மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 19

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ஆபரேஷன் நோவா - 19

'யாரும் பயப்பட வேண்டாம்’ என்ற குரல் வந்த திசையில் இருந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்து வந்தவர், மை... க்... சாட்சாத் மைக்கேல்!

 அவரைப் பார்த்ததும், உடனடி அச்சம் காரணமாக ழீன் தரப்பினர் திருட்டு முழி முழித்தனர்.

''நீங்கள் நினைப்பது போல அம்மா நமக்கு எதிரி அல்ல'' என்று அம்மாவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தையும் தொடங்கினார். ''உங்களால் அம்மா என்று சொல்லப்படுபவர் என்னுடைய மகள். சருகைக்கூட மிதிக்க மாட்டாள். அவள் ஏன் இப்படி மாறிப்போனாள் என்பது தெரியவில்லை. அவள் இந்த ஆபரேஷனின் காரணகர்த்தா. இதற்காக உழைத்தவள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பாடுபட்டவள்'' -மைக்கேல் தன் மகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த சிரமப்பட்டார்.

அம்மாவுக்கு ஆதரவாக அவர் பேசப் பேச, 'இன்னோவா காரில்’ வந்து ஓட்டு வேட்டையாடுபவர் போலவே தோன்றினார் வினோதினிக்கு. பிறரும் மைக்கேல் தன் மகளை நியாயப்படுத்துவதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என்று அவரைப் பார்த்தனர். உளவுபார்க்க வந்தவரோ என சந்தேகித்தனர்.

''என் மகளுக்கு என்னையே அடையாளம் தெரியவில்லை. ஒரு தகப்பனுக்கு இதைவிட வேதனை இருக்க முடியாது. எனக்கும் அவள் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக என்னையே மூளைச்சலவை செய்தார்கள். இதில் இருந்தே தெரியவில்லையா, என்னையும் என் மகளையும் பிரிக்க சதி நடக்கிறது என்பது..?''

அவருக்கு மூளைச்சலவை நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், அவர்மீது பாதி நம்பிக்கைதான் இருந்தது அவர்களுக்கு. மைக்கேலும் அம்மாவும் சேர்ந்து நடத்தும் நாடகமாக இருக்குமோ என்றும் அவர்கள் நினைத்தனர். சதி வேலைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒற்றனா இவர்?

யாரும் தன்னை நம்பவில்லை என்பதை மைக்கேலால் அவர்களின் முகங்களில் இருந்து படிக்க முடிந்தது.

ஆபரேஷன் நோவா - 19

தன் மகள் ஒருத்திக்காக மட்டுமே தான் வாழ்ந்து வருவதை அவர் நிரூபிக்க முடியாமல் தவித்தார். வாழ்வின் கடைசிக் கட்டத்தில்கூட தாம் யாருக்கும் பயன்படாமல்போய்விடு வோமோ என்று அவர் பயந்துதான் போனார். மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவது சாதாரணம் இல்லைதான். இந்த மாதிரியான இக்கட்டான கட்டத்திலும் தன்னை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற தவிப்பும் இயலாமையும் அவரைக் கலங்கவைத்தன.

''என் மகள் மாறிவிட்டாள்; அல்லது அவளை யாரோ மாற்றிவிட்டார்கள். அதைச் சொல்லி அழுவதற்குக்கூட எனக்கு யாரும் இல்லை'' என்றார் காவிய நாடகத்தின் வசனம் போல.

''நாங்கள் இருக்கிறோம்... ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?'' - ழீன் அவரைத் தற்காலிகமாகத் தேற்ற முயன்றாள்.

''நீங்கள் நம்புவதற்காக ஒன்றைச் சொல்கிறேன். இந்தக் கோள் முழுதும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரால் கண்காணிக்கப்படுகிறது. அந்த சூப்பர் கம்ப்யூட்டரைக் கண்காணிப்பவள் என் மகள் ரோஸி. அதுவரை எனக்குத் தெரியும். ஆனால், அதற்காக அவள் என்னையே தெரியாததுபோல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அவளுக்காகவே வாழ்ந்தவன்; வாழ்கிறவன். முடிகிறவரை வாழவும் போகிறவன். ஆனால், அவள் என் மகளே இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறாள். மூன்றாம் தர டபுள் ஆக்ஷன் படத்தில் வரும் இரட்டையர் போல இருக்கிறது அவளுடைய நடவடிக்கைகள். மச்ச வித்தியாசம்போல. சாந்தமானவள்; சாகஸமானவள் என... இப்போதெல்லாம் டி.வி. சீரியல்கள்கூட அப்படி எடுப்பது இல்லை.''

''உங்கள் மகளின் உருவத்தில் உருவாக்கப்பட்ட பொம்மையா இவள்?'' என்றாள் ழீன். அகிலன் எதுவும் பேசவில்லை.

ஆபரேஷன் நோவா - 19

வினோதினி கேட்டாள். ''உங்கள் மகள்தான் இந்தக் கோளை இயக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் மகளை வேறு யாரோ இயக்குவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?''

''அப்படியானால் அவர்கள் யார்?'' அவனையும் அறியாமல் அகிலன் கேட்டான்.

மைக்கேல் இந்த அவசரக்குடுக்கையும் இங்கேதான் இருக்கிறானா என்பதாக அகிலனைப் பார்த்தார்.

ஏதோ சொல்ல ஆரம்பித்த அவரைத் தடுத்து, ழீன், ''இங்கே வேண்டாம். நாளை வெளியே சென்று பேசுவோம்'' என்றாள்.

றுநாள் அவர்கள் சந்தித்த இடம் ஒரு வனம் என்றுதான் சொல்ல வேண்டும். நவீன ஓவியரின் கைவண்ணத்தில் உருவான விநோதமான மரங்கள், செடிகள். சிவப்புப் புல் தரையில் சின்னச் சின்னப் பூச்சிகள் சில அவசரமாக ஓடுவது தெரிந்தன. நம்மைத் தவிர வேறு சில ஜீவராசிகள் இருப்பது ஏதோ சொந்த பந்தத்தைப் பார்ப்பதுபோல சந்தோஷத்தைத் தந்தது.

கேத்ரின் ஒரே நாளில் ஹென்ரிச் வசமானது அகிலனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவனும் அவளுடைய இடுப்பில் கையை வளைத்தபடி, ''அறைக்குள்ளேயே இருந்திருக்கலாம்'' என அவளுடைய காது மடலைக் கடிக்கிற தூரத்தில் பிதற்றினான். கேத்ரின் முகச் சிவப்பு இரட்டிப்பாகிவிட்டது.

''ஒருவரையே தொடர்ந்து காதலிப்பது சொத்து சேர்க்கும் ஆசைக்கு வழி வகுக்கும். மறுபடியும் இது இன்னொரு பூமி ஆகிவிடும் என்பது அம்மாவின் கண்டுபிடிப்பு. காதலுக்குத் தடை இருப்பது நினைவிருக்கட்டும்'' என்றாள் ஆலீஸ்.

மைக்கேலுக்கு எப்போதுமே ஆலீஸின் புத்திசாலிதனத்தின் மீது நம்பிக்கை உண்டு.

''ஆலீஸ்... நீ பெரும்பாடுபட்டு மத்தியக் கேந்திரத்தில் நுழைவதற்கான பாஸ்வேர்டைக் கண்டுபிடித்தாய். உன்னைப் போலவே இங்கு வந்திருக்கிற பலர் இங்கிருந்து தப்பிச் செல்வதற்காக உதிரி உதிரியாக முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றை மறந்துவிடக் கூடாது. யாரிடம் இருந்து தப்பிக்கப் போகிறோம்; எங்கே தப்பிச் செல்லப் போகிறோம் என்பது தெரிய வேண்டும்'' அடிப்படையான கேள்வியில் இருந்து ஆரம்பித்தார் மைக்கேல்.

''அம்மாவிடம் இருந்து தப்புவதா... அம்மாவை நாம் தப்பிக்கவைப்பதா..? அதுதானே உங்கள் கவலை?'' என்றான் அகிலன்.

அவன் சரியாகச் சொல்லியிருந்தாலும் ஏதோ கிண்டலாகச் சொன்னதாகத்தான் மைக்கேல் நினைத்தார்.

''இவனுடைய கிண்டலைக் கவனித்தாயா?'' -புகார் சொல்லும் தொனியில் ழீனிடம் சொன்னார்.

''யாரும் யாரையும் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. அகிலன், சரியாகத்தான் சொன்னான். இப்போது சொல்லுங்கள்... நாம், உங்கள் மகள்... எல்லோருமே பாதுகாப்பாகப் பூமிக்குத் தப்பிக்க வேண்டும். அதற்கு வழி இருக்கிறதா சொல்லுங்கள்?''

''இருக்கிறது. எல்.டபிள்யூ. சேம்பர் இங்கே அமைக்கப்பட்டுவிட்டது. அங்கு செல்வது 'திறந்திடு சீஸேம்’ போல அத்தனை சுலபமாக இருக்காது.''

''ரோஸி... அதாவது உங்கள் அம்மாவைச் சந்தித்தாக வேண்டும். அதாவது நிஜமான, ரத்தமும் சதையுமான அம்மாவை; ஹாலோகிராம் அம்மாவை அல்ல.''

''அதற்கு?''

''மத்தியக் கேந்திரத்தில் ரோஸி எங்கே இருக்கிறாள் எனக் கண்டுபிடிக்க வேண்டும்.''

ஆபரேஷன் நோவா - 19

அது எப்படி? கேப்ரியல் ஒருவன் மட்டுமே, ஆரம்பத்தில் இருந்து எல்லா வகையிலும் இந்தத் திட்டங்களுக்கு ஜால்ரா போட்டவன். தலைமைக் கேந்திர ரகசியம் தெரிந்தவன். மைக்கேல், அவனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்ற யோசனையில் ஆழ்ந்தார். வினோதினி, அகிலன், வஸிலீயேவ், ஹென்ரிச்... ஆகியோரும் துணையாக யோசிக்க ஆரம்பித்தார்கள். கிரீனிகள் ஆசையாக அவர்களை நாடி வந்தன. ஆலீஸ் ஒரு குட்டி கிரீனியைத் தூக்கிவைத்துக் கொஞ்ச ஆரம்பித்தாள். அதனுடைய ஆக்சிஜன் சூழ் உடம்பு நுகரும்போது புத்துணர்ச்சியாகத்தான் இருந்தது.

சார்லஸுக்கு ஆச்சரியமாக இருந்தது. 581-ஜிக்கு அனுப்பப்பட்ட கேப்ரியல் திடீரென எப்படி தன் அறைக்கு வர முடியும்? விநாடியில் அது சந்தோஷமாக மாறியது. ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தி வந்தது யார் என்றே தெரியாமல் இருந்தவருக்கு கேப்ரியலைப் பார்த்ததும் தனித் தீவில் சிக்கியவன் படகைக் கண்டது மாதிரி பரவசமானார்.

''எப்படித் தப்பித்து வந்தாய் கேப்ரியல்?'' என்றார் பெரும் பதற்றத்துடன்.

கேப்ரியல், தம் ஆறு மாத வெளிக்கிரக வாசத்தை சுவாரஸ்யமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

''ஒரு ஆபத்தும் அங்கே இல்லை. எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன. பயிர், பச்சை விவகாரத்தில் வெற்றி. குழந்தை பெற்றெடுப்பதில் வெற்றி. இனி சிங்கம், புலி, மான், லவ்பேர்ட்ஸ் எல்லாமே அங்கே கொண்டுபோகலாம். இயற்கை சுழற்சியை ஏற்படுத்தலாம். பூமிக்கும் அதற்கும் மைக்ரோ சிரமங்களைச் சரிசெய்து விட்டால் நமக்கு இன்னொரு காலனி சிக்கியது போலத்தான்.''

சார்லஸ் குறுக்கிட்டார்.

''உன்னைப் போலவே அங்கு இருப்பவர்கள் அனைவரும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டனவா?'' என்றார் ஆசையாக.

''அதற்குத்தான் அவசியம் இல்லை என்கிறேன். அது ஒரு டார்க் சிட்டியாக அப்படியே இருக்கட்டும். கிட்னி, லிவர், இன்சுலின் சுரக்கும் லாங்கர் ஹான் தீவுப் பைகள், இதயம் எது வேண்டுமோ, அங்கு இருந்து எடுத்துக்கொள்ளலாம்.''

சார்லஸுக்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியவில்லை. சார்லஸின் எதிரில் அமர்ந்தார் கேப்ரியல்.

''புரிந்துகொள்ளுங்கள் சார்லஸ். அது ஒரு பொக்கிஷம். நாம் விரும்பினால்தான் சாக முடியும். அவ்வளவு வாழலாம். அங்கே தோண்டும் இடம் எல்லாம் தங்கம் கிடைக்கிறது; தோரியம் கிடைக்கிறது. ஐயோ என்னவென்று சொல்வேன். அள்ள அள்ளப் பணம். அந்தக் கோளை நாம் கைப்பற்றி விட்டால், ஒரே கல்லில் இரண்டு கோள்கள். எனக்கு என்னவோ இன்னும் ஒன்பது ஆண்டுகளில் இந்த டெக்டானிக் பிளேட் தகராறு எதுவும் செய்யவில்லை என்றால்... இந்த பூமிக்குத் தேவை இல்லாதவர்களை எல்லாம் அங்கே கொண்டுபோய் தள்ளிவிடலாம். பூமியில் பிரச்னை ஏற்படும் என்றால், தேவை இல்லாத ஜென்மங்களை இங்கேயே கழற்றிவிடலாம். இதோ பாருங்கள்.''

பெட்டியைத் திறந்து சில பல கண்ணாடிக் குடுவைகளை எடுத்து வைத்தார். எல்லாமே விலை மதிக்க முடியாத கனிமங்கள்.

''என்ன சொல்கிறீர்கள்?'' என்று வர்த்தகம் பேச ஆரம்பித்தார் கேப்ரியல். ''உலக மக்களுக்கு உங்கள் மீது எப்படியோ ஒரு பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. விஞ்ஞானிகளும் நீங்கள் சொன்னால் இறங்கி வருவார்கள். இதை வைத்து நாம் தலைமை இடத்துக்கு நகர்ந்துவிட முடியும். அதற்காகத்தான் உங்களை ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தி வரச் சொன்னேன்.''

ஆபரேஷன் நோவா - 19

''அடப்பாவி...''

''அவசரம் இல்லை. கொஞ்ச நேரம் பாழாய்ப்போன சமூக அக்கறையோடு திட்டிவிட்டு, கோள்களின் அரசனாகும் வாய்ப்பை யோசியுங்கள். நான் வருகிறேன். நாளை சந்திப்போம்... இனிப்பான இரவு.''

கேப்ரியல் வேகமாக வெளியேறினார்.

ன்றுதான் 581-ஜியில் முதல் மனிதன் பிறந்தான். விடுதிகள் எல்லாம் பிரகாசமாக இருந்தன. அம்மா, குழந்தையைத் தூக்கிக் காட்டினார். நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப் போவதாகச் சொன்னார். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்பது என்றால் என்னவென்று புரியவில்லை. இருந்தாலும் எல்லோரும் சந்தோஷம் காட்டினார்கள்.

கேத்ரின் சொன்னாள்... ''அப்படியே அகிலனின் சாயல்!''

வினோதினி நிதானமாக இன்னொரு தரம் குழந்தையைப் பார்த்தாள். பிறகு அகிலனைப் பார்த்தாள்.

- ஆபரேஷன் ஆன் தி வே...