மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 22

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற லிங்கன்ஷியர் விமான நிலையத்தில் நுழைந்த அந்த இருவருக்கும் 20 வயதுகள். நார்வே செல்வதற்கான விசா, டிக்கெட் சம்பிரதாயங்களை வைத்திருந்தார்கள். ஆனால், நோக்கம் நார்வே செல்வது அல்ல. கேட் எண்: 12-ல் அவர்கள் உள்ளே நுழைந்தபோது பெண் பாதுகாப்பு அதிகாரி முகமன் சொல்லிவிட்டு ஷூ, பர்ஸ், பெட்டி, பேனா... என சகலத்தையும் ஸ்கேன் ட்ரே-வில் வைக்கச் சொன்னாள். ஏற்கெனவே மூன்று இடங்களில் வடிகட்டித்தான் இந்த இடத்துக்கு அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களையும் மீறி பதற்றச் சுரப்பிகள் முகத்தில் சில வியர்வை முத்துக்களை உற்பத்தி செய்தன.

எந்திரத்தின் வயிற்றுக்குள் நுழைந்து மறுபுறம் வந்து விழுந்த தத்தமது உடைமைகளை மீண்டும் எடுத்துக்கொண்டனர். பெண் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்தினாள். நிமிடத்துக்கு ஒன்று என புரோகிராம் செய்யப்பட்ட புன்னகை.

விமானப் புறப்பாட்டுக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சிறிய காத்திருப்புக்காகப் பயணிகள் அமரவைக்கப்பட்டனர். இளைஞர்கள் இருவரும் சற்றே ஒதுங்கியிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். அவர்களுக்கு எதிரே ஸ்டார் டி.வி-யில் ஏதோ பெயர் தெரியாத நாட்டின், பெயர் தெரியாத தலைவர் புதிய கோளுக்குச் செல்வதற்கு மக்கள் வேகமாக விண்ணப்பிக்க துரிதப்படுத்தியபடி இருந்தார்.

அந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் காதுகளில் பொருத்தியிருந்த ஹெட்போனில் இருந்து ஒயர்களைப் பிடுங்கி, வாக்மேனில் இருந்த பேட்டரியைப் பிரித்து, ஷூக்களில் பதிந்திருந்த சிறு சிறு குச்சிகளைக் கோத்து, கட்டியிருந்த கைகடிகாரத்தோடு இணைத்து... வேகமாக இயங்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால்...

அதற்கு அவசியம் வைக்காமல் அதே நேரத்தில் ஸ்டார் டி.வி-யில் ஒரு ஃப்ளாஷ் நியூஸ்.

ஆபரேஷன் நோவா - 22

'பல ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டு விமானதளங்களில் வெடிகுண்டு மிரட்டல்.’ டி.வி-யில் வார்த்தைகள் அவசரமாக நகர்ந்தன. அதைவிட அவசரமாக லிங்கன்ஷியர் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மாறின. சில நிமிடங்களில் எங்கிருந்து அத்தனை போலீஸார் அங்கே குவிந்தார்கள் என்றே தெரியவில்லை. இளைஞர்கள், தப்பி ஓடுவதா, தகர்ப்பதா எனத் தீர்மானிக்க அவகாசம் இன்றி தடுமாறினர். நிலைமையை உத்தேசித்து உருமாற்றம் செய்த கருவியைத் தடயமற்று பழையபடி ஆக்க முயற்சிக்க, சரசரவென உள்ளே நுழைந்த லிங்கன்ஷியர் போலீஸார் அந்த இளைஞர்களை நெருங்கி, அவர்களின் கையில் இருந்த அத்தனை உபகரணங்களையும் கைப்பற்றி, வலிக்காமல் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

'நோ வயலன்ஸ்... நோ நார்கோடிக்ஸ்... ஆபரேஷன் நோவா’ என அவர்களின் உடையில் வரிகள் பொறித்திருந்தன. ஆனால், பாதுகாப்பு குறைந்த ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளின் ஏர்போர்ட்களில் வெடிவிபத்து நடந்திருப்பதாக உலகச் செய்தி நிறுவனங்கள் அலறின. சின்னதும் பெரிதுமான விமான நிலையங்கள். ஆனால், விபத்து பிரமாண்டமானதாக இருந்தது. எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்ததில் எந்த இயக்கத்தோடு தொடர்புபடுத்துவது என்று குழப்பம். இந்த மதம்தான் என்று இல்லாமல் எல்லா மத நாடுகளிலும் விபத்து. இந்த இனம் என்று இல்லாமல் எல்லா இன நாடுகளிலும் குண்டு வெடிப்பு. யார் மீது பழியைப் போட்டு நிலைமையைச் சமாளிக்கலாம் என அனைத்து நாட்டினரும் ரத்தம் வராத குறையாக தலையைச் சொறிந்தனர்.

'நாங்கள் பொறுப்பேற்கிறோம்’ என்றது 'எதிர் நோவா தீவிரவாத இயக்கம்’. உலகம் முழுக்கக் கிளைகள் உள்ள ஒரே இயக்கமாக இருந்தது அது. நோவாவுக்குச் செல்வதற்கான அனுமதிக் கட்டணமான 6,000 கோடி ரூபாய்க்குக் குறைவாக பணம் வைத்திருப்பவர் எல்லோருமே ஒடுக்கப்பட்ட மக்கள். வறுமைக்கோட்டின் ரசமட்டம் ஒரே நாளில் பலகோடி மடங்குக்கு உயர்ந்தது.

'பணம் வைத்திருப்பவன் மட்டும்தான் மனிதனா?’ என்பதுதான் அவர்களின் எளிமையான கேள்வி. அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு அந்தக் கேள்வி எட்டவே இல்லை. அதற்காகத்தான் இந்த விமான நிலையத் தாக்குதல். மனிதர்களை 581 ஜி கோள்களுக்கு அனுப்பிவைக்கும் நாடு எங்கு இருக்கிறது என்று மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த நாட்டுக்கு ஏதோ ஒரு விமானத்தில்தான் அந்த 6,000 கோடி ரூபாய் மனிதன் பயணித்தாக வேண்டும். ஆக, எந்த நாட்டுக்கும் விமானப் போக்குவரத்து இல்லாமல் செய்தால் போதும். உலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கும். உலகில் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் படித்த அத்தனை இளைஞர்களுமே அதற்காகப் புதிதாக யோசித்தார்கள். எத்தனை எளிமையாக வெடிவிபத்துகள் ஏற்படுத்தலாம் என்பதில்தான் அத்தனை மாணவர்களும் தூங்காமல் யோசித்தனர். ஆன்லைன்... ஃபேஸ்புக்... செல்போன் எல்லாவற்றிலும் அவர்கள் தொடர்புகொண்டார்கள்.

ஆபரேஷன் நோவா - 22

'உலகத்தில் உள்ள எல்லா விமானநிலையங்களும் விமானங்களும் இன்னும் சில தினங்களில் க்ளோஸ். பணக்காரர்கள் எப்படி நாட்டைக் கடந்து புதிய கோளுக்கான விமான நிலையங்களை அடைக்கிறார்கள் என்று பார்ப்போம்!’ - என்றது ஜி-7 நாடுகளுக்கு வந்த ஃபேக்ஸ் செய்திகள்.

''இந்தக் கோளில் தங்கம், கனிமங்கள் வரிசைகட்டி விளையாடுகின்றன. அத்தனையும் டாலர்கள்...''-பாந்தமாகப் போத்தியிருந்த கையால் மைக்கேலின் மெலிந்த தோள்களை மெள்ள அழுத்தினார் கேப்ரியல்.

மைக்கேலுக்கு நிஜமாக எதுவுமே புரியவில்லை. ''நான் மனிதர்கள் பற்றிப் பேசுகிறேன். நீ டாலர்கள் பற்றிப் பேசுகிறாய்.''

''இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது மைக்கேல்.''

''இங்குமா 'டாலர் வியாதி?’ ''

''அது இல்லை என்றால், வாழ்க்கை சுவைக்காது. ஆளாளுக்குச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவார்கள். சாப்பாடும் தூக்கமும் வெறுத்துப்போய் அவசரமாகச் செத்துப்போகக் காரணம் தேடுவார்கள். இன்பத்தூண்டல் கொடுத்து இனப்பெருக்கம் செய்ய நான் முடிவெடுத்ததற்குக் காரணம், எல்லோருக்கும் சீக்கிரம் குடும்பங்கள் உண்டாக வேண்டும். அனைவரும் கூடுகட்டி குஞ்சு பொறிக்க ஆரம்பித்தால்தான், வாழ்க்கை சுவைக்கும்; பணத்தைத் தேடுவார்கள்; அதற்காக உழைப்பார்கள்; தில்லுமுல்லு செய்வார்கள்; பொய் பேசுவார்கள்; அப்போதுதான் அரசாங்கம் நடக்கும்; அதாவது விஞ்ஞான அரசு... நம் அரசு!''

''என்னைச் சேர்க்காதே. உன் அரசு என்று சொல்.''

''பரவாயில்லை... என் அரசு. இரண்டு கோள்களையும் நானே ஆண்டு தொலைக்கிறேன். ஆனால், நீ எனக்குத் துணை இருக்க வேண்டும்.''

''முடியாது என்றால்..?''

''நரகத்தில் போடுவேன். எண்ணெய்க் கொப்பறை, ஆசன வாயில் ஈட்டி செருகுவது, நச்சுப் பாம்புக் கொத்தல்களுக்கு இடையே வாசம்... சாகவே மாட்டாய். ஆனால், சித்ரவதை மட்டும் நிற்காது. மைக்கேல், உனக்கு அந்தக் கதி வேண்டாம். உன் மகள் இப்போது என் வசம்தான் இருக்கிறாள். அவளைப் போலவே உன்னையும் பார்த்துக்கொள்கிறேன்.''

மைக்கேல் முகத்தில் அப்போது தோன்றிய உணர்ச்சியை வகைப்படுத்துவது சிரமம். அதில் தோன்றியது மகிழ்ச்சியா, மிரட்சியா?

''எ... ன் ம... க.. ளா?'' எழுத்துக் கூட்டினார்.

''ஆமாம்.. அம்மா என்கிற ரோஸி.''

மைக்கேல் தீர்க்கமாகப் பார்த்தார். ''என் மகள் எங்கே இருக்கிறாள் காட்டு. நீ சொல்வதைக் கேட்கிறேன்!''

அவர் சொன்னதைப் பெருந்தன்மையுடன் ஏற்றதை மெல்லிய அணைப்பினால் வெளிப்படுத்தினார் கேப்ரியல்.

அப்படி அணைத்தவாறே தன் கையில் மாட்டியிருந்த எல்.டபிள்யூ. பட்டனை அழுத்தினார்.

ஆபரேஷன் நோவா - 22

விநாடி வித்தியாசத்தில் இருவரும் வேறு இடத்தில் இருந்தனர். அது மத்தியக் கேந்திரம். மைக்கேலை உள்ளே அழைத்துச் சென்றார் கேப்ரியல். கையில் கட்டியிருந்த வாட்ச், நேரம் காட்டுவதுடன் பல்வேறு வேலைகளையும் செய்தது.

சீரான கண்ணாடித் தடுப்புகளைக் கடந்தபோது இரு பக்கங்களிலும் விஞ்ஞானத்தின் ஆட்சியை உணர முடிந்தது. கேப்ரியல் நடக்க நடக்க, பல தடுப்புகள் வழிவிட்டன.

ஆங்காங்கே திரைகளில் பல பிரிவுகளில் மனிதர்கள் தீவிர ஆராய்ச்சியில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. கார்ட்டர், ழீன், ஹென்ரிச், அகிலன், ஆலீஸ்... என தெரிந்த முகங்கள் கண்ணில் பட்டன.

சில பெண் ரோபோக்கள் வணக்கம் வைத்தன. மெத்தென்ற சில தப்படிகள் மட்டும் கேட்டன.

ஓர் இடத்தில் நின்றார். அங்கே ஒரு குடுவையில், கூர்ந்து பார்த்தபோது திரவத்தில் மிதக்கும் மூளை. இன்னும் கூர்ந்தபோது நிறைய மூளைகள் சங்கிலித்தொடர் போல இணைக்கப்பட்டிருந்தன. நியூரான்களோடு இணைக்கப்பட்ட செப்பு சர்க்யூட்கள்... சிப்புகள்.

''இதுதான் நம் இரண்டு கோள்களையும் வழி நடத்தப்போகும் சூப்பர் கம்ப்யூட்டர்'' என மிதக்கும் மூளையைக் காட்டினார் கேப்ரியல்.

திகைத்துப்போய் பார்த்த மைக்கேலிடம், தனது திட்டத்தை வேகமாக விளக்க ஆரம்பித்தார்.

''பூமி என்ற கோளுக்கு வயதாகிவிட்டது. 581 ஜி இள ரத்தம். தனிமங்கள், இயற்கை வளங்களுக்குப் பஞ்சம் இல்லை. அங்கே நோய்... இங்கே ஆரோக்கியம். அங்கே பெரும்பாலும் சர்க்கரை, இதய நோய், கேன்சர் போன்ற வீணாய்ப்போன நோய்களுக்கு மக்கள் கோடி கோடியாகப் பணம் இறைக்கத் தயாராக இருக்கிறார்கள். அதற்குத் தேவை சில ஹ்யூமன் ஆர்கன்ஸ். லாங்கர்ஹான் தீவுகள், இதயங்கள், கணையம், கிட்னி... இந்தச் சாதாரண விஷயங்களுக்காக மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பார்கள்.

இங்கே உருவாக்கப்படும் மனிதக் கருக்களில் இருந்து வேகமாக உடல் உறுப்புகளை உற்பத்தி செய்ய முடியும். அந்த நோய்களை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் போதும். பணம் கொட்டும். மனித உறுப்புகளுக்கு நாம் வைப்பதுதான் விலை. போதாததற்கு கனிமவளம். தங்கம், தோரியம் எல்லாமே இருக்கிறது... போதாதா? இறவாத் தன்மையுடன் இரண்டு உலகையும் ஆளலாம்.''-இதைத்தான் அவர் ஒரு மினி சொற்பொழிவு போலச் சொன்னார்.

''நீ சொர்க்கத்துக்குப் போக மாட்டாய்'' எனச் சபித்தார் மைக்கேல்.

ஆபரேஷன் நோவா - 22

''சொர்க்கம், நரகம் இரண்டையுமே ஆள்கிறவன் நான்தான். அதில் நீ எதை வேண்டுகிறாய் என்பதைச் சொல்.''

''முதலில் என் மகளைக் காட்டு.''

சிரித்தார் கேப்ரியல்.

''நீ உன் மகள் அருகில்தான் நிற்கிறாய். இவள்தான் உன் மகள்'' என்றார் குடுவையில் மிதக்கும் மூளையைக் காட்டி.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் மைக்கேல். குடுவைக்குள் இருந்த திரவத்தில் மூளை, சலனம் இல்லாமல் மிதந்தது.

''ரோஸி... யார் வந்திருக்கிறார் பார்'' என்றார் கேப்ரியல்.

''என் அப்பா'' என்றது சிந்தசைஸ்டு குரல்!

- ஆபரேஷன் ஆன் தி வே...