மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 24

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

ரு நகரமே நகர்ந்து வந்தது போல இருந்தது அந்த விண்கலம். அத்தனை பிரமாண்டம். வியந்து எழுந்த அகிலன், சில அடிகள் அதை நோக்கி நடந்தான். அவனுக்கு இரண்டு அடி இடைவெளிவிட்டு மற்றவரும் தொடர்ந்தனர்.

''நெருங்கிச் செல்ல வேண்டாம்... வந்தது யார் என்று பார்ப்போம்'' - ழீன் மட்டும் கடைசியாக வந்தாள்.

பல கோடி மைல் தூரம் பயணித்த களைப்பு போல, கலத்தின் அடிப்பாகத்தில் இருந்து  பெருமூச்சாக காற்று ஒன்று வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹைட்ராலிக் படிக்கட்டு ஒன்று வலிக்காமல் தரை இறங்கியது. இதற்காகத்தான் காத்திருந்தது போல அகிலன் கூர்ந்து பார்த்தபடி நின்றான்.

ழீன், ''அகிலன்... கொஞ்சம் மறைவாக நிற்கலாம்'' என்றாள். வந்திருப்பது மனிதனா, டெர்பியா என்ற அச்சம் அவளுக்கு. உடனடியாக கேத்ரின், ஹென்ரிச், அகி மூவரும் ஒரு மரத்தின் பின் பதுங்கிக்கொண்டனர். படபடப்பு அதிகமாக இருந்தது. 581 ஜி, நிலவு விண்கலத்துக்கு மறுபுறத்தில் இருந்ததால் இருட்டு அதிகமாக இருந்தது. மரத்தின் பின்னால் மறைந்து கொள்ளலாமா, அகிலனைப் பின்தொடரலாமா என்ற மைக்ரோ தயக்கத்தை உதறிவிட்டு, அகிலனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் வினோதினி.

அதே நேரத்தில் விண்கலத்தின் பல புள்ளிகளில் இருந்து ஒளிக்கற்றைகள் புறப்பட்டு, அந்த இடத்தை அலசின. அகிலனும் வினோதினியும் நின்ற இடத்தை வேகமாகக் கடந்துசென்ற ஒளிகள், திரும்பிவந்து அவர்கள் மீது நிலையாக நின்றன. வினோதினி இன்னும் அழுத்தமாக அகிலனை இறுக்கிக்கொண்டாள். இருவரும், வேட்டைக்காரர்களின் டார்ச் வெளிச்சத்தில் சிக்கிய முயல்கள் போல திகைத்து நின்றிருந்தனர்.

ஆபரேஷன் நோவா - 24

ழீன், ''ஓடிவந்து மறைந்துகொள்ளுங்கள்'' என்றாள் மறுபடி.

''இப்போது நாங்கள் வந்தால், நீங்களும் மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் பார்த்து விட்டார்கள்'' - உதடு பிரிக்காமல் உச்சரித்தான் அகிலன்.

விண்கலத்தின் வயிற்றுப் பகுதியில் படிக்கட்டு இறக்கப்பட்ட இடத்தில் டச் ஸ்கிரீன் கதவு ஒன்று மென்மையாகத் திறந்தது. அதில் இருந்து இறங்கியவர்கள் மனிதர்கள். டெர்பி இல்லை. அப்பாடா!

அடுத்த சந்தேகம்... வந்திருக்கும் மனிதன் பகைவனா, நண்பனா?

எதிர் வெளிச்சத்தின் காரணமாக எல்லோரும் இருட்டு உருவங்களாகத் தெரிந்தனர். அச்ச அதிர்ச்சியோடு நின்றிருந்த இருவரையும் நோக்கி அவர்கள் வந்தனர்.

வினோதினிதான் முதலில் பரவசமானாள். ''ஏஞ்சலினா ஜோலீ'' என்றாள் சந்தோஷமாக. ஹாலிவுட் அதிசயம். அடுத்து அடையாளம் தெரிந்தவர் பிராட் பிட். கணவன்-மனைவி சமேதரராக வந்திருந்தனர்.

''ஹாய்'' என்றார் ஏஞ்சலினா.

சற்றுத் தயங்கியபடி பதிலுக்கு ''ஹாய்'' சொன்னாள் வினோதினி.

''உங்களைப் பார்த்த பின்புதான் புதிய கோளில் வசிக்க முடியும் என்ற தைரியம் வந்தது. நீங்கள் எப்போது வந்தீர்கள்?'' ஏஞ்சலினாவின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்துகொள்ள மொழிக் கருவியைப் பொருத்த வேண்டியிருந்தது. ஏஞ்சலினா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் வரிசையாக ஆச்சரியங்கள் தொடர்ந்தன. மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ், ஸ்டார் டி.வி. ராபர்ட் முர்டோக் என சர்வதேசப் பிரபலங்கள் லைன் கட்டினார்கள். 'இவர்கள் ஆறு ஆயிரம் கோடி பணம் கட்டி வந்தவர்கள்’ என, ஒவ்வொருவரின் உடலிலும்  எழுதி ஒட்டியிருந்தது.

''ஃப்ளைட்டில் பக்கத்து மாகாணத்துக்கு வந்து இறங்கியது மாதிரிதான் இருக்கிறது...

விஞ்ஞானம்'' என, கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார் பில்கேட்ஸ்.

ழீன், கேத்ரின், அகி, ஹென்ரிச் ஆகியோரும் மரம் விலகி வெளியே வந்தனர். வந்திருந்த புதியவர்கள், மறைந்திருந்து வெளியே வந்தவர்களைப் பார்த்து அந்நியமாக உணர்ந்தனர். மறைந்திருந்து தாக்க வருகிறார்களோ என்ற அச்சம். பரஸ்பர பயங்களோடு எதற்கும் இருக்கட்டும் என்ற ஒரு டிஃபென்ஸ் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர்.

''இங்கே பிரச்னை எதுவும் இல்லையே?'' என்றார் முர்டோக்.

புதிதாக வந்த 100 பேருக்கும் உடனடியாக கேட்கவேண்டிய 100 கேள்விகள் இருந்தன. பூமியைப் பற்றி விசாரிக்க, அகிலன் தரப்பினரிடம் 1,000 கேள்விகள் இருந்தன. கோச்சடையான் ரிலீஸ் ஆகிடுச்சா?, விஸ்வரூபம்-2க்கும் கமல் வெளிநாட்டில் குடியேற வேண்டியிருக்குமா? என்ற சுவாரஸ்யக் கேள்விகள் வினோதியிடமும் இருந்தன.

பெரிய ஆச்சரியங்களும்  சின்ன விசாரிப்புகளுமாக, ஒருவகையில் பொது உடைமை ஏற்பட்டுவிட்ட திருப்தியில் உலகத்தின் முதல் 100 பணக்காரர்களும் சாதாரணமானவர்களும் அங்கே பேசிக்கொண்டிருந்தனர்.

ஆபரேஷன் நோவா - 24

அப்போது... அவர்கள் இருந்த வனாந்தரத்தில் சட்டென ஐந்து அடி உயர ஹாலோகிராம் திரை சிணுங்கியது. எல்லோரும் போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதைக் காட்டும் வெண் புகை சிக்னலைப் பார்ப்பதைப் போல ஒரே நேரத்தில் பார்த்தனர்.

அம்மா! கலையாத புன்னகையோடு, ''பூமியில் இருந்து வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு வணக்கம். நான் அம்மா. இந்தக் கிரகத்தின் நிர்வாகம் என்னிடம்தான் இருக்கிறது. ஹைட்ரோகாப்டர்கள் ரெடி. நீங்கள் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இல்லங்களில் இறக்கிவிடப்படுவீர்கள். நாளை முதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வண்டு உங்களுக்கு விளக்கும். ஆரம்பத்தில் இருந்தது போல கெடுபிடியான விதிகள் இப்போது இல்லை. என்ன அகிலன், நான் சொல்வது சரிதானே? ஒரே ஒரு விதி மட்டும் உண்டு. நடந்தால் நல்லது... நடக்காவிட்டால் மிகவும் நல்லது'' - விரல்களில் உதட்டை ஒத்தி எடுத்து முத்தம் பறக்கவிட்டார்.

அம்மாவின் பிரசங்கம் அவர்கள் எதிர்பாராதது.

பில்கேட்ஸ் சிலிர்த்தபடி, ''ஹூ இஸ் ஷி? பயோ மேக்னடிக் சென்ஸர்... லோ வோல்ட் ஷாக் வித் லோ அபின் கன்டென்ட்'' என்றார். அவர் இன்னும் காதுக் கருவியை மாட்டவில்லை.

''பூமியில் இருந்து கிளம்பும்போது அம்மா பற்றி எல்லாம் சொல்லவே இல்லையே'' - தன் டிரேட்மார்க் ஆவேசத்துடன் சொன்னார் ஏஞ்சலினா.

''இப்பத்தானே வந்திருக்கீங்க?'' என்றான் அகிலன்.

அம்மா சொன்னபடியே ஹைட்ரோகாப்டர்கள் வரிசையாக வந்து நின்றன. இப்போதைக்கு அம்மா சொன்னதுபோல செய்துவிடுவோம் என அவரவர் எண் பொறித்த ஹைட்ரோகாப்டர்களில் ஏறினர். சந்தேகக் கண்களோடும் பொய்ப் புன்னகையோடும் 'பார்க்கலாம்’ என்று வலது கை விரல்களால் காற்றில் டைப் அடித்துவிட்டு மறைந்தனர்.

ந்தப் பரீட்சார்த்தமும் ஏதோ ஒரு பாதிப்பை உண்டாக்கும். 'விஞ்ஞானத்தின் அடிப்படையே விளைவுகளை எதிர்கொள்வதுதான்’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவருடைய நியூஜெர்சி இல்லத்தில் சந்தித்தபோது சொன்னது மைக்கேலுக்கு நினைவு வந்தது. அவர் மரணம் அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முந்தைய சந்திப்பு அது. மைக்கேல் ஆய்வு மாணவராக இருந்தார். தங்கள் பேராசிரியர்களின் தயவால் அந்தச் சந்திப்பு நடந்து.

'விஞ்ஞானத்தின் அடிப்படையே விளைவுகளை எதிர்கொள்வதுதான்’ - யோசித்துதான் சொன்னாரா? எதிர்ப்பதுதான் என்று சொல்லியிருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். உருவமற்ற மகளை எப்படி எதிர்கொள்வது? தலையை உடைத்து மூளையைக் கழற்றி செரிபரல் திரவத்தில் ஊறவைத்திருக்கிறான் கேப்ரியல். அவனுக்கு அதுதான்

விஞ்ஞான வளர்ச்சி - என்ற தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் அவரால் சரியாகச் சிந்திக்கவோ, சரியாக அழவோகூட முடியவில்லை.

'மனிதன் என்பவன், அவனுடைய அறிவு மட்டும்தான். அவனுடைய நிறம், உயரம், எடை, வடிவம்... எல்லாம் தற்காலிகம். 50, 60 ஆண்டுகளில் மாறிப்போவது. வழுக்கையோ, நரையோ, சுருக்கமோ, நடுக்கமோ முடிவுரை எழுதிவிடுகிறது. மூளை? அது அறிவாலும் அனுபவத்தாலும் நிரம்பிக்கிடக்கிறது. உடலுக்கு முடிவு வந்துவிட்டது என்பதற்காக மூளையையும் சேர்த்து மண்ணுக்குள் புதைத்துவிடுகிறோம்.

ஆபரேஷன் நோவா - 24

தஸ்தேயவஸ்கி, ரிச்சர்ட் ஃபெயின்மேன், மார்க்ஸ், பீத்தோவான்... யோசித்துப்பார்... எல்லோருடைய மூளைகளையுமே காப்பாற்றியிருக்க முடியும். கடன் தொல்லை, கார் லோன் எந்தத் தொல்லையும் இல்லை. சீட்டாடித் தோற்று விரக்தியில் வீழ்ந்து தஸ்தயேவ்ஸ்கி கதை எழுத வேண்டியது இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம், படிக்கலாம். ரோஸியின் உடம்பு இல்லை என்பதற்காக எதற்காக அழுகிறாய்?’ - இதுதான் மனிதத்தன்மை இல்லாமல் கேப்ரியல் பேசியதன் மொத்த சாரம்.

நீண்ட நீண்ட காரிடார்களைக் கடந்து, குழந்தை மார்க்கஸ் அரேலியஸ் வளர்க்கப்படும் இடத்தை வந்தடைந்த கேப்ரியலின் பின்னால், பிஸ்கட் வைத்திருக்கும் எஜமானரைப் பின்தொடரும் நாய்க்குட்டி போல தொடர்ந்துகொண்டிருந்தார் மைக்கேல்.

அந்த இடம் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களால் நிரம்பியிருந்தது. ஆனால், எல்லாவற்றிலும் நவீனம் அதிகமாக இருந்தது. ஆன்டெனா வைத்த குட்டி ரிமோட் கன்ட்ரோல் ஏரோப்ளேன், உற்றுப் பார்த்தால் இயங்கும் விசிஃபௌக்ஸ் இயந்திர பொம்மைகள், ரோபோக்கள் என அந்த இடம் முழுக்க இறைந்திருந்தது.

ரோபோ பெண் ஒருத்தி, அவனுக்கு குவான்டம் தியரி நடத்திக்கொண்டிருந்தாள். 10 மாதக் குழந்தைக்கு 'ரெயின் ரெயின் கோ அவே...’வே அதிகம். குழந்தை, இருவரையும் பார்த்துச் சிரித்தது. பெற்றவர் சூடு அறியாத குழந்தை. டவுண்லோடு செய்யப்பட்ட ஆர்கானிக் சிஸ்டம்.

ரோபோ பெண்ணிடம் அந்தக் குழந்தையை அருகில் கொண்டுவரச் சொன்னார். கேப்ரியல் குழந்தையை எடை பார்க்கிற பாவனையில் வாங்கி சந்தோஷம் காட்டினார்.

''இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறேன் பார்'' என்று ஒற்றைக் கையில் தூக்கி உயர்த்திக் காண்பித்தார்.

மைக்கேல், அந்தக் குழந்தையைப் பரிதாபமாகப் பார்த்தார். ''இவனை மரணமற்றவனாக மாற்றப்போகிறேன். அமரனாக்கப்போகிறேன். கொஞ்சம் யோசித்துப் பார் மைக்கேல், நமக்குத் துணையாக யாராவது ஒருத்தராவது சாவே இல்லாமல் இருந்தால்தான் நல்லது. இதை எல்லாம் யார் கவனிப்பது? பொறுப்பு வேண்டும் இல்லையா? என்ன சொல்கிறாய் மார்க்கஸ்?''

மார்க்கஸ் சிரித்தான்!

- ஆபரேஷன் ஆன் தி வே...