மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

பூஞ்சிப்பிக்குள் பூக்கும் வருமானம்! கட்டுரை : வே.கிருஷ்ணவேணி, படங்கள் : எம்.உசேன்

##~##

 'நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை, சிப்பிகளை வைத்து இவ்வளவு அழகழகான கிராஃப்ட் பொருட்களாக உருவாக்க முடியுமா..!’ என்று வியக்க வைக்கிறார், சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த சம்சியா பானு. இவர், ஓய்வுபெற்ற பேராசிரியை என்பது கூடுதல் வியப்பு!

''சின்ன வயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உண்டு. படிப்பு, வேலை, குடும்பம் என்றான பிறகு, அந்த ஆர்வத்துக்கு உயிர் கொடுக்கவே முடியவில்லை. ஆனால், பொழுதுபோக்காக சிப்பிகள் சேகரிப்பதைச் செய்துகொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் சிப்பிகளை வைத்தே கிராஃப்ட் பொருட்களை நான் உருவாக்கியது... கண்காட்சி, விற்பனை, பயிற்சி வகுப்புகள் வரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, சிப்பிகள் கொண்ட கலைநயப் பொருட்களை தொடர்ந்து செய்கிறேன்.

எட்டு வருடங்களாக சிப்பி கிராஃப்ட் செய்து வரும் நான், அந்தப் பொருட்களை விற்பனை செய்வதுடன் கண்காட்சியும் வைத்து வருகிறேன். ஒவ்வொரு ஞாயிறும் 10 பேருக்கு வகுப்புகள் எடுக்கிறேன். முழுமையாக கற்றுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் அளிக்கிறேன். 'பூம்புகார் கைத்திறன் மாவட்ட விருது’ வாங்கியிருக்கிறேன்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

சிப்பிகளைப் பொறுத்தவரை, வெண்மைதான்  அழகு. எனவே, நிறம் மாறாமல் அப்படியே கலைப் பொருட்கள் செய்வதே என் விருப்பம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும், அல்லது பயன்படுத்தாமல் மூலையில் கிடக்கும் பொருட்களில் சிப்பிகள் வைத்து அலங்காரம் செய்து, அழகுப் பொருள் ஆக்குவது என் சிறப்பு. இங்கே என் வீட்டின் நுழைவாயிலில் நீங்கள் பார்த்த சிப்பி அழகுப் பொருள், என் தாத்தா பயன்படுத்திய தட்டின் மேல் செய்யப்பட்ட வேலைப்பாடு. இப்படி தூக்கி எறியும் கோலா பாட்டில், உடைந்துபோன மீன் தொட்டி, பயன்படுத்தாமல் கிடக்கும் ஆஷ் ட்ரே என்று பலவற்றையும் சிப்பிகளால் அழகுபடுத்திஇருக்கிறேன்.

புதுமையாக என்ன பண்ணலாம் என்று யோசிக்க யோசிக்க, பல வழிகள் கிடைக்கும். அப்படித்தான் ஒரு முறை, ஜுவல் பாக்ஸ்களை சிப்பி வைத்து அழகுபடுத்தி ஒரு கண்காட்சியில் வைத்தேன். அனைத்தும் விற்றுவிட்டது. என் தனித்தன்மையான கைவினைப் பொருளாக நான் நினைப்பது, சிப்பி வேலைப்பாடுகளைக் கொண்ட கண்ணாடி அலங்காரம்தான். எவ்வளவு உயரத்தில், அகலத்தில், வீட்டில் எந்த இடத்தில் வைப்பதற்கு என்பதை எல்லாம் சரியாகச் சொல்லி ஆர்டர் கொடுத்துவிட்டால், அழகாக செய்துகொடுத்து, அதற்கேற்ற விலை நிர்ணயம் செய்துடுவேன்'' என்ற சம்சியா,

''உங்களுக்காக இங்கே 'சிப்பி பொக்கே’ செய்து காட்டப் போகிறேன்.'' என்றபடியே செய்முறைகளில் இறங்கினார்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

தேவையான பொருட்கள்:

ஒரே மாதிரியான பெரிய இறக்கை சிப்பிகள் - 63, ஒரே மாதிரியான சிறிய சிப்பிகள் - 9, க்ளூ கன் க்ளூ (glue gun with glue stick) - 1, ஃபெவிக்கால் எஸ்.ஹெச் (யீமீஸ்வீநீஷீறீ sலீ - பாலிதீன் பேப்பரில் மெகந்தி கோன் போல் செய்து, அதில் இதை நிரப்பிக் கொள்ளவும்) - 1, பிரம்பு குச்சி அல்லது வேப்பம் குச்சி - 3, பிளாஸ்டிக் இலைகள், போ (bow) - 1, சுத்தியல், மரக்கட்டை மற்றும் ஆணி.

செய்முறை:

படம் 1, 1a: முதலில் மூன்று பெரிய சிப்பிகளை எடுத்துக் கொள்வும். க்ளூ கன் மூலமாக படத்தில் காட்டியுள்ளபடி சிப்பியின் அடிப்பாகத்தில் ஒரு சொட்டு க்ளூ விடவும்.

படம் 2: முதலில் இட்டது கெட்டியாவதற்குள் மற்றொரு சிப்பியை அதன் மீதே ஒட்டவும்.

படம் 3, 3a: அடுத்ததாக மீண்டும் ஒரு சிப்பியை ஒட்டவும். இப்போது படத்தில் காட்டியுள்ளபடி இதழ்கள் தயாராக இருக்கும். இப்படி மூன்று இதழ்கள் என்கிற ரீதியில், மொத்தம் ஐந்து செட்கள் செய்து முடிக்கவும்.

படம் 4: படத்தில் காட்டியுள்ளது போல் ஐந்து செட் இதழ்களையும் அவற்றின் கீழ் பகுதியில் க்ளூ கன் மூலமாக இணைத்தால், அழகான பூ தயார். இதேபோல இன்னும் இரண்டு பூக்கள் செய்துகொள்ளவும்.

படம் 4a: அடுத்து, பூக்களின் மொட்டுக்கான வடிவம் செய்வதற்கு, சிறிய சிப்பிகள் மூன்றினை படத்தில் காட்டியுள்ளவாறு க்ளூ கன் கொண்டு, ஏற்கெனவே செய்த பூவின் நடுவில் ஒட்டி முடிக்கவும். இதேபோல மற்ற இரண்டு பூக்களுக்கும் செய்யவும்.

படம் 5: ஃபெவிக்கால் எஸ்.ஹெச் கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி சிப்பி இதழ்களின் அடியில் வெளியில் தெரியாதபடி சில சொட்டுகள் விட்டால், அத்தனையும் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

படம் 6, 6a: மீதம் உள்ள மூன்று பெரிய சிப்பிகளை, படத்தில் காட்டியுள்ளபடி நடுப்பகுதியில் ஆணியைக் கொண்டு துளையிடவும் (கவனம்... சிப்பி உடைந்து விடக்கூடாது).

படம் 7, 7a: தயாராக வைத்துள்ள குச்சியை, படத்தில் காட்டியுள்ளவாறு துளையிடப்பட்ட சிப்பிக்குள் நுழைத்து, க்ளூ கன் பயன்படுத்தி ஒட்டவும் (கொஞ்சம் அதிகமாக க்ளூ கன்னைப் பயன்படுத்தி, அது உறைவதற்குள் குச்சியினை செருகினால் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்). இதேபோல மூன்று குச்சிகளையும் ஒட்டவும். பிறகு, ஏற்கெனவே தயாராக வைத்துள்ள மூன்று பூக்களையும் படத்தில் காட்டியுள்ளபடி, மூன்று குச்சிகளில் இருக்கும் சிப்பி மீது ஒட்டிவிடவும். 24 மணி நேரம் காயவைக்கவும்.

படம் 8, 8a: கடைசியாக 'போ’ மற்றும் பிளாஸ்டிக் இலைகள் சேர்த்தால் சிப்பி பொக்கே தயார்!

செய்து முடித்த சம்சியா, ''இந்த 'சிப்பி பொக்கே’வை ரூபாய் 300 வரை விற்கலாம். இதில் உள்ள ஒரே ஒரு சிப்பி பூ மட்டும் செய்து, ரூபாய் 100 வரை விற்கலாம். இந்த சிப்பி அலங்காரப் பொருட்கள் தயாரிப்பை தொழிலாக எடுத்துச் செய்தால், மாதம் 10,000 வரை வருமானம் பார்க்கலாம்!'' என்றார், 'பொக்கே’வை நீட்டியபடி!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...