மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 8

பிரமாத பிரேஸ்லெட்! வீட்டுல இருந்தே வேலை... ஆபீஸைவிட அதிக லாபம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

''படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைதான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருந்திருந்தா... திருமணம், குழந்தைகள்னு திசை மாறின சூழலால அந்தப் பிடிவாதம்தான் மிஞ்சியிருக்கும். ஆனா, 'வீட்டு லேயே... வசதியான நேரத்துல...’னு யோசிச்சு நான், 'கிராஃப்ட்'டை டிக் செய்தேன். என்னோட படிச்சவங்க வாங்குற சம்பளத்துக்குக் குறைவில்லாம இப்போ நானும் சம்பாதிக்கிறேன்!'' - வெற்றிப் புன்னகை வீசுகிறார்... சென்னை, சூளைமேடு லஷ்மிபிரியா.

''மதுரைப் பொண்ணு நான். சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடிச்ச கையோட கல்யாணம். புனே யுனிவர்சிட்டியில எம்.பி.ஏ முடிச்சேன். அதைத் தொடர்ந்து சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர் பிரிவுல வேலை பார்த்தேன். குழந்தை பிறந்தவுடன் வீட்டுலயே இருந்துட்டேன். 'வேலை வேலை’னு ஓடிட்டிருந்த எனக்கு, வீட்டுக்குள்ளயே நாட்களை நகர்த்தறது கஷ்டமா இருந்துச்சு.

இந்த நிலையில, கிராஃப்ட் வேலைப்பாடுகளை சைதாப்பேட்டையில ஒருத்தர்கிட்ட முழுமையா கத்துக்கிட்டேன். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்துக்கு நான் செஞ்ச வேலைப்பாடுகளை எல்லாம் காண்பிச்சேன். பலரோட அறிவுரை, பாராட்டுகள் எனக்கு ஊக்கம் தந்துச்சு. இதோ... இந்த ஆறுவருஷமா, அவங்களோட வழிகாட்டுதல்களோட என்னால வேகமா ஓடமுடியுது. வருமானத்தையும், கற்பனைத் திறனையும் அதிகரிக்கச் செய்யுற இந்த கிராஃப்ட் தொழிலை, பணத்துக்காக மட்டும் இல்லாம, மனதிருப்திக்காகவும் செய்துட்டு இருக்கேன்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 8

ஜுவல்லரியைப் பொறுத்தவரைக்கும் வுட் ஜுவல்லரி, பீட்ஸ் ஜுவல்லரி, கிறிஸ்டல் ஜுவல்லரினு எல்லாவிதமான ஜுவல்லரிகளும் செய்யத் தெரியும். குறிப்பா, 'பிரைடல் செட்’டுக்கு அசத்தலான வரவேற்பும், வருமானமும் உண்டு. நம்மோட தொடர்பு வட்டாரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, 'பிரைடல் செட்’ செய்து மாதம் 15,000 முதல் 20,000 வரை லாபம் அள்ளலாம்.

'இதெல்லாம் படிப்புக்கேத்த வேலையா?'னு என்னை குறை பேசினவங்க உண்டு. ஆனா, இப்ப என்ன சொல்லுவாங்க.... ஆபீஸ்ல ஃபுல் டைமா வேலை பார்த்து சம்பாதிக்கிறதை, வீட்ல இருந்தே நான் சம்பாதிக்கிறேனே!'' என்று சின்னச் சிரிப்புடன் கேட்ட லஷ்மி,

''வளையலை ஓவர்டேக் செய்ற பிரேஸ்லெட்டுக்கு, இப்போ மவுசு அதிகம். அதனால பெண்களுக்குப் பிடிச்ச மாதிரியான டிசைன்கள்ல செஞ்சு விற்பனைக்கு வெச்சா, விலையைப் பெரிதுபடுத்தாம வாங்கத் தயாரா இருக்காங்க!'' என்றவாறே, பிரேஸ்லெட் செய்யும் முறையை விளக்க ஆரம்பித்தார்...

தேவையான பொருட்கள்: கியர் ஒயர், கோல்டன் பீட்ஸ், சமோசா லாக், டாலர் செட், கியர் ஒயர் லாக், கட்டர், பிளேயர், ஜுவல்லரி ஸ்பிரிங், ஜுவல்லரி ஜாயினிங் பின்.

செய்முறை:

படம் 1: பிரேஸ்லெட் செய்வதற்கான கியர் ஒயரை எடுத்து கையின் அளவுக்கு அளந்து, அதைவிட கொஞ்சம் நீளமாக விட்டு 'கட்’ செய்து கொள்ளவும்.

படம் 2: சமோசா லாக்கை, கியர் ஒயரில் கோத்து, படத்தில் காட்டியுள்ளபடி நடுப்பகுதியில் வைத்துக் கொள்ளவும்.

படம் 3: கோல்டன் பீட்ஸை எடுத்து இரு வரிசையிலும் கோக்கவும்.

படம் 4: இதை அடுத்து டாலர் செட் ஒன்றை எடுத்து கோக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 8

படம் 5, 5a: அடுத்து ஒரு கோல்டன் பீட், ஒரு டாலர் செட் என கையின் அளவைப் பொறுத்து கோத்து, நடுவில் டாலரை கோத்து, மீண்டும் கோல்டன் பீட்ஸ், டாலர் செட் என வரிசையாக கோத்து முடிக்கவும். இப்போது பிரேஸ் லெட் முடிவடைந்துவிட்டது. இறுதியில் சமோசா லாக்கை கோத்து முடிக்கவும்.

படம் 6: படத்தில் காட்டியுள்ளது போல் இறுதியில் கியர் ஒயர் லாக்கை கோத்து, பிளேயரைக் கொண்டு பிரஸ் செய்து, மீதம் உள்ள கியர் ஒயரை கட் செய்துவிடவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 8

படம் 7: பிரேஸ்லெட்டை கோத்து முடித்ததும், ஜாயினிங் பின் மூலம் ஒரு முனையில் கொக்கியையும், மறு முனையில் ஜுவல்லரி ஸ்பிரிங்கையும் இணைத்து விடவும். இப்போது கைக்கு அழகான பிரேஸ்லெட் தயார்.

பிரேஸ்லெட் செய்துமுடித்த லஷ்மி பிரியா, ''இந்த பிரேஸ்லெட் செய்யறதுக்கு குறைவான செலவுதான் ஆகும். அதிகபட்சம் நூறு ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும்... 250 ரூபாய் முதல் விலை வெச்சு விற்கலாம்! அப்படினா... லாபம் எவ்வளவுனு நீங்களே கணக்கு போட்டுக்கோங்க!'' என்றார்.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...