மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 32

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடம் : எல்.ராஜேந்திரன்

##~##

ழாயிரம் பண்ணையில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்த சிப்பிப்பாறை நாய்க் குட்டிக்கு  'ஜானி’ என்ற பெயரை மணி மாமாதான் வைத் தான். பகல் எல்லாம் வீட்டுக்குள்ளே எங்களுடன் இருக்கும் 'ஜானி’, இரவு மணி    8 நெருங்கும்போது, மாமாவின் சைக்கிள் பெல் சத்தத்துக்காக வாசலில் காத்து நிற்கும். கடை முடிந்து மாமா வந்தவுடன் முதல் வேலையாக ஜானியை வெளியே ஒரு ரவுண்ட் அழைத்துச் சென்றுவிட்டு, பிறகு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்து, 'ஜானி’யுடன் ஒரே படுக்கை விரிப் பில் படுத்துக்கொள்வான். ஆறு மாதங்களில் நன்றாகவே வளர்ந்துவிட்ட 'ஜானி’யின் பின்னங்கால்கள் ஏனோ வளைந்துவிட்டன. வழக்கம்போல ஒருநாள் இரவு ஜானியை வெளியே கூட்டிச் சென்று வந்த மணி மாமா, முகம் வாடி, கண் கலங்கி உட்கார்ந்து இருந்தான். 'ஏன் மாமா, ஒரு மாரி இருக்கெ?’ 'கோனார் கடைக்கு தேங்கா வாங்க வந்த ஒரு சமஞ்ச பிள்ள, இந்தப் பய காலப் பாத்து கேவலமாச் சிரிச்சுட்டுல. அவ வீட்ல இப்பிடி ஒரு பிள்ள இருந்தா, நாம சிரிப்போமா?’ - படபடப்பு அடங்காமல் சொன்னான். அந்தச் சமயத்தில் திருமணம் ஆகி இருக்காத மணி மாமா, ஜானியைத் தன் சொந்த மகனாகவே நினைத்து வந்தான். 'எண்ணி ஒரே மாசம், இவன் கால சரி பண்ணுதேனா, இல்லையானு பாரேன்’ - சொடக்குப் போட்டுச் சொல்லிவிட்டு, 'நீ வால, படுப்போம்’ என்று ஜானியை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.

மூங்கில் மூச்சு! - 32

மறுநாள் காலையில் ஜானியை அழைத்துக்கொண்டு தாமிரபரணிக்குக் கிளம்பினான். 'நீங்களும் வாரேளால?’ என்னையும் தம்பியையும் உடன் அழைத்துச் சென்றான். அதற்கு முன்பு எப்போதோ ஒன்றிரண்டு முறை தாமிரபரணிக்குச் சென்றது மங்கலாக நினை வில் இருந்தது. அகல கேரியர் வைத்த சைக்கிளில் நாங்கள் மூவரும் செல்ல, வளைந்த பின்னங்கால்களுடன் ஜானி, எங்கள் சைக்கிளைத் தொடர்ந்து ஓடி வந்தது. 'மொதல்ல இந்தப் பயலுக்கு நம்ம காலு இந்த மாரி இருக்கேங்குற எண்ணம் போகணும்ல’ - மூச்சிரைக்க சைக்கிளை அழுத்திக்கொண்டே சொன்னான் மாமா.

நுரைத்து ஓடிய தாமிரபரணியை அதிசயமாக நான் பார்த்துக்கொண்டு நிற்க, ஜானியைத் தூக்கித் தண்ணீருக்குள் எறிந்தான். படு வேகமாக நீந்தி கரைக்கு வந்தது ஜானி. இப்படியாக முதல் நாளே நீச்சல் கற்றுக்கொண்ட ஜானியின் கால்கள், மணி மாமாவின் சபதத்துக்கு ஏற்ப ஒரே மாதத்தில் சரியாகின. ஆனால், இன்னும் நான் நீச்சல் கற்றுக்கொண்ட பாடில்லை!

ஜானியின் சிகிச்சைக்காக ஆற்றுக்குப் போனது போக, அதற்குப் பிறகு நானாக தாமிரபரணிக்குப் போனதை, விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான என்னுடைய தாமிரபரணிக் குளியல்கள், தவிர்க்க முடியாத கருப்பந்துறைக் குளியல்களாகத்தான் இருக்கும். கருப்பந்துறை என்பது தாமிரபரணிக் கரையை ஒட்டி இருக்கிற சுடுகாடு. துஷ்டிக்கு எப்படியும் நிறையப் பேர் வருவார்கள் என்பதால், அவர்கள் துணைக்கு இருக் கிற தைரியத்தில் துணிச்சலாகப் படித் துறையின் ஓரத்தில் நின்றுகொண்டு, கீழ்ப் படியைப் பிடித்தபடியே முங்கு போட்டுவிட்டு, தலையைத் துவட்டி விடுவேன். 'ஏ பெரியம்ம... இனி யாரு என்னய 'எல கணேசா’ன்னு வாய் நெறயக் கூப்பிடுவா? நெல்லையப்பா, இதை எல்லாம் பாக்க நான் உயிரோட இருக்கணுமா?’ என்று சற்று நேரத்துக்கு முன் செத்துப்போன பெரியம்மைக்காகவோ, மாமாவுக்காகவோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவர்கள், தாமிரபரணியைப் பார்த்த சந்தோஷத்தில் துக்கம் மறந்து ஆனந்தமாக நீச்சல் அடிப்பார்கள். 'என்னய விடுங்க. நான் எங்க பெரியப்பாவோடயே போயிருதேன்’ என்று குழந்தை இல்லாத பணக்காரப் பெரியப்பாவின் சிதையில் விழத் துணிந்தவர், பத்திரமாகக் கையில் உள்ள வாட்ச்சைக் கழட்டி படிக்கட்டில்வைத்து, அதன் மேல் சட்டையை மூடிவைத்து 'மாப்ளெ, வாட்ச்சப் பாத்துக்கெ என்னா? இங்கன ஒரு பயபுள்ளையும் நம்ப முடியாது’ என்று சொல்லிவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே சென்று தண்ணீருக் குள் டைவ் அடிப்பார்.

மூங்கில் மூச்சு! - 32

என் நண்பர்கள் பலரும் திருநெல்வேலி டவுன்வாசிகளாக இருந்தும், நீச்சல் அறியாதவர்களாக இருந்தனர். 'கடைசியா எப்பொல ஆத்துக்குப் போனே?’ -நண்பர்கள் ஒருவரை ஒருவர் கேட்கும்போது, 'எங்க பத்மா அத்த மாமனாரு செத்ததுக்குப் போனம்லா’ என்றும், 'சின்ன ஆச்சிய கொண்டுவைக்கதுக்குப் போனதுதான்’ என்றும் ஆளாளுக்கு ஒரு காரணம் சொல் வார்கள். நண்பன் ராமசுப்ரமணியன் ஒருமுறை எங்களுக்குச் சொல்லாமல் துணிந்து ஆற்றுக்குச் சென்று குளித்துவிடுவது என்று மதிய நேரத்தைத்தேர்வு செய்து சென்று இருக்கிறான். 'அப்பொதாம்ல கூட்டம் இருக்காது. யாரும் பாக்காம நாம நீச்சல் பளகலாம்’. படித் துறையில் நின்று வேட்டியை அவிழ்த்துவிட்டு, துண்டைக் கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் இறங்க எத்தனிக்கும் போது, மற்றொரு நண்பனான சந்திரஹாசன் அங்கு வந்திருக்கிறான். இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பதை ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ள விரும்பாமல், அப்படியே படிக்கட்டில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். உச்சி வெயில் நகர்ந்து, பத்தமடைப் பக்கம் போய், மாலைக் குளியலுக்கு ஆட்கள் வரத் துவங்கினர். பொறுமை இழந்து இருவருமே தங்களுக்கு நீச்சல் தெரியாது என்ற உண்மையை ஒருவருக்கு ஒருவர் ஒப்புக் கொண்டு, ஒருவன் கையை மற்றவன் பிடித்துக்கொள்ள, மற்ற கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கு போட்டு இருக் கிறார்கள். மேற்படி சம்பவம் நடந்து வருடங்கள் பலவாகியும், இன்னும் அந்த இருவரும் என்னைப்போலவே நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்னும் செய்தி, என் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்று.

கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில், இடுப்பில் சாரத்துக்கு மேல் துண்டைக் கட்டிக்கொண்டு, வெளியே சட்டையை நன்கு இழுத்து விட்டுக்கொண்டு, வீட்டுக் குத் தெரியாமல் கொஞ்ச நாட்கள் ஆற்றுக் குச் சென்று வந்தோம். உடன் மீனாட்சி சுந்தரமும் வருவான். படிக்கட்டில் குத்தவைத்து உட்கார்ந்துகொண்டு, ஓடுகிற தண்ணீரைப் பார்க்கும் மீனாட்சி சுந்தரத்திடம், 'நீச்சல் தெரியுமாலெ மீனாட்சி?’ என்றான் குஞ்சு. அவன் கேட்ட தோரணை, 'நீங்கள் கேட்டவை’ பாலன் கே.நாயரை ஞாபகப்படுத்தியது. அந்தப் படத்தில் நீச்சல் தெரியாத தன் மருமகனை இப்படித்தான் அவர் கேட்பார். தெரியாது என்று அவன் சொன்னவுடன், சட்டென்று தன் காலால் அவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிடுவார். தட்டுத் தடுமாறி பையன் நீச்சல் பழகிவிடுவான்.

ராயல் டாக்கீஸில் அப்போதுதான் நாங்கள் 'நீங்கள் கேட்டவை’ பார்த்திருந்தோம். தன்னை பாலன்.கே.நாயராகவே கற்பனை செய்துகொண்ட குஞ்சு, மீனாட்சி பதில் சொல்வதற்குள், தன் காலால் மீனாட்சியைத் தண்ணீருக்குள் தள்ள முயன்று, கால் தவறித் தானே அலறியபடி தாமிரபரணிக்குள் விழுந்தான். நீச்சல் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குஞ்சுவைக் காப்பாற்றி கரையில் கொண்டுவந்து போட்டான் மீனாட்சி சுந்தரம். குஞ்சு கண் விழிக்கும்போது, துணி துவைத்துக்கொண்டு இருந்த பெண்கள் எல்லாம் சுற்றி நின்றனர். அவர் களில் ஒரு பெண், 'பயத்துல தண்ணி குடிச்சிருக்கானானு வயித்த அமுக்கிப் பாருங்கடே’ என்றார். மேற்படி சம்பவத்துக்குப் பின், தனது நெருங்கிய உறவினர்களின் இறப்புக்குக்கூட தாமிரபரணிக்கு வராமல், வீட்டிலேயே வாளியில் தண்ணீர் நிரப்பிக் குளித்துக்கொண்டு இருந்தான், குஞ்சு.

வெளியூர்களில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் உறவினர்கள் முதல் வேலையாக தாமிரபரணிக்குச் சென்று குளிக்க ஆசைப்படுவார்கள். அப்போது துணைக்கு அவர்களுடன் செல்லும்போது, அவர்களை விடவும் தாமிரபரணியைப் பார்த்து கண் களை அகல விரிப்பேன். அவரவர் ஊர் களில், ஆற்றிலோ, குளத்திலோ, நீச்சல் குளத்திலோ நீந்திப் பழகிய அவர்கள், கரையோரமாக நின்றபடி 'முங்காச்சு’ போடும் என்னைப் பார்த்து வியப்பார்கள். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த உதவி இயக்குநர் நண்பர் ஐயப்பன், காலையில் இருந்து மதியம் வரை தாமிர பரணியில் நீந்திக்கொண்டு இருந்தார். 'ஏங்க, எங்களுக்கு எல்லாந்தாம் இந்த வாய்ப்பு கெடையாது. அங்கெயே ஓரமா நின்னு குளிச்சுக்கிட்டு இருந்தா எப்பிடி? இப்பிடி நடுவுல வந்து ஸ்விம் பண்ணுங்க’ என்று தண்ணீருக்குள்ளேயே 'விக்ரம்’ படத் தின் டிம்பிள் கபாடியா மாதிரி குட்டிக்கரணம் அடித்துக் காண்பித்து, வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்.  

சென்னையில் படப்பிடிப்புக்காக நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் பங்களாக்களுக்குச் செல்லும்போது, அங்கு உள்ள நீச்சல் குளத்துக்கு அருகில் செல்லாமல், தூரத்தில் நின்றே ஏக்கத்துடன் பார்ப்பேன். 'சதி லீலாவதி’யின் படப்பிடிப்பு நடந்த ஒரு பங்களாவில் நீச்சல் குளம் இருந்தது. அதைப் பார்த்தபடி, 'வாத்தியார்’ பாலுமகேந்திரா என்னிடம் கேட்டார். 'நீச்சல் தெரியுமாடா?’ 'தெரியாது சார்’ என்று நான் சொல்லவும், 'ஒனக்குமா?’ என்ற அவரது கேள்வி ஆறுதலாக இருந்தது. அந்தப் படத்தில் 'நினைத்தாலே இனிக்கும்’ இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனும் உதவி இயக்குநராக வேலை செய்தான். கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை அந்த வீட்டில் படமாக்கும்போது குமரவேலன் என்னைத் தனியாக அழைத்து ரகசியமாகக் காதில் சொன்னான். 'டேய், ஸ்விம்மிங் பூல் பக்கத்துல நின்னுட்டு கமல் சார் கூப்பிட்டாருன்னா... போயிடாதே. சடார்னு தள்ளிவிட்டுக் கலாட்டா பண்ணுவாரு.’ ஒருவேளை அவர் தள்ளிவிட்டாலும் எப்படியும் யாராவது காப்பாற்றிவிடுவார் கள் என்கிற நம்பிக்கை இருந்தாலும், நீச்சல் தெரியாமல் நடிகை ஹீரா முன் அசிங்கப்பட என் மனம் தயாராக இல்லாததால், அந்தப் பக்கமே செல்லாமல் தவிர்த்து வந்தேன்.

வாழ்க்கையில் நானும் நீச்சல் அடிக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது, அதுவும் நீச்சல் குளத்தில். குற்றாலத்தில் நண்பர் பாலாவும் நானும் தங்கியிருந்த விடுதியில் நீச்சல் குளம் இருந்தது. 'பாலா, ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஸ்விம்மிங் பூல் ஒண்ணு இருக்கு’ - ஒரு மாலை நேரத்தில் பாலாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். என்னைப்போல் அல்லாமல், சிறு வயதிலேயே கிணறு, குளம் எனப் பல நீர்நிலைகளில் நீச்சலடித்துப் பழகியிருந்த நண்பர் பாலா, எனக்காக அந்த நீச்சல் குளத்தில் இறங்கிய சில நிமிடங்களிலேயே முகம் மாறி கரை ஏறிவிட்டார். 'ஒரு மணி நேரமா நீந்திக்கிட்டு இருக்கென். இப்பிடி ஒடனேயே கரை ஏறுனா என்ன அர்த்தம்?’ என்று கேட்டேன். 'சின்னப் புள்ளைங்க குளிக்கிறதுக்காக இதக் கட்டிவிட்டிருக்காங்க. இடுப்பளவு தண்ணியப் பாத்தா தெரியலியா?’ தலை துவட்டாமலேயே தன் அறைக்குத் திரும்பிவிட்டார்.

மூங்கில் மூச்சு! - 32

சிறு வயதிலேயே யாராவது நீச்சல் சொல்லிக் கொடுத்திருந்தால் நானும் இன்றைக்கு நீச்சல் தெரிந்தவனாக இருந்திருப்பேன். 'ஆடிக்கொரு நாள், அமாவா சைக்கு ஒருநாள்னு ஆத்துக்குப் போனா, இப்பிடித்தான். நான் ஆய்க்குடிக்குப் போறென்பா.’

அப்போது எல்லாம் இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறை என்றாலும் குஞ்சு, தன் அத்தையின் ஊரான ஆய்க்குடிக்குச் சென்றுவிடுவான். அபூர்வமாகத்தான் செல்வோம் என்றாலும், ஏற்கெனவே அசிங்கப்பட்டு இருந்ததால், எங்களுடன் தாமிரபரணிக்கு அவன் வருவதே இல்லை. ஆய்க்குடியில் அப்போது இருந்த யாரோ வித்யாவாம். அவரிடம் நீச்சல் பழகி வந்தான், நன்றாக நீச்சல் அடிக்கத் தெரிந்த பின்னும்!

- சுவாசிப்போம்...