மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10

காதல் கொண்டேன் பூக்கள் மீது... காசை அள்ளுகிறேன் இப்போது!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்

''சின்ன வயசுல இருந்தே பூக்கள் மேல எனக்குக் காதல். அதிலும், இயற்கைப் பூக்களை மிஞ்சும் வகையில், செயற்கைப் பூக்களை கிராஃப்ட் மூலமாக உருவாக்குவதில் அதீத காதல். அதுதான் இன்னிக்கு 'ஆர்டிஃபீஷியல் பொக்கே' தயாரிப்பாளரா என்னை மாத்தியிருக்கு!'' என்று பூவைப் போல பளிச்சிடும் புன்னகையோடு ஆரம்பித்தார்... சென்னை, அபிராமபுரம், ரூத் பிரஷாந்த்.

''எட்டாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். முதல்நாள் கிராஃபட் வகுப்பு அது. டீச்சர் என்ன செஞ்சு காண்பிக்கப் போறாங்களோங்கற ஆர்வத்துல வகுப்பே நிலைகொள்ளாம இருந்துச்சு. 'இன்னிக்கு நாம நைலான் ஃப்ளவர் செய்யப் போறோம்’னு டீச்சர் கத்துக்கொடுத்தாங்க. வீட்டுக்குப் போன நான், மூணு இதழ்கள் இருக்கற மாதிரியான அந்த டிசைனை... நைலான் மட்டுமில்லாம பேப்பர் தொடங்கி பருத்தி துணி வரை எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதுல முயற்சி செய்து பார்த்தேன். இதனாலேயே எங்க வீடு பூக்களால நிரம்பிக் கிடக்கும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10

காலேஜ்ல பாட்டனி சேர்ந்தப்போ... பேப்பர் பொக்கே, வெல்வட் ரோஜா, வண்ண வண்ண பூக்கூடைனு என்னோட கிராஃப்ட் முயற்சிகள் பெருசா வளர்ந்துடுச்சு. நிறைய பூ டிசைன்களை யோசிச்சு, செய்தேன். திருமணம், குழந்தைனு ஆன பிறகு, கிராஃப்ட்டில் இடைவெளி விழுந்துடுச்சு. இப்போ ரெண்டு வருஷமா மறுபடியும் இந்த பூக்களை கையில் எடுத்து, பிசினஸ்ல கலக்க ஆரம்பிச்சுட்டேன்!'' என்று சிரித்தவர்,

''ஆர்டிஃபீஷியல் பூக்கள் விற்பவர், ஸ்டேஜ் டெகரேட்டர், பொக்கே ஷாப் வைத்திருப்பவர், விசேஷங்களுக்கு ஆர்டர் எடுப்பவர்னு அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட... நீங்க உருவாக்கற ஒரு பூங்கொத்தைக் கொடுத்து, உங்க மொபைல் நம்பரை யும் கொடுத்து வையுங்க. நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும். ஆர்டர்களைப் பொறுத்து மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10

ஐந்து இதழ்கள் கொண்ட ஒரு நைலான் ரோஜா பூவை, டெகரேஷனைப் பொறுத்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். நிறைய பேர் எங்கிட்ட இருந்து பூக்கள் வாங்கி அமெரிக்கா, மலேசியானு வெளிநாடுகளுக்கு கொண்டு போயிருக்காங்க. அவங்களுக்கு பொக்கேவா செய்து கொடுத்தா... எடுத்துட்டுப் போறது சிரமம். அதனால, உதிரியா செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் உதிரியா வாங்கி, தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில், அலங்காரத்தில் அந்தப் பூக்களை இணைச்சுக்கறாங்க.

என்கிட்ட 500, 750 இப்படியான வரிசைகளில் பூக்களை மொத்த ஆர்டரா கொடுப்பாங்க. வாய்வழி விளம்பரம்தான் இந்த தொழிலை ஜோரா எடுத்துட்டுப் போயிட்டு இருக்கு. ஆரம்பத்தில் ஒரு ரோஸ் செய்யறதுக்கு குறைந்தபட்சம் 30 - 40 நிமிடங்கள் செலவாகும். போகப்போக கைப்பழக்கத்துல 15 நிமிஷத்துல ஒரு பூவை முடிச்சுட முடியும்!'' என்ற ரூத், நைலான் ஸ்டாக்கிங் கொண்டு செய்யப்படும் சிவப்புப் பூக்களை நமக்காக செய்து காண்பித்தார்.

தேவையான பொருட்கள்:

ஃப்ளவர் கலர் ஒயர் - சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில், அயர்ன் கம்பி - தேவையான அளவு, நைலான் ஸ்டாக்கிங் துணி - சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில், போலன் (ஜீஷீறீறீமீஸீ - செயற்கை மகரந்தம்) - தேவையான அளவு (இங்கு நாம் ஒரு பூ செய்வதற்கு நான்கு எடுத்திருக்கிறோம்), ஃபேப்ரிக் க்ளூ - 1, கிரீன் டேப் - 1, சிவப்பு நூல் ரோல்  -  1, கட்டர், கத்தரிக்கோல், ஒயரை சுற்றுவதற்காக, பாட்டில் மூடி (சற்று நீளமாக இருக்க வேண்டும்) - இதழின் அளவைப் பொறுத்து.

செய்முறை:

படம் 1: பாட்டில் மூடியை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளவாறு சிவப்பு கலர் ஒயரை மூடியில் சுற்றி முறுக்கி, கட் செய்யவும்.

படம் 1a: ஐந்து இதழ்களுக்கான ஒயர்களையும் ஒரே அளவில் கட் செய்து, இதழ் வடிவத்துக்கு தகுந்தாற்போல் கைகளால் அழுத்திக் கொள்ளவும்.  

படம் 2: இதழ் வடிவத்திலிருக்கும் ஒயர்களில், நைலான் ஸ்டாக்கிங் துணியை முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக குறிப்பிட்ட அளவு இழுத்து, கீழ்பகுதியில் பிடித்துக்கொள்ளவும். துணியில் பிசிறு இருந்தால், அதையும் இழுத்து ஒன்றாகச் சேர்க்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10

படம் 2a: சிவப்பு நூலை எடுத்து நான்கைந்து முறை சுற்றவும். பிறகு, பூ கோப்பது போன்று மூன்று முறை முடிச்சு போடவும்.

படம் 3: இதேபோல மற்ற இதழ்களையும் தயார் செய்து கொள்ளவும்.

படம் 4: பூவின் நடுவே வைப்பதற்கான மகரந்தத்துக்காக 4 'போலன்’களை எடுத்துக்கொள் ளவும். இதை மடித்தால், எட்டு குமிழ்களாக இருக்கும். தயாராக வைத்துள்ள அயர்ன் கம்பியில் வைத்து, சிவப்பு நூல் கொண்டு நான்கைந்து சுற்றுச்சுற்றி முடிச்சிடவும். பிறகு (படம் 4a) கட்டர் கொண்டு கம்பியை அழுத்திக் கொள்ளவும். காம்புக்காக கம்பியின் கீழ்ப்பகுதியை நீளமாக விட்டுக் கொள்ளவும்.  

படம் 5: மகரந்தம் போன்றிருக்கும் போலன்களை, ஒரு இதழ்மீது வைத்து வைத்து சிவப்பு நூல் கொண்டு சுற்றவும். பிறகு, மற்ற நான்கு இதழ்களையும் அடுக்கடுக்காக வைத்து (படம் 5a), நூல் கொண்டு சுற்றி முடிச்சிடவும்.

படம் 6: இதழ்கள் பிரிந்துவிடாமலிருக்க, பூ கட்டுவதைப் போல நூல்கொண்டு இறுக்கமாகச் சுற்றி முடிச்சிடுவது அவசியம்.

படம் 6a: பூக்களை வெளிப்பக்கமாக விரித்துவிடவும். உங்கள் விருப்பம்போல, வெவ்வேறு வடிவங்களிலும் விரித்துக் கொள்ளலாம்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10

படம் 7: பூவின் அடிப்பகுதியில் க்ளூவை அப்ளை செய்து, கிரீன் டேப் கொண்டு, சிவப்பு நூல் வெளியில் தெரியாத அளவுக்கு சுற்றி, காம்பு போல மாற்றவும்.

படம் 8: பூவோடு, இலையும் வேண்டும் என்றால்... முதலில் கூறிய அதே வழிமுறையின்படி, கிரீன் கலர் ஒயரை இலை வடிவத்தில் கட் செய்து, கிரீன் கலர் நைலான் துணியை சுற்றி முடிக்கவும்.

படம் 8a: இந்த இலையை பூவின் அடிப்பகுதியில் இணைத்து, அந்த ஒயரை பூவுடன் காம்புப் பகுதியில் சுற்றிவிடவும். இப்போது அழகான நைலான் ஸ்டாக்கிங் பூ ரெடி!

எந்தவிதமான பூவாக இருந்தாலும், அதைச் செய்வதற்கான அடிப்படை இதுதான்.

உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப, ரோஜா, மல்லிகை என்று  பல வண்ணங்களில், பல அடுக்குகளில் செய்து கொள்ளலாம்!

சாயம்போகாத இந்த நைலான் ஸ்டாக்கிங்ஸ் பூக்கள், எத்தனை வருஷ மானாலும் அப்படியே இருக்கும். தூசு, அழுக்குப் படிந்தால் இந்தப் பூக்களை துவைக்கலாம். ஆனால், பூவின் காம்புப் பகுதியில் இருக்கும் கிரீன் டேப் நனையாதபடி, சோப்புத் தண்ணீரை காட்டனில் தொட்டு சுத்தம் செய்வது நல்லது.

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்