மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 20

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ஆபரேஷன் நோவா - 20

ம்மா உயர்த்திப் பிடித்துக் காண்பித்த குழந்தைக்கு, ஒரு மாத வயதுதான் இருக்கும். கன்னத்தில் குழி விழ, காரணம் தேவை இல்லாமலேயே சிரித்தது. அம்மா அதன் கன்னத்தை, பட்டாம்பூச்சி பிடிப்பதுபோல இரண்டு விரல்களால் கவ்விக் கொஞ்சினார். மக்களும் உற்சாகக் குரல் கொடுத்து, கரகோஷம் இட்டனர்.

''முதல் மனிதன்'' என்றார் அம்மா. எல்லோரும் அவசரமாக செவி கருவியை இணைத்துக்கொண்டனர்.

அகிலனும் கேத்ரினும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்களுக்குப் பிறந்தவன் என்று சொல்வது எத்தனை சதவிகிதம் சரியான கூற்று என வரையறுக்க முடியவில்லை. ''குழந்தைக்கான ரா மெட்டீரியல் தந்து உதவிய கேத்ரினுக்கும் அகிலனுக்கும் நன்றி'' என்று அம்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் நன்றி தெரிவிக்க, அகிலன், வினோதினியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

கேத்ரினுக்கு தாய்மைப் போராட்டம் எதுவும் ஏற்படவில்லை. அகிலனுக்கும் பிரசவ வார்டில் கை பிசைந்து நடக்கும் தந்தை உணர்வு கொப்பளிக்கவில்லை. ஆனால், வினோதினி இதன் பொருட்டு விரோதம்கொள்வதை அவன் உணர்ந்தான்.

ஆபரேஷன் நோவா - 20

'ஐயோ எனக்கு எதுவும் தெரியாது. நீ நினைக்கிற எந்தத் தவறையும் நான் செய்யவில்லை’ என்றான் சைகைகளின் மூலமாக. அகிலனின் சங்கடத்தை உணர்ந்து, 'அது எங்களுக்கே தெரியாமல் நடந்தது...’ என்று புரியவைக்க நினைத்தாள் கேத்ரின். வண்டுகூட, ''ஆமாம் அவர்களுக்கே தெரியாது'' என்றது. வினோதினி, கோளையே எரித்துவிடுவதுபோல பார்த்தாள்.

நல்ல வேளையாக அதற்குள் அம்மாவின் பிரசங்கம் ஆரம்பமாகிவிட்டது. கேபின் முகப்பு மேடை அருகே எல்லோரும் குழுமி இருந்தனர்.

''இங்கே நோய் இல்லை; ஊழல் இல்லை.''

அம்மாவின் பிரசங்கம் கோள் முழுதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.

மக்கள் ''ஆமாம்... ஆமாம்'' என்றனர்.

''கடன் இல்லை; கடமை உண்டு.''

''ஆமாம்... ஆமாம்.''

''மகிழ்ச்சி உண்டு... மரணம் இல்லை.''

''ஆமாம்... ஆமாம்.''

''நம் கோளின் இளவரசனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?''

யோசிக்கிறோம் பேர்வழி என எல்லோரும் அமைதியாக இருந்தனர்.

''நானே சொல்லட்டுமா? மார்க்கஸ் அரேலியஸ்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரோம் அரசன். மரம் பலனை எதிர்பார்க்காமல் கனி தருவதுபோல மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றவன்.''

மக்கள் கொத்தாக, 'மார்க்கஸ்... மார்க்கஸ்’ என்றனர். குழந்தை, குத்துமதிப்பாக ஒரு திசையைப் பார்த்துச் சிரித்தது.

டெர்பிகளால் வந்த ஆபத்து நீக்கப்பட்டது, அக்ரோ பிரிவில் நிகழ்த்தப்பட்ட சாதனை, கோள் சமநிலை உருவாக்கம்... என அம்மாவின் சந்தோஷத்துக்கு நிறையக் காரணங்கள் இருந்தன.

''வேறு என்ன வேண்டும்? ழீன், மறுபடியும் சுதந்திரம் என்று சொல்லிவிடாதே... 73 சதவிகித சுதந்திரம் கொடுக்கப்பட்டுவிட்டது. வண்டு இணைப்பைக் கழற்றிவிட்டு உங்கள் சொந்த மொழிகளிலேயே இப்போதெல்லாம் என் மீது கோபப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்... வேறு ஏதாவது?''

பலருக்கும் என்ன கேட்பது என்ற பிரக்ஞை அழிந்து வெகுகாலம் ஆகிவிட்டது.

''எங்களுக்கும் குழந்தை பிறக்குமா?'' - அகி கேட்டாள்.

''எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம். அதுவும் சொந்த முயற்சியில் ஈடுபடலாம். அதற்கான உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அது உங்கள் குழந்தை ஆகாது. அது அரசாங்கத்தின் குழந்தை; அம்மாவின் குழந்தை. குழந்தை வளர்ப்பு, படிப்பு, உடுப்பு... எல்லாமே அரசாங்கத்தின் பொறுப்பு.''

நீண்ட கைதட்டல்.

மார்க்கஸை இந்தக் கோளத்தின் இளவரசனாக... தன் வாரிசாக வளர்க்கப் போவதாக அம்மா சொன்னார். உடல் ஆரோக்கியம், புத்திக்கூர்மை அடிப்படையில்தான் கோளின் அதிபர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் சொன்னார்.

''பூமிக்குச் சென்று வருவதற்கு அனுமதி உண்டா?'' என்றாள் ழீன்.

''பெரிதினும் பெரிது கேட்பதே உன் வேலையாகிவிட்டது. கேபின் 645, 718... என எல்லாவற்றிலும் உன்னைப் போலவே இதே நேரத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்போது கேப்ரியல் பூமிக்குச் சென்றிருக்கிறார். அவர் வரட்டும். நிலைமையை உத்தேசித்து முடிவு எடுக்கப்படும்'' - மின் முத்தங்கள் தந்து அம்மா விடைபெற்றார்.

ஆபரேஷன் நோவா - 20

சீன லூசூன், ஜப்பான் அகியை இழுத்து அணைத்து, ''சொந்தமாக முயற்சி செய்யலாமா?'' என்றான்.

ஜப்பான், சீன வித்தியாசத்தைப் பார்த்துப் பழக்கம் இல்லாதவர்கள் அத்தனை சுலபமாக அவர்களில் வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. இரு தேசத்தாரும் மஞ்சள் நிறம், சிறிய மூக்கு, சராசரி உயரம் என கராத்தே, குங்ஃபூ மார்ஷியல் ஆர்ட் படங்களில் வருகிறவர்கள் மாதிரிதான் இருந்தனர்.

அகிலன், ''இனம் இனத்தோடு சேரும்'' என்றான் கண்களைச் சிமிட்டி.

அகி, ''ஏன் வேறு இனமாக இருந்தால் சேராதா?'' என அகிலனின் வயிற்றில் வலிக்காமல் குத்தினாள்.

''சும்மா மங்கோலிய இனம் என்பதற்காகச் சொன்னேன்.''

எல்லோரும் அம்மா அளித்த சுதந்திரத்தைப் பருக ஆளுக்கொரு பக்கம் கிளம்பினர்.

''உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா?'' - வினோதினி, அகிலனின் காதருகே கோபமாகக் கேட்டாள்.

அதற்குள் அங்கே மைக்கேல், ழீன், ஆலீஸ், வஸீலியேவ் ஆகியோர் வந்தனர். வினோதினியின் கோபத்தில் இருந்து தப்பித்த திருப்தியில் அகிலனும் அவர்கள் தரப்போகும் தகவலில் கவனத்தைத் திருப்பினான். காதுக் கருவியை அனிச்சையாகக் கழற்றினர். ரகசியம் பேசும் தருணங்களில் அவர்கள் வண்டுவைத் தவிர்த்துவிட்டால் போதும் என நினைத்தனர்.

மைக்கேல் ஆரம்பித்தார். ''நான் சொன்னேன் இல்லையா, லைட் வேவ் சேம்பர் இங்கே செயல்படுகிறது என்று. இங்கிருந்து பூமிக்குச் செல்ல முடியும். கேப்ரியல் எதற்காகப் போனான் எனத் தெரிய வேண்டும். வந்ததும் கேட்கிறேன்.''

கேப்ரியல் வந்தால் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்தனர்.

வர்கள் காலாற நடந்துவந்து ஓர் இடத்தில் நின்றனர். ரோபோக்கள் உழுது நடவுசெய்திருந்த 1,000 ஏக்கர் கோதுமை வயல், இன்னும் சில மாதங்களில் கதிர்விடும் நிலையில் இருந்தது. புரத மாத்திரையில் இருந்தும் விடுதலை கிடைக்கும். வயல்களில் சிறு சிறு பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. சில தத்தித் தாவின.

''சூழல் சங்கிலியை நாம் உருவாக்க வேண்டும் என்று பதறிக்கொண்டிருக்கிறோமே, இயற்கையே புதிய சங்கிலியைத் தொடங்குவதைப் பாருங்கள்'' என சந்தோஷமடைந்தாள் ழீன்.

''40 பேர் கொண்ட கேபினில் நாம் ஆறு பேர் மட்டும் செக்கு மாட்டு வாழ்க்கையில் இருந்து விலகி யோசிக்கிறோம். உலகம் செயல்படுவதே இப்படி விலகிச் சிந்தித்த சிலரால்தான்'' - தம் குழுவை மைக்கேல் மெச்சிக்கொண்டார்.

ஆலீஸ், அதைப் புன்னகைத்து ஏற்றுக்கொண்டபடி, ''ரோஸிக்கு கிரீஸைப் பற்றிச் சொன்னது நீங்கள்தானா?'' என்றாள்.

''எங்கள் நாட்டில் கணியன் பூங்குன்றனார் என்று ஒருவர் இருந்தார். 'எல்லா நாடும் நம் ஊரே... எல்லா மக்களும் நம் உறவினர்களே’ என்று பாடியிருக்கிறார். 'உடையை இழந்து நிற்பவனின் கையைப்போல நண்பனின் சிரமத்தைத் தீர்க்க வேண்டும்’ என்று வள்ளுவர் என்பவர் பாடியிருக்கிறார். எல்லாமே 2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை'' என்றான் அகிலன்.

ஆபரேஷன் நோவா - 20

''உன் குழந்தைக்கு ரோம் அரசனின் பெயரை வைக்கப் பிடிக்கவில்லை என்றால், வள்ளுவன் என்றோ, பூங்குன்றன் என்றோ வைத்துவிடு. அதெற்கெல்லாம் அம்மாவுக்கு அதிகாரம் இல்லை. கிரேக்கர்களுக்கு நாகரிக வழிகாட்டியாக இருந்தவர்கள் தமிழர்கள்தான். என் ஆராய்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை நிரூபிப்பேன்'' என்றாள் ழீன்.

''அது அவ்வளவு முக்கியமா?'' என்றார் மைக்கேல்.

''மனிதகுல வரலாறு தவறாக எழுதப்பட்டு அதை உலகமே நம்பிக்கொண்டிருப்பது மட்டும் முக்கியமா?'' என்றான் அகிலன்.

500 ஆண்டு ஆங்கிலத்துக்குக் கிடைக்கிற எந்த மரியாதையும் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழுக்குக் கிடைக்கவில்லையே என்று எட்டாத தூரத்திலும் வலியாகத்தான் இருந்தது அவனுக்கு.

சற்று தூரத்தில் அமர்ந்திருந்த வினோதினி கோபமாக அகிலனை 90 டிகிரி திருப்பி, ''டாக்டர் ழீன் சொல்வது உண்மைதானா?'' என்றாள்.

''உண்மைதான். கிரேக்கர்களுக்கு நாம்தான் நாகரிக முன்னோடி.''

''நான் அதைக் கேட்கவில்லை. உன் குழந்தை என்கிறார்களே அது? நான் ஒருத்தி இருப்பதை

நீ மறந்துவிட்டாய்... அப்படித்தானே?''

''ஐயோ... அது என் குழந்தைதான். ஆனால், அது நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உருவாகவில்லை'' என்று வினோதினியின் தலை மீது கையை வைத்தான்.

''என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன்'' -மைக்கேல், வினோதினியை நெருங்கினார்.

சார்லஸின் பேட்டி ஒளிபரப்பாவதாகக் காலையில் இருந்தே எல்லா சேனல்களிலும் ஸ்க்ரோல் ஓடிக்கொண்டிருந்தது. புதிய கோள்... புதிய தகவல்... மனிதன் வசிக்க புதிய கிரகம் தயார். பூமி அழியுமா? என சேனல் சுபாவத்துக்கு ஏற்ப பரபரப்புப் பண்ணிக்கொண்டிருந்தனர்.

இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு சென்னையில் ஒளிபரப்பானது. பேட்டி கண்ட அந்தப் பெண், எந்த நேரமும் உலக அழகிகளுக்குக் கிரீடம் அணிவிக்கும்போது ஏற்படும் டிரேட் மார்க் பிரமிப்புடன் இருந்தாள். பேட்டி முழுக்க அதை நிரந்தரமாக அவள் முகத்தில் தவழவிட்டு இருந்தாள். சார்லஸ் நிதானமாக சில உண்மைகளைச் சொன்னார். டி.வி. வால்யூமை அதிகரித்தாலும் கூர்ந்து கவனிப்பதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

ஆபரேஷன் நோவா - 20

'நாம் வசிக்கும் உலகத்துக்கு முதுமை தட்டிவிட்டது. மனிதகுலம் கால் ஊன்றுவதற்கான இன்னொரு தரையைக் கண்டுபிடித்துவிட்டோம்’ என்று ஆரம்பித்தார். இரவு 9.30 மணி வரை பேட்டி ஒளிபரப்பானது. அன்று இந்தப் பூமிப்பந்தில் சார்லஸின் பேட்டியைப் பார்க்காதவர்கள், பச்சைக் குழந்தைகள், மனநலம் பிறழ்ந்தவர்கள் என சில கோடிப் பேர்தான். ஏறத்தாழ 600 கோடிப் பேர் திகைப்புடன் பார்த்தனர். ஜேம்ஸ் கேமரூன் எடுக்கும் அடுத்த படத்தின் கதை போல இருந்தது நிகழ்ச்சி.

70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டோபோ என்ற எரிமலை வெடித்து, உலகம் ஏற்கெனவே ஒருதரம் செத்துப் பிழைத்ததை அவர் சொன்னார். அது மீண்டும் வெடிக்க இருக்கும் அபாயத்தை, கோண்டுவானா டெக்டானிக் தட்டு முதல் மேக்மா சாம்பல் வரை விலாவாரியாக விவரித்தார்.

உலக மக்கள்தொகையில் பாதிப் பேர், அதை உலகம் இரண்டாகப் பிளக்கப்போவதாக சுருக்கமாக நினைத்துப் பயந்தனர். இதற்காகத்தான் உயிரினத்துக்கான புதிய கோளைக் கண்டுபிடித்தோம். அங்கு ஏற்பட்ட சின்னச் சின்ன ஆபத்துகள் நீக்கப்பட்டன என்பதையும் சொன்னார்.

இதுவரையான விஷயங்களைச் சொல்வதில் சார்லஸுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அடுத்த ஒரே ஒரு வரி. ''நாளை முதல் புதிய கோளுக்குப் பயணிக்க விரும்புகிறவர்கள் பதிவுசெய்யலாம். பதிவுக் கட்டணம், ஒரு பில்லியன் டாலர்.''

இந்திய மதிப்பில் சுமார் 6,000 கோடி ரூபாய்.

ஒரே செக்கில் பணம் கட்டிவிட்டுப் புதிய கோளில் பறக்க கரன்சி மிகுந்த மக்கள் சிலர் பரபரப்பாக வேலையில் இறங்க, பெரும்பகுதி மக்கள் விரக்தியில் உறைந்திருந்தனர்.

பேட்டி முடிந்தது. சார்லஸை, கேப்ரியல் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். ''என்ன சொன்னேனோ அதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். இப்போதைக்கு இதுபோதும்'' என்றார் கேப்ரியல்.

''உலகத்தையே அழித்துவிடுவேன் என நியூட்ரான் பாமைக் காட்டுகிறாயே பாவி'' என்றார் சார்லஸ்.

''பயப்படாதே சார்லஸ்... இந்த உலகத்தை அழித்துவிட்டால் என் திட்டம் என்ன ஆகும்? இவர்களை வைத்துத்தானே என் வியாபாரமே...'' - டிராகுலாவின் குரோதப் புன்னகையைச் சிந்தினார் கேப்ரியல்.

- ஆபரேஷன் ஆன் தி வே...