மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 12

புடவைக்கு ஏற்ற போட்டோ பேட்ஜ்! வே.கிருஷ்ணவேணி, படங்கள் : எம்.உசேன்

''என்னை, எல்.கே.ஜி-யில சேர்த்தப்போ, நான் வரைந்த மீன் படத்தைப் பார்த்ததுமே, அந்த ஸ்கூல்ல ஸீட் கொடுத்துட்டாங்களாம். இன்னிவரைக்கும் அம்மா அதை சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவாங்க. அப்போ ஆரம்பிச்ச ஆர்ட் மீதான ஆர்வம், இப்போ வரைக்கும் தொடருது!'' என்று சிரிக்கிறார், சென்னை, மயிலாப்பூர், ஹர்ஷினிஸ்ரீ.

''அப்பா... அசோகன், தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறார். அம்மா... உமா, வீட்டுல டியூஷன் எடுக்கிறாங்க. தங்கை வர்ஷினி சி.ஏ. படிச்சுருக்காங்க. நான் பி.காம். முடிச்ச கையோட இப்போ சி.எஸ். (கம்பெனி செக்ரட்டரிஷிப்) பண்ணிட்டு இருக்கேன். இன்னொரு பக்கம், நாலு வருஷமா கிராஃப்ட் தொழிலால் நிலையான மாத வருமானத்தையும் ஏற்படுத்திக்கிட்டேன்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 12

கிராஃப்ட் கிளாஸ்னு எதுவும் தனியா போனதில்ல. சின்ன வயசுல ஓவியப் போட்டிகளில் பரிசு வாங்கின வேகம், வளர்ந்ததுக்கு அப்புறம் நெட்ல, பத்திரிகைகள்லனு கிராஃப்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தேடித்தேடிக் கத்துக்க வெச்சுது. என் தோழிகளோட பிறந்த நாட்களுக்கு அவங்களுக்குப் பிடிக்கற மாதிரி பிரத்யேகமா ஏதாவது கிஃப்ட் செய்து கொடுப்பேன். அப்போதான் தோழி ஒருத்தி, 'இதையெல்லாம் நீ வெளியவும் விற்பனை செஞ்சு பாரேன்... சூப்பர் லாபம் கிடைக்கும்!’னு யோசனை சொன்னா. அவ சொன்னது போலவே அந்த ஐடியா வொர்க் அவுட் ஆச்சு. இப்போ நாலு வருஷமா கீ-செயின், புடவை பேட்ஜ், கர்சீஃப் ஃபேப்ரிக் பெயின்ட்டிங்னு நிறைய கைவேலைப்பாடுகள் செய்துட்டு இருக்கேன்'' என்ற ஹர்ஷினிஸ்ரீ,

''இப்போ, உங்களுக்கு புடவை பேட்ஜ் பண்றது பத்தி கத்துத் தரப்போறேன். புடவையே அழகுதான். அதிலும் இந்த பேட்ஜ் பயன்படுத்தும்போது, அது இன்னும் கவனம் ஈர்க்கும். நம்ம புடவைக்கு மேட்ச் ஆகும் நிறங்கள்ல, அதிலுள்ள டிசைனுக்குப் பொருந்துற வடிவங்கள்ல பேட்ஜ் பயன்படுத்தலாம். இங்கே நான் செய்யப்போறது, போட்டோ பேட்ஜ். அதாவது, உங்க போட்டோ அல்லது கணவர், மகன், மகள்னு விருப்பமானவங்க போட்டோவை வெச்சே பேட்ஜ் செய்து பயன்படுத்தலாம். பிரத்யேகமா பண்றதால, ஏதாவது நிகழ்ச்சிக்கு நீங்க இதை அணிஞ்சு போறப்ப... 'அட வித்தியாசமா இருக்கே!’னு எல்லோரும் உங்கள ஆச்சர்யமா திரும்பிப் பார்ப்பாங்க. என்ன ரெடியா..?'' என்றபடியே ஆரம்பித்தார் 'கிராஃப்ட் கிளாஸ்'...

தேவையான பொருட்கள்:

ஷில்பகர் க்ளே (shilpakar clay  ஒரு பாக்கெட்டுக்குள் இரண்டு இருக்கும். இரண்டையும் பயன்படுத்தவேண்டும்), பாட்டில் மூடி பெரியது - 1, சிறியது - 1, விருப்பமான போட்டோ - தேவையான வடிவத்தில், ஃபேப்ரிக் க்ளூ - 1, ஃபேப்ரிக் பெயின்ட் - தேவையான நிறங்களில், வொயிட் ஸ்டோன் - தேவையான அளவு, பிரஷ் - 1, புடவைக்கான பெரிய ஊக்கு - 1, முக பவுடர் - சிறிது.

செய்முறை:

படம் 1, 1a: ஷில்பகர் க்ளே இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இதை நன்றாகப் பிசைந்து வெள்ளை நிறத்துக்குக் கொண்டுவரவும்.

படம் 2: பிறகு, கைகளில் வைத்து அழுத்தி, சப்பாத்தி போல் தட்டவும்.

படம் 3: சிறிதளவு முக பவுடரை தரை அல்லது சமையல் மேடையில் தூவி, அதன் மீது வட்டவடிவ க்ளேவை வைத்து, பெரிய பாட்டில் மூடி கொண்டு அழுத்தி வட்டவடிவமாக செய்யவும். மீதம் உள்ள க்ளேவை அகற்றிவிடவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 12

படம் 4: தயாராக வைத்துள்ள போட்டோவை, ஃபேப்ரிக் க்ளூ கொண்டு வட்டவடிவ க்ளேயின் நடுவில் ஒட்டவும்.

படம் 5: போட்டோவை சுற்றியுள்ள க்ளே ஏரியாவில், பிரஷ் பயன்படுத்தி பெயின்ட் அடிக்கவும்.

படம் 6: ஒட்டியுள்ள படத்தைச் சுற்றி ஃபேப்ரிக் க்ளூ இட்டு, அதன் மீது வொயிட் ஸ்டோன்களை வரிசையாக ஒட்டவும்.

படம் 7: 'க்ளே’யின் பார்டரில் ஃபேப்ரிக் க்ளூ இட்டு, அதன் மீதும் வொயிட் ஸ்டோன்களை ஒட்டவும்.

படம் 8: க்ளேயின் பின்புறம், ஊக்கு (சேஃப்டி பின்) ஓட்ட வேண்டும். ஊக்கை திறந்தாற்போல் வைத்து, க்ளேவை சிறியதாகத் தட்டி, அதைக்கொண்டு ஒட்டி, அப்படியே காய வைக்கவும்.

படம் 9: நன்றாகக் காய்ந்த பிறகு, பின்பக்கமும் பெயின்ட் அடிக்கவும். கண்ணைக் கவரும் போட்டோ ஸ்டிக்கர் பேட்ஜ் ரெடி!

''வேலைப்பாட்டைப் பொறுத்து இதை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். போட்டோ பேட்ஜ் தவிர, இயற்கை ஓவியங்கள், மிக்கி மவுஸ், பொன்மொழிகள், பூக்கள்னு நம்ம கற்பனைத் திறன் மற்றும் கஸ்டமரின் விருப்பத்துக்கு ஏற்ப வெரைட்டியா செய்யலாம். ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கும்போது, குறைஞ்சபட்சம் மாசம்.. 15,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்!'' என்றார் ஹர்ஷினிஸ்ரீ.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...