மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 18

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ஆபரேஷன் நோவா - 18

பெக்கோம்பெர்கா மனநல மருத்துவமனை. மனதைப் பழுதுபார்க்க 100 ஏக்கரில் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்ட 85 வயது சர்வீஸ் சென்டர். ஐரோப்பாவின் மிகப் பெரிய மனச் சேவை நிலையம்.

 அங்குதான் பலத்த பாதுகாப்புக்கு இடையில் அரைத் தூக்கத்தில் கிடத்திவைக்கப்பட்டு இருந்தார் விஞ்ஞானி சார்லஸ். அதற்குப் பதில், நிரந்தரத் தூக்கத்தையே அவருக்கு வழங்கி இருக்கலாம். ஒரு மனிதன், தன்னால் முடிந்த நல்ல காரியத்தைச் செய்ததற்காக அரச பயங்கரவாதம் வழங்கிய தண்டனை, அரைத் தூக்கம். வேற்றுக்கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மனிதர்கள் அதி ஆபத்தில் இருப்பதைச் சொன்னதற்காக உலகம் சுமத்திய எளிமையான பழி, பைத்தியக்காரன் பட்டம்.

அவருடைய குடும்பத்தினரே அவருக்கு அருகில் இருப்பதற்கு அனுமதி இல்லை. பார்வை நேரம் தொடங்கும் காலை  8மணிக்கு வந்து ஜன்னல் பக்கமாக இருந்து பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும். மியூசியத்தில் வைக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டின் பழமையான பானையைப் போல எட்ட நின்று பார்க்க வேண்டும். அத்தனை கட்டுப்பாடு.

அவருடன் இணைந்து பணியாற்றிய மனித மேம்பாட்டுக் குழு விஞ்ஞானிகள் சிலர் மட்டும்தான், பரிதாபம் அதிகமாகிப் போனால் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அவர் மீண்டும் எழுந்து ஆதாரபூர்வமாக எதையாவது எழுதிவிட்டால், உலகின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும் என்ற அச்சம். அதற்காக அவரைக் கொன்றுவிடவா முடியும்? பைத்தியக்காரன் என்ற பட்டம் கட்டிப் படுக்கவைத்துவிட்டால் போதும் என்று நினைத்தன வல்லரசுகள். மற்ற விஞ்ஞானிகளுக்கு இது ஒரு மறைமுக மிரட்டலாகவும் இருந்தது. பைப் பிடிப்பதற்குக்கூட வாயைத் திறப்பது இல்லை யாரும்.

ஆபரேஷன் நோவா - 18

அன்று ஐந்து விஞ்ஞானிகள் சார்லஸைப் பார்க்க வந்திருந்தனர். அத்தனை பேரும் ஐரோப்பியர்கள். விஞ்ஞானிகள், சார்லஸை எழுப்பி சில நிமிடங்கள் பேசிவிட்டுச் செல்வதற்கு அனுமதி உண்டு. அறிவியல் அலர்ஜி காரணமாகவோ, அதீத மரியாதை காரணமாகவோ அந்த நேரத்தில் காவலர்களும் அருகில் நிற்பது இல்லை.

''டோபா பற்றி இவ்வளவு அஞ்ச வேண்டியது இல்லை. டெக்டானிக் பிளேட் கால்குலேஷன் எப்போதும் அத்தனை துல்லியமாக இருந்தது இல்லை.''

''கெப்ளர் 78 பி எவ்வளவோ பரவாயில்லை... அதிலும் அந்த எல்.டபிள்யூ... சேம்பர்... நான் அப்போதே வேண்டாம் என்று சொன்னேன்.''

- இப்படி பேசிக்கொண்டிருந்தால் எந்தக் காவலர்தான் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார்? அவர்களுக்கு சார்லஸும் அவரைப் பார்க்க வருபவர்களும் ஒரே மாதிரி தெரிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

மெல்லிய சோகம் இழையோட தங்கள் சகதோழருக்கு அவர்கள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். அதில் ஜெர்மன் விஞ்ஞானி சைமன் கொஞ்சம் ஓவர். சில நாட்களாகவே சார்லஸை வந்து பார்த்துவிட்டுப் போவதில் அதிக அக்கறை காட்டினார்.

ஆபரேஷன் நோவா - 18

சார்லஸின் கையைப் பிடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் சைமன். சார்லஸ் ஏதோ சொல்ல நினைத்தார். அவருக்கு மயக்கத்தில் இருந்து மீண்டு, தெளிவாகப் பேச முடியவில்லை. சைமன் குனிந்து அவருடைய காதில் வைத்துக் கேட்டார்.

''என்ன சொல்கிறார்?'' என்றனர் மற்றவர்கள்.

சைமன் சுண்டுவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு, சார்லஸை கைத்தாங்கலாக மெள்ள பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றார்.

சார்லஸுக்கு நேர்ந்த கொடுமையைத் தட்டிக்கேட்க முடியாத கோழையாகிவிட்ட வருத்தம், வந்திருந்த அனைவருக்கும் இருந்தது. யார் மீது கோபப்படுவது என்றுதான் தெரியவில்லை.

''பாத்ரூம் போன சார்லஸும் சைமனும் வருவதற்குள் இந்த அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்'' என,     விஞ்ஞானிகள் அவசரமாகவும் மெல்லிய குரலிலும் வருத்தப்பட்டனர்.

ஆனால், அந்த அவசரத்துக்குத் தேவை இருக்கவில்லை. உத்தேசிக்கப்பட்ட நேரத்தைவிட இருவரும் அதிக நேரம் பாத்ரூமில் இருப்பதாக விஞ்ஞானிகளுக்குத் தோன்ற ஆரம்பித்த நேரத்தில்... வெளியே சடசடவென சத்தம்!

பாத்ரூம் ஜன்னல் மூலம் மொட்டை மாடிக்குச் சென்ற  சார்லஸும் சைமனும் ஒரு மினி ஹெலிகாப்டரில் கயிறு  மூலம் ஏறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏறியதும்  சடுதியில் ஒரு தும்பி போல மருத்துவமனை வளாக வானத்தைவிட்டு வெளியேறியது அது!

மெரிக்க அதிபர் ஒபாமா, ஃபிரெஞ்சு அதிபர் ஃபிரான்கொயிஸ் ஹோலண்டே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்... என சொற்பம் பேர் மட்டும் சார்லஸ் காணாமல்போனதற்காகக் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். 700 கோடிப் பேரின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நடுவே அந்தக் கவலை சில நிமிடங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் கரைந்து காணாமல் போனது.

ன்று சொர்க்கத்தின் திறப்பு விழா. அம்மா அப்படித்தான் சொன்னார். 41 ஆயிரம் பேரும் கேபின் சிறைகளில் இருந்து அன்று 581 ஜி-ல் இறக்கிவிடப்பட்டனர்.

ஆபரேஷன் நோவா - 18

அந்தந்த கேபின்வாசிகளுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்தன அந்த ஆயத்தக் குடில்கள். கேபின்களில் இருந்து இறக்கிவிடப்பட்ட எல்லோரும் சிதறாமல், பிராய்லர் கோழி போல அந்தந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்தனர். ஒவ்வொருவருமே பாதுகாப்பாக நடுவில் நிற்க விரும்பினர். காற்று, வெளிச்சம், வெப்பம் எல்லாம் பழைய பூமியை நினைவுபடுத்தின.

கேபின் 24-ல் இருந்தவர்களில் அகி சற்று நகர்ந்து, அங்கிருந்த தாவரத்தின் பெரிய இலையைத் தொட்டுப் பார்த்தாள். பின் தொடர்ந்து இன்னும் சிலரும் அதேபோல சம்பிரதாயமாகத் தொட்டுப் பார்த்தனர். சிலர் மிகவும் விலகிவிடாமல் சற்றே நடந்து பார்த்தனர்.

எல்லோருக்கும் வெளியில் வசிக்க முடியும் என்பதே பாதி சுதந்திரம் கிடைத்தது போல இருந்தது. எங்காவது போய் பிழைத்துக்கொள்ளலாம் போல கோளையே பார்வையால் எடைபோட்டனர். இத்தனை பெரிய உலகில் பிழைக்க ஒரு வழி இல்லாமலா போகும் என்ற பூவுலகின் சித்தாந்தம் தோன்றி மறையாத மனிதர் சிலர்தான். பரந்தவெளி, மலை, தாவரங்கள், தண்ணீர், ஆண்-பெண் இவை போதாதா மனிதன் இன்னொரு பூமியைச் சிருஷ்டிக்க?

அந்தக் கோளில் மரங்கள் காளான்கள் போல குடை குடையாக வளர்ந்திருந்தன. சிவப்பான புற்கள். பெரிய பெரிய இலைகளுடன் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள். பெரிய சமவெளி. அவர்களின் குடியிருப்புகள் இருக்கும் பகுதி நிலநடுக்கோட்டுப் பகுதி என்பதால், குளிரும் வெயிலும் நடுவாந்திரமாக இருந்தது.

சிந்து சமவெளி, சுமேரிய நாகரிகத்தை இன்னொரு ரவுண்டு வருவதற்கான தெம்பு மனித ஜீன்களில் மிச்சம் இருந்தன.

கேபின் 24-ல் இருந்தவர்களுக்கு விடுதி 24 ஒதுக்கப்பட்டிருந்தது. ழீனும் அதில்தான் சேர்க்கப்பட்டிருந்தாள். மொத்தம் 40 பேர் என்றாலும் இரண்டு பேர் படுப்பதற்கான 20 படுக்கைகள்தான் இருந்தன. எந்தப் படுக்கையில் எந்த இரண்டு பேர் என்பது குழப்பமாகத்தான் இருந்தது.

பல ஜோடிகள் விட்ட வேகத்தில் அறைக்குள் பூட்டிக்கொண்டனர். அகிலன் விரல்களை கேத்ரின் கோத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்ணைத் தேடிக்கொண்டிருக்க, அங்கே வினோதினியும் ஹென்ரிச்சும் மட்டும் நின்று கலங்கிக்கொண்டு இருப்பதை அகிலன் பார்த்தான். ஹென்ரிச்சின் கன்னத்தில் விரல் தழும்பு தெரிந்தது. அது வினோதினியின் கைங்கர்யம். ஹென்ரிச், வினோதினியைக் கையாள முயன்றிருக்கிறான்!

ஆபரேஷன் நோவா - 18

'நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்?’ என்று மனம் வெதும்பிய அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. கேத்ரினும் அகிலனும் வினோதினியைப் பார்க்க, கடும் கோபத்தோடு பதிலுக்கு அவர்களை முறைத்தாள். எட்டு கண்களும் நான்கு மனங்களும் தீர்மானிக்க முடியாமல் தவித்தன.

''காதல்... பூமியின் தொற்று வியாதி!''

''ஏய் மண்டு. உனக்கு என்ன பொன்வண்டுனு நினைப்பா? பொன்மொழியா உதிர்க்கிறே?'' வினோதினி வெகுண்டாள்.

கேத்ரின் ஏதோ முடிவெடுத்தவளாக அகிலனின் விரல்களில் இருந்து விடுபட்டு, வினோதினியை நெருங்கி வந்தாள். இருவரும் நேருக்கு நேர் பார்த்தனர். எழுத்தால் இல்லாத ஏதோ மொழியை இருவரின் கண்களும் பேசின. பின் ஹென்ரிச்சின் கன்னத்தைத் தொட்டாள். அவனுடைய இடுப்பை வளைத்துப் பிடித்தபடி விடுதிக்குள் சென்று மறைந்தாள் கேத்ரின். அங்கே வினோதினியும் அகிலனும் மட்டும் இருந்தனர். தயக்கத்தோடு அவளை நெருங்கி வந்தான் அகிலன்.

''என்னைத் தொட வேண்டாம். இப்படியே விட்டுவிடு. 300 வருஷமும் இப்படியே இருந்து செத்துப்போகிறேன்'' என்றாள் கோபமாக.

அகிலன், அவள் கண்களைப் பார்த் தான். அவை அழுது அழுது சோர்ந்து சிவந்துகிடந்தன. கன்னத்தில் இப்போதும் கண்ணீரின் தடம் தெரிந்தது. அவன் அதைத் துடைக்க எண்ணினான்.

''நீ எதற்காகத் தொடுகிறாய் என்று தெரியும். எல்லோரும் எதற்காக உள்ளே ஓடியிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும்!''

''அதற்காக இல்லை... வா'' என்றான்.

''மனிதத்தன்மையற்ற இந்தக் கூட்டத்தைவிட்டு எங்காவது ஓடிப்போய்விடலாம். இதற்குள் வேண்டாம். இது ஏதோ உயிர்க்காட்சி சாலை போல இருக்கிறது. தண்ணீர் வைக்கிறார்கள்; தீனி போடுகிறார்கள்; இனவிருத்தி செய்யச் சொல்கிறார்கள். இது சொர்க்கம் இல்லை... நரகம்'' என்றாள்.

''புதிய சட்டதிட்டம்... புதிய நாகரிகத்துக்கு மாறவில்லை என்றால் பிழைக்க முடியாது.''

''தேவை இல்லை'' என்றாள்.

''மரணமும் நம் கையில் இல்லை. எழுதிப் போட்டு அனுமதி வாங்க வேண்டும். ஒரு வாரம் பொறு. புதிய உலகம் செய்யலாம்''

அது என்ன ஒரு வாரக் கணக்கு என்று தெரியவில்லை.

''அதுவரைக்கும் நீ என்னுடன்தான் இருக்க வேண்டும். ஹென்ரிச் இன்னொரு முறை அணுகினால், அறுத்துவிடுவேன்'' என்றாள்.

தரைத்தளத்தின் கடைசி யில் இருந்தது அகிலனுக்கான அறை. இருவரும் காரிடாரில் நடந்து அறையை நெருங்கும்போதுதான் பார்த்தனர். அங்கே ழீன், ஆலீஸ், கார்ட்டர், வஸீலியேவ் ஆகியோர் காத்திருந்தனர். வினோதினி, அகிலன் இருவரின் காது மடல் பகுதியில் இருந்த சிறிய கருவியை காந்தத்தில் ஒட்டியிருந்த ஆணியைப் பிய்த்து எடுப்பதுபோல எடுத்தாள் ழீன்.

''இனி நாம் சுதந்திரமாகப் பேச முடியும்'' என்றாள். அது மொழிபெயர்க்கப்படாமல் தெளிவான ஆங்கிலத்தில் கேட்டது.

அனைவருமே திடுக்கிட்டனர்.

''வண்டு என்பது, ஒரு சிறிய ஈகியம் புராசஸர் சிப். நிறையத் தகவல்களை சென்ஸார் மூலம் இணைக்கும் வசதி. எல்லா மொழிகளையும் அவரவருக்கு ஏற்ப மொழி மாற்றித் தருவது. அதைத்தான் இப்போது கழற்றினேன்.''

எல்லோரும் ழீனை தேவதூதி வடிவத்தில் பார்த்தனர்.

அடுத்து அவள் சொன்னாள். ''இதைக் கழற்றிவிட்டால் யாரும் நம்மை ஒட்டுக்கேட்க முடியாது. டெர்பியை அழித்தாகிவிட்டது. நம் அடுத்த இலக்கு... அம்மா!''

வேறு யாருக்காவது கேட்டுவிடப்போகிறது என்ற அச்சத்தில் இப்படியும் அப்படியும் பார்த்தனர்.

''யாரும் பயப்பட வேண்டாம்'' என்று ஒரு குரல் ஆங்கிலத்தில் கேட்டது.

அந்தக் குரல்...

- ஆபரேஷன் ஆன் தி வே...