மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 22

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 22

'ஆவ்' ராசா!

முதலில் பத்திரிகையில் வந்தபோது 'அது எல்லாம் பொய்!' என்றார் மையப்புள்ளி.

'எல்லாப் பத்திரிகையுமா பொய் சொல்லும்?' என்று கேட்டான் சராசரி இந்தியக் குடிமகன். ஊழல் தொகை 7,000 கோடி

என்றார்கள். 'இதுவரை ஊழல் என்றால் 5 கோடி, 10 கோடி என்றுதானே கேள்விப்பட்டு இருக்கிறோம்? உதாரணமாக, சுடுகாட்டுக் கூரையிலோ அல்லது டான்சி நிலத்திலோ 7,000 கோடி அடிக்க முடியுமா? ஆனால், இப்போது திடீரென்று 7,000 வரை போய்விட்டதே? இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று பார்த்தால், ஊழலின் அளவு அல்லவா உயர்ந்து இருக்கிறது! பிறகு பார்த்தால், 7,000 அல்ல; 70,000 கோடி என்று தெரிந்து நெஞ்சில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான். 70,000 கோடிக்கு எத்தனை சைபர் என்று அவனுக்குத் தெரியவில்லை. இவ்வளவுக்கும் மையப்புள்ளி, 'நான் உத்தமன்; பத்திரி கையில் வருவது எல்லாம் பச்சைப் பொய்' என்று சொல்லிக்கொண்டு இருந்தது. இப்போது, அரசாங்கத்தின் ஆடிட்டர் ஜெனரலே பத்திரிகைச் செய்தியை உறுதிப்படுத்திவிட்டார். மையப்புள்ளியின் அருகே செயலா ளராக இருந்த மாத்துரும், 'இப்படிச் செய்ய வேண்டாம் என்று சொன் னேன். கேட்கவில்லை' என்று சொல்லி இருக்கிறார். ஒரு துறையின் செயலாளர் என்பவர், மந்திரிக்கு அடுத்த நிலையில் இருப்பவர். சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டுமே அந்தப் பதவிக்கு வர முடியும். டெல்லி யில் 12 ஆண்டுகள் அந்த அதிகார மட்டத்தில் புழங்கியவன் என்பதால், இது எனக்குத் தெரியும். பல மந்திரிகளுக்கு இவர்கள்தான் ஆலோசக ராகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட செய லாளரும் சொல்லிவிட்டார். ஆனால், எதற்குமே அசரவில்லை. இந்த நிலையில்தான், ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை வந்தது. அது சொல்லும் தொகை 70,000 கோடிகூட அல்ல; ஊழல் நடந்திருக்கும் தொகை 1 லட்சத்து 76ஆயிரம் கோடி. எண்களால் போட்டுப் பார்த்தால், ம்ஹூம், நான் கணக்கில் ரொம்ப வீக்!
மனம் கொத்திப் பறவை! - 22

வட இந்தியப் பத்திரிகைகளில் இப்போது ஆ.ராசா என்பதற்கு பதிலாக 'ஸ்பெக்ட்ரம்' ராசா என்று எழுதுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் ராசா தன் மந்திரி பதவியை உடனே ராஜினாமா செய்தாரா? இல்லை! 'என்ன ஆனாலும் சரி, பதவியில் இருந்து விலக மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு இருந்தார். 'கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிக்கொண் டால் கவலை வேண்டாம்; என் கட்சியும் தோழமைக் கட்சிகளும் ஆதரவு தருகிறோம்' என்று காங்கிரஸுக்குப் பச்சைக் கொடி காட்டி ஜெயலலிதா துருப்புச் சீட்டைப் போட்டதும், வேறு வழி இல்லாமல் ராஜினாமா செய்து இருக்கிறார்.

இப்போது என்னுடைய சந்தேகம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த விவகாரம் நடந்துகொண்டு இருக்கும்போதுதான், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பெண் கிராம அதிகாரி 500 லஞ்சம் வாங்கிவிட்டார் என்பதற்காக அவரை சிறையில் தள்ளியிருக்கிறது போலீஸ். அதுவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்கூட்டியே திட்டமிட்டு மறைந்து இருந்து ஏதோ ஒரு பயங்கரவாதியைப் பிடிப்பதுபோல் பிடித்து இருக்கிறார்கள். இப்படி 500 லஞ்சத்துக்கே சிறை என்றால், 1 லட்சம் கோடி, 10 லட்சம் கோடி என்று ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு வெறும் ராஜினாமாதான் தண் டனையா? இந்த 500 ரூபாயை விடுங்கள், 5 ரூபாய்க்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் போனாலே, அவர்களை இந்த செக்கர்கள் பயங் கரவாதியைப் பிடிப்பதுபோல்தானே பிடிக்கி றார்கள்?

இதுபோன்ற காரியங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டுமானால், லஞ்ச ஊழல் என்பது ஒரு தேசத் துரோகக் குற்றம் என்று மக்கள் நினைக்க வேண்டும். மக்களிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டால்தான் அரசியல்வாதிகள் மாறுவார்கள். ஒரு தேசத்தைக் காட்டிக்கொடுப்பது எப்படியோ... அதைவிட மோசமானது, மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பது!

மனம் கொத்திப் பறவை! - 22

புத்தகக் காட்சி வருவதற்குள் ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்டேன். பொதுவாக, நாவல் எழுத எனக்கு ஓரிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், இந்த முறை கதை முழுவதும் மூளைக்குள் இருந்ததால், அதை அப்படியே எழுத்தில் கொண்டுவர வேண்டும். அவ்வளவுதான். காலை யில் 4 மணிக்கு எழுந்து, தியானத்தை மட்டும் முடித்துவிட்டு உட்கார்ந்தால், இரவு 10 மணி வரை டைப் செய்வதைத் தவிர, வேறு எந்தவேலை யும் செய்வது இல்லை. போன் பேச்சு, வாக்கிங், யோகா எதுவும் கிடையாது. அவந்திகாவுடனும் கா. கிட்டத்தட்ட மௌன விரதம்தான்.

ஏழாம் நாள் காலையில் 150 பக்க நாவலை டைப் செய்து முடித்திருந்தேன். நாவல் முடிந்துவிட்டது என்று தெரிந்ததும் செய்தித்தாளைக் கையில் வைத்துக்கொண்டு, 'அப்பாடா, அந்த அயோக்கியனைக் கொன்றுவிட்டார்கள்' என் றாள் அவந்திகா. எனக்கு எதுவும் புரியவில்லை. நாவல் காரணமாக நாட்டுநடப்பு எதுவுமே தெரியாமல் இருந்தேன். விஷயத்தை விளக்கிச் சொன்னாள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் அதிர்ச்சியை அடைந்தேன். ஏனென்றால், என்னுடைய நாவலின் கதையும் அதேதான்.

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய், கொலை செய்துவிட்ட ஒருவனுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என் பதுதான் நாவல். அப்படியானால், செய்தித்தாளைப் படிக்காமலேயே செய்தித்தாளில் வந்துகொண்டு இருந்த ஒரு சம்பவத்தை எழுதிஇருக்கிறேன். என் நாவலில் பெண்; நிஜ சம்பவத்தில் சிறுமி. சமூகம் எந்த அளவுக்குச் சீரழிந்து இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.

மனம் கொத்திப் பறவை! - 22

சமூக சீரழிவின் இன்னொரு காட்சியும் மேற்கண்ட சம்பவத்தில் இருந்தே நமக்குக் கிடைக்கிறது. அந்தக் குற்றவாளியை போலீஸே என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளி இருக்கிறது. அதற்கு கோவை மக்கள் 10,000 வாலா பட்டாசு கொளுத்திக்கொண்டாடி இருக்கிறார்கள். நடந்தது ஜோடிக்கப்பட்ட என் கவுன்ட்டர்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அந்தக் குற்றவாளி, மரண தண்டனைக்கு உரியவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. இதுபோன்ற ஆட்களின் ஆண்குறியை அறுத்துவிட வேண்டும் என்கிறார் குஷ்வந்த் சிங்.

(ஓர் இடைச்செருகல்: 10 வயதுச் சிறுமியைக் கற்பழித்துக் கொல்லும் குற்றவாளிகள் பரவலாக இருக்கும் ஒரு நாட்டில், மரண தண்டனை கூடாது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்த விஷயத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரோ டும் நான் முரண்படுகிறேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். மரண தண் டனை இல்லாத சமூகம் என்பது ஓர் ஆதர்சம்; ஒரு கனவு. ஆனால், இந்தியா அந்த நிலையை இன்னும் எட்டவில்லையே? ஐந்து ஆண்டு களுக்கு முன்பு நொய்டாவில் உள்ள நிதாரி என்ற ஊரில், ஏகப்பட்ட குழந்தைகளைக் கற்பழித்து கால் வேறு கை வேறாக வெட்டிக் கால்வாயில் விட்டெறிந்த சம்பவத்தை நினைவுகூரவும்!).

ஆக, கோவை சம்பவத்தில் ஈடுபட்டவனும் மரண தண்டனைக்கு உரியவன்தான். ஆனால், அது நீதிமன்றம் மூலமாக மட்டும்தானே நடக்க வேண்டும்? சமூக விரோதிகளை போலீஸே என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளலாம் என் றால், பிறகு நீதிமன்றம் எதற்கு? வழக்கறிஞர்கள் எதற்கு? சட்டக் கல்லூரிகள் எதற்கு? எல்லாவற்றையும் மூடிவிடலாமே?

ஆனால், இந்த என்கவுன்ட்டர் ஏன் நடந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் போலீஸுக்கு எந்த மரியாதையும் இல்லை என் பது மக்களின் அபிப்பிராயமாக இருந்து வருகிறது. இந்த நிலை யில், 10 வயதுக் குழந்தையை இரண்டு பேர் - அதிலும் முன்பு பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டு இருந்த வேன் டிரைவரும் அவன் நண்பனுமே கற் பழித்துக் கொன்று இருக்கிறார் கள் என்றால், அது ஆட்சிக்கே கெட்ட பெயர். அதனால்தான் போலீஸ் அவனைத் தீர்த்துக் கட்டி இருக்கிறது. இல்லாவிட் டால், யாராவது குற்றம் நடந்த இடத்தைக் காண்பிக்க அதிகாலை நாலரை மணிக்கு குற்றவாளியை அழைத்துச் செல்வார்களா?

போலீஸே ஒருவரைக் கொல்வதை அரச பயங்கரவாதம் என்பார்கள். ஏனென்றால், இன்றைக்கு ஒரு கொடூரமான குற்றவாளியைக் கொன்றார்கள் என்றால், நாளையே அரசுக்குப் பிடிக்காத ஓர் அப்பாவியையும் இழுத்துச் சென்று, இதேபோல் கொல்லலாமே? அந்தக் கோணத்தில் இதை யோசித்துப் பாருங்கள். நமக்குப் பிடிக்காதவன் ஒருவன் இருக்கிறான் என்று ஆட்சியாளர் நினைத்தால், அவனை இதே போலீஸ் என்கவுன்ட்டர் டெக்னிக் மூலம் தீர்த்துக்கட்டலாமே? நாங்கள் கோர்ட்டுக்குத்தான் அழைத்துப் போனோம். அப்போது அவன் எங்கள் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டான்; நாங்கள் பதிலுக்குச் சுட்டதில் செத்துவிட்டான். யாரை வேண்டுமானாலும் இப்படிச் செய்யலாமே? இந்த அரசு பயங்கரவாதத்தை மக்களே பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என்பது இன்னும் கொடுமை. பாசிசத்தின் மிக மோசமான தன்மை என்னவென்றால், அந்த பாசிசம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதுதான்.

மனம் கொத்திப் பறவை! - 22

மக்கள் அந்த அளவுக்கு நீதிமன்றங்களின் வேகத்தின் மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. எந்தக் குற்றம் நடந்தாலும் தீர்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்திய உதாரணம் கசாப். எனவே, மக்களுக்கு மீண்டும் நீதித் துறையின் மீது நம்பிக்கை வர வேண்டுமானால், இதுபோன்ற கொடூரமான குற்றங்களுக்காவது உடனடி தீர்ப்பு கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

சரி, தண்டனை கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? இதுபோன்ற செக்ஸ் குற்றங்கள் தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 1972-ல் சிலியில் சென்றுகொண்டு இருந்த விமா னம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி, மலைகளின் இடையே விழுந்துவிட்டது. பயணம் செய்தவர்கள் உருகுவே நாட்டைச் சேர்ந்த ரக்ஃபி விளையாட்டு வீரர்கள். மனிதக் கறியைச் சாப்பிட்டு உயிர் பிழைத்து இருக்கிறார்கள். அதேபோல் செக்ஸ் பசிகொண்டவர்கள் எந்தக் கொடூரத்தையும் செய்வதற்குத் தயாராகவே இருப்பார்கள். அதனால்தான் இரவில் பெண்கள் தனியாக நடக்க முடியவில்லை. இதற்கு மேலும் செக்ஸ் பற்றிய விரிவான விவாதங்கள் ஏற்படவில்லை என்றால், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

மீபத்தில் திருவனந்தபுரம் சென்று இருந்தேன். சர்வதேச எழுத்தாளர் விழா. அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது, எழுத்தாளர்கள் என்றால் இப்படியும் இருப்பார்கள் என்று. குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் நடிகை ஸ்ரேயா, ஜெனிஃபர் லோபஸ் ரேஞ்சுக்கு இருந்தார்கள். அவர்களில் ஒருவர், நிலாஞ்சனா ராய். ஒருநாள் காலை நேரம். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் டைனிங் ஹாலில் எனக்கு எதிரே நிலா. அதேபோல் என்

மனம் கொத்திப் பறவை! - 22

வலது பக்கத்தில் அதே விழா வுக்கு வந்திருந்த மம்மூட்டி. தொந்தரவு செய்யக் கூடாது என்று எண்ணி மம்மூட்டிக்கு நான் ஹலோ சொல்லவில்லை. ஆனால், எனக்கு நன்கு பரிச்சயமான நிலாஞ்சனா, ஏன் எனக்கு ஹலோ சொல்லவில்லை என்று ஆச்சர்யம் அடைந்தேன். பிறகு, நிலாஞ்சனாவை மாலையில் சந்தித்தபோது 'ஹாய் சாரு' என்று சொல்லி, 'நான் உங்களைத் திருடிக்கொண்டு போகப் போகிறேன்' என்றார். 'அதுசரி, காலையில் ஏன் ஹலோ சொல்லவில்லை?' என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்ன? என்னைத் திருடிக்கொண்டு சென்றாரா, இல்லையா? எதற்காக அந்தத் திருட்டு? அதே நாள் மாலையில், ஒரு டீ கடையில் நின்று இலக்கியம் பேசியபடியே மம்மூட்டியும் நானும் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். இப்போது இடம் இல்லை. அடுத்த வாரம் சொல்கிறேன்!