மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 17

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ஆபரேஷன் நோவா - 17

ண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டால் டெர்பி இறந்துவிடும் என்பது தெரிந்ததும், அவற்றை அழிப்பது எளிய போராகவே மாறிவிட்டது!

அம்மா சொன்னார். ''டெர்பிகளைப் பிடிப்பது மட்டும்தான் சிரமம்; அவற்றை அழிப்பது எளிது!''

இந்தச் சாதாரண வாக்கியம்கூட கேபின் 18-ல் இருந்தவர்களுக்கு, 'டூ ஆர் டை’ போல உணர்ச்சிகரமானதாக இருந்தது. டெர்பியை அழித்தே ஆக வேண்டும் என்று முஷ்டியை உயர்த்தி சங்கல்பம் செய்தனர். அவர்கள் எல்லோரும் வல்லரசுகளின் ராணுவங்களில் இருந்து பிடித்துவரப்பட்டவர்கள். அவர்களிடம் ஒரு கட்டுப்பாடும், கட்டுக்கடங்காதத் தன்மையும் இயல்பாகவே கலந்திருந்தன. புதிய கோளில் இறங்கியதும் கிரிப் காப்டர்களை இயக்கக்கூடிய பயிற்சியை வெகு சீக்கிரத்தில் அவர்கள் கற்றுக்கொண்டனர். எடுத்த நான்காவது விநாடியிலேயே 1,000 கி.மீ. வேகத்தைத் தொடும் வானூர்திகள் அவை. 25 மேக் அளவுக்கு வான் வேகம் கொண்டவை.

##~##

டெர்பிகளை அழிப்பது மூன்று கட்டங்களால் ஆனது. நரம்பு மண்டலங்களைத் தாக்கி தற்காலிகமாக நினைவிழக்கச் செய்யும் ரசாயனங்களை வைத்துத் தாக்குவது. பின்னர் ஃபைபர் வலைகளில் அவற்றைச் சுருட்டுவது. கடைசியாக அவற்றை நீரில் அமிழ்த்துவது... இதுதான் செயல்திட்டம்.

ஜேம்ஸ்பாண்ட் கதையின் மிஸ்டர் க்யூ போலச் செயல்பட்டாள் ழீன். டெர்பிகள், எந்த விஷத்துக்கும் சாவது இல்லை என்பது தெரிந்ததால், கடுமையான நியூரோடாக்ஸிக்கைத் தயாரித்தவள் அவள்தான். விஞ்ஞானத்தில் சொல்வதானால் அவற்றின் ஆக்ஸான் ஹில்லாக்குகளைச் சற்றே மறை கழல வைக்க முடியும். தமிழில்... கொஞ்ச நேரம் நினைவு தப்பும்படி செய்யலாம்!

டெர்பிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்களை கிரிப் காப்டர்களில் பொருத்தியிருந்ததால், அந்தக் கோளில் அவை எங்கு இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற ராணுவ மிதப்பு அவர்களுக்கு இருந்தது. டிஜிட்டல் சிக்னல் புராசஸர் பொருத்தப்பட்ட அதிநுட்பம், குகையில் இருந்தாலும் படம்பிடித்துக் காட்டிவிடும்.

40 ராணுவ வீரர்-வீராங்கனைகள் 10 கிரிப் காப்டர்களில் ஓசை எதுவும் இல்லாமல் புறப்பட்டு, சில விநாடிகளில் புள்ளியாகி மறைந்தனர். மத்தியக் கேந்திரத்தில் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, வந்த இடத்தில் இப்படி எல்லாம் ஆபத்து ஏற்பட்ட பயம் இருந்தாலும் வாகனம் புறப்பட்டுப்போன வேகத்தைப் பார்த்ததும் நம்பிக்கையாகத்தான் இருந்தது.

சென்னை மாநிலக் கல்லூரியின் மணிக்கூண்டு, 3.10 மணி காட்டியது. அதிகாலை இருட்டும், கடல் இரைச்சலும் சேர்ந்து இரண்டாம் கட்டத் தூக்கத்துக்கு இழுத்துக்கொண்டிருந்தன. பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மயக்கமும் சேர்த்து இழுத்தது.

அந்த அமைதியை விரட்டியபடி ஐந்து டெம்போ டிராவலர்கள் உள்ளே நுழைந்தன. அதன் பின்னால் இரண்டு போலீஸ் ஜீப்கள். அதற்கு பொறுப்பு வகிப்பவர் மாதிரி இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஜீப்பைவிட்டு இறங்கி மாணவர்கள் முன்னால் நின்றார். மாணவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை. எந்த நிலைகளில் இருந்தார்களோ அப்படியே இருந்தபடி கண்களை மட்டும் அவர் பக்கம் திருப்பினர்.

ஆபரேஷன் நோவா - 17

அதிகாரி, குத்துமதிப்பாக ஒரு மாணவனைப் பார்த்து, ''எல்லோரையும் வெகேட் பண்ணுங்க'' என்றார். பிறகு என்ன நினைத்தாரோ... ''எல்லோரும் வெகேட் பண்ணுங்க'' என்றார்.

மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.

பொறுமை இழந்து, 'வலுக்கட்டாயமாகக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கும்’ என்றபடி காவலர்களுக்குச் சைகை காட்டினார். முதல் மாணவனை ஒரு காவலர் தொட்டபோது, ''போலீஸ் அராஜகம் ஒழிக!'' என்ற முதல் குரல் கேட்டது.

மாணவர்கள் ஒவ்வொருவராக வாகனங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். 'மனிதர்களைக் கூறுபோடும் சர்வதேச சதி ஒழிக!’, 'மனித வியாபாரத்தைத் தடை செய்!’ எனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

''நாளை உங்களில் ஒருவர் உடல் உறுப்பு வர்த்தகத்துக்குக் கடத்தப்படலாம்... அன்று உங்களுக்காகக் குரல்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்'' என்றான் ஒரு மாணவன். சவுண்டு ப்ரூப் பொருத்திக்கொண்டு வந்தவர்கள் மாதிரி, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாணவர்களை இழுத்துப்போய் டெம்போவில் போட்டனர். வாகனங்கள் அனைவரையும் நிரப்பிக்கொண்டு பறந்தன. சில நிமிடங்களில் அந்த இடம் வெறிச்சோடியது. மாணவர்களைக் கைதுசெய்து வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கல்லூரிகளைக் கால வரையறை இன்றி மூடுவதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

அடுத்த சில நாட்களில் பத்திரிகைகள் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் போட்டன. அடுத்த வாரங்களில் எட்டாம் பக்கத்தில்... இடது பக்கமாகச் சின்னதாக வெளியிட்டன. சில சிறிய அமைப்புகள், மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் சில தாசில்தார் அலுவலகங்கள் முன்பு நியாயம் கேட்டன. துண்டுப் பிரசுரங்களை வாங்கிப் படித்த மக்கள், அது உண்மையாக இருக்கக் கூடாது என்ற தங்கள் விருப்பங்களுக் காகவே அதை நம்ப மறுத்தனர்.

ஜோலார்பேட்டை தாண்டி ஒரு சரக்கு ரயில் பெட்டி, குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, போராட்டத்தின் போக்கையே மாற்றிப் போட்டது. அதன் அருகே மாணவர்களின் துண்டுப் பிரசுரங்கள் கிடந்தன.  தீவிரமான சில மாணவர்கள் தேடிப்பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவர்களைத் தூண்டிவிட்டு, இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் இந்தக் கும்பலுக்குப் பின்னால் அந்நிய சக்திகள் சில இருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. பிரதமர், எப்போதும்போல மௌனமாக இருந்தார். இந்திய மாணவர் கழகம் டெல்லியை முற்றுகையிட முயன்றபோது மட்டும் 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்று ஃபேஸ்புக்கில் விவாதங்கள் நடந்தன.

மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று, அரசின் விளம்பரமாக இந்திய நாளிதழ்கள் அனைத்திலும் வெளியிடப்பட்டன.

'இந்த ஆண்டு விபத்து விகிதம் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாதது ஆகியவையே இதற்குக் காரணம். அப்படி இறந்துபோன சிலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்க முடியாமல்போனது. அதை வைத்து 'வேற்றுக்கிரகம்’ எனக் கட்டுக்கதைகள் கிளம்பியிருக்கின்றன. இந்தக் கதைகளின் பின்னணியில் இயங்கும் பிரிவினை சக்திகளை ஒன்று சேர்ந்து முறியடிப்போம்’ என்ற அறிக்கையை பல கட்சிகளும் ஒற்றுமையாக வரவேற்றன.

கிரிப் காப்டர் படையினர் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவார்கள் என்று மத்தியக் கேந்திர ஆசாமிகள் யாருமே நம்பவில்லை. மொத்தம் எட்டு டெர்பிகள். குண்டுக்கட்டாகத் தூக்கி வருவது என்றால், இதைத்தான் சொல்ல முடியும். ஒவ்வொன்றும் ஃபுல் அடித்த பொமரேனியன் நாய்க்குட்டிகள் போல கிடந்தன. ஃபைபர் கயிறுகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றும் கிரேன்கள் மூலம் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடிக்கப்பட்டன. தண்ணீரை வயிற்றுக்குள் போகவிடாமல் அவை தம் பிடித்துப் போராடுவது தெரிந்தது. வலைகளால் நன்றாக இறுக்கப்பட்டுக்கிடந்ததால் அவை துள்ள முயன்றது மெல்லிய அசைவாகத் தெரிந்தது. எந்த நேரத்திலும் கயிற்றை அறுத்துக்கொண்டு அவை பறக்குமோ என்ற பயம் இருந்தது. கையைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர். தண்ணீர் வயிற்றுக்குள் சென்ற மறு விநாடி மின்சாரம் தாக்கிய காக்கை போல நீருக்குள் கருகின. அடுத்தடுத்து... சிறிய இடைவெளிகளில் எட்டு கருகிய டெர்பிகள் நீரில் மிதந்தன.

ஆபரேஷன் நோவா - 17

ராணுவ வீரர்கள் 'ஹுர்ரே’ என்று கொக்கரிக்க... அம்மா, திரையில் தோன்றி விரலுக்கு வலிக்காமல் கை தட்டினார்.

''ழீன் இது முழுசாக உன்னுடைய சாதனை... என்ன வேண்டுமோ கேள்!''

ழீன் யோசித்தாள்.

''தயங்காமல் கேள்.''

ராணுவ கேபின்காரர்கள், அக்ரோ பிரிவினர், நாசாவில் இருந்து வந்தவர்களும் சேர்த்து அங்கே சுமார் 50 பேர் இருந்தனர்.

அத்தனை பேரும் சேர்ந்து, ''தயங்காமல் கேள்...'' என்று வழிமொழிந்தனர்.

''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வழங்கப்படும்... இந்த ராணுவ வீரர்களில் யாராவது வேணுமா?''

ராணுவ வீரர்கள் சட்டென நிமிர்ந்து சேவலைப் போல நின்றனர்.

ழீன் கேட்டாள்... ''சுதந்திரம் வேண்டும்''

அங்கு சட்டென தீவிரமான ஓர் அமைதி மூடிக்கொண்டது.

அம்மா, புன்னகை மாறாமல், ழீனை உற்றுப் பார்த்தார். அவ்வளவு கனிவாக உற்றுப் பார்ப்பதே அச்சுறுத்தலாகத்தான் இருந்தது.

''அதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை 200 சதவிகிதம் உயர்த்தித் தருவதுதான் என் அடுத்த திட்டம். அதற்கு...'' என்றபடி அகிலன் பக்கம் திரும்பினார்.

''அகிலன்... நீங்கள் இந்தக் கிரகத்தில் இறங்கி சிறிய சோதனை நிகழ்த்த வேண்டும்... தயாரா?'' என்றார்.

மாணவர்களின் போராட்டத்தை தீவிரவாத கும்பலின் வெறிச்செயலாகச் சித்திரித்த பின்பு, மக்களிடம் இருந்த கொஞ்சநெஞ்ச ஆர்வமும் மறைந்து டி.வி. சீரியல், முக்தி யோகா என திசைமாறிவிட்டது. இங்கே டி.வி. சீரியல் என்றால் அமெரிக்காவில் ஃபேஷன் ஷோ... லண்டனில் பாப் மியூசிக்... சிட்னியில் அழகிப் போட்டி... ஜெர்மனியில் நாய்க் கண்காட்சி என்று திசைகள் வித்தியாசப்பட்டன. அதை அப்படியே பார்த்துக்கொண்டால் போதும் என்றுதான் அரசுகள் நினைத்தன.

ஆபரேஷன் நோவா - 17

லண்டன் தெருக்களில் அகிலன், வினோதினி புகைப்படங்களை வைத்து தமிழர்கள் போராட்டத்தில் இறங்க... உலகம் முழுதும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் நிற பேதம் பார்க்காமல் கலந்துகொண்டனர். அகிலன், வினோதினி புகைப்படங்கள் ஒரு போராட்டக் குறியீடு போல உலக நாடுகளில் பரவ ஆரம்பித்தன. பொன்னமராவதியில் வினோதினியின் பெற்றோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.

தே நேரம் அங்கே... அகிலன் அந்தக் கோளில் இறங்கி, புதிய மண்ணில் கால் பதித்தான். கேத்ரின், ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வினோதினி, பதறிக்கொண்டிருந்தாள். புதிய கோள் மனிதர் வாழ்வதற்கான அத்தனை சோதனைகளில் பச்சைக் கொடி காட்டிய பின்புதான் மனிதரை இறக்கிப் பார்க்க அம்மா சம்மதித்தார். ரோபோக்கள் ஏராளமான செடி, கொடிகளைப் பயிராக்கி வெற்றி கண்டிருந்தன.

அகிலன் இறக்கிவிடப்பட்டிருந்த இடம், ஒரு குடியிருப்புப் பகுதியின் முகப்பு. 20 ஜோடிகள் தங்குவதற்கான இடம்.

புதிய காற்று, புதிய ஒளி, புதிய வாசம், புதிய அழுத்தம்... பழகுவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அகிலன் குடியிருப்பின் முன்னால் இருந்த நீண்ட வெளியில் நடந்து பார்த்தான்.

''ஒன்றும் பிரச்னை இல்லையே?'' என வண்டு கரிசனமாகக் கேட்டது.

''வெளிநாட்டுக்கு வந்தது மாதிரி இருக்கிறது'' என்றான்.

கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை பரவசமாகப் பார்வையைச் செலுத்தினான். மரங்கள், மலைகள் எல்லாமே தெரிந்தன. சில க்ரீனிகள் தூரத்தில் உலவிக்கொண்டிருந்தன.

அக்கறையாக அம்மா, ''பிரச்னை எதும் இல்லையே?'' என்றார்.

''இல்லை'' என்றான்.

அகிலன் தன் கையில் இருந்த சிறிய அகப்பை போன்ற கருவியால் அந்த மணலை எடுத்து விரல்களால் உதிர்த்துப் பார்த்தான். அது தங்கம் போல ஜொலித்தது. போல அல்ல; அதுவேதான்!

- ஆபரேஷன் ஆன் தி வே...