மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 16

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

##~##

சென்னை மாநிலக் கல்லூரி வாசலில் பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டது. 'ஏகாதிபத்திய நாடுகளே... மனிதர்களைக் கடத்திக் கூறு போட்டு விற்கும் முயற்சியை நிறுத்து. ஒரு லட்சம் மக்களை உடனே திருப்பி அனுப்பு. இந்திய அரசே துணை போகாதே!’ என்று அதில் எழுதியிருந்தது.

ஷாமியானா பந்தல். அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் என்ற தடாலடி அறிவிப்போடு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கே குழுமி இருந்தனர்.

'தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, இந்திய மக்களை மனித உறுப்புகளுக்காகக் கடத்திச் சென்று வேறு கிரகங்களில் அடைத்து வைத்துள்ளனர். கிட்னி, இதயம், கண், கணையம் போன்ற உறுப்புகளுக்காக, அவர்களை தனியே இனவிருத்தி செய்கின்றனர். வல்லரசுகளின் கூட்டுச் சதியான இதைத் தடுக்க வேண்டும்’ என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை.

'இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு!’ என்று ஆளும் காங்கிரஸ் அரசு தரப்பில் வாதிட்டனர். விஞ்ஞானி சார்லஸ் எழுதிய கட்டுரையையும், இந்தியாவில் காணாமல்போயிருந்த பல நூறு பேர்களையும் பட்டியலிட்டனர் மாணவர்கள். பத்திரிகைகளும் ஊடகங்களும் இதுகுறித்த விவாதங்களை நடத்த ஆரம்பித்தன. இந்திய அரசிடம் இருந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மான பதிலுக்காக, மாணவர்கள் கட்டுக்கோப்பாக இருந்தனர்.

நான்காவது நாள் உண்ணாவிரதத்தின்போது 12 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வந்து அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். பெண்கள் கல்லூரியில் இருந்துவந்த சில மாணவிகள்தான் படுதீவிரமாக இருந்தனர். அதைப் பார்த்து ஆண்கள் கல்லூரியினர் ஆவேசமாக இருந்தனர். மாணவர்களின் இந்த ஈடுபாடு, பெற்றோர்கள் தரப்பில் பெருமைக்குரிய இரக்கத்தை உண்டாக்கியது.

ஆபரேஷன் நோவா - 16

மிக விளக்கமாகத் துண்டு அறிக்கைகள் தயாராகின. கடற்கரையில் காற்று வாங்க வந்த மக்களிடம் ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பலர் படித்தனர். அதில் சிலர் பயந்தனர்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை ஏர்போர்ட்டில் கேட்டார்.

''இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது?''

ஹைட்ரோ போனிக் தாவரச் சரத்தில் அவரைக் கொடி பூத்திருந்தது. அவரைக் கொடியின் சுருள் நீட்சி ஒன்று, படர்வதற்கு ஏங்கியது. ஒரு மன்னன், கொடி படர்வதற்காக தேரைவிட்டு இறங்கிப்போனது அகிலனுக்கு நினைவு வந்தது. சுருக்கமான நல்ல பெயர் அந்த மன்னனுக்கு. ஆனால், பெயர் மறந்துவிட்டது. வெளுத்துவிட்ட வானவில் போல திட்டுத் திட்டாக சில நினைவுகள் அவனுக்கு இப்படி சில சமயம் வந்துபோனது. இருந்தாலும் முழுசாக நினைவு வரவில்லையே என்ற பரிதவிப்பு எல்லாம் ஏற்படுவது இல்லை. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்பதுபோல கடமையில் மூழ்கிக்கிடந்தான்.

அகிலனுக்குச் சாதனை நாயகன் பட்டம் கிடைக்காத குறை. பூமியின் பல செடி, கொடிகள் இங்கே தழைக்கத் தொடங்கிவிட்டன. அவரைப் பூவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவனுக்குத் திடீரென 'அவரைப் பூ நாசி’ என்ற வாக்கியம் ஏனோ நினைவு வந்தது. அது தற்செயலானதுதான். அந்த வாக்கியம், அவனுக்கு ஒரு பெண்ணைப் பற்றிய நினைவுகளைக் கிளறச் செய்தது. அவன் உடனடியாக கேத்ரினைத் திரும்பிப் பார்த்தான். அவளுக்கானது அல்ல அது. மனதில் பதிந்திருந்த ஒரு வாக்கிய வடு.

யாருக்காகவோ மூளையின் டெம்போரல் லோப் அதை நினைவில் பதித்துவைத்திருந்தது. எதற்காக இதை யோசித்தோம் எனப் புரியவில்லை. இப்போது அதைப் புரிந்துகொள்கிற அவகாசமும் இல்லை. 'இன்னும் ஒரு வாரத்தில் டெர்பிகளை அழித்துவிட்டால், அதன் பிறகு களத்தைவிட்டு இறங்கி, புதிய கோளில் நாற்றங்கால் அமைக்க வேண்டியிருக்கும்’ என்று அம்மாவின் தினச் சுற்று அறிக்கையை வண்டு தெரிவித்திருந்தது.

ஆபரேஷன் நோவா - 16

581 ஜி-யில் வசிக்கும் 41 ஆயிரம் பேரும் என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தனித்தனியாக விவரிப்பது அத்தனை சுலபமானது அல்ல. ரோட்டோரமாக சூடான பஜ்ஜியும் டீயும் விற்பனை செய்யாத குறைதான். ஒவ்வொரு கேபினிலும் வந்த 40 பேர்களுக்கான குடியிருப்புகள், அந்தந்தக் கேபினுக்கு அருகிலேயே தயாராகி இருந்தன.

ஹோலோகிராமில் வண்டு குடியிருப்புகளைக் காட்டியது. 1,001 கேபின்வாசிகளும் அவற்றைப் பார்த்தனர். கொஞ்சம் அரக்கு மாளிகை டைப்பில் இருந்தாலும் பாண்டவர்கள் காலத்து ஆபத்து ஏதும் நடக்காத வகையில், எரியாத ஃபைபரால் கட்டடங்களை உருவாக்கியிருந்தனர். சில வீடுகளுக்கு முன் ரோபோக்கள் பயிராக்கிய சிறிய தோட்டங்கள் இருந்தன. குரோட்டன்ஸுக்குப் பதில் முள்ளங்கியோ, கேரட்டோ பயிராக்கப்பட்டு இருந்தன. அழகும் ஆதாயமும் கலந்த ஹெர்பிவோரஸ் வகையறாக்கள். சாம்பிள் தாவரங்கள் அனைத்துமே இந்தக் கோளின் தட்பவெப்பத்துக்கு நன்றாகச் செழித்திருந்தன.

எல்லோர் முகங்களிலும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் நம்பிக்கை முதல்முறையாகத் துளிர்விட்டது. 82 ஆயிரம் கைகளும் கரகோஷம் எழுப்பின. அகிலன் குழுவினருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. வினோதினி, எல்லோரும் தட்டுகிறார்களே என்பதற்காக தன் கைகளையும் ஒற்றி எடுத்தாள். அவள் முகம், அழுகையின் தடயங்களில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இந்தக் கோளின் நடைமுறை என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மாற்றாள் கணவனாகவும் மாறிப்போன அகிலனை, அவள் மெள்ள மறந்தாக வேண்டும். மனதின் ரணத்தை ஆற்ற வேண்டும். ஏதோ ஒருவகையில் பயனுள்ள பணியில் மனதைச் செலுத்த வேண்டும்.

வினோதினி நீரால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தாவரப் பராமரிப்புப் பகுதிக்குச் சென்றாள். அவள் முகம் பளிச்சென்று இருந்தது. அழுத களைப்போ, முகத்தைத் துடைத்ததனாலோ, அவள் மூக்கு சிவந்து இருந்தது. அகிலன் எதேச்சையாக அதைக் கவனித்தான். அவனுக்கு அவரைப் பூவின் நினைவு வந்து போனது.

அவளைக் கூர்ந்துபார்க்கும் நோக்கோடு அவளை அருகே வருமாறு சைகை செய்தான். வினோதினி அலட்சியமாகத் திரும்பிக் கொண்டாள். அவன் மீண்டும் அழைத்தான். இந்த முறை அவள் திரும்பவே இல்லை. அகிலன் அவளை நெருங்கிவந்து அவளைத் தன் பக்கம் திருப்பும் விதமாக இடது கையைப் பிடித்து இழுத்தான். அவனுடைய செயல் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்த, விருட்டென விலக நினைத்தாள். அதே நேரம் அவன் அவளைப் பிடித்து இழுக்க, இடது தோள்பட்டையில் இருந்து அவளுடைய கை உறைப் பகுதி தனியாகப் பிரிந்துவந்தது.

வினோதினியின் இடது மேல் கையில் பதிந்திருந்த டால்பின் டாட்டூ அகிலனின் மனப் பூட்டுக்கான சாவியாக இருந்தது. வியந்து பார்த்துக்கொண்டே இருந்தான். மெள்ள அவனுடைய வலது கை அவனுடைய இடது கை சட்டைப் பகுதியை அவிழ்த்தது. இருவரின் கை டால்பின்களையும் இரண்டு தடவை ஒப்பிட்டுப் பார்த்தான்.

''நீ... நீங்கள் வினோதானே?'' என்றான் பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவளை, கல்யாண வீட்டில் சந்தித்த மாதிரி.

ஆபரேஷன் நோவா - 16

ழீனின் முகத்தை ஆர்வத்தோடு பார்த்த மூவரில் மைக்கேல் கேட்டார். ''ழீன்... என்ன கண்டுபிடித்தாய்?''

''டெர்பிக்களை அழிக்க அவற்றை தண்ணீரில் மூழ்கடித்தால் போதும். வயிற்றுக்குள் தண்ணீரை நிரப்பினால், சில விநாடிகளில் நீரில் மின்சாரம் பாய்ந்து இறந்துபோகும். வயிற்றுக்குள் இருக்கும் மின்னல்களே, அவற்றை எரித்துவிடும்.''

''அப்படியானால் இவை தண்ணீரை அருந்துவதே இல்லையா?''

''அருந்தும். ஆனால், அப்படி பருகும்போது மின்னல்கள் சற்றே நிற்கும். நாம் தண்ணீர் குடிக்கும்போது சுவாசிப்பதை நிறுத்திக்கொள்வது போல!''

''ஓ... அருமை. ஆனால், ஒவ்வொரு டெர்பியையும் இப்படி பிடித்துவந்து தண்ணீரில் மூழ்கடித்துக்கொள்வது சாத்தியமா?''

வண்டின் மூலம் அம்மாவுக்குத் தகவல் தரப்பட்டது. அம்மா தோன்றி, ''நாம் வெற்றியின் அடுத்த படிக்குச் சென்றுவிட்டோம். அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதுதான் நம் அடுத்த மூவ்'' என்றார்.

''வெறும் நீர்தான் அவற்றைக் கொல்லப் போகிறது என்பது எளிமையாக இருக்கிறது. எப்படி என்பது கடினமானதாக இருக்கிறது'' என்றார் மைக்கேல்.

''எல்லா எளிமையும் அதற்கு முன் கடுமையாக இருந்தவைதான்'' என்ற பொன்மொழியை கோள்வாசிகளுக்காக அர்ப்பணித்தார் அம்மா.

மீண்டும் அவரவர் ஆய்வில் அனைவரும் தீவிரமாக, மைக்கேல் மெதுவாக கார்ட்டர் அருகில் சென்றார்.

''அம்மாவை இதற்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு...'' என்றார்.

கார்ட்டர், தான் அடைந்த மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டார். அதாவது, சலவைப் பிரிவுக்குச் சென்று வந்தவர்களுக்கு மெள்ள நினைவு திரும்ப ஆரம்பித்திருந்தது.

க்கள் சென்றிருக்கும் கோள்களில் ஏலியன்கள் மூலம் ஆபத்து ஏற்பட்டிருப்பது, விஞ்ஞானிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ''இரவோடு இரவாக அங்கு இருக்கும் அத்தனை பேரையும் பூமிக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம்'' என்றார் ஒரு விஞ்ஞானி. ''அங்கே அவற்றைப் போராடி அழிப்பதற்கான ராணுவத்தை அனுப்பலாம்'' என்றார் இன்னொருவர்.

'' 'புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்பதுதான் நம் தாரக மந்திரம். அதன்படி புதியதோர் உலகத்தைச் செய்துவிட்டோம். அங்கே போரே தேவை இல்லாமல் செய்ய வேண்டும். ஆயுதங்களை ஒருமுறை தொட்டால், தொடர்ந்து நம்மைப் பற்றிக்கொள்ளும்'' என்று தீவிரமாக மறுத்துவிட்டார் அலெக்ஸ். ''பதிலாக அவற்றுடன் பேசித் தீர்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.''

''அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால்?''

''அப்போது திரும்புவதைப் பற்றி முடிவெடுப்போம். ஒரே நாளில் அத்தனை பேரையும் பூமிக்குத் திருப்புவோம். இருக்கும் ஒன்பது ஆண்டுகளையாவது அவர்கள் உயிரோடு கழிக்கட்டும்.''

எதற்கும் தயாராக அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அதுவரை ஒருவழிப் பாதையாக இருந்த 581 ஜி பயணம், முதல்முறையாக அன்று இரு வழிப் பாதையானது!

- ஆபரேஷன் ஆன் தி வே...