மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆறாம் திணை - 81

ஆறாம் திணை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறாம் திணை ( ஆறாம் திணை )

மருத்துவர் கு.சிவராமன்

ரக்கப் பேசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம். ''நக்கீரா... நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?'' என கடவுளும், ''டேய் லூஸுப் பையா... நீ இல்லாட்டி நான் செத்துருவேன்... ஐ லவ் யூ!'' எனத் தமிழ் சினிமா காதலியும் 'ஓவர் ஒலி’யின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திப் பழகியுள்ளனர்.

தேர்தல் திருவிழா சமயங்களில் 'எனது அருமை வாக்காளப் பெருமக்களே...’ என்றும், திருமண விசேஷங்களில் 'பட் படார்’ 10,000 வாலா சரவெடி மூலமும், கணேசனைக் கடலில் கரைக்கும்போதும், 'கல்யாண சாவு’ என்று வயதான தாத்தாவை வழியனுப்பும்போதும் அன்றாட வாழ்வில் நாம் போடும் சத்தங்கள் ஏராளம்!

இந்தியாவில் இரைச்சல் மாசுக்களைக் கட்டுப்படுத்த, 'ஆவாஸ் ஃபவுண்டேஷன்’ தொடர்ந்து போராடி வருகிறது. பல்வேறு அறிவியல் தரவுகள், புள்ளி விவரங்களை ஆதாரங்களாக அடுக்கிய பிறகு, மத்திய சூழல் அமைச்சகம் சத்தம் குறித்த பல சட்டங்களை இயற்றியுள்ளது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்தான் வழக்கம்போல் கனத்த கள்ள மௌனம். அதன் விளைவு..? காது கேளாதோரின் எண்ணிக்கை இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்கிறது.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஸ்டைல் பார்வைக்கெல்லாம் கண்ணாடி போடுபவர்களை இந்தச் சமூகம் மகிழ்வாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளவரை ஏற்றுக்கொள்வது இல்லை. தங்கள் மன உணர்வை அவர்கள் மழலை வார்த்தைகளால், செயலால் வெளிப்படுத்தும்போது நகைத்து அவமானப்படுத்துகிறோம் நாம்.

ஆறாம் திணை - 81

செவித்திறன் குறைவுக்குப் பல காரணங்கள் உண்டு. தோடு, தொங்கட்டான், ஒற்றைக் கம்மல் ஆகியவற்றை அணிய உதவும் வெளிக் காதுமடல் பகுதி மட்டும் காது அல்ல, அதையும் தாண்டி நடுக்காது, உள்காதும் உண்டு. நடுக்காதில் உடம்பின் மிகச் சிறிய மூன்று எலும்புகள் உள்ளன. ஒலியைக் கடத்தும் மிக நுண்ணிய குழல் உள்ளது. உள்காது முழுக்க நரம்பு இழைகளால் இருக்கும். இதில் எங்கு நோய்வாய்ப்பட்டாலும் செவித்திறன் குறையும் அல்லது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

சாதாரண நாள்பட்ட சளி, காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் நீடித்த சளி, நடுக்காதில் தங்கும் சளி... என எளிதில் குணப்படுத்தக்கூடிய தொந்தரவை அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுகூட பின்னாளில் செவித்திறனில் பாதிப்பை உண்டாக்கும்.

பஞ்சர் ஆன டயரில் இருந்து கசியும் காற்று போல, காதுக்குள் ரீங்கார ஒலி போல கேட்டுக்கொண்டே இருப்பது மினியர்ஸ் நோயாக, வெர்ட்டிகோவுடன்கூடிய காது நோயாக இருக்கக்கூடும். இவை எல்லாம் இன்றைக்கு முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை.

தவிர, அம்மை முதலான வைரஸ் நோயிலும் உள்காதின் நரம்பிழைகள் பாதிக்கப்படக்கூடும். பிறப்பிலேயே வரும் OTOSCLEROSIS எனும் நோயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிர வேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் செவித்திறன் குறையும். இந்த இரண்டு குறைபாடுகளைக் களைய உபகரண உதவி தேவைப்படும். வயோதிகத்தில் எந்த காரணமும் இன்றி மெள்ள மெள்ள செவித்திறன் குறைவதும் இயல்பு. அது நோய் அல்ல!

பெரும் உபகரணங்களால் பூமியைக் குடைவது, கட்டடங்களை உடைப்பது போன்ற அலுவலில் ஈடுபடுபவர், வீட்டு மொட்டைமாடியை உரசிக்கொண்டு விமானங்கள் இறங்கும் விமான நிலையம் அருகில் வசிக்கும் நகரத்தினர், மன இறுக்கத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என டிஸ்கொதேயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இளைஞர்கள், வேறு வழி இல்லாமல் அங்கு பணிபுரியும் உழைக்கும்வர்க்கம்... என இரைச்சல்களுக்கு இடையில் வாழும் நபர்களுக்கு எல்லாம் மேற்சொன்ன எந்த நோயும் இல்லாமல் செவித்திறன் கட்டாயம் குறையும்.

ஆறாம் திணை - 81

அதிகபட்ச சத்தத்தினால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் 1,013 மைக்ரோமீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவதாலேயே செவித்திறன் குறைவு ஏற்படுகிறது. அந்த அதிக இரைச்சல், செவித்திறன் குறைபாடு மட்டுமல்ல ரத்தக்கொதிப்பு, மன உளைச்சல் பிரச்னைகளையும் உண்டாக்கும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, சமயங்களில் மாரடைப்பையும் உண்டாக்கும்!

பேனா, பென்சில் தொடங்கி துடைப்பக்குச்சி வரை கையில் கிடைத்ததை வைத்து காது குடைந்து கண் சொருகுவது, நம்மில் பலருக்கும் உள்ள பழக்கம். இன்னும் சில சுத்தப்பேர்வழிகள், கழிப்பறையைக் கழுவுவது போல காதை கடுஞ்சிரத்தையுடன் சுத்தம் செய்வர். இவை இரண்டும் தவறு. காதினுள் மெழுகு போன்ற பொருள் உருவாவது நோய் அல்ல; நோய்க்கிருமியைத் தடுக்கத்தான். அது அளவில் அதிகப்பட்டால் மட்டுமே, சுத்தம் செய்வது அவசியம்.

பலர் காதில் சீழ் வந்தால், சனீஸ்வரனுக்கு எண்ணெய் ஊற்றுவது போல எண்ணெய்க் காய்ச்சி காதுக்குள் விட்டு வித்தைகளைச் செய்வர். அது ஆபத்து. சுக்குத் தைலம் முதலான சித்த மருந்துகளை தலைக்குத் தேய்த்துக் குளித்தாலே காதுசீழ் முதலான காது நோய்கள் தீரும். அன்று, காது நோய்களுக்கு என கேட்கும்திறன் கூட்ட மருள், கணவாய் ஓடு, தைவேளை முதலான மூலிகை மருந்துகள் பல, தமிழ் மருத்துவத்தில் பயன்பட்டு வந்தன. எனினும், காதுக்குள் போடும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி போடுதல் கூடாது. தினசரி தலைக்குக் குளிப்பது, வாரம் இரு நாள் எண்ணெய் குளியல் செவித்திறன் பாதுகாக்கும் தடுப்புமுறைகள்.

ஆறாம் திணை - 81

விலங்குகள், இரை தேடுவதற்கும் தன் இணையைத் தேடுவதற்கும் பெரும்பாலும் ஒலியைத்தான் நம்பியிருக்கும். காட்டில், அந்த ஒலியைச் சிதைக்கும் வகையில் நாம் கடவுளைத் துதித்து ஜெபம் பாடிக்கொண்டிருக்கிறோம், ரிலாக்ஸ் பண்ண ரிசார்ட் கட்டி ரோடு போட்டுக்கொண்டிருக்கிறோம். கடலில் பயணிக்கும் கப்பல் தன் தொடர்புக்கு எழுப்பும் சோனார் ஒலி அலைகளால் இறந்து கரை ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களின் எண்ணிக்கை அதிகம். நம் சக பயணிகளின் இருப்பை இரைச்சல்கள் மூலம் கேள்விக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

மௌனம் நாம் துரிதத்தில் இழக்கும் ஓர் அற்புத உணர்வு. சத்தம் இல்லாத ஒரு பொழுதில்தான், தோட்டத்துக் குருவி நம்மைக் குசலம் விசாரிப்பது புரியும்; குழந்தையின் சிரிப்பு சிலிர்க்கவைக்கும்; காதலியின் கண்கள் கவிதை பேசும்; வயதான பாட்டியின் தளர்வு நடையில் மிடுக்கு புலரும். ஏனென்றால், மௌனம் நம் மனம் மீட்டும் ஆனந்த இசை. அதை அனுபவித்துப் பழகுவோம்!

- பரிமாறுவேன்...