விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்
ரம்யா, காட்டுமன்னார் கோவில்.
''கமல்ஹாசனின் படம் என்றாலே, அதில் இயக்குநர் 'பெயர்’ மட்டுமே போட்டுக் கொள்ளலாம். படம் முழுவதும் அவருடைய ஆதிக்கம்தான் இருக்கும் என்று கூறுவது உண்மைதானா?''
''பொய்! அவரைப் பத்தின தப்பான புரிதலில் இதுவும் ஒண்ணு. அவரே ஒரு ஹிட் டைரக்டர்தான். 'தெனாலி’, 'தசாவதாரம்’ படங்களையும் அவரே டைரக்ஷன் பண்ணியிருக்கலாமே! என்னை ஏன் கூப்பிடணும்?
'தசாவதாரம்’ல என் வேலை என்னன்னு அதில் வேலை பார்த்த எல்லாருக்குமே தெரியும். ஆனா, 'தசாவதாரம்’ கே.எஸ்.ரவிகுமார் படம் இல்லை. 'சேரன் பாண்டியன்’, 'நாட்டாமை’யை வேணும்னா நீங்க 'கே.எஸ்.ரவிகுமார் படங்கள்’னு சொல்லலாம்.
பெரிய ஹீரோ நடிச்சா, அது அவங்க படம்தான். அப்படி கமல் சார் நடிக்கிற படங்கள் அவர் படம்தான். ரஜினி சார் நடிச்சா, அதை எந்த இயக்குநர் இயக்கினாலும் அது ரஜினி சார் படம்தான். ஏன்னா, அந்த ஹீரோக்களோட இன்வால்வ்மென்ட் அந்தப் படங்களில் பெருசா இருக்கும்; இருக்கணும். அது இல்லைன்னாதான் தப்பு.
டிஸ்கஷன்ல உதவி இயக்குநர் ஒருத்தர், சஜஷன் ஏதாவது சொன்னா கேட்டுக்கிறோம். கமல் சார் சொன்னா கேட்கக் கூடாதுனு நினைச்சா, நமக்கு 'திமிர்’, 'ஈகோ’னு அர்த்தம்.
'கிரேன்’ மனோகர்னு ஒரு நடிகரை உங்களுக்குத் தெரியும். அவரோட அண்ணன் குணா. அவர் என்னோட எல்லாப் படங்களிலும் கூடவே இருப்பார். கிரேன் ஆப்பரேட்டர். கேமராமேன் பக்கத்துலயே நின்னுப்பார். 'இப்ப எடுத்தது எப்பிடிடா இருக்கு?’னு குணாகிட்ட கேட்பேன். யோசிக்க மாட்டான், 'சுமார்தான் சார்’ம்பான். நானும், 'ஒன்மோர் சார்’னு சொல்லிடுவேன். குணா பேச்சைக் கேட்கும்போது கமல் சார் பேச்சைக் கேட்க மாட்டேன்னா, அது என் தப்புதானே தவிர, கமல் சார் தப்பு கிடையாது.
ஹீரோக்கள் சஜஷன் சொல்லணும். அப்படிச் சொன்னாத்தான் அவங்க அந்தப் படத்துல இன்வால்வ் ஆகி இருக்காங்கனு அர்த்தம்!''

பிருந்தா, சென்னை.
''உங்களிடம் வரும் உதவி இயக்குநர் களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?''
''உதவி இயக்குநரா வர்றவங்களுக்கு எந்தத் தகுதியும் அவசியம் இல்லைனுதான் சொல்லுவேன். ஏன்னா... சினிமா ஆர்வத்துலதான் உள்ள வர்றாங்க. அந்த ஆர்வம்தான் முதல் தகுதி. இங்க வர்றவங்க கத்துக்கணும்கிற மனநிலையோடு வந்தா போதும். இதைத் தாண்டி சொல்லணும்னா, நல்ல மனுஷனா, கடின உழைப்பாளியா இருக்கணும். அவ்வளவுதான். மத்த விஷயங்களை உள்ளே வந்த பிறகு கத்துக்கலாம்!''
ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம்.
''சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். உங்கள் சென்டிமென்ட் என்ன?''
''நான் தீவிரமான ஆன்மிகவாதி. சாமி கும்பிடுற எல்லாருக்குமே ஏதாவது சென்டிமென்ட் இருக்கும். எனக்கும் அப்படி நிறைய இருக்கு. பட பூஜை அன்னைக்கு ஒரு கோயிலுக்குப் போயிட்டு வருவேன். பட ரிலீஸ் அன்னைக்கு வேற ஒரு கோயிலுக்குப் போயிட்டு வருவேன். இது தவிர, தினமும் கேமராவுக்குப் பூஜை பண்ணி தேங்காய் உடைச்சிட்டுத்தான் ஷூட்டிங் ஆரம்பிப்போம்.
இன்னொரு முக்கியமான சென்டிமென்ட், நான் இயக்கின படங்களை நான் தியேட்டர்ல பார்த்ததே இல்லை. அது ரஜினி சார், கமல் சார் படங்களா இருந்தாலும் சரி. 'தியேட்டர்ல இங்கே கிளாப்ஸ் வரும், இங்க சிரிப்பாங்க’னு ஷூட்டிங்கின்போதே சொல்லிச் சொல்லித்தான் எடுப்பேன். நானும் ஒரு ரசிகன்தானே. யாராவது ரொம்ப வற்புறுத்தி என் படத்தைப் பார்க்க வெச்சாலும், சும்மா கால் மணி நேரம் ஓரத்துல நின்னுட்டு வந்துருவேன்.
இப்படி தியேட்டர்ல படம் பார்க்காததுக்கு ஒரு காரணம் இருக்கு. நான் உதவி இயக்குநரா இருந்தப்ப, ஒரு படத்தோட ரிலீஸுக்கு அந்தப் பட இயக்குநரோட போனேன். க்ளைமாக்ஸ்ல ரசிகர்கள் சிலர் டைரக்டரைக் கண்டபடி பச்சைப் பச்சையாத் திட்டினாங்க. எனக்குக் கோபம் வந்து ஒரு ரசிகனை அடிச்சிட்டேன். உடனே என்னைச் சமாதானப்படுத்தின டைரக்டர், 'யோவ்... அவன் காசு கொடுத்து உள்ளே வந்திருக்கான். இந்த மூணு மணி நேரத்துக்கு அவன்தான்யா நமக்கு முதலாளி. அவனை நீ ஒண்ணும் பண்ண முடியாது. அவனுக்குப் பிடிக்கலைன்னா திட்டத்தான் செய்வான். சீட்டைக் கிழிச்சாக்கூட நீ எதுவும் கேட்க முடியாது. தியேட்டர் ஓனர்தான் கேட்கணும்’னு சொன்னார். இந்த மாதிரியான சூழல்ல எமோஷன் ஆகிடுவோம். அதனால நம்ம படங்களை தியேட்டர்ல பார்க்க வேண்டாம்னு அப்ப முடிவெடுத்தேன். இப்போ வரை என் படங்களை தியேட்டர்ல பார்த்தது இல்லை!
பெர்சனல் சென்டிமென்ட் ஒண்ணு இருக்கு. 1981-ல இருந்து 2005 வரை ஒரு வருஷம்கூட இடைவெளிவிடாம 25 வருஷம் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுட்டுப் போயிருக்கேன். அப்படி விரதம் இருந்து மாலை போட்டிருக்கும்போது நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ இறந்துட்டா விரதத்தைக் கலைச்சு மாலையைக் கழட்டிட்டு அந்தத் துக்க வீட்டுக்குப் போகணும். ஆனா, நான் மாலை போட ஆரம்பிச்சதுல இருந்து 24 வருஷம் அப்படி ஒரு சங்கடமே எனக்கு வரலை. 25-வது வருஷம் மலைக்குப் போயிட்டு வந்துட்டேன். ஆனா, விரதம் முடியாததால மாலையைக் கழட்டலை. அப்போ என் அப்பா இறந்துட்டார். மாலையைக் கழட்டிட்டேன். 'அவரே போதும்னு சொல்லிட்டார்’னு நினைச்சு சபரிமலைக்குப் போறதையும் நிறுத்திட்டேன்!''

கிஷோர், ராஜபாளையம்.
''நாகேஷ், உங்கள் இயக்கத்தில்தான் கடைசியாக நடித்தார் இல்லையா..!?''
''ஆமா... 'தசாவதாரம்’தான் அவர் கடைசியா நடிச்ச படம்!
'அவ்வை சண்முகி’ சமயங்கள்ல ரொம்ப ஆரோக்கியமா, செம எனர்ஜியோட இருந்தார் நாகேஷ். பூந்து விளையாடினோம். 'பஞ்சதந்திரம்’ சமயத்துல கொஞ்சம் டயர்ட் ஆகிட்டார். டான்ஸ் அதுஇதுனு இல்லாம அவருக்கு டயலாக் காமெடிகளா மட்டும் வெச்சோம். அதுலயும் ஸ்கோர் பண்ணார். 'தசாவதாரம்’ சமயத்துல ரொம்பத் தளர்ந்துட்டார். கையைப் பிடிச்சுதான் கூட்டிட்டுப் போய் நிக்கவைப்பேன். ஷாட் முடிஞ்சதும் கூட்டிட்டு வந்து உட்காரவைப்பேன். விளையாட்டாச் சொன்னாரா, தெரிஞ்சு சொன்னாரானு தெரியலை, 'அநேகமா இதுதாண்டா எனக்குக் கடைசி படமா இருக்கும்’னார். தசாவதாரம் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு நாகேஷ், மனோரமா எல்லாம் சேர்ந்து அழுதது இப்பவும் நினைவு இருக்கு. அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் இருந்தார். ஆனாலும் அவர் சொன்ன மாதிரியே 'தசாவதாரம்’தான் அவருக்குக் கடைசி படம். என் இயக்கத்துல 10 படங்களுக்கும் மேல நடிச்சிருக்கார்.
நானும் கமல் சாரும் சந்திச்சா, நாகேஷ் பத்தி பேசாம இருக்க மாட்டோம். 'இந்த சீன்ல நாகேஷ் சார் இருந்தா எப்படி இருந்திருக்கும்?’னு ஒவ்வொரு படத்துக்கும் பேசிப்போம். 'கோச்சடையான்’ டிஸ்கஷன்லகூட 'இந்த கேரக்டருக்கு நாகேஷ் சார் மட்டும் இருந்திருந்தா பின்னிருப்பார்ல?’னு நானும் ரஜினி சாரும் பேசிட்டு இருந்தப்பதான், 'நாகேஷ் சாரை ரீ-க்ரியேட் பண்ண முடியுமா?’னு கேட்டோம். 'முயற்சிக்கலாம்’னு சொல்லிப் பண்ணியிருக்காங்க. அந்த கேரக்டர் 'கோச்சடையான்’ல நல்லாவே வந்திருக்கு!''
கிருஷ்ணவேணி, தருமபுரி.
''இயக்குநர் ரவிகுமாரை இயக்குபவர் யார்?''
''என் மூன்று மகள்கள்.''
புருஷோத்தமன், ஆரணி.
''சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர் நீங்கள். அவர் அரசியலுக்கு வரலாமா?''
''வரலாம். வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவரோட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்!''
மகேஷ், வேலூர்.
''ஒரு படம் சக்சஸ் ஆகும்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?''
'' 'அவ்வை சண்முகி’ல டான்ஸ் மாஸ்டர் பாண்டியன், மடிசார் மாமி அவ்வை சண்முகினு கமல் சாருக்கு ரெண்டு கெட்டப். அவர் 'பாண்டியன்’ கெட்டப்ல இருக்கும்போது அவர்கூட நல்லா க்ளோஸா நின்னு பேசுவேன். 'அவ்வை சண்முகி’ கெட்டப் போட்டுட்டார்னா, கொஞ்சம் தள்ளி நின்னுதான் பேசுவேன்.
ஒருமுறை அப்படித் தள்ளி நின்னு 'அவ்வை சண்முகி’கிட்ட சீன் சொல்லிட்டு இருந்தேன். அப்போ 'சண்முகி’யோட முந்தானை லேசா விலகி இருந்துச்சு. எனக்குச் சங்கடமாகிருச்சு. ஸ்க்ரிப்ட் பேடை குனிஞ்சு பார்த்துப் பேச முடியலை. கொஞ்சம் தள்ளி வந்து, காஸ்ட்யூமரை வரச் சொல்லி, 'முந்தானையைக் கொஞ்சம் சரி பண்ணுங்க’னு சைகையாலயே சொன்னேன். அதைப் பார்த்துட்டு சிரிச்ச கமல் சார், 'படம் சக்சஸ்ங்க. முந்தானை விலகினது உங்களுக்குக் கூச்சமா இருக்குதுனு சொன்னா, அப்ப அந்த கேரக்டர் க்ளிக் ஆகிடுச்சுனுதானே அர்த்தம். சண்முகி சக்சஸ் ஆயிட்டா’னு சொன்னார்.
இப்படி எல்லா சக்சஸ் படங்களுக்கும் பட வெற்றிக்கான சிக்னல்கள் ஷூட்டிங் ஸ்பாட்லயே கிடைச்சிரும்!''
- நிறைந்தது

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.