FA பக்கங்கள்
Published:Updated:

ஆசிரியர் மாணவர் கதை

ராம்கி

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

ஆசிரியர் மாணவர் கதை

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

ஒரு சீடன் தன் குருவிடம் வந்தான். ''குருவே, நான் தவம் செய்யப்போகிறேன். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்'' என்றான்.

''என்ன நோக்கத்துக்காக தவம் செய்யப்போகிறாய்?'' என்று கேட்டார் குரு.

''அதை இப்போதே சொல்ல விருப்பம் இல்லை. ஆனால், இந்தப் பகுதிக்கு ஒரு நன்மை செய்யவே தவம் செய்கிறேன்'' என்றான் சீடன்.

''இறைவன் விரைவிலேயே உன்னைச் சந்திக்க வாழ்த்துகிறேன்'' என்று ஆசீர்வதித்தார் குரு.

சீடன், ஆள் அரவமற்ற இடத்துக்குச் சென்று தனது தவத்தை ஆரம்பித்தான். 20 வருடங்கள் கடுமையாகத் தவம் செய்து, கடவுளிடம் வரம் பெற்றான். மகிழ்ச்சியுடன் குருவைத் தேடிவந்தான்.

''குருவே, எனக்கு நினைத்ததை நடத்தும் ஆற்றலை கடவுள் கொடுத்துவிட்டார். நம் ஊர் எல்லையில் ஓடும் ஆற்றினால், மக்கள் அடுத்த ஊருக்கு நீண்டதூரம் சுற்றிக்கொண்டு செல்கிறார்கள். என் வரத்தின் மூலம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்போகிறேன்'' என்றான்.

ஆசிரியர் மாணவர் கதை

''அப்படியா... இதற்காகவா 20 வருடங்களை வீணடித்தாய்?'' என்று அமைதியாகக் கேட்டார் குரு.

சீடனுக்குக் கோபம் வந்துவிட்டது. ''நான் கடவுளிடம் வரம் பெற்றுவந்ததில் உங்களுக்குப் பொறாமை. மனம் இருந்தால், நான் செய்யப்போகும் நல்ல காரியத்தை வந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆற்றங்கரையை அடைந்த சீடன் திகைத்துவிட்டான். அங்கே ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. அதில் மனிதர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, அவன் தோள் மீது ஒரு கை அன்புடன் தொட்டது.

சீடன் திரும்பிப் பார்த்தான். அவனது குருதான். ''இதை நான்தான் கட்டினேன். நீ தவம் செய்யச் சென்ற பிறகு, தினமும் ஓய்வு நேரத்தில் இங்கே வருவேன். கற்களை எடுத்து ஆற்றில் போட ஆரம்பித்தேன்.  என்னுடன் ஒரு சிலர் உதவிக்கு வந்தார்கள். இரண்டே ஆண்டுகளில் இந்தப் பாலத்தைக் கட்டிவிட்டோம்'' என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் தலைகுனிந்து நின்றான்.