ஓவியங்கள்: சேகர்
##~## |
கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா..?!
சமீபத்தில் ஒரு நாள் காலை, அருகிலுள்ள கோயிலுக் குச் சென்றிருந்தேன். அங்கு எண்ணெய் அகல் விற்கும் பெண்மணி, யாரிடமோ சத்தம் போட்டுக் கொண்டே இருந் தார். மனம் ஒன்றி கடவுளை வேண்டிக் கொள்ள முடியா மல், கஷ்டமாக இருந்தது. மாலையில் அனுமன் ஜெயந்தி என்று ஆஞ்சநேயர் கோயில் சென்றோம். அங்கு குருக்கள் ஒருவர், மற்றொரு குருக்களை ஏதோ திட்டிக் கொண்டே இருந்தார். பக்தர்கள் பரிதாபமாக பார்த்தபடி நின்றனர். நான் குருக்களிடம் சென்று 'சந்நிதியில் நின்று இப்படியெல்லாம் சத்தம் போடாதீர்கள்’ என்று, சொல்லிவிட்டு வந்தேன்.
நிறைய பிரச்னைகளோடு, மன ஆறுதல் வேண்டி, தீர்வுகளைத் தேடி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்துடன் கோயிலை நாடி வருகிறார்கள். இந்நிலை யில், 'கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா... அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்' என்கிற கதையாக... கோயிலிலும் தொல்லைகள் தொடர்ந் தால், வரும் பக்தர்களின் மனது என்ன பாடுபடும்?
- எஸ்.கிருஷ்ணகுமாரி, சென்னை-37

நெளிய வைத்த கச்சேரி!
ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நடந்த இசைக் கச்சேரி, 'மணமகளே மருமகளே வா வா’ என்ற அருமையான பாடலுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் மணமக்களுக்கு 'டெடிகேட்’ செய்வதாகக் கூறி, 'நேத்து ராத்திரி யம்மா, கட்டிப்புடி கட்டிப்புடிடா’ போன்ற பாடல்களைப் பாடி அதிர்ச்சியூட்டினர். அதைவிடக் கொடுமை... அந்தப் பாடல்களுக்கு ஏற்ப மணமக்களை நடிக்கச் சொல்லி கேட்க, அவர்களும் முகம் சுளிக்க வைக்கும் விதத்தில் ஆடினர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொள்ளும், சம்பிரதாயங்கள் மிகுந்த திருமண நிகழ்ச்சியில், இனிமேலாவது மற்றவர்களை நெளிய வைக்கும் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து, கண்ணியமாக கச்சேரி நடத்தலாமே!
- எஸ்.சுப்புலெட்சுமி, புதுக்கோட்டை
'சம்கி’யால் விளைந்த சங்கடம்!
எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, அன்று சம்கி வேலைப்பாடுகள் நிறைந்த, அழகான பிறந்த நாள் டிரெஸ்ஸில் வந்தாள். இடைவேளையில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இன்னொரு மாணவி வர, என்ன என்று விசாரித்தபோது சம்கி அவள் கண்ணின் உள்ளே (வெள்ளை பகுதியில்) ஒட்டிக்கொண்டு விட்டது என்றாள். சின்னக் குழந்தை என்பதால், அந்த சம்கியை அவளுடைய கண்ணிலிருந்து எடுப்பதற்குள் படுத்தி எடுத்துவிட்டாள்.
சம்கி, கல் போன்ற வேலைப்பாடுகள் கொண்ட உடைகள் அழகுதான். ஆனால், சின்னக் குழந்தைகளுக்கு அணிவிக்கும்போது ஆபத்தும் சேர்ந்தே இருக்கிறது என்பதை உணருங்கள் பெற்றோர்களே!
- பி.செந்தமிழ்ராம், செம்பொன்னார்கோவில்

சபை நாகரிகம் கற்றுக் கொள்ளுங்கள்... ப்ளீஸ்!
என் தோழியின் தம்பிக்குத் திருமணம். தோழியோ, அவசரத் தேவைக்காக அனைத்து நகைகளையும் அடகு வைத்துவிட்டாள். எனவே, திருமண நாள் அன்று என்னுடைய நகையையும், அவளுடைய அக்காவின் செயினையும் அணிந்திருந்தாள். திருமணத்துக்கு வந்த பெண்களோ... அனைவரின் முன்பாக 'இது யாருது, இது யாருது’ என்று ஒவ்வொன்றாகக் கேட்டார்கள். என் தோழி, கண்களில் நீர் வழிய, ''இது என் சிநேகிதியுடையது, இது அக்காவுடையது, வளையல் கவரிங்... போதுமா, இல்லை இன்னமும் தகவல் வேணுமா'' என்று சத்தமாகக் கூறிவிட்டு, கிளம்பிவிட்டாள். என் மனம் சோகத்தால் கனத்தது. படித்த பெண்களும் இப்படித்தான்... படிக்காதவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். ப்ளீஸ்... கொஞ்சம் சபை நாகரிகம் கற்றுக் கொள்ளுங்களேன்!
- ச.பாக்கியலெட்சுமி, மதுரை