மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 23

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

இனி அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன்கள் தொடங்க இருப்பதால், இதுவரையிலான நிகழ்வுகள் ஒரு 'விருட் ஃப்ளாஷ்பேக்’கில்...

பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சம் மக்கள், 581 ஜி என்ற கோளுக்குக் கடத்தப் படுகிறார்கள். 'டோபா எரிமலையால் பூமிக்கு அழிவு ஏற்படப்போகிறது. மனித இனத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்பதற்காக விஞ்ஞானிகள் எடுத்த நடவடிக்கை அது.

புதிய கோளை ஆள்வது, 'அம்மா’ எனப்படும் ரோஸி. விஞ்ஞானி மைக்கேலின் மகள். ஆனால், அவள் தன் தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறாள். இதே நேரத்தில் வேற்றுக்கிரக ஜீவராசியான டெர்பிக்களால் ஆபத்து ஏற்படுகிறது. அதை ஒருவாறு சமாளித்துவிட்டுப் பார்த்தால், பூமியில் காணாமல்போனவர்களைத் தேடும் உறவினர்களால் சச்சரவு ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் உலக நாட்டின் தலைவர்கள் எல்லோருமே மக்களைச் சமாளிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

இந்த நேரத்தில், விஞ்ஞானி கேப்ரியல் பூமியையும் புதிய கோளையும் தானே ஆள வேண்டும் என்று நினைக்கிறார். புதிய கோளுக்கு அழைத்துச் செல்ல பூமியில் இருப்பவர்களிடம் 6,000 கோடி ரூபாய் கட்டணம் கேட்கிறார். இதனால் பூமியில் கலவரம் வெடிக்கிறது.

அகிலன், வினோதினி, கேத்ரின், ஆலீஸ் போன்றோர், புதிய கோளில் இருந்து பூமிக்குத் தப்பிச் செல்வதற்காக ஆரம்பத்தில் இருந்தே போராடுகிறார்கள்; ரோஸியிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் இருக்கிறார்கள். ரோஸியிடம் அவரது தந்தை மைக்கேலை அழைத்துச் செல்கிறார் கேப்ரியல். அவர் காட்டிய இடத்தில் ரோஸி இல்லை. அவளுடைய மூளை மட்டும் ஒரு குடுவையில் மிதந்துகொண்டிருந்தது.

ஆபரேஷன் நோவா - 23

இனி...

ன்றரைக் கிலோ உருண்டையைக் காட்டி, 'இதுதான் ரோஸி’ என்று சொல்வதற்கு கேப்ரியலுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்ததோ? அதற்கு நிகரான எதிர்வினையாக மைக்கேல் அதிர்ச்சியில் உறைந்தார். முதலில் ஏதோ அறிவியல் சோதனைக்காகப் பாடம் செய்துவைக்கப்பட்ட கணையமோ, கல்லீரலோ என்றுதான் மைக்கேல் நினைத்தார். பிறகுதான் அது ஒரு மனித மூளை என்பது புரிந்தது. 'என் அப்பா’ என்ற குரல் எங்கிருந்து வந்தது என்று அவரால் ஊகிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் அவசரமாக முடிச்சுப் போட்டு... ஆவேசப்படுவதா, அழுவதா என்று தடுமாறி ஸ்தம்பித்திருந்தார்.

கேப்ரியல், ஒருவிதப் பெருமிதத்தோடு ''எப்படி?'' என்றார்.

இந்தச் சுயநலக்கார மன வியாதிக்காரனிடம் இருந்து தன் மகளை எப்படி மீட்பது என்பதை மைக்கேலால் உடனடியாக ஊகிக்க முடியவில்லை. ''நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்... என் மகளைத் திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்.

''இதுதான் உன் மகள். நிம்மதியாக இருக்கிறாள். உடலைச் சுமக்கும் தொல்லை இல்லை. உணவு, குளிர், நோய், நமைச்சல், முதுமை... என எந்தத் தொல்லையும் இல்லை. அப்படித்தானே ரோஸி?''

''ஆமாம். ஏகபோக மகிழ்ச்சியாக இருக்கிறது. முடி கொட்டாது; சளி பிடிக்காது; முதுகு பிடிக்காது; மூட்டு வலிக்காது. நிறையத் தகவல்களை நொடியில் ஜீரணிக்கிறேன். ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களையும் மனப்பாடம் செய்து முடிப்பதற்கு, 42 நிமிடங்களே போதுமானது. 'தாஸ் கேப்பிட்டல்’ படித்து முடிக்க 57லு நிமிடங்கள்; 'சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்’- டுக்கு 12 நிமிடங்கள். உலகத்தில் இன்று இருக்கும் அத்தனை நூல்களையும் ஆறு மாதங்களில் படித்து முடித்துவிடலாம். நிமிடத்துக்கு 100 பக்கங்களைத் தாண்டுகிறேன்.''

''போதும் ரோஸி. என்ன சொல்கிறாய் மைக்கேல்?''

என்ன சொல்வது? மைக்கேலுக்கு இன்னும் தனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

ஆபரேஷன் நோவா - 23

''உன் மகள் ரத்தமும் சதையுமாக இருந்து கல்யாணம் முடித்து, பிள்ளை பெற்று சீக்கு வந்து சாவதுதான் அவளுக்கு நீ செய்யும் கடமை என்று நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை. 30 வருடங்கள் வேலை பார்த்து ரிட்டையர்டு ஆவதுதான் உன் மகளின் சந்தோஷம் என்று தீர்மானிப்பது முட்டாள்தனம். அவள் இப்போது இருக்கும் நிலைதான் உலகத்திலேயே உன்னதமான நிலை. அதை வேறு யாருக்கும் வழங்காமல் உன் மகளுக்கு வழங்கியிருக்கிறேன். உண்மையில், இந்த இரண்டு உலகங்களையும் அவள்தான் ஆள்கிறாள். அவள் மூலவர், நான் உற்சவர்... இந்தியக் கோயில்களில் கடவுள்களை இப்படித்தான் சொல்வார்கள்!''

ஆத்திரத்தில் வெடித்தார் மைக்கேல். ''அடேய் பைத்தியக்கார முட்டாளே..! என் மகளைக் கொலை செய்துவிட்டு என்னடா பிதற்றுகிறாய்?''

''முதலில், பூமியின் முட்டாள்தனத்தில் இருந்து நீ வெளியே வா மைக்கேல். இல்லை என்றால், உன்னை ஒரு மினி சலவை செய்ய வேண்டிவரும்.''

ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவத்தால் மைக்கேல் மிரட்சியுடன் பார்த்தார்.

''பூமியில் குரங்கில் இருந்து மனிதன் உதித்தபோது ஏற்பட்ட சென்டிமென்ட்டுகளை எல்லாம் தூக்கி எறி மைக்கேல். பாசம், அன்பு, நேசம் போன்ற வார்த்தைகளை எல்லாம் கேட்கவே வெறுப்பாக இல்லையா?''

மைக்கேலால், 'இல்லை’ என்று மனதில் மட்டும்தான் நினைக்க முடிந்தது. இருப்பினும், ''பாசம்...'' - வெளியே கேட்காமல் உச்சரித்துப் பார்த்தார்.

டெக்ஸாஸின் வசந்த காலம். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ரோஸிக்கு, அவர் சைக்கிள் பழகச் சொல்லிக்கொடுத்தது நினைவு வந்தது.

''அப்பா... பத்திரமாகப் பிடிச்சிக்கோங்க. விழுந்துடப்போறேன்.''

''ஒண்ணும் ஆகாது... பயப்படாம ஓட்டு.''

''விழுந்தா ரத்தம் வரும்பா!''

''கஷ்டப்பட்டாத்தான் எதையுமே கத்துக்க முடியும். இடுப்பை வளைக்காதே... நேராப் பாரு..!''

''ரத்தத்தைப் பார்த்தால் நான் பயந்துடுவேன்.''

''அப்பாதான் கூட இருக்கேனே, அப்புறம் என்ன பயம்?''

அவள் சைக்கிளை அச்சத்துடனே மிதிக்க ஆரம்பித்தாள். மைக்கேல், சைக்கிளைப் பிடித்தபடி பின்னாலேயே ஓடினார்.

''அப்பா... பேலன்ஸ் இல்லாம எனக்கு கை, கால் எல்லாம் நடுங்குது. எங்கேயாவது விழுந்து முகத்துல அடிபட்டு, அதைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணப்போறாங்க!''

''பயத்தையும் கற்பனையையும் ஓரமா வெச்சிட்டு, தைரியமா ஓட்டு.''

அப்பா உடன் இருக்கும் நம்பிக்கையில், முதுகை நெளியாமல் பேலன்ஸ் தப்பாமல் மிதித்தாள். பின்னால் பிடித்திருந்த பிடியை மைக்கேல் லேசாக எடுத்தார். அவள் நன்றாகவே ஓட்டினாள்.

''வெரிகுட்'' என்று கைதட்டினார் மைக்கேல்.

அப்போதுதான், அப்பா சைக்கிளைப் பிடித்துக்கொண்டு இருக்கவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. சட்டெனத் திரும்பிப் பார்த்ததில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு, ''ஐயோ அப்பா...''

ஆபரேஷன் நோவா - 23

''அப்பா'' என்றது ரோஸி. 'என்றாள்’ என்று எப்படிச் சொல்வது? நினைவில் இருந்து திரும்பி, மிதக்கும் மூளையைப் பார்த்தார்.

''நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.''

''ரோஸி... நீ என்னைப் பார்க்கிறாயா?''

''நன்றாகப் பார்க்கிறேன். தாடியில் நரை கூடிவிட்டது. சென்ற முறை பார்த்ததைவிட 26 நரைகள் அதிகரித்துவிட்டன. ஏழு கிலோ இளைத்துவிட்டீர்கள்.''

''ரோஸீ...'' குடுவை மீது தலையைச் சாய்த்து அழ ஆரம்பித்தார்.

''போதும் வா மைக்கேல்...'' - கேப்ரியல் அவரை அவசரமாக அங்கிருந்து நகர்த்திக்கொண்டு போனார்.

ந்தப் புல்வெளியில் கேத்ரின், ஆலீஸ், வினோதினி, அகிலன், ஹென்ரிச், அகி, லூசூன், ழீன் ஆகியோர் இருந்தனர். அது வார விடுமுறை நாள். மற்ற ஆறு நாட்களுக்கு எல்லோருக்கும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன.

காலையில் பணிக்குக் கிளப்பப்பட்டனர். மாலையில் வீடு திருப்பப்பட்டனர். இன்று எந்த இடத்தில் வேலை என்பது அழைத்துச் சென்று விடப்பட்டதும்தான் தெரிந்தது. ஹைட்ரோ காப்டர்களில் கண் இமைக்கும் நேரத்தில் ஆயிரம் கிலோமீட்டர் தூரங்களைக் கடந்து சென்று இறக்கிவிட்டனர். மூன்று வேளை ஊட்ட உணவுகள் வழங்கப்பட்டன. மாலையில் ஒரே ஒரு மது வகைதான். ஜி பானம். குடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இரவில் இன்பத் தூண்டல். இந்த மாற்றங்கள் எல்லாம் நல்லதுக்கா, கெட்டதுக்கா என யோசிக்க அவகாசம் இல்லை.

''மாற்றங்களை எல்லாம் கவனித்து வருகிறீர்களா?'' சுற்றியிருந்தவர்களுக்கு நடுவே நடைபோட்டபடி ழீன் கேட்டாள். அவள் முகத்தில் ஆழ்ந்த யோசனை அப்பியிருந்தது.

''பலருக்கும் இந்த மாற்றங்கள் பிடித்திருக்கின்றன'' என்றாள் கேத்ரின்.

''பலருக்கும்  பிடிக்கும்படியாக மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்'' என்று ழீன் திருத்தினாள்.

ழீன், தன் சந்தேகங்களை மனதுக்குள் பட்டியலிட்டாள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது போல் இருந்தது. எல்லோரின் உழைப்பையும் அவர்களால் செலவிடப்பட்ட உற்பத்திகள் மூலம் அளக்கிறார்கள். அவரவர் உழைப்பை அவரவருக்கான காந்த அட்டையில் புள்ளிகளாகக் கணக்கு வைக்கிறார்கள். ஒருவகையில் இதுதான் பணம். உணவுக்கு, ஜி பானத்துக்கு... என்று அந்தப் புள்ளிகளில் இருந்து கழிக்கிறார்கள். உழைப்பில் இருந்து கழிப்பு. நமக்கே தெரியாமல் சம்பாதிக்கிறோம்; செலவழிக்கிறோம். பணம் என்ற ஒன்று ஏதோ ஒரு ரூபத்தில் நுழைக்கப்படுகிறது.

அதனால் என்ன என்பதுதான் கேத்ரினின் வாதம். அவளுடைய காந்த அட்டையில் 4,032 புள்ளிகள் இருந்தன. ஹென்ரிச்சின் அட்டையில் 345 புள்ளிகள்தான் இருந்தன. எதற்காக இந்த ஏற்றத்தாழ்வு?

ஆபரேஷன் நோவா - 23

''பணம் என்று வந்துவிட்டால் ஊழல் வரும்; லஞ்சம் வரும்; லாபம் வரும். குடிநீரில் ரசாயனக் கழிவுகள் கலக்கும்; மதக் கலவரம் வெடிக்கும்...''

''ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்க வேண்டும்? நம்முடைய ஆசை எல்லாம் மீண்டும் பூமிக்குச் செல்ல வேண்டும் என்பதுதானே? இதுவே பூமி போல மாறுவதில் என்ன தவறு?'' என்றாள் அகி.

எல்லா இளசுகளையும் ஜோடி சேர அனுமதித்ததில், பலரும் அப்படியே அம்மா கட்சிக்குத் தாவிவிட்டது தெரிந்தது. இன்பத் தூண்டல் எல்லோரையும் மாற்றிவிட்டது.

அகிலனும் வினோதினியும், ழீன் சொல்வதில் இருக்கும் நியாயத்தை ஆதரித்தனர். இன்னும்கூட புதிய கோளில் என்ன நடக்கிறது என்பது முழுதாகத் தெரியாத நிலையில் யார் பக்கமும் சாய்ந்துவிடுவதில் அர்த்தம் இல்லை என்றுதான் அவர்களுக்குத் தோன்றியது. 'அழைத்து வந்தது விஞ்ஞானிகளா... வியாபாரிகளா?’ என்ற சந்தேகம் அகிலனுக்குள் ஆரம்பத்திலிருந்தே வளர்ந்தது. வினோதினி, 'இந்நேரம் பூமியில் எத்தனை பேர் காணாமல்போனார்களோ... எத்தனை கலவரங்கள் வெடித் தனவோ’ என யோசித்துப் பார்த்தாள்.

''பூமி போல் மாற வேண்டாம் என்ற முடிவில் இருந்த அம்மா, திடீரென இப்படி தன் கொள்கையை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம் என்பதுதான் சந்தேகங்களைக் கிளப்புகின்றன'' என்றாள் ழீன்.

''கோளின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் குடியிருப்புகள் வேகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. எல்லாம் பாலிவினைல் குளோரைடு கட்டடங்கள். பல லட்சம் பேருக்கான ஏற்பாடுகள். சில நாட்களாக எனக்கு அங்குதான் வேலை'' என்றான் ஹென்ரிச்.

அம்மா, ஏதோ முடிவோடுதான் இருக்கிறார்.

பல ஆயிரம் ஹெக்டேரில் விவசாய வேலைகள் துரிதப்பட்டு வருவதை அகிலனும் சொன்னான். ரகசியமாகப் பெரிய மாற்றத்துக்கு 581 ஜி தயாராகி வருவதை உணர முடிந்தது.

கேப்ரியல் வந்ததும் நமக்கெல்லாம் விடிவு காலம் பிறந்துவிடும் என்று மைக்கேல் சொல்லியிருந்தார். இப்போது மைக்கேல் அவருடன்தான் இருக்கிறார் என்பதால், அவர் வந்து நிலவரம் சொல்லும் வரை பொறுமையாக இருப்போம் என்று முடிவெடுத்தனர்.

அப்போது, அவர்களுக்கு 500 மீட்டர் தொலைவில் ஒரு விண்கலம் உயிர்பெற்று, உருப்பெற்று நின்றது.

ழீன் உற்றுப் பார்த்துவிட்டு, ''இது... இது... எல்.டபிள்யூ.சேம்பர் மூலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மனிதர்கள் வந்திருக்கிறார்கள்'' என்றாள். எல்லோரும் ஆர்வமாக எழுந்தனர்.

- ஆபரேஷன் ஆன் தி வே...