மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஓவியங்கள் : சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

  200 

நெகிழவைத்த நடத்துநர்!

சமீபத்தில் அவசர வேலை காரணமாக மாநகரப் பேருந்தில் ஏறினேன். அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த நெரிசலிலும் ஓர் அன்புக் குரல் ஒலித்துக்கொண்டு இருந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்... என் தந்தை வயதுடைய, பேருந்தின் நடத்துநர்.

அனுபவங்கள் பேசுகின்றன!

'எங்கம்மா போகணும் நீங்க?’, 'அங்கே போக 13 ரூபாய் கட்டணம் ஆகும்மா’, 'இந்தாங்கம்மா உங்க பயணச்சீட்டு’, 'இந்தாங்கம்மா உங்களோட மீதி சில்லறை’ என்று பெண்களிடமும்... 'வாங்கப்பா, குடுங்கப்பா’ என்று ஆண்களிடமும் புன்னகை மாறாமல் கூறிக்கொண்டே இருந்தார். இடம் தெரியாத பயணிகளுக்கு சரியான வழியும், விவரமும் கூறி இறக்கிவிடவும் செய்தார்.

'சில்லறை இல்லை’ என்றாலே... சிடுசிடுத்து கீழே இறங்க சொல்லும், சந்தேகம் கேட்டால்... எரிச்சல்படும் நடத்துநர்களுக்கு மத்தியில், இந்த நடத்துநரின் கனிவு... ஒரு பேருந்தை, அதுவும் காலைநேர கூட்ட நெரிசலிலும் அமைதியாகக் கொண்டு சென்ற நிகழ்வை என்னால் மறக்க இயலவில்லை.  

- மு.புவனேஷ்வரி, பெருங்குடி

'சாக்லேட் சங்கடம்’!

திருமண அழைப்பிதழ் கொடுக்க வருகிற பலர், அழைப்பிதழுடன் சாக்லேட்டுகளையும் தருகின்றனர். அவர்களில் சிலர், விலை மலிவானதாக இருக்கிறது என்பதற்காக தரமற்ற சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்குகின்றனர். வீட்டிலுள்ள குழந்தைகளின் கண்களில் இந்த சாக்லேட்டுகள் பட்டுவிட்டால், அடம்பிடித்து சாப்பிட்டுவிடுகிறார்கள். இது அவர்கள் உடலுக்கு தீங்கு விளைவித்துவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. திருமணத்துக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயங்காதவர்கள், அழைப்பிதழோடு கொடுக்கும் சாக்லேட்டுகளையும் தரமானதாக தேர்வுசெய்ய வேண்டும். இல்லை என்றால், சாக்லேட்டுகளைத் தவிர்த்து, அழைப்பிதழை மட்டும் தரவேண்டும்.

- பே.ராமலட்சுமி, ராஜபாளையம்

அனுபவங்கள் பேசுகின்றன!

உறவுகளே... உணர்வீர்களா?!

எனக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. எத்தனை மருத்துவர்களைப் பார்த்தும் பயனில்லை. நானும் என் கணவரும் ஒருவரையொருவர் குழந்தையாக நேசித்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறோம். ஆனால், விசேஷங்களில் சந்திக்கும் சொந்தபந்தங்களில் பலர் குழந்தையில்லாததையே சுட்டிக்காட்டி பேசும்போதும், நேரடியாக என்னிடம் கேட்கும்போதும்... எனக்கு நெருப்பு மேல் நிற்பது போல் உள்ளது. அவமானத்தால் கூனிக்குறுகி போய்விடுகிறேன். மேற்கொண்டு அவர்களிடம் பேசமுடியாமல் தனியாக தத்தளிக்கிறேன்.

கவலைகளை மறந்து, அனைவரும் ஒன்றுகூடி மகிழத்தான் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ள உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அத்தகைய மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களைப் பற்றி குறை பேசி, மனதைப் புண்படுத்தாமல் இருக்கலாமே!

- பெயர் வேண்டாமே... ப்ளீஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

'ஐயாம் ஸாரி... மணி!’

என் கணவர் நாய் வளர்க்கிறார். அதற்கு 'மணி’ என்று பெயரிட்டு... தினமும் உணவளிப்பது, குளிப்பாட்டிவிடுவது, தடவிக்கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்துவருவார். எனக்கு சின்ன வயதிலிருந்தே நாய், பூனை வளர்ப்பதெல்லாம் அறவே பிடிக்காது... பயமும் கூட! அவர் வெளியூர் சென்றால், நாயைச் சரியாகக் கவனிக்க மாட்டேன்.

ஒருநாள் மதியம் மூன்று மணியளவில் கடைக்குச் சென்று திரும்பும்போது ஒரு பசுமாடு நிழலில் இளைப்பாறுவதற்காக வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தது. அதனைக் கண்ட நான், பயந்து நடுங்கிக்கொண்டே விரட்ட முயன்றேன். ஆனால், அது நகர்வதாக இல்லை. இதைப் பார்த்த 'மணி’, பசுமாட்டை நோக்கி பலமாகக் குரைத்து, விரட்டிவிட்டு, என் அருகில் வந்து வாலை ஆட்டியது. இதுநாள் வரை, நான் நடத்தியவிதத்தை கருத்தில் கொள்ளாமல், எனக்கு உதவ ஓடோடி வந்த விசுவாசமிக்க அந்த நாலு கால் நண்பனைப் பார்த்து, கண்கள் கலங்கி நின்றேன்.

- சித்ரா சிவகுமார், பரங்கிப்பேட்டை