ஓவியங்கள் : சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
'நிலக்கடலை நாகரிகம்’!
சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தோம். ஆம்பூரில் ரயில் நின்றபோது, வறுத்த நிலக்கடலையை 'கேரி பேக்’கில் போட்டு 'பாக்கெட் பத்து ரூபாய்’ என விற்றுக்கொண்டிருந்த பெண்மணியிடம் நான்கைந்து பொட்டலங்கள் வாங்கினோம். கூடவே வெறும் கேரி பேக் ஒன்றையும் தந்தவரிடம் 'எதற்கு?’ என்று கேட்டதற்கு, ''கடலையை உரித்து சாப்பிட்டு தோலை ரயில் பெட்டியினுள் குப்பையாக போட்டால், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால் இந்த பையில் தோலை போட்டு வைத்து, பிறகு குப்பைக்கூடையில் போடுங்கள்'' என்று அழகாக பதில் தந்தார் அந்தப் பெண்மணி.
செய்யும் தொழிலில் கண்ணியம் காக்கும் அந்தப் பெண், என் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!
- ஏ.ஜே.தில்ஷாத் பேகம், சத்தியமங்கலம்

கலக்கத்தில் ஆழ்த்திய குறும்புப் பேச்சு!
ஒரு காலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்தேன். என்னருகே நின்றிருந்த இரு இளம்பெண்களும் பள்ளி ஆசிரியைகள் என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர்களில் ஒரு பெண் தன் அலைபேசியில் ''சார்! நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன். முதல் பீரியட் என் வகுப்புக்கு நீங்க போக முடியுமா?'' என பவ்யமாகக் கேட்டார். எதிர்முனை யில் 'சரி’ என்றிருக்க வேண்டும். 'தேங்க்யூ சார்... தேங்க்யூ!'' என்றபடி அலைபேசியை அணைத்தார்.
மற்றொரு பெண், ''என்னடி! அந்த ஆளு ஒப்புக்கிட்டான் போலிருக்கு..?'' என்று கேட்க... இந்தப் பெண்ணும் ''பின்னே! பொண்ணுங்க வேலை சொன்னா எவனாவது மாட்டேன்னு சொல்லுவானா..?'' என்றார்.
நான் அதிர்ந்து போனேன்.
'தன் சக ஆசிரியரை மட்டமாகப் பேசும் இவர்களால், பிள்ளைகளுக்கு என்ன ஒழுக்கத்தைக் கற்றுத் தந்துவிட முடியும்? பொது இடத்தில் நாகரிகமாகப் பேசவேண்டும் என்ற அடிப்படைப் பண்புகூட இவர்களுக்கு இல்லையே...?’ என மனம் வருந்தினேன்.
ஆசிரியர் பணியின் புனிதம் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் அறிவுறுத்தப்பட வேண்டியது... அவசரமான அவசியம்!
- எஸ்.விஜயலஷ்மி, ஈரோடு
பிஞ்சுக் குழந்தைகளை வதைக்கலாமா..?!
டவுன் பஸ்ஸில் சில குழந்தைகள் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அதில் ஒரு குழந்தை, ''மே மாதம் முழுக்கவே எங்களுக்கு ஸ்கூல் உண்டுடி'' என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு அவளிடம் பேசியதில் இருந்தது தெரிந்துகொண்டது... அந்த மாதம் முழுக்க ஹேண்ட் ரைட்டிங் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி என்று பல பயிற்சி வகுப்புகளாம்... ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கட்டணமாம்!
வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றத்தானே கோடை விடுமுறை பழக்கமே உண்டானது..! கடுங்கோடையிலும் பிஞ்சுகளை வதைப்பது என்ன நியாயம்? பெற்றோர்களும், பள்ளிகளும் யோசிக்க வேண்டும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி
பஞ்சராக்கிய பகல் பயணம்!
சமீபத்தில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ரிசர்வ்டு’ பெட்டியில் கோயம்புத்தூருக்கு பயணம் செய்தோம். 'டிக்கெட் பரிசோதகர்’ எனும் ஆத்மா ரயில் கோவையைச் சென்றடையும் வரை வரவே யில்லை. ரிசர்வ்டு பெட்டியில் நின்றுகொண்டும், நடைபாதைகளில் அமர்ந்துகொண்டும் பலர் பயணம் செய்தனர். இது போதாதென்று... ஊசி மணி முதல் திருட்டு வி.சி.டி. வரை ஒரு கூட்டம் அடிக்கடி விற்பதும், பத்து நிமிடங்களுக்கொரு முறை பிச்சைக்காரர்களின் ஊர்வலமும் நடைபெற்றது. எடுத்துப்போன காலை உணவைக்கூட நிம்மதியாக சாப்பிட முடியாத இம்சைப் பயணமாக இது அமைந்தது.
பகல் நேரத்தில் பயணம் செய்ய நினைப்போரே... உஷார்!
- எம்.எஸ்.பர்வீன், சென்னை-92