மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவிழி - 57

அறிவிழி
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிழி ( Anton Prakash )

அண்டன் பிரகாஷ்

'மென்பொருள் சார்ந்த சேவைக்கான பணியாளர்களை மட்டுமே இந்தியா கொடுக்க முடியும்; புதுமையாக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை’ என்ற பொதுவான அவநம்பிக்கை, சமீப நாட்களில் தகர்க்கப்படுவதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல உதாரணம், கொச்சியில் இருக்கும் நிறுவனம் தயாரித்திருக்கும் தொழில்நுட்ப அணிகலன்.

'Fin’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சாதனம் பெரிய சைஸ் மோதிரம் போல இருக்கிறது. கை மற்றும் விரல்களின் இயக்கத்தைக்கொண்டு உங்களைச் சுற்றி இருக்கும் பல்வேறு மொபைல் சாதனங்களையோ, நுகர்வோர் மின்னணு சாதனங்களையோ இயக்க முடியும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. கண் பார்வை குறைவானவர்கள், அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எளிதாகப் பயன்படுத்த உதவுவதுதான் 'Fin’ன் மிகப் பெரிய ப்ளஸ்.

'Fin’ சாதன ஐடியாவைச் சந்தைப்படுத்த crowdfunding முறையில் முதலீட்டைத் திரட்டியிருப்பதும் இந்தியாவில் இருக்கும் புதுமையாக்கல் ஆர்வம்கொண்ட தொழில் முனைபவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். இதுபோன்ற புதுமையாக்கல் முயற்சிகள், இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைக்கு அதிகம் வரும் என எதிர்பார்க்கிறேன். 'Fin’ சாதனத்தைத் தயாரித்திருக்கும் நிறுவனம், அதைப் பற்றிய பல்வேறு வீடியோக்களை அவர்களது யூ-டியூப் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன் உரலி www.youtube.com/user/RHLvision

அறிவிழி - 57

தெல்லாம் இருக்கட்டும்... கூகுளின் மிக முக்கியமான தயாரிப்பான கூகுள் கிளாஸ், இந்த வருடத்தின் இறுதியில் சந்தைக்கு வந்துவிடும் என ஊகிக்கப்படுகிறது. இப்போதைக்கு கூகுள் கிளாஸ் பரிசோதனை முயற்சி செய்பவர்களுக்கும், கிளாஸ் தொழில்நுட்பத்தில் மென்பொருள் தயாரிக்க விரும்புபவர்களுக்கும் 'Explorers Program’ என்ற திட்டத்தின் கீழ் விற்கப்படுகிறது. சென்ற மாதத்தில் விண்ணப்பித்து கூகுள் கிளாஸ் ஒன்றைப் பெற்றுக்கொண்டேன். தூங்கும் நேரம் தவிர்த்து ஒரு மாதம் தொடர்ந்து அதை அணிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

'உங்களது சாதனம் தயாராகிவிட்டது; எங்களது அலுவலகத்துக்கு வந்து வாங்கிக்கொண்டால், கிளாஸ் எப்படி உங்களுக்குப் பொருந்தும் என்பதை நிபுணர் ஒருவருடன் விவாதிக்கலாம்’ என்ற கூகுளின் மின்னஞ்சலைப் பெற்றுக்கொண்ட அடுத்த நாள், சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் கூகுள் அலுவலகத்துகுச் சென்றேன். குறைந்த அளவிலானவர்களுக்கு மட்டுமே கிளாஸ் சாதனத்தை விற்கும் கூகுள், இந்தத் தொழில்நுட்பத்தை ராணுவ பாணியில் பாதுகாக்கிறது.

பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணத்தைச் சரிபார்த்த பின்னர், கிளாஸ் சாதனத்தை முதன்முதலாக எப்படிப் பயன்படுத்துவது என்பது விளக்கப்பட்டது. ஸ்மார்ட் அலைபேசி, குறிப்பாக, ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் ஸ்மார்ட் அலைபேசியைப் பயன்படுத்தினால், கிளாஸை setup செய்வது எளிதானதே. இணைய வசதிகொண்ட இடத்தில் இருக்கும்போது, அந்த இணைப்பில் (Wifi) இணைந்துகொண்டும், அது இல்லாத இடங்களில் உங்களிடம் இருக்கும் அலைபேசியின் புளூடூத் வசதியில் இணைந்துகொண்டும் செயல்படுகிறது கூகுள் கிளாஸ்.

முதல் ஓரிரண்டு நாட்கள் கிளாஸ் சாதனத்தை அணிந்துகொண்டிருப்பது வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. குறுஞ்செய்தி, இமெயில், அலைபேசி அழைப்புகள்... போன்றவை உங்களது அலைபேசிக்கு வரும்போது அதை எளிமையாக திரையில் காட்டுவதன் மூலம் உங்களது தனிப்பட்ட உதவியாளன் போல பணியாற்றுகிறது. வந்திருக்கும் இமெயிலுக்குப் பதில் அனுப்ப உங்களது குரலைப் பயன்படுத்த வேண்டும். தொடக்க நாட்களில், எனது இந்தியச் சாயல் கலந்த ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள சற்றே திணறிய கிளாஸ், சில நாட்களுக்குப் பின்னர் பழகிவிட்டது. கிளாஸ் சாதனத்தின் மிக முக்கிய வசதி, உங்களது கண் விழித்திரையைப் புரிந்துகொள்ள முடிகிற திறன். கிளாஸ் வாங்கியதும், நீங்கள் செய்யவேண்டியது உங்களது வலது கண்ணின் சிமிட்டலைப் பதிவு செய்துவைத்துக்கொள்வதுதான். இதைச் செய்த பின்னர், வலது கண்ணைச் சிமிட்டுவதன் மூலம் புகைப்படம் எடுக்க முடியும். தலையை மேலிருந்து கீழாக அசைப்பதன் மூலம் கிளாஸ் சாதனத்தை ஆன் செய்யவோ, ஆஃப் செய்யவோ முடிகிறது. வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது கைகளைப் பயன்படுத்தாமல், புகைப்படம் எடுத்து அதை உங்களது சத்த சிமிக்ஞை மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பவோ, ஃபேஸ்புக்/ட்விட்டர்/கூகுள் போன்றவற்றில் எளிதாகப் பகிர்ந்துகொள்ளவோ முடிகிறது.

கூகுள் கிளாஸ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கிறது என்றாலும், அது சந்தையில் விற்கப்படவில்லை என்பதால், எதிரில் இருப்பவர்களின் புருவங்கள் உயர்வதைப் பார்க்கிறேன். சிலர் நேரடியாக வந்து இதன் பயன்பாட்டு அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்.

நான் பயன்படுத்தியதில் இருந்து, சந்தையில் மாபெரும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் ஒரு குறையும் கூகுள் கிளாஸில் இருக்கிறது. அது, பேட்டரி வாழ்க்கை. முழுக்க சார்ஜ் செய்தாலுமே, அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே கிளாஸைப் பயன்படுத்த முடிகிறது. அதுவும் வீடியோ, வழிகாட்டல் போன்ற வசதிகளைப் பயன்படுத்தினால், இன்னும் குறைவான நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது!

- விழிப்போம்...