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு...''
ஆலீஸ், சொல்ல வருவதை வினோதினியால் வேகமாக அனுமானிக்க முடிந்தது. வேகமாக அகிலனைப் பார்த்தாள். அவன் கேத்ரினின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி உதட்டில் ஒட்டிக்கொண்டிருந்தான். அவளுக்கு 581 ஜி-யே தலைகீழாகச் சுற்றுவது போல இருந்தது!
டெர்பிகள் அங்கே ஒன்றுகூடி இருந்தன. தம்மில் ஒருவர் எதிரியிடம் பிடிபட்டுவிட்டது அவற்றுக்கு வருத்தம் ஏற்படுத்துவதாக இல்லை. மாட்டிக்கொண்ட டெர்பியை மீட்கும் உத்தேசமும் அவற்றிடம் இல்லை. மாட்டிக்கொண்ட புதிய டெர்பியின் எண்ணை உடனடியாக அழித்துவிட்டன.
''அவர்கள் ஆக்சிஜன் எடுக்கிறார்கள். நமக்கு அதனால் ஒரு தொல்லையும் இல்லை. வீணாக அவர்களைக் கொல்ல வேண்டாம்'' என்றது மூன்று.
''ஆனால், அவர்கள் வீணாகப் பிறரைக் கொல்லும் சுபாவம் உள்ளவர்கள் போல இருக்கிறார்கள். நம்முடைய ஸ்பேஸ் ஷிப் நம்மை அழைத்துச் செல்ல வருவதற்குள் நம் எல்லோரையும் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.''
''நாளை இரவு ஸ்பேஸ் ஷிப் வந்துவிடும். அதற்குள் ஒன்றும் நேர்ந்துவிடாது. நாளை நாம் தலைமையிடத்தில் பேசி முடிவுக்கு வருவோம். இதைவிட நல்ல இடம் கிடைத்திருந்தால் அங்கு சென்றுவிடுவோம். தேவைப்பட்டால் தலைமையின் தயவோடு இவர்களைத் தீர்த்துக்கட்டுவோம். நமக்கென்ன... இரண்டு நிமிட வேலை'' என்றது இரண்டு தெனாவட்டாக.
'சில் சில்’ என்றபடி எல்லா டெர்பிகளும் தலையோடு தலை முட்டிக்கொண்டன!
- ஆபரேஷன் ஆன் தி வே..