FA பக்கங்கள்
Published:Updated:

குடுகுடு பாட்டியும்..துறுதுறு சின்னியும் !

மகேஸ்

நிலா மாமா

அந்த ஊர்ல, ஒரு பாட்டி இருந்தாங்க. அந்தப் பாட்டியை எல்லோரும் 'குடுகுடு’ பாட்டினு, சொல்வாங்க. ஊர்ல இருக்கிற பாட்டிகளில் ரொம்ப ரொம்ப வயசான பாட்டி அவங்கதான். அவங்க வயது என்னன்னு யாருக்குமே தெரியாது. ஏன், அந்தப் பாட்டிக்கே தெரியாது.

பாட்டிக்கு ரொம்ப வயதானாலும் கண்ணு நல்லாத் தெரியும். முறுக்கு, சீடையைக் கொடுத்தால், 'கடக் முடக்’னு கடிச்சுத் தின்பாங்க. பாட்டியின் பற்கள் அவ்வளவு உறுதியா இருக்கும். ஆனால், அவங்க தலை மட்டும் எப்பவுமே ஆடிக்கிட்டே இருக்கும். அதனாலதான், அவங்க பேர் 'குடுகுடு’ பாட்டி!

கை வைத்தியம் செய்றதில் பாட்டியை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஊர்ல யாருக்கு உடம்பு முடியலைன்னாலும் பாட்டிகிட்டேதான் ஆலோசனை கேட்பாங்க. பாட்டியும் அன்போடு சொல்வாங்க. அப்படி ஆலோசனை சொல்லும் நேரம் போக, மத்த சமயங்களில் ஆடு, மாடு, கோழிகளோடு பேசிட்டிருப்பாங்க 'குடுகுடு’ பாட்டி.

இது தவிர, அழகான சின்னக் குருவியும்  பாட்டிக்கு ஃப்ரெண்டு. அதுக்கு பாட்டி வெச்ச பேரு சின்னி. அந்த சின்னி, தினமும் பாட்டி வீட்டு ஜன்னலில் வந்து உட்காரும். பாட்டி  தினமும் அதுக்கு தானியம், சாதம் வைப்பாங்க. சின்னக் கிண்ணத்தில், குடிக்கத் தண்ணியும் வைப்பாங்க. மதியம் சரியா 12 மணிக்கு சின்னி வந்து சாப்பிடும். அதைப் பார்க்கிற பாட்டிக்கு சந்தோஷமா இருக்கும்.

குடுகுடு பாட்டியும்..துறுதுறு சின்னியும் !

அப்போ, சின்னியோடு பாட்டி பேசுவாங்க. ''என்ன சின்னி... இன்னைக்கு ரொம்ப வெயிலா? துவண்டுபோய் வந்திருக்கியே''னு அதன் மேல் தண்ணீரைப் பன்னீர் தெளிக்கிற மாதிரி தெளிப்பாங்க.

சின்னியும் நன்றியோடு பாட்டியை ஒரு பார்வை பார்க்கும். சின்னிக்குப் பேச வாய் இல்லையே தவிர, பாட்டி பேசுறதை எல்லாம் கேட்டு, தலையைத் தலையை ஆட்டி, 'ஆமாம்...’ 'இல்லை’னு சொல்லும்.

ஆனால், பாட்டி எவ்வளவு தீனி கொடுத்தாலும் சாப்பிட்டுட்டு அரை மனசோடவே சின்னி பறந்துபோகும்.

''போதும் என்கிற மனசு வேணும் சின்னி. அதுதான் நல்லது. எதிலும் அவசரமும் பதட்டமும் வேணாம்'' எனக் குழந்தைக்குச் சொல்றமாதிரி, பாட்டி அடிக்கடி சின்னிக்குச் சொல்லுவாங்க. சின்னியோ, தலையைத் திருப்பிட்டுப் போய்டும்.

கொஞ்ச நாளில் 'குடுகுடு’ பாட்டியின் பேத்திக்குக் கல்யாணம் வந்துச்சு. ஊர் பூரா ஒரே கொண்டாட்டம். எல்லோருக்கும் பத்திரிகை வைத்த பாட்டி, மறக்காமல் சின்னிக்கும் கொடுத்தாங்க. ''காலையிலேயே வந்துடு சின்னி. கல்யாணத்திலே வடை, பாயசம், விதவிதமா கூட்டு, பொரியல்னு நிறைய இருக்கும்'' என்றார் பாட்டி.

கல்யாண நாளும் வந்துச்சு. சின்னியும் சரியான நேரத்துக்குப் பறந்துவந்து மண்டபத்தில் இருந்த ஜன்னல் மேலே உட்கார்ந்துச்சு. இதைக் கவனிச்ச 'குடுகுடு’ பாட்டி, ஒரு சின்னக் கிண்ணத்திலே சர்க்கரைப் பொங்கலைப் போட்டு எடுத்துவந்தாங்க.

''சின்னி, சர்க்கரைப் பொங்கல் ரொம்ப சூடா இருக்கு. ஆறினபிறகு நிதானமா சாப்பிடு. எனக்குக் கல்யாண வேலை நிறைய இருக்கு'' என்று அன்பாகச் சொல்லிட்டு உறவினர்களைக் கவனிக்கப் போய்ட்டாங்க.

சர்க்கரைப் பொங்கலின் வாசனை சின்னியை மயக்கிச்சு. நெய், முந்திரி, திராட்சை எல்லாம் போட்டுச் செய்த பொங்கல். உள்ளே வடை, பாயசம் எல்லாம் ரெடி ஆகிட்டு இருந்துச்சு. 'இதை இப்பவே சாப்பிடணும். அப்போதான் வடை, பாயசம் கிடைக்கும். இல்லைன்னா மத்தவங்க காலி பண்ணிடுவாங்க’ என்று நினைச்சது சின்னி.

குடுகுடு பாட்டியும்..துறுதுறு சின்னியும் !

'யாராவது தன்னோட கிண்ணத்தைப் பிடுங்கிப்பாங்களோ...’ என்ற பயமும் அதுக்கு இருந்துச்சு. அதனால், 'இந்த இடத்தைவிட்டு தூரமாகப் போய்ட்டா நல்லது’னு நினைச்சது சின்னி.

பொங்கல் கிண்ணத்தைத் தன் அலகால் பிடிச்சுக்கிட்டு, வேகமா பறக்க நினைச்சது. பொங்கல் கிண்ணம் சூடாக இருந்தது சின்னிக்குத் தெரியலை. அதோட சின்ன அலகில் கிண்ணம் பட்டதும் சூடு தாங்கலை. பதறி வாயைத் திறக்க, கிண்ணம் நழுவி 'தொப்’ என விழுந்துருச்சு. எங்கே தெரியுமா? தண்ணீர் நிறைஞ்ச ஒரு அண்டாவில்.

'கடல்ல கரைச்ச பெருங்காயம்’ மாதிரி, சர்க்கரைப் பொங்கல் தண்ணீரில் மூழ்கி வேகவேகமாகக் கரைஞ்சுபோச்சு. சின்னிக்கு என்ன செய்றதுனே தெரியலை.

'அவசரப்பட்டு, அருமையான உணவை வீணாக்கிட்டோமே... இப்போ என்ன செய்றது?’னு சோகத்தோடு அண்டா நுனியில் உட்கார்ந்துச்சு. அதன் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு, அந்த அண்டாத் தண்ணீரில் விழுந்துச்சு.

மண்டபத்தில் உறவினரோடு பேசிட்டு இருந்தாலும், 'குடுகுடு’ பாட்டி இதைக் கவனிச்சுட்டாங்க. உடனே, அவங்க சமையல்கட்டுக்குப் போனாங்க. திரும்பிவந்த அவங்க கையில், இன்னொரு கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கல்.

''அவசரப்படாதேனு சொன்னா கேட்கிறியா? இந்தா, இதையாவது கொட்டிடாம சாப்பிடு. வடை, பாயசமும் எடுத்துட்டு வர்றேன்'' என்று அன்போடு தடவிக்கொடுத்தாங்க.

சின்னியின் சோகம் பறந்துபோச்சு. 'அவசரம் இல்லே, மெதுவாகவே கொண்டுவாங்க’ என்று சொல்றமாதிரி பாட்டியைப் பார்த்துட்டு, சர்க்கரைப் பொங்கலை நிதானமாக ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுச்சு சின்னி.

அப்புறம் என்ன... கல்யாணத்தில் தாம்பூலம் தவிர, எல்லாத்தையுமே சின்னி ஒரு வாய் பார்த்துச்சு.