மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நிர்வாணம் சரியா?

##~##

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

ஒரு துறையில் நீடித்து நிற்பதை 'வெற்றி பெற்றுவிட்டார்’ என்கிறோம். ஒரு மனிதனுக்கு, அது தான் வெற்றியா?

பின்னே? ரஜினியும் கமலும் எத்தனை ஆண்டுகாலம் உச்சியிலேயே சஞ்சரிக்கிறார்கள்! எஸ்.பி.பி. தன் குரலில் தளர்ச்சியே காட்டாமல் எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார்! இப்படிப் பலர் உண்டு. ஆனால், உச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் உண்டு. அவர்கள் குனிந்து பார்த்தால், பாதாளம் தெரியும். ஆகவே, அவர்கள் திறமையில் ஆச்சர்யமான மாறுதல்களைக் காண்பது அரிதாகிறது. எவரெஸ்ட் உச்சியில் நின்றுகொண்டு, தன் படைப்புகளில் விதவித மான மாற்றங்களைச் செய்து, அட்டகாசமாக நர்த்தனம் ஆடிய ஒரே ஒருவர்-ஓவிய மேதை பிக்காஸோ மட்டுமே!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

சிறந்த 'கற்பனா சக்தி’ உருவாக என்ன செய்வது?

அதோடு பிறந்தால்தான் உண்டு. பிறகு, கூர்மைப்படுத்திக்கொள்ள முடியும். இளையராஜாவுடன் இசை ஞானமும் கூடவே பிறந்ததுதான். பிறகு, குதிரையை வசப்படுத்தி விதவித மாக ஓட்டிப் பழகுவதுபோல அதைக் கச்சிதப் படுத்திக்கொண்டார். குதிரை சொன்னபடி கேட்டது!

ஹாய் மதன் கேள்வி - பதில்

வெ.கா., கடையநல்லூர்.

ஆன்மிகத்தில் 'நிர்வாண நிலை’யைக் குறிப்பிடுவதற்கு வேறு வார்த்தைகள் இல்லையா?

'நிர்வாணம்’ என்பதற்கு 'ஊதி அணைத்துவிடுவது (Blowing out) என்பதுதான் நேரடி அர்த்தம். எதை அணைப்பது? 'தான்’ என்கிற உணர்வை. இது, பரவச நிலையை எல்லாம் கடந்து பேரின்பம் என்று நாம் கேள்விப் படுகிறோமே, அந்த நிலைக்குப் போய்விடுவது!

புத்த மதமும், இந்து மதமும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிற நிலை இது. இந்து மதத்தில், தமிழில் 'பிறப்பில்லாமை’ என்கிறோம். அதாவது, அதை எல்லாம் கடந்து இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுவது. குறைந்தபட்சமாக 'நான்’ என்கிற அகங்காரம் (ego) அடியோடு அகன்றுவிடுவதை (பூமியில்!) நிர்வாண நிலை என்கிறார்கள். இஸ்லாமிய சூஃபி ஞானிகளும் இந்த நிலையை நோக்கித்தான் பயணிக்கிறார்கள். அங்கே இதற்கு ஃபானா (fana) என்று பெயர். 'ஒன்றுமே இல்லாத’ நிலையை நாம் பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும். இதைச் சுலபமாக விளக்கியவர் லாவ் ஸு (Lao Tzu) என்னும் சீன தத்துவ ஞானி. 'ஒரு களிமண் பாத்திரத்தை எவ்வளவு அழகாக, நுணுக்கமாக உருவாக்கினாலும், அதன் முக்கியத்துவம் அதனுள் இருக்கும் வெற்றிடத்தில்தான் இருக்கிறது!’ என்றார் அவர். நம்மால் 'நிர்வாண நிலை’யை அடைய முடியாது. அட்லீஸ்ட் சற்று அமைதியாகவாவது வாழ்வோமே! (இப்போது சொல்லுங்கள். உடை இல்லாமல் வருவதை, 'நிர்வாணம்’ என்று அழைப்பது சரியா, தப்பா?!)

ஆ.சுரேஷ், துறையூர்.

இடுகாடு - சுடுகாடு எது சரி?

எல்லாம் ஒன்றுதான். 'மண்ணுக்குள் இடு’ காடு. 'தீயில் சுடு’ காடு! சீன ஞானி ஷூவாங்ஸி, கி.மு.286-ல், இறப்பதற்கு முன்பு சீடர்களிடம் கேட்டுக்கொண்டார். 'செத்த பிறகு என்னைப் புதைக்காதீர்கள். புழுக்கள் மட்டுமே என் உடலைத் தின்ன வேண்டுமா? ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? என் உடலைக் காட்டுக்குள் எடுத்துச் சென்று தூக்கியெறிந்து விடுங்கள். பாவம்! பறவைகள், விலங்குகள், புழுக்கள் எல்லாவற்றுக்கும் என் உடம்பு உணவாக ஆகும் இல்லையா?’

எம்.டி.ரவிச்சந்திரன், சென்னை.

தமிழன், தமிழனாக நடக்க வேண்டுமா? தென்னிந்தியனாக நடக்க வேண்டுமா?

அந்த எல்லைகளை எல்லாம் கடந்து ஏன் நீங்கள் ஒரு உலகக் குடிமகனாக நடக்கக் கூடாது? அப்படி 'நடக்கும்’போதும் உள்ளுக்குள் நீங்கள் தமிழன்தான். அதை மாற்ற முடியாது. கவலை விடுக!

மேனகா கண்ணன், குமுளி.

போட்டுக் கொடுத்தல், காட்டிக் கொடுத்தல், கூட்டிக் கொடுத்தல் என்ற மூன்று தந்திரங்களே முன்னேற வழி என்பது உண்மையா?

பலர் அப்படி முன்னேறி இருக்கலாம். ஆனால், அது தற்காலிகமான, கேவலமான வாழ்க்கை. விரைவில்

ஹாய் மதன் கேள்வி - பதில்

இந்த ஆளைவிட 'சிறப்பாக’ கூட்டிக் கொடுத்து, போட்டுக் கொடுத்து, காட்டிக் கொடுப்பவர் வந்து சேர்வார். பிறகு, இவர் காலி!

கோ.விஜயராஜன், விழுப்புரம்.

அடுத்த ஜென்மத்தில் நான் 'மதன்’ ஆகப் பிறக்க ஆசை... நீங்கள்?

போன ஜென்மத்தில், நீங்கள் 'அடுத்த ஜென்மத்தில் விஜயராகவனாகப் பிறக்க வேண்டும்!’ என்று ஆசைப்பட்டீர்களா? அது நடந்ததா என்று முதலில் எனக்குத் தெரிய வேண்டும்! (என்னைப் பொறுத்த வரை, போன ஜென்மத் தைப்பற்றி எனக்கு என்ன கருத்தோ... அதேதான் அடுத்த ஜென்மத்தைப்பற்றியும்!)