மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 21

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

செயின்ட் எலினா தீவு. அங்குதான் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டிருந்தான். ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டு சிறுகச் சிறுக செத்துப்போனான். உலகையே ஆள விரும்பியவனின் இறுதிக் காலம் அங்குதான் முடிவுக்கு வந்தது. யாருடைய முடிவும் எல்லோருக்கும் பாடமாகிவிடுவது இல்லை. அப்படிப் பாடம் கற்காத சிலர் அங்கே குழுமியிருந்தனர்.

அந்தத் தீவை ஒட்டிய கடலில் இயற்கைக்குச் சவால்விடும் செயற்கையாக நின்றிருந்தது அந்தக் குரூஸ் வகை உல்லாசக் கப்பல். 'பளிங்குக் கற்களால் இழைத்ததுபோல இருந்தது’ என வர்ணிப்பார்கள். அந்த வர்ணனைக்கு உயிர்கொடுத்த உதாரணமாக தண்ணீரில் அசைந்துகொண்டிருந்தது. அதைவிட முக்கியம், அதன் மேல் தளத்தில் நின்றிருந்தவர்கள். தங்களின் வியாபார வேர்களால் மற்ற நாடுகளை உறிஞ்சும் நவீன நெப்போலியன்கள் இவர்கள். ஜி-7 நாடுகளின் தலைவர்கள். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், கனடா... என ஏழு நாட்டுத் தலைகள் ஒரே இடத்தில் இத்தனை ரகசியமாகச் சந்தித்துக்கொள்ள முக்கியமான காரணம் இருந்தது.

ஒரே நாளில் இந்த உலகம் விஞ்ஞானிகளின் கைக்கு மாறியது, அவர்கள் அத்தனை பேருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 'உயிர் பிழைக்க வேண்டுமானால் வேறு கிரகத்துக்குக் குடிபெயர வேண்டும் என்றும், அதற்காக தலைக்கு ஒரு பில்லியன் டாலர் பணம் என்றும்’ யாரைக் கேட்டு சார்லஸ் அறிவித்தார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் சார்லஸ் சொல்வதை வழிமொழிந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் வலிமைக்கும் வர்த்தகத்துக்கும் விடப்பட்ட சவால்.

ஆபரேஷன் நோவா - 21

உலகைக் காப்பாற்ற வேண்டுமானால் அது இனி ராணுவத்திடமோ, நிதி அமைச்சரிடமோ, வெளியுறவுத் துறையிடமோ இல்லை. அது எல்லாமே பூமியின் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே பொருந்தும். 'இது கிரகங்கள் சம்பந்தப்பட்டது. விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடக்காது’ என்று ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் சார்பில் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். ''மீறித் தலையிட்டால், எல்லோரையும் அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் ஜி 581-க்குப் போய்விடுவோம்'' என்றார்.

அவர்கள், ஏற்கெனவே இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டனர். இது முடிவுச் சுற்று. இந்த முறை இவர்கள் முடிவுக்கு வரவில்லை என்றால், இறுதி முடிவை விஞ்ஞானிகள் எடுத்துவிடுவார்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது.

முதலில் மூன்றாம் உலகப் போர் ஒன்றை நிகழ்த்தலாம் என்றுதான் உலகம் முழுதும் இருக்கும் அத்தனை நாடுகளும் சேர்ந்து ஆசைப்பட்டன. இது நாடுகளுக்கு இடையே ஆனது அல்ல. நாடுகளுக்கும் விஞ்ஞானிகளுக்குமான போர். ஆனால், அந்த வெற்றியைக் கொண்டாட கரப்பான்பூச்சிகூட மிச்சம் இருக்காது என்பதால், அந்த யோசனையை விட்டுவிட்டனர்.

இத்தாலி பிரதமர் ரென்ட்சி, வயதில் இளையவராக இருந்தும் பொறுமையுடன் பேசினார்.

''சிம்பிள்... உலகம் அழியப்போகிறது; மக்கள் புதிய கோளுக்குப் போயாக வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யவேண்டியது அரசாங்கம். இதற்கு இவ்வளவு அதிகக் கட்டணம் எதற்கு என்பது புரியவில்லை?'' என்றார்.

''உலகமே அழியப்போகிறது என்றால், இந்தப் பேப்பர்களுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கப்போகிறது?''- ஒபாமா நியாயமான கேள்வியைக் கேட்டார்.

''புரியவில்லையா? புதிய கோளிலும் டாலர் இருக்கும்'' -பிரான்ஸ் அதிபர் பதில் சொன்னார்.

''விஞ்ஞானிகளை வழிக்குக் கொண்டுவர முடியாதா?''

ஒபாமா, விளக்க ஆரம்பித்தார். ''அது சாத்தியம் இல்லை. ஆனால், கேப்ரியல் ஒரு கருத்தைச் சொல்கிறார். ஒரு பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலர் அவர்களின் விஞ்ஞானச் செலவுகளுக்கு. மீதி 500 மில்லியன் டாலர் அந்தந்தத் தேசத்துக்கு... அதாவது சீனாவில் ஒருவர் 581 ஜிக்குப் போக விரும்பினால் அவர், சீன நாட்டுக்குப் பாதி, விஞ்ஞானக் கழகத்துக்குப் பாதி என்று பணம் கொடுக்க வேண்டும்.

''இது நன்றாக இருக்கிறதே?'' என்றது ஜெர்மனி.

''ஆனால், நல்லதுக்கு இல்லை. பிடி அவர்கள் கைக்குப் போகிறது. அனைத்து உலக நாடுகளுக்கும் துண்டு துண்டாகக் கிடைக்கும் தொகையும், விஞ்ஞானக் கழகத்துக்குக் கிடைக்கும் தொகையும் சமமாக இருக்கும். போதாததுக்கு எதிர்காலம், எதிர் உலகம் எல்லாமே அவர்கள் கைக்குப் போய்விடும்...'' - இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.

''மிஸ்டர் பராக்... அதனால் என்ன? இன்னும் ஒன்பது ஆண்டுகள் இருக்கின்றன. அவ்வளவு ஆண்டுகள் ஆண்டால் போதும். அப்புறம் நடக்கப்போவதை எண்ணி இப்போதே கவலைப்பட வேண்டியதில்லை'' - ஜப்பான்.

ஏழு தலைகளும் மௌனமாக இருந்தன. தலைக்குள் பூகம்பம். சீகல் பறவைகள் தலைக்கு மேலே மௌன சாட்சிகளாகச் சிறகடித்துக் கொண்டிருந்தன. யோசிக்கும் வேளையைக் கடக்க, ஆளுக்கொரு கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு மெள்ள சுவைத்தனர். ஒன்று, எல்லோரும் அழிந்துபோவது; இல்லை, விஞ்ஞானி களோடு இணங்கிப்போவது... இரண்டு விரல்களில் ஒன்றைத் தொட வேண்டும்.

இங்கிலாந்து அதிபர், ''அறிவுஜீவிகளால் ஆசைதான் பட முடியும்; ஆள முடியாது. சம்மதித்துக் கையெழுத்துப் போடுவோம்'' என்றார் ஒரு முடிவுக்கு வந்தவராக.

அமெரிக்க அதிபர் அதை ரசித்தார். அவருடைய கறுத்த உதடுகள் அதைப் புன்னகையாக வெளிப்படுத்தின. ''வெல்... அப்படியே செய்துவிடுவோம்'' என்றார் பராக் ஒபாமா.

அனைவரும் வர்த்தகம் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியை, இன்னொரு கோப்பையை உயர்த்தி மகிழ்ந்தனர்.

மைக்கேல் சொன்ன விளக்கம்தான் வினோதினியை ஓரளவுக்குச் சமாதானப்படுத்தியது. அவர்கள் இருவரும் தனிமையில் பேசட்டும் என்பதுபோல் எல்லோரும் நயத்தகு நாகரிகத்தோடு வேறு இடத்துக்கு நகர்ந்தனர்.

கண்களையே உண்மை அறியும் சோதனைக் கருவியாக்கி அகிலனைத் துருவினாள். 'வெள்ளைத் தோலுக்கும் பூனைக் கண்ணுக்கும் ஆசைப்பட்டு என்னை ஒரு நொடியில் மறந்துபோனாயா?’ என்ற கேள்வியால் அவனை ஸ்கேன் செய்தாள்.

அதைப் புரிந்துகொண்டவன் போல அவனாகவே, ''அப்படியெல்லாம் இல்லை'' என்றான்.

வினோதினி, ''கேத்ரினை நீ காதலிக்கவில்லை அல்லவா?'' என்றாள் அப்பாவியாக.

''மனதில் நீ இருக்கும்போது வேறு ஒருத்தி எப்படி உள்ளே நுழைய முடியும்?'' என ஒரே போடாகப் போட்டான்.

''ஓவர் பெர்ஃபாமன்ஸ் உடம்புக்கு ஆகாது... போதும்'' என்றாள்.

''இங்கே தொட்டுப் பார்'' மனசு இருக்கும் இடம் என நம்பப்படும் இடத்தைக் காட்டினான்.

''என்னமா சீன் போடுறே நீ? நான் இனிமே வர மாட்டேன்னு முடிவு பண்ணிட்ட இல்ல? கேத்ரின்கிட்ட அப்படி என்ன இருக்கு? என்னைவிட கொஞ்சம் பெருசா இருக்கா... சரியான ஜொள்ளுப் பார்ட்டிடா நீ.''

ஆபரேஷன் நோவா - 21

''இல்ல வினோ... மைக்கேல் சொன்னார்ல? எங்களுக்கே தெரியாது.''

இந்த நேரத்தில்... இவ்வளவு தூரத்தில் மீண்டும் அவன் கிடைத்துவிட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

''உங்க அம்மா, அப்பா எல்லாரும் என்னைத் தூக்கி எறிஞ்சுட்டாங்க. ஆனா, நாடே எனக்கு ஆதரவா இருந்தது. பூமியில் நமக்கு சத்யவான்-சாவித்ரினு பேர் தெரியுமா? இந்நேரம் சின்னதாக் கோயில்கூட கட்டியிருப்பாங்க!''

அவள் பூமியில் நடந்த அத்தனை விவரங்களையும் சொல்லச் சொல்ல, அகிலன் பிரமிப்புடன் கேட்டான்.

அகிலனுக்குக் கொஞ்சம் தாமதமாகத்தான் காதல் மொட்டுகள் மலர்ந்தன. காதல் போராட்டத்தைக் கேட்டபோது அவனுக்கு அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. நாம் அந்த அளவுக்கு இவளுடைய நினைவுகளைப் போற்றவில்லையே என்ற குற்றஉணர்வுகூட ஏற்பட்டது.

இருவரும் அமைதியாக அந்தச் சோலையின் நடுவே அமர்ந்திருந்தனர். கண்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

திடீரென ''அந்தப் பூவைப் பறிக்க முடியுமா?'' என்றாள் வினோதினி.

அவள் காட்டிய திசையில் ஆரஞ்சும் நீலமுமான வண்ணத்தில் கண்களைப் பறித்தது அந்த மலர். அன்பை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாக பூவைப் பறிக்கப் புறப்பட்டான்.

பூவைப் பறிக்க விரும்பும் பெண்கள், கோள் மாறினாலும் மாற மாட்டார்கள் போலும். ராமனிடம் சீதை கேட்ட மாயமான் போல அதை எட்ட முடியாமல் சிரமப்பட்டான். ஏறிப் பறிக்கும்படியான மரமும் இல்லை.

''என்னைத் தூக்கிவிடு அகிலன். நான் பறிக்கிறேன்'' என்றாள்.

அவளை இடுப்புக் கிழே பிடித்து அப்படியே தூக்கினான். ஸ்பரிஸம், வாசனை... அவன் அப்படியே அவளைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவள் பூவைப் பறித்துவிட்டு அவன் இறக்கிவிடுவான் என எதிர்பார்த்தாள். அவன், அவளைத் தூக்கிக்கொண்டு அப்படியே அறையை நோக்கி நடந்தான்!

தே நேரத்தில் அகியும் லூசூனும் அம்மாவின் விடுதலை பறிபோவதற்குள் கொண்டாடிவிட வேண்டும் என்ற விசேஷ தாகத்தோடுதான் அறைக்குள் சென்றனர். அகி, அவசரப்படவில்லை.

அனல் மூச்சுடன் சட்டையைக் கழற்ற எத்தனித்தவனை, ''ஒரு சின்ன டெஸ்ட். அதில் நீ பாஸ் ஆனால்தான் மற்றதெல்லாம்...'' என்றாள்.

'' 'மற்றதெல்லாம்’ முடித்துவிட்டு டெஸ்ட் வைத்துக்கொள்ளலாமே!'' என்றான்.

''ஜப்பானில் கல்யாணத்தின்போது பெண்கள், தலையில் வெள்ளைத் துணியால் போர்த்தியிருப்பார்கள், தங்கள் கன்னித்தன்மையை கடவுளுக்குச் சொல்லும்விதமாக. நான் இதோ தலையில் இந்த வெள்ளைத் துணியைக் கட்டிக்கொள்கிறேன்.''

சரி என்பதாகக் காத்திருந்தான் லூசூன்.

''இதன் முடிச்சை அவிழ்த்த பின்தான் என்னை நீ எடுத்துக்கொள்ள முடியும்.''

''அவ்வளவுதானே!'' என அவளை நெருங்கினான்.

எதிர்பாராதவிதமாக அவள் இரண்டு, மூன்று பல்ட்டி அடித்தாள். நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவள் அறையின் இன்னொரு மூலையில் இருந்தாள். இந்த முறை சிரத்தையோடு இரண்டு கைகளையும் அகல விரித்தபடி அவளை நெருங்கினான். ஒரே துள்ளலில் அவனைக் கடந்து மறுபுறம் சென்றாள். இருவரும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க, நடுவானத்தில் இரண்டு ஏரோபிளேன்கள் மோதிக்கொள்ளும் வாய்ப்பு போல இருந்தது அவளை நெருங்குவது.

இந்தப் போட்டியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவன், ''உன்னை ஜெயிப்பதற்கு முன் நானும் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றான் அலுப்புடன்.

''என்னை எப்போது பிடிக்க முடிகிறதோ அதற்குப் பிறகுதான் எல்லாம்'' என்றாள் பிடிவாதமாக.

''ஐயய்யோ!''

அந்த அகன்ற அறையில் அவளைப் பிடிப்பது சிரமம்தான். இன்னொரு முறை ஆவேசமாகப் பாய்ந்தான். தரையில் கையை ஊன்றி பல்டி அடித்து அதே உக்தியைப் பயன்படுத்த எத்தனித்தாள். சர்ர்ர்... என அவள் காலுக்குக் குறுக்கே பாய்ந்து அவளை இடறி விழவைத்தான். மல்லாந்து விழுந்துகிடந்த அவள் மீது பாய்ந்தான். தலையில் கட்டியிருந்த ஸ்கார்ப்பை அவிழ்த்த அதே வேகத்தில் சட்டை பட்டனையும்...

கேப்ரியல் வந்துவிட்டார் என்ற செய்தி, மைக்கேலுக்கு பூமிக்கான சாவி கிடைத்துவிட்டதுபோல இருந்தது. அவரும், ''மைக்கேல்... உங்களைத்தான் பார்க்க வந்தேன்'' என்றார் அதே ஆர்வத்தோடு.

இரண்டு உலகமும் விஞ்ஞானிகள் கைக்கு வந்துவிட்டதைச் சொன்னார். அதில் இருக்கும் நன்மை-தீமைகளை உணர்ந்து அதை வரவேற்பதா, எதிர்ப்பதா என்று தடுமாறினார் மைக்கேல்.

''நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை வேகமாகக் கிரகிக்க முடியவில்லை. என்னுடைய ஆசையைச் சொல்லிவிடுகிறேன். அது சுலபமாகப் புரியக்கூடியது. இங்கு இருப்பவர் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிட வேண்டும். இல்லை என்றால் இதை எல்லாவிதத்திலும் பூமி போல மாற்ற வேண்டும். ஒரேயடியாக இவ்வளவு விஞ்ஞானத்தை மக்கள் தாங்க மாட்டார்கள்'' என்றார்.

ஆபரேஷன் நோவா - 21

''இல்லை. புதிய கோளில் இன்று எல்லோருமே சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.''

''நிஜமாகவா, எப்படி?''

''விஞ்ஞானம்தான் காரணம்.''

''நீ சொல்வது புரியவில்லை.''

''இன்று கிரகத்தில் எல்லா ஆணும் பெண்ணும்...'' கண்ணைச் சிமிட்டிவிட்டு, ''எல்லோருக்கும் எம்.டி.எம்.ஏ. செலுத்தப்பட்டிருக்கிறது.''

''மோலி செலுத்தியிருக்கிறாயா?''

''ஆமாம். இன்பத் தூண்டலுக்கான மருந்து. குறைவான டோஸ்தான் கொடுத்தேன். எல்லோரும் மூடுக்கு வந்துவிட்டார்கள்...''

''என்ன காரியம் செய்தாய்... இப்போது மோலி செலுத்தவேண்டிய அவசியம் என்ன?''

''இருக்கிறது... சொல்கிறேன்!'' கேப்ரியல் பாந்தமாக மைக்கேலின் தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

- ஆபரேஷன் ஆன் தி வே...