மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 11

வருவாயைக் கொடுக்கும் வாஸ்து மிரர்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

''சொல்லிக் கொடுக்காமலேயே வர்றதுதான் பரம்பரை குணம். எங்க வீட்ல பாட்டி, அம்மானு எல்லாருக்கும் கைவேலைப்பாட்டில் ஆர்வம் உண்டு. அப்படித்தான் நானும் கிராஃப்ட்டில் கலக்குறேன்னு நினைக்கிறேன்!''

- அசத்தலாக ஆரம்பித்தார் சென்னை, அண்ணாநகரில் 'வாஸ்து மிரர் வொர்க்' செய்துவரும் ராஜதர்ஷினி செந்தில்குமார். ''பூர்விகம் விருதுநகர். பி.டெக் முடிச்சுட்டு, இன்டீரியர் டிசைனிங்கும் படிச்சுருக்கேன். சென்னையில ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். இடையிடையே என்னோட கிராஃப்ட் பொருட்களை ஸ்டால்ஸ், மால்ஸ்னு விற்பனை செய்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சுது.    தஞ்சாவூர் பெயின்ட்டிங், ஃபேப்ரிக் பெயின்ட்டிங், கலம்காரி, மியூரல் வொர்க்னு எல்லாரும் செய்றதையே செய்யாம, புதுசா ஏதாச்சும் செய்யலாமேனு யோசிச்சு சேர்த்துக்கிட்டதுதான், இந்த வாஸ்து மிரர் வொர்க். வழக்கமா வாஸ்துக்காக பலரும் ஒரு கண்ணாடியை, வீட்டுக்கு முன்ன மாட்டி வைப்பாங்க. 'என்ன இது சம்பந்தமே இல்லாம இங்க கண்ணாடி?’னு வர்றவங்க அதை வித்தியாசமா பார்ப்பாங்க. அதில் ஹேண்ட்வொர்க் செய்து வெச்சா, வால் ஹேங்கிங் ஆயிடும்... பார்க்கறவங்க கண்ணையும் உறுத்தாதே!'' எனும் ராஜதர்ஷினிக்கு, 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருக்கிறது.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 11

''இப்போ கிராஃப்ட்டில் நான் அடைந்திருக்கும் வெற்றிக்கு, அப்பா சுந்தரேசன்தான் காரணம். சின்ன வயசுல, 'அதை செய்யப் போறேன், இதை அலங்கரிக்கப் போறேன்’னு என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, 'முடியாது’னு அவர் எங்கிட்ட எப்பவும் சொன்னதில்ல. அவர் குறை, நிறைகள் சொல்லி திருத்தி மெருகேத்தினதுதான்... இந்த  அளவுக்கு என்னை உயர்த்தியிருக்கு. அது மட்டுமல்லாமல் இப்ப என் கணவரும், வீட்டிலுள்ளவர்களும் தரும் ஊக்கம்தான்... இந்த வேலைப்பாடுகள் எல்லாம்!'' என்று நெகிழ்ந்த ராஜதர்ஷினி, வாஸ்து மிரர் வொர்க் செய்யும் முறை பற்றி இங்கே விளக்குகிறார்...  

தேவையான பொருட்கள்: ஃபிரேம் போட்ட கண்ணாடி - 1, ஸ்டெயின் கிளாஸ் பெயின்ட் (சால்வென்ட் பேஸ்ட்  Solvent Paste) - தேவையான வண்ணங்களில், கிறிஸ்டல் - தேவையான அளவு, 3டி லைனர் - தேவையான வண்ணங்களில், ரெட் ஸ்டோன் - தேவையான அளவு, வட்ட வடிவ சிறிய கட்டிங் மிரர் - 1, பென்சில் - 1, கிளாஸ் மார்க்கிங் வொயிட் பென்சில் - 1, வொயிட் கார்பன் பேப்பர் - 1, அவுட்லைன் பிக்சர் - விரும்பியவாறு.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 11

செய்முறை:

படம் 1: இங்கே நாம் வரையப்போவது கிளி படத்தை. முதலில் வெள்ளைத் துணி கொண்டு கண்ணாடியை நன்றாகத் துடைக்கவும். படம் வரைய வேண்டிய இடத்தில், வொயிட் கார்பன் பேப்பரை வைக்கவும். அவுட்லைன் பிக்சரை அதன்மீது வைத்து, பென்சிலால் வரையவும் (ஃப்ரீ ஹேண்ட் டிராயிங் போடத் தெரிந்தவர்கள் நேரடியாக, கிளாஸ் மார்க்கிங் வொயிட் பென்சில் கொண்டு, கண்ணாடியிலேயே வரையலாம்).

படம் 2: கண்ணாடியில் சரியாக பதிவாகாமல் இருந்தால், கிளாஸ் மார்க்கிங் வொயிட் பென்சில் கொண்டு அந்த இடங்களை இணைத்துக்கொள்ளவும்.

படம் 3: அவுட்லைன் மீது, தேவையான 3டி அவுட் லைனர் கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி வரையவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 11

படம் 3a: கிளி, கிளைகள், இலைகள் என அனைத்தும் வரைந்து முடித்த பிறகு... சுமார் ஒரு மணி நேரம் நிழலில் காயவிடவும்.

படம் 4, 4a: கிறிஸ்டல்களை கிளியின் இரண்டு சிறகுகள் மற்றும் வாலில் மட்டும் நிரப்பவும். கிறிஸ்டல்களை இடைவெளி இல்லாமல் நிரப்ப வேண்டியது முக்கியம்.  

படம் 5, 5a: கிறிஸ்டல் மேல் பெயின்ட்டினை இடைவெளியின்றி இடவும் (கண்ணாடியை சாய்த்து வைத்தால், பெயின்ட் வழிந்துவிடும். எனவே, வேலைப்பாடு முடியும் வரை படுக்கை வாக்கிலேயே இருக்க வேண்டும்). அழகுக்காக இறகுகளை சிவப்பு, மஞ்சள், ஊதா என மூன்று நிற வண்ணங்களால் பிரிக்கவும்.

படம் 6, 6a: கிளியின் மற்ற இடங்கள், மரம்,  இலைகளில் தேவையான வண்ணம் தீட்டவும். காற்றுக் குமிழ்கள் வர வாய்ப்புண்டு என்பதால், கவனமாக தீட்டவும். கிளியின் கண்ணுக்கு வட்ட வடிவ சிறிய கட்டிங் மிரரை ஃபிக்ஸ் செய்து, அதன் மீது பிளாக் கலர் 3டி லைனரை ஒரு சொட்டு விடவும்.

படம் 7: பெயின்ட் வேலை முடிந்த பிறகு, கிளைகளில் ரெட் கலர் ஃப்ளவர் ஸ்டோன்களை ஆங்காங்கே ஒட்டவும். இப்போது அழகான வாஸ்து மிரர் தயார்.

படத்தை வரைந்து முடித்த ராஜதர்ஷினி, ''இதை 3 - 4 மணி நேரம் படுக்கைவாக்கிலேயே வைத்து காயவிடவும். 350 ரூபாய் விலையுள்ள கண்ணாடியில், டிசைன் செய்து 1,200 ரூபாய் வரை விலை வைத்து விற்கலாம். வட்ட வடிவ கண்ணாடியிலும் அலங்கரிக்கலாம், ஆனா, ஃபிரேம் போடுறது கஷ்டமா இருக்கும். அதனால அதை தவிர்த்துடறது நல்லது.

ஆரம்பத்தில் நாளன்றுக்கு ஒன்று அல்லது ரெண்டு கண்ணாடிகள் மட்டுமே டிசைன் செய்ய முடியும். பழகிட்டா, நிறைய செய்ய முடியும். இந்த பிசினஸில் மாதம் 15 ஆயிரத்துக்கும் மேல் தாராளமா லாபம் பார்க்கலாம்'' என்று சொல்கிறார்.

''வாஸ்து மிரர், நல்ல வாகான பிசினஸ்!''

- கண்சிமிட்டிச் சிரிக்கிறார் ராஜதர்ஷினி.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...