மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 43

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்

ஏற்றிவிட்ட ஏணி!

##~##

ல்லா இரவுகளும் விடிந்துகொண்டிருக்கையில், என் இரவு மட்டும் விடியாதிருந்த கஷ்ட காலம் அது.

அன்றாடம், இரைப்பை அரைப் பை நிரம்புவதென்பதே அத்தைக்கு மீசை முளைத்தாற்போல்!

எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புதல்வன் எம்பார் வேதத்தின் தயவில், அவன் அறையில் தங்கியிருந்தேன்.

நான் தங்கியிருந்த விடுதியின் நேர் எதிரில் சிவாவிஷ்ணு கோயில்; அங்கு ஒரு கணிகன்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 43

சோழி உருட்டிச் சொன்னான் - என் பிடர் மேல், ஏழரை ஏறி உட்கார்ந்து இருக்கிறது என்று!

ழுத்தின் மேல் காகவாகனன் உட்கார்ந்திருந்தால் -

உண்டி கிட்டுமா? உடுக்கை கிட்டுமா? உறையுள் கிட்டுமா?

நான் நளனானேன்!

தந்தை போய்; தாய் போய் - தாரித்திரியம் தலை முதல் தாள் வரை தழுவி நிற்கையில், உறவுகளும் உடன்பிறப்பு களும் உதறிவிட -

நான் தனி; காரணம் சனி!

த்தகு அவல நாள்களில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அடிக் கடி என் அறைக்கு வருவார்.

தாம்பூலம் தரிப்பார்; தரையில் விழுந்து தெறித்த சில்லறைகள்போல் சிரிப்பார்; நெல்லிக்காய் நிறம்; நடுத்தரம் - நெட்டையுமில்லை; குட்டையும் இல்லை!

பிரபல எழுத்தாளர்; அவரது எழுத்து களை ஏந்தி நிற்காத ஏடுகளே இல்லை எனலாம்!

நான் - திருவரங்கத்திலிருந்தே அவரது தீவிர வாசகன்.

பேனாக் கலப்பையால் பேப்பர் வயல்களை ஆழ உழுது - எண்ண விதைகளை எங்கணும் தூவி -

வார்த்தை வாய்க்காலைப் பாய்ச்சி, நெற்கதிர்கள் அனைய சொற்கதிர்களை அறுவடை செய்து -

அவற்றைச் சிறுகதைச் சோறாகவும் நெடுங்கதைச் சோறாகவும் சமைத்துச் சகலருக்கும் சாப்பிடத் தருவதில் சமர்த்தர் அவர்.

மாதவிடாய்க் காலத்தே, மாடியில் உட்கார்ந்துகொண்டு பொழுதைப் போக்கப் பூவையர் புரட்டும் புதினங்களல்ல அவரது படைப்பு.

மனிதம்; புனிதம் - இரண்டும் இருந்து, வாசகர்களை வெயிலில் வெண்ணெய்யாக்கும் அவரது எழுத்து -

புதுமைப்பித்தன்; கரிச்சான் குஞ்சு; மௌனி - இந்த ஜாதி!

வர்தான்- வருவாய்க்கும்; சோறு ஒரு வாய்க்கும் அடியேன் வக்கில்லாமல் இருப்பது கண்டு -

என்னை ஒரு கவிதை எழுதச் சொல்லி வாங்கிப்போய் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 43

மதுரை திருமாறன் நடத்திய 'முன்னணி’ என்னும் பத்திரிகையில் பிரசுரிக்க வைத்து, பதினைந்து ரூபாய் வாங்கிக் கொடுத்தார்!

மதுரை திருமாறன் - கண்ணதாசனின் சகலை; பின்னாளில் பிரபல இயக்குநராகப் பிறங்கினார். என் நெஞ்சுக்கு நெருக்கமான தோழராக அவர் விசும்பேறும் வரைஎன்பால் வாஞ்சையோடிருந்தார்!

'இந்தக் கவிதைபோல் நிறைய எழுதும்; நான், பல்வேறு பத்திரிகை களில் போடச்சொல்லி உமக்குப் பணம் வாங்கித் தருகிறேன்!’ என்று, என் நெடும் பசிக்கு நெல்லுச் சோறாய் நின்றவர் அந்த எழுத்தாளர் பெருந் தகை.

ஆனால் - அடுத்த வாரமே, காகவாகனன் என் கழுத்திலிருந்து இறங்க -

என் இரவு விடிய; இருட்டு முடிய; வெயிலின் வெளிச்ச விழுதுகள் என் வாசலில் வந்து புரள - வெகுநாள் நான்  கடைந்த பானையில் வெண்ணெய் திரள - கண்ணதாசனுக்குப் பக்கத்து நாற்காலியில், காலம் என்னை உட்கார்த்தி வைத்தது!

ப்போதும் -

என் நலம் கருதும் அந்த எழுத்தாளர் பெருமான், என் வீட்டிற்கு வந்து ஓர் அறிவுரை சொன்னார்.

'வாலி! சினிமாப் பாட்டில் சிகரம் தொட்டு நிற்கிறீர்; மகிழ்ச்சி! ஆனால் - காலம் உம்மை ஒரு மகாக் கவிஞன் என அங்கீகரிக்க -

உமது கவிதை நூல்களும், காவிய நூல்களும், அனேகர் வீட்டு அலமாரி களை நிறைக்க வேண்டும்!’

- இப்படி அவர் சொன்ன நொடியில் இருந்து, நான் என் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சி யில் இறங்கினேன்.

அந்த எழுத்தாளர்தான் அதற்கான அணிந்துரையை, வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. அவர்களிடம் வாங்கித் தந்தார்.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் திரு.ஏவி.எம். செட்டி யார் அவர்கள் வெளியிட்ட அந்த நூலின் பெயர் 'அம்மா!’

'பொன்னம்மாள் பதிப்பகம்’ என்று - என் தாயார் பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி அதை வெளி யிட்டேன்.

'ஓய்! நீர் பாட்டு விற்கப் பிறந்தவர்; புத்தகம் விற்கப் பிறந்தவரல்ல!’ என்று என் எழுத்தாள நண்பர் -

என்னைப் 'பாரி நிலையம்’ திரு. செல்லப்பன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி, விற்பனை உரிமையைப் 'பாரி நிலைய’த்திற்கு வழங்கச் சொன்னார்.

பாரி நிலையம் மூலம் என் புத்தகம் வெளி வருவதை நான் பெருமையாகக் கருதினேன்.

ஏனெனில் -

எஞ்ஞான்றும் மூவாத் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் மு.வ. தமிழை - பாரி நிலையம்தான், உவரி சூழும் உலகு எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது!

துபோலெல்லாம் -

என்பால் அளப்பரும் அன்பு பூண்டு என்னை ஆற்றுப்படுத்திய அந்த எழுத்தாளர் கோமான் -

ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து, ''அடுத்த கவிதை நூல் எப்போது? தற்சமயம் - மரபைவிடப் புதுக்கவிதைக்கு மவுசு அதிகமாக இருக்கிறது; நீர் ஒரு புதுக்கவிதைத் தொகுப்பு ரெடி பண்ணும். 'வானதி’யில் போடச் சொல்லுகிறேன்!''

- என்று எனக்கு வேப்பிலை அடித்தார்.

அதற்கு நான் -

''அண்ணா! ஸ்ரீரங்கத்தில் இருக்கிறபோது நிறையப் புதுக்கவிதை எழுதினேன்; அப்போது, ஸ்ரீரங்கத்திலே - கோயில் எக்ஸிக்யூடிவ் ஆஃபீசரா - ந.பிச்சமூர்த்தி இருந்தார். என் கவிதையைப் பாராட்டி முதுகில் தட்டும், முடீல குட்டும் வெச்சிருக்கார். அது ஒரு காலம். சினிமாவுக்கு வந்து கவிதையே மறந்துபோச்சு. நீர் விரட்டின விரட்டுலதான், 'அம்மா’வை எழுதினேன். அது எல்லாம் மரபும், கொச்சகமும் ஆன கவிதைகள். இப்போ- புதுக்கவிதையில் புத்தகம் போடூன்னா, நடக்கிற காரியமா?'' என்று பதிலிறுத்தேன்.

'ந.பிச்சமூர்த்தி பாராட்டினார்னு சொன்னீரே - அவர்தானே, புதுக்கவிதைக்கே பிதாமகன்! அவர் பாராட்டும்படியா நீர் எழுதின கவிதை நினைவில இருந்தாச் சொல்லும்!’ என்றார் நண்பர்.

'அதுவா?’ என்று, ஒரு மாதிரி நினைவுகூர்ந்து நான் சொன்னேன். அதுதான் இது:

'இன்றைக்கு
இவ்வளவு அங்குலம்...
நிலத்துக்கு
நீர் வார்க்கலாம் என்று -
நிறைமாத மேகத்திற்கு
நீட்டோலை வரைந்தான் இந்திரன்;
அவனிட்ட கையெழுத்துத்தான் -
அந்தக் கொடிமின்னல்!’

- கவிதையைச் சொல்லி முடித்தவுடன், 'ஓய்! நீச்சல் தெரிஞ்சவன் - நாப்பது வருஷம் கழிச்சு நீர்ல விழுந்தாலும் - அந்த நீச்சு அவனுக்கு மறக்காதய்யா! பிடியும் புதுக்கவிதையை ஒரு பிடி - வசப்படும்!’ என்று எனக்கவர் கொம்பு சீவினார்!

பிறகென்ன? ஒரே பாய்ச்சல்தான். அந்த நூல்தான் வானதி வெளியீடாக வந்த 'பொய்க்கால் குதிரைகள்’; அவ்வை நடராஜன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரின் அணிந்துரை யோடு வெளிவந்தது.

அதில் உள்ள பல கவிதைகளை - திரு.பாலசந்தர், தனது 'அக்னிசாட்சி’யில் பயன்படுத்தினார்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 43

ந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னால் நான் படத்துறையில் ஓரிரு பாடல்கள் எழுதி, சற்று வளர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் -

அந்த எழுத்தாள நண்பர், தான் எழுதி இயக்கிய ஒரு மேடை நாடகத்திற்கு என்னை அழைத்துப் போனார்.

அந்த நாடகம் -

மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நடந்தது. நாடகம் நன்றாக இருந்தது. அவர் ஏற்கெனவே தேர்ந்த எழுத்தாளராயிருந்ததால், உரையாடல்கள் உணர்வுகளை உமிழ்ந்தன.

நாடகம் முடிந்ததும், அவர் என்னை மேடைக்கு அழைத்து -

அதில் கதாநாயகியாக நடித்த ஓர் இளம் நடிகையை அறிமுகப்படுத்திவைத்தார். ஒல்லி யான உருவம்; ஆயினும், அந்த நடிகையின் முகம் நல்ல களையாக இருந்தது.

'நாடகத்தில், நீங்க சிறப்பாக நடிச்சீங்க!’ என்று நான் பாராட்டினேன்; அவர் நாணிப் புன்னகைத்தார்.

'வாலியாரே! சீக்கிரமே இந்தப் பொண்ணு சினிமாவ்ல - வளரப்போவுது, ஊரே வாயப் பொளந்து பாக்குற அளவு! இந்தப் பொண்ணு நடிக்கிற படத்துக்கு, நீரே பாட்டெழுதினாலும் ஆச்சரியப்படறத்துக்கு இல்லே! பாத்துண்டே இரும்... இந்த எழுத்தாளன் வாக்கு என்றைக் கும் பொய்த்ததில்லே!’

- என்று நண்பர் பரவசப்பட்டுப் பேசினார்!

வற்றையெல்லாம் -

இத்துணை ஆண்டுகள் கழித்து இன்றைக்கு நான் யோசித்துப் பார்க்கையில் -

அந்த எழுத்தாள நண்பர் வாக்கெல் லாம் அருள் வாக்காயிருந்து அப்படியே பலித்திருப்பதை எண்ணி இறும்பூதெய்து கிறேன்!

'நீர் சினிமாவைத் தாண்டியும், கவிதைகள் எழுதினால்தான் - உலகம் உம்மை மகாகவிஞன் என ஒப்பும்!’ என்று சொன்னார் அன்று அவர்.

அது - அப்படியே பலித்துவிட்டது.

ஆம்;

இன்று என்னை ஒருவர் 'மகா கவிஞன்’ என்று விளிக்கிறார்; அன்னணம் விளிப்பவர் சாதாரணமானவரல்ல!

நீண்டகாலம் நினைவில் தங்கும் நிழற் சிற்பங்களை - CELLULOID -ல் செதுக்கியவர்; பழைய சினிமாவைப் புதுக்கியவர். சத்யஜித்ரேயையும், மிருணாள் சென்னையும் சரியான விகிதாசாரத்தில் கலந்துவைத்தாற் போன்ற ஒரு கலைமகன். இயக்கிய படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர்.

'அந்த அலெக்ஸாண்டர் தரையில் வென்றான்; இந்த அலெக்ஸாண்டர் திரையில் வென்றான்!’ எனும்படி -

எம்மனோர் போற்றும் இயக்குநர் திரு.மகேந்திரன்தான் என்னை 'மகா கவிஞன்’ என விளித்தது.

திரு.மகேந்திரனின் இயற்பெயர் திரு.அலெக்ஸாண்டர்!

ன் எழுத்தாள நண்பர் தன் நாடக நடிகையை, நாளைய சினிமா நட்சத்திரம் என்றும், என் பாட்டையே அவர் படத்தில் பாடக் கூடும் என்றும் சொன்னாரே -

அந்த நடிகை திருமதி. கே.ஆர். விஜயா அவர்கள். அவர் அறிமுகமான 'கற்பகம்’ படத்தின் பாடல்கள் நான் புனைந்தவை!

துசரி; ஆர் அந்த எழுத்தாள நண்பர் என்று சொல்லவில்லையே!

அவர்தான் - என்னை ஏற்றிவிட்ட ஏணி; அவர் பெயர் -

திரு. வாசவன் அவர்கள்!

- சுழலும்...