
நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்
பசித்த புலியின் வேகம்
''மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில்
கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!''
- நகுலன்
('நினைவுப் பாதை’ நாவலில் இருந்து...)
எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்டிருந்த புகழின் வெளிச்சம் தாங்காமல் இவன் திக்குமுக்காடினான்.
பச்சையப்பன் கல்லூரிக்குள் நுழையும்போதே, தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். தத்துவத் துறைப் பேராசிரியர் பெரியார்தாசன், இவன் வகுப்புக்கே தேடி வந்து வாழ்த்து சொன்னபோது இவன் அவரிடம், ''சார்... உங்க பையன் வளவனும் நானும் ஒண்ணா கவிதைப் போட்டியில் கலந்துப்போம்'' என்றான்.
''அப்படியா! அவன் கவிதையெல்லாம் எழுதுவானா?!'' என்று ஆச்சரியப்பட்டார்.
இந்தக் காலகட்டங்களில் இவன் காற்றில் மிதக்கும் பறவையின் இறகைப்போல திரிந்துகொண்டே இருந்தான். அப்படி இவன் இறகு, சென்னை தி.நகரில் இருந்த
73, அபிபுல்லா சாலையில் தரையிறங்கியது. அது, அண்ணன் அறிவுமதியின் அலுவலகம். அப்போது அவர் 'உள்ளேன் ஐயா’ என்ற படத்தைத் தொடங்கிவிட்டு, கலைப்புலி எஸ்.தாணுவின் 'சிறைச்சாலை’ படத்துக்கு வசனமும் பாடல் களும் எழுதிக்கொண்டிருந்தார். ஏற்கெனவே அவர், இவனுக்கு காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் மூலம் அறிமுகமாகி இருந்ததால், அண்ணனின் அரவணைப்புக்குள் அடைக்கலமானான்.

அறிவுமதி அண்ணன், இவனுக்கு ஆண் தாயானார். 73, அபிபுல்லா சாலை, இவனுக்கு பல்வேறு முகவரிகளைத் திறந்துவைத்தது. அந்த ராஜபாட்டையில் அறிவுமதி அண்ணனின் கைபிடித்து நடந்துபோனான்.
''நீ இயல்பாவே நல்ல கவிஞன். பாடல்கள் எழுதப் பயிற்சி எடுத்துக்கோ. அது உனக்குச் சுலபமா கை வரும்'' என்று அறிவுமதி அண்ணன் ஆசை காட்ட, இவன் விளையாட்டாக எழுத ஆரம்பித்து, புலி வாலைப் பிடித்த கதையாக இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறான்.பசித்த புலி ஒன்றின் வேகத்தோடு இவன் திரிந்த காலங்கள் அவை.
அறிவுமதி அண்ணனின் அலுவலகத்திலேயே 'உள்ளேன் ஐயா’ படத்தின் இசையமைப்பாளர் சாந்தகுமாரும் தங்கியிருந்தார். தினமும் ஐந்து, ஆறு மெட்டுகளை அவர் போட்டுவைத்திருக்க, கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் இவன் அவரது மெட்டுகளுக்குப் பாடல் எழுதிக் கொடுப்பான். மெலடி மெட்டுகளுக்கு எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், துள்ளிசை மெட்டுகளுக்கு எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், மரபுக்கவிதைக்கும் திரையிசைப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன... என்று சாந்தகுமார் அண்ணனும், அறிவுமதி அண்ணனும் இவனுக்குப் புரியவைத்தார்கள். இப்படி முதல் பாடல் எழுதி திரையில் வெளிவருவதற்கு முன்பாகவே, இவன் 3,000-க்கும் மேற்பட்ட அவரது மெட்டுகளுக்கு பாடல்கள் எழுதிப் பயிற்சி பெற்றான்.
அறிவுமதி அண்ணனின் அலுவலகம், கவிதைப் பறவைகளின் வேடந்தாங்கல். அங்குதான் இவன் நேசித்த பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் சந்தித்தான். அவர்களில் முக்கியமானவர், கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.
கவிஞர் இந்திரன் கோடம்பாக்கத்தில் குடியிருந்தார். வங்கிப் பணி முடிந்து அவர் மாலை வீட்டுக்கு வருகையில், இவன் அன்று எழுதிய புத்தம்புதுக் கவிதையுடன் வாசலில் காத்திருப்பான். அவரும் ஆர்வத்துடன் இவன் கவிதையைப் படித்துவிட்டு, அந்தக் கவிதை தமிழ்க் கவிதை வரலாற்றில் ஏன் புதியதாக இருக்கிறது அல்லது ஏன் பழையதாக இருக்கிறது என்று தர்க்கரீதியாக தன் விளக்கத்தை முன்வைப்பார்.

அறிவுமதி அண்ணன் இவனை கவியரங்கங்களுக்கு அறிமுகப்படுத்தினார். கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச் செல்வன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சுரதா... என பல்வேறு கவிஞர்களின் தலைமையில் இவன் கவிதை படித்தான்.
ஒவ்வொரு கவிஞரிடம் இருந்தும் இவன் வெவ்வேறு வித்தைகளைக் கற்றான். கவிக்கோ அப்துல் ரகுமான், கஜல் கவிதைகளில் வித்தகர். 50 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகளைக்கூட பத்திரப்படுத்தி வைத்திருப்பார். கவிஞர் மு.மேத்தா எளிமையான அங்கதத்துடன் வரிகள் படைத்து கைதட்டல்களை பாக்கெட்டில் அடைத்துக் கொள்வார். கவிஞர் இன்குலாபும் தணிகைச் செல்வனும் இருக்கும் மேடைகளில் அனல் பறக்கும். ஈரோடு தமிழன்பனின் உச்சரிப்பும் உவமைகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும். உவமைக் கவிஞர் சுரதாவை இவன் சந்தித்தது ஒரு பேருந்து பயணத்தில். அப்போது அவர் சென்னையில் இருந்த ஒவ்வொரு சிலைக்கும் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இவன் ஒவ்வொரு சிலையின் வரலாற்றையும் அறிந்துகொண்டு கவிதை படைத்தான்.
அப்போது சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் 'வனம்’ என்றோர் அமைப்பு, பேராசிரியர் பாலுச்சாமி என்கிற பாரதிபுத்திரன் தலைமையில் இயங்கிவருவது இவன் கவனத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமைதோறும் மாலை 4 மணிக்கு பேராசிரியர் பாரதிபுத்திரன் தலைமையில், கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும் கவிதை எழுதும் மாணவர்களும், பேராசிரியர் களும், வெளியில் இருந்து வரும் கவிதை ஆர்வ லர்களும், கிறிஸ்துவக் கல்லூரியின் மரங்கள் அடர்ந்த வனத்தில் வட்டமாக அமர்ந்து, தாங்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கும் நிகழ்வு அது.
'வனம்’, இவன் கவிதைப் பார்வையை மேலும் விரிவுபடுத்தியது. வாரம் தவறாமல், வெள்ளியன்று பச்சையப்பன் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வனத்தில் கலந்துகொள்வான். இவன் எழுதிய கவிதையை உரத்தக் குரலில் படித்துக்காட்டியதும், ''முத்து... இப்படி ஒரு கவிதையைப் படிச்சிருக்காரு. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்று பாரதிபுத்திரன் விமர்சனத்தை ஆரம்பித்துவைக்க, ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள்.
அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஓர் இளைஞன் மட்டும், ''இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல'' என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான்.

அடுத்த வார 'வனம்’ சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான்.
'நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்
இரண்டு
அதைக் கிழிக்காமல் இருக்கிறேன்
மூன்று
உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்! ’
என்று படித்து முடித்ததும், எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். ஒருசிலர் '' 'இந்தக் கவிதை என்ன சொல்கிறது?’ என்று புரிய வில்லை'' என்றார்கள்.
அப்போது இவன் சென்ற வாரம் பார்த்த தாடி வைத்த இளைஞன் பேசத் தொடங்கினான். ''இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று'' என்று அதற்கான விளக்கத்தை அவன் விளக்கிக்கொண்டிருந்தான்.
'வனம்’ முடிந்ததும், இவன் அவனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அந்த நண்பன், இவனை தன் விடுதி அறைக்கு அழைத்துச் சென்றான். இவனைப் போலவே அவனது அறையும் புத்தகங்களால் நிரம்பியிருப்பது கண்டு, இவனுக்கு அவன் மேல் மதிப்பு கூடியது.
அடுத்தடுத்த வனத்தின் சந்திப்புகளில், அந்த நட்பு வலுப்பெற்றது. வெள்ளி மாலை 'வனம்’ முடிந்து, சனி... ஞாயிறு என அவன் அறையிலேயே இவன் தங்கத் தொடங்கினான். கவிதைகளும் ரஷ்ய இலக்கியமுமாகக் கழிந்த பொழுதுகள் அவை.
அவன் பின்னாட்களில் தங்கர் பச்சானிடமும், இந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியிடமும், பாலு மகேந்திராவிடமும் பணியாற்றி, 'கற்றது தமிழ்’, 'தங்க மீன்கள்’ என்று இரண்டு படைப்பு களை உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவின் பங்களிப்பாக அளித்தான்.
அந்த நண்பன் 'ராமசுப்பு’ என்று இவன் அன்போடு அழைக்கிற இயக்குநர் ராம்!
- வேடிக்கை பார்க்கலாம்...