ஸ்பெஷல் 1
Published:Updated:

மாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..!

இந்துலேகா.சி, படம் : வீ.நாகமணி

ஸ்வர்யா ராய் தொடங்கி, எதிர்வீட்டுப் பெண் வரை, இந்தியப் பெண்களுக்கு அழகுப் பொருட்கள் மேல் அலாதி பிரியம். இதையே அடிப்படையாக்கி வளர்ந்து நிற்பதுதான் அழகுத் துறை. இதன் வளர்ச்சி பற்றி, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று அழகுக் கலை நிபுணர்கள், தங்கள் அனுபவத்தை பகிர்கிறார்கள்.

அட ஆமாங்க... இந்த இதழ்லயும் '3ஜி’ தொடருது!

மாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..!

விழிப்பு உணர்வு இல்லாத காலம்!

கோயம்புத்தூரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக 'விகாஷினி’ பியூட்டி பார்லரை நடத்தி வரும் லக்ஷ்மி மனோகரன்:

''1975-ல பியூட்டி பார்லர்னா என்னன்னே பெருசா யாருக்கும் தெரியாது. அதுல நானும் ஒருத்தி. ஃப்ரெண்டு சொன்னாளேனுதான் பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சேன். படிப்பு முடிச்சு, மூணு வருஷம் அதே துறையில வேலை பார்த்துட்டு, சொந்தமா பார்லர் ஆரம்பிச்சேன். பொதுமக்கள்கிட்ட பியூட்டி பார்லர் பத்தின விழிப்பு உணர்வு இல்லாத சமயம் அது. தேவிகா உள்ளிட்ட சினிமா நடிகைகள், பெரிய தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் இப்படிப்பட்டவங்கதான் கஸ்டமரா இருந்தாங்க. மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் கஸ்டமர்ஸ்கூட வரமாட்டாங்க. 'பியூட்டி பார்லர் போறது தப்பு'னு பரவலா ஒரு கருத்தும் இருந்த காலம்.

அப்போதைய ஃபேஷியல்னு பார்த்தீங்கனா, ஒரு க்ளென்ஸிங், மசாஜ், அப்புறம் முல்தானிமட்டி பேக்... அவ்ளோதான். அதுவும் முல்தானிமட்டி இல்லாம பார்லரை நடத்தவே முடியாது. ஏன்னா... அந்த பேக் போட்டு முடிச்சதும், ஸ்கின் நல்லா இறுக்கமா, ஷைனிங்கா ஜொலிக்கும், கஸ்டமர்களுக்கும் அப்பதான் திருப்தியா இருக்கும். நடிகைங்க மட்டும்தான் பாடி வேக்ஸ் அண்ட் பாலிஷிங் செஞ்சுப்பாங்க. மத்தபடி அழகு சார்ந்த கிரீம்கள் எல்லாம் அப்போ மார்க்கெட்ல கிடைக்கறதே கஷ்டம்.

'பியூட்டி பார்லருக்கு போகக்கூடாது'னு சொன்ன அம்மாக்கள் போய், இப்போ பார்லருக்கு வர்ற பொண்ணுங்க, தன்னோட அம்மாவையும் கூட்டிட்டு வர்ற அளவுக்கு விழிப்பு உணர்வும், நல்ல வளர்ச்சியும் வந்துடுச்சு இந்தத் துறையில!''

மாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..!

வளர்த்தெடுத்த மீடியாக்கள்!

சென்னையிலிருக்கும் 'விஸிபிள் டிஃப்ரன்ஸ்’ பியூட்டி சலூன் நிர்வாகி வசுந்தரா, அழகுத் துறையில் முன்னோடி:

''என் மாமியாரோட தூண்டுதலாலதான் பியூட்டி கோர்ஸ் படிச்சு முடிச்சேன். பார்லர் ஆரம்பிக்கலாம்னா... 'உங்க சமூகத்துல அடுத்தவங்கள தொடறதே பாவம். இந்த நிலையில அடுத்தவங்களுக்கு சர்வீஸ் பண்றேன்னு அவங்க கை, காலெல்லாம் பிடிக்கணுமா?’னு நிறைய கமென்ட்ஸ். 'இதே சமூகத்துல ஒரு உயிரைக் காப்பாத்துற டாக்டர் இல்லையா?’னு பதிலுக்குக் கேட்ட எனக்கு, மாமியார்தான் முழு சப்போர்ட். 89-ம் வருஷத்துல பார்லரை ஆரம்பிச்சப்ப... சென்னை முழுசுக்குமே 10 - 15 பார்லருக்கு மேல இருந்திருக்காது. பார்லருக்கு வர்றவங்களும் ரொம்ப குறைச்சல்தான். வர்றதுக்கும் பயப்படுவாங்க. ஒருமுறை டிரெயின்ல போயிட்டிருக்கும்போது, சக பயணி ஒருத்தர் ரொம்ப தைரியமா, 'என்ன மேடம் பியூட்டி பார்லர் வெச்சுருக்கவங்கள்லாம் ஒரு மாதிரியாமே?’னு எங்கிட்டயே கேட்டார். கோபம் வந்தாலும், ரொம்ப பொறுமையா, 'அழகு சார்ந்த விஷயங்கள் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், ரொம்ப ஈடுபாட்டோட செய்ய முடியும். அதனால கணவரைப் பிரிஞ்ச அல்லது விதவை பெண்கள், தங்களோட குடும்பத்தை காப்பாத்தறதுக்கு உடனடியா கையில எடுக்குற தொழில் அழகுக்கலையா இருக்கலாம். ஆனா, பியூட்டி பார்லர் வெச்சுருக்குறவங்க, கணவரைப் பிரிஞ்சுடறாங்கனு சமூகம்தான தவறா நெனைக்குது’னு, எடுத்துச் சொன்னேன்.

இந்தத் துறை பத்தி மக்கள் மனசுல பெரிய மாற்றம் வந்ததுக்குக் காரணமே, மீடியாதான். அழகு சார்ந்த நிகழ்ச்சி, பார்லர் சர்வீஸ்னு நேரடியா படம் பிடிச்சு போட ஆரம்பிச்சாங்க. அதுதான், 'பியூட்டி பார்லர் போறது தப்பில்லை'ங்கற எண்ணத்தை மக்கள் மத்தியில உண்டு பண்ணுச்சு. வேலை, பிசினஸ்னு பெண்கள் அதிக அளவுல வெளிவர ஆரம்பிச்சதும் அந்தக் காலகட்டம்தான். 'நாம அழகா, மரியாதையான தோற்றத்தோட இருக்கணும்... அப்பதான் தன்னம்பிக்கையோட வலம் வர முடியும்'ங்கிற எண்ணங்கள் பலர்கிட்டயும் ஏற்பட்டுச்சு.  

சமீபத்துல, என்னோட பார்லருக்கு ஒரு பொண்ணு அவங்க அம்மாவையும் பாட்டியையும் கூட்டிட்டு வந்தாங்க. மூணு பேருக்கும் ஸ்கின் அனலைசர் வெச்சு டெஸ்ட் பண்ணி பார்த்ததுல, அந்த பாட்டியோட ஸ்கின் ஹெல்தியாவும் பேத்தியோட ஸ்கின் ரொம்ப டேமேஜாவும் இருந்துச்சு. இதைச் சொன்னதும்... 'வெளியில மட்டும் அழகு பண்ணிக்கிட்டா போதுமா, சத்துள்ளதா சாப்பிடணும்’னு பேத்திகிட்ட சொன்னாங்க பாட்டி. இதுதான் என்னிக்குமே உண்மை!''

மாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..!

'ஆண்களுக்கும் வந்தாச்சு... அத்தனை சர்வீஸும்!'

அழகுத்துறையின் லேட்டஸ்ட் வளர்ச்சி பற்றி பேசுகிறார்... சென்னை, அண்ணாநகர், 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ மேனேஜர், ஜோலி அன்பு:

''இப்ப நாம பேசிட்டிருக்கற நிமிஷத்துலகூட புதுசா ஏதாச்சும் வந்துடும். அந்தளவுக்கு இந்தத் துறையில டெக்னாலஜி ரீதியிலான முன்னேற்றம் தொடருது.

அந்தக் காலத்துல பார்லருக்கு வரும் கஸ்டமர்ஸ், வந்த உடனே சீக்கிரம் கிளம்பணும்னு கால்ல சுடுதண்ணிய ஊத்திட்டு நிப்பாங்க. ஆனா, இப்ப டிரெண்டே வேற. வர்றவங்க எல்லாம், அழகுபடுத்திக்கறதைவிட, முக்கியமா ரிலாக்ஸ் பண்றதுக்குதான் வர்றாங்க. ஏன்னா இப்ப இருக்குற லைஃப் ஸ்டைல் ஸ்ட்ரெஸ்ஃபுல்லா போறதால, ஹெட் ஆயில் மஸாஜ், பாடி மஸாஜ், ஸ்பா இந்த மாதிரி ரிலாக்ஸேஷன் ட்ரீட்மென்ட்டுக்குதான் நிறைய வர்றாங்க.

கல்யாணப் பொண்ணு மேக்கப்புக்கு ரோஸ் பவுடர், ரூஜ், ஐ ஷேடோ இருந்தாலே போதும்ங்கிற காலம் போய், மேக்கப் பேஸ், ஃபவுண்டேஷன், கன்சீலர், ஐ ஷேடோ, ஆர்டிஃபீஷியல் ஐ லிட்ஸ் இப்படி நிறய வெரைட்டியும், பிராண்ட்களும் வந்துடுச்சு. மேக்கப் முடிச்சதும், வியர்வையில கலையாம இருக்கறதுக்கு 'வாட்டர் புரூஃப்’ மேக்கப் போய், இப்ப 'ஸ்டுடியோ ஃபிக்ஸ்’னு ஒரு டெக்னிக் வந்துடுச்சு. இதுல ஸ்கின் கலர் லிக்விட்டை, மேக்கப் முடிச்சதும் முகத்துல ஸ்ப்ரே பண்ணிவிடுவோம். வாஷ் பண்ற வரைக்கும் மேக்கப் அழியவே அழியாது. கூடவே ஷைனிங்காவும் காட்டும்.

ஃபேஷியல்... அதிகபட்சம் 500 ரூபாயா இருந்தது, இப்ப 9 ஆயிரம் ரூபாய்க்கு பண்ணக்கூடிய அளவுக்கெல்லாம் வந்தாச்சு. ஸ்கின் அனலைசர், அல்ட்ராசானிக், ஹை ஃபிரீக்வன்ஸி, கால்வானிக், சூப்பர் சானிக்னு நிறைய எக்யூப்மென்ட்ஸும் வந்தாச்சு.

எல்லாத்தையும்விட ஹைலைட்டா, இப்போ பெண்களுக்கு சமமா ஆண்களுக்கும் எல்லாவிதமான பார்லர் சர்வீஸும் வந்துடுச்சு!''