மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 25

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

புவியியல் தட்பவெப்பச் சூழல்களை வைத்து அது ஓர் ஐரோப்பிய நாடாகத்தான் இருக்கும் என்பதைத் தாண்டி வேறு ஒன்றையும் ஊகிக்க முடியவில்லை. சார்லஸ், தன் இமைகளைத் திறக்க விரல்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. அப்போதுதான் இரண்டு கரங்களும் பின் பக்கமாகக் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. வாயில் ஓர் அழுக்குக் கைக்குட்டையை வைத்து அடைத்திருந்தனர். கேட்டமைன் கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் பொத்தியது மட்டும்தான் அவருக்கு நினைவு இருந்தது.

அவர் ஒரு மோசமான காரில் கடத்தப்படுவதை உணர்ந்தார். சாலையும் மோசமாகத்தான் இருந்தது. மூடப்படாத சூட்கேஸின் மூடிபோல குலுக்கலின்போது அவருடைய கண்கள் தானாகத் திறந்து மூடின. சுற்றுலாப் பயணிகளைக் கவராத ஒரு மலைப் பாதை. காலாவதியாகிப்போன ஒரு புனல் மின்நிலையம் இந்தப் பகுதியில் இருக்கக்கூடும். சார்லஸின் உள்மனக் கணிப்பு அது. வாய் வழியாக மூச்சை இழுத்துவிட வேண்டும் என்று விரும்பினார். 'நான் கத்திக் கூப்பாடு போட மாட்டேன். வாயில் இருந்து துணியை அகற்றுங்கள்’ என வேண்டுகோள் வைக்க நினைத்தார். அதை நிறைவேற்றி வைக்கக்கூடியவர்கள் அவருக்கு இரண்டு பக்கமும் இருந்தனர். வலது பக்கம் ஒருவன். இடது பக்கம் ஒருத்தி. முகத்துக்கு மங்கி குல்லா மாட்டியிருந்தார்கள். யார், எங்கே அழைத்துச் செல்கிறார்கள், ஏன் என்பதையெல்லாம் ஒருவாறு அவரால் தீர்மானிக்க முடிந்தது.

'ஆபரேஷன் நோவா’ எதிர்ப்பாளர்கள்! கண்காணாத இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள், போட்டுத் தள்ளப்போகிறார்கள் என்ற விடைகள் சிரமம் இல்லாமல் தெரிந்தன. ஆனால், தவறான ஆளைக் கொல்லப்போகிறார்கள். உயிர் பயத்தைவிடக் கொடியது உடல் வலி. தேவை இல்லாத வதை; தேவை இல்லாத கொலை. அதுதான் அவரை எக்கச்சக்கமாக வருத்தியது.

ஆபரேஷன் நோவா - 25

கரடுமுரடான சாலையும் ஓர் இடத்தில் நின்றுபோயிருக்க வேண்டும்; காரும் நின்றது. அதை ஓட்டி வந்தவன், இறங்கி இடது பக்கக் கதவைத் திறந்தான். அந்தப் பெண் இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை எடுத்து சார்லஸைக் குறிவைத்து, அதைக்கொண்டே இறங்கச் சொல்லி சைகை காட்டினாள்.

கட்டப்பட்ட கைகளோடு இறங்குவதற்குச் சிரமப்பட்டார் சார்லஸ். வலது புறம் இருந்தவன் அவரை ஒரு மூட்டை போல வெளியே தள்ளினான். இந்த நால்வர் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. கார் கதவைத் திறந்த நொடியில் சில்லென்ற காற்றின் அவசரத் தழுவல்.

உண்மையில் சார்லஸால் காலை எடுத்து வைக்கவும் முடியவில்லை. அந்தப் பெண், துப்பாக்கியால் அவர் முதுகில் குத்தி நகர்த்திக்கொண்டு போனாள். அவருக்கு முன் மலையில் வசிப்பவருக்காகக் கட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் இருந்தது அந்தத் தேவாலயம். தூசு, ஒட்டடை, சுவர் வெடிப்புகளில் வளர்ந்திருந்த செடிகள்... அனைத்தும், மனிதர்கள் அங்கு வந்து ஆறு மாதங்களாவது ஆகியிருக்கும் என்பதை உறுதி செய்தன.

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்கு முன் இருந்த நீள நீளமான இருக்கைகள் தூசுபடிந்து கிடந்தன. சார்லஸ், அங்கே தனியே கிடந்த நாற்காலியில் யாருடைய அனுமதியும் இன்றி அவராகவே அமர்ந்தார். அந்தப் பெண், அவருடைய வாயில் இருந்து கர்ச்சீப்பை காற்று பிடுங்குவதுபோல உருவி எடுத்துவிட்டு, அவரை நாற்காலியோடு கட்டிப்போட்டாள்.

மற்ற இரண்டு பேரில் ஒருவன் அவரை நெருங்கி வந்து, நெருப்புப் பார்வை பார்த்தான். ''என்ன நடக்கிறது என்று நீயாகச் சொல்லிவிடு'' என்றான்.

அவர், ''தண்ணீர்'' என்றார் மொத்த சக்தியையும் திரட்டி.

நெருப்புப் பார்வையன், சம்மதம் போல மற்றவனைப் பார்த்துவிட்டு, முதுகுப் பக்கம் செருகி வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.

மிச்சம் வைக்காமல் குடித்தார். மூவரின் முறைப்பையும் நிதானமாகப் பார்த்துவிட்டு, ''நீங்கள் கேப்ரியலைத்தான் கேட்க வேண்டும்'' என்றார்.

''அவன் யார்?''

''விளக்கமாகச் சொல்ல வேண்டும். நீங்கள் கோபம் இல்லாமல் கேட்டால்தான் விளங்கும்'' என்றார் சார்லஸ் நிதானமாக.

''இந்தத் தெனாவட்டு எல்லாம் வேண்டாம். சிதறிவிடுவாய்'' - துப்பாக்கியால் நெற்றியில் அவள் அழுத்தினாள்.

உலகத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் எடுத்த முயற்சியில், கேப்ரியல் இடையில் புகுந்து அராஜகம் செய்துகொண்டிருப்பதை அவர்களிடம் சொல்லி நம்பவைப்பதற்குப் பெரும்பாடு படவேண்டியிருந்தது.

''நீங்கள் என்னைக் கடத்தவில்லை. காப்பாற்றினீர்கள்'' என்றார். கிழவனை நம்புவதா, கொல்வதா? - ஓர் இளைஞன் யாரிடமோ செல்போனில் பேசிவிட்டு வந்தான்.

''ஒரு பில்லியன் டாலர் கொடுத்தால், அந்தக் கிரகத்துக்கு அனுப்பி வைப்பதாக டி.வி. பேட்டியில் சொன்னீர்களே... அது நீங்களும் கேப்ரியலும் சேர்ந்துபோட்ட திட்டம்தானே?''

''நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள். அவன் பாம் வைத்திருந்தான். உயிருக்குப் பயந்து அப்படிச் சொன்னேன். நான் சொன்னால் விஞ்ஞானிகளும் மக்களும் நம்புவார்கள் என்பதால், என்னை அதற்குப் பயன்படுத்திக் கொண்டான். வேண்டும் என்றால் என்னை நீங்கள் கடத்திய இடத்தில் யாரையாவது பார்க்கச் சொல்லுங்கள். என் படுக்கையில் ஒரு பாம் பொருத்தப்பட்டிருக்கும். அவனுக்கு எதிராகத் திரும்பினால் எந்த நேரத்திலும் என்னைக் கொன்றுவிடுவான். நல்லவேளையாக என்னைக் காப்பாற்றினீர்கள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதில் எனக்கு ஓர் அக்கறையும் இல்லை. இந்த இரண்டு கோள்களையும் காப்பாற்ற வேண்டும். அதாவது, அதில் உள்ள மக்களை. அதற்காகத்தான் உயிரைப் பிடித்துக்கொண்டு இருக்கிறேன்.''

ஆபரேஷன் நோவா - 25

எதிர்பாராத ஏமாற்றம் போல இருந்தது இளைஞர்களுக்கு. ஓர் எதிரியைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம் என்ற சந்தோஷம் கை நழுவியது.

''நான் உங்களுக்கு உதவ முடியும்.

விஞ்ஞானிகள் ஏற்படுத்திய உலக அமைதிக் குழுவினருக்கு, கேப்ரியலின் பேராசையை விளக்க வேண்டும். கேப்ரியலின் கையில் இருந்து விஞ்ஞானத்தைப் பிடுங்க வேண்டும்.''

''ராணுவ உதவி தேவைப்படுமா?''

சார்லஸ் சிரித்தார். ''கைப்பற்ற வேண்டியவை சில சங்கேதக் குறியீடுகளையும், அழுத்த வேண்டிய சில பட்டன்களையும். என்னை லண்டன் விஞ்ஞானக் கழகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா?''

இளைஞன் யாரிடமோ போனில் பேசிவிட்டு வந்து ''சரி'' என்றான்.

மீண்டும் காரில் ஏறினார்கள். ''ஏமாற்ற நினைத்தால் ஒரு விஞ்ஞானிகூட மிஞ்ச மாட்டீர்கள்'' என்றாள் அந்தப் பெண். துப்பாக்கி பிடித்த கையில் கட்டை விரலுக்கு அருகே அவளுக்கு ஒரு மச்சம் இருந்தது.

ஞ்சலினா ஜோலி தம்பதியருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை, வீடு என்று சொல்ல முடியாது. உயரமான கண்ணாடிக் குடுவைபோல இருந்தது. எந்த இடத்திலும் படுக்கை அறை, சமையல் அறை என்ற சம்பிரதாயத் தடுப்புகள் இல்லை. விசாலமான ஒரே ஓர் அறை. குளிக்கும் தேவை எல்லாம் இப்போதுதான் கொஞ்ச நாள்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக கேப்ரியல் சொன்னார். அந்த வெட்டவெளி அறையிலேயே ஓர் இடத்தில் பாத்-டப் இருந்தது. தனித்தனி தடுப்பு தேவை இல்லைதான் என்று அவர்களாகவே சமாதானம் செய்துகொண்டனர்.ஆனால், அதில் டி.வி. இல்லை; சினிமா இல்லை; ஸ்போர்ட்ஸ் இல்லை. அதுதான் அவர்களுக்குப் பெரிய வெறுமையாக இருந்தது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்டர்நெட்... சுத்தம்! குழந்தைகள் ஆறு பேரும், 'எப்பம்மா வீட்டுக்குப் போவோம்?னு’ இப்பவே ஆரம்பித்துவிட்டார்கள்.

உலகம் அழிந்துவிடப்போகிறது என்று அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என்று முதல் நாளே விரக்தி வாட்டியது. ஏதாவது பர்ச்சேஸ்... மார்க்கெட்... மால்... ம்ஹூம்! இங்கே யார் எதை விற்பார்கள், யார் எதை வாங்குவார்கள்?

'உங்களால் என்ன வேலை செய்ய முடியும்’ என்று கேப்ரியல் ஒரு நீண்ட பட்டியல் கொடுத்திருந்தார். அதில் டிக் செய்ய வேண்டும். அவரவருக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம் என்றபோது கவர்ச்சியாக இருந்தது. ஆனால், கேப்ரியல் கொடுத்த வேலைகளின் பட்டியலைப் பார்த்தபோது பிராட் பிட் நொந்துபோனார். பாலி வினைல் கன்ஸ்ட்ரக்ஷன், அக்ரோ, ஹைட்ரோ, ஜினோம், பயோமெக்கானிஸம்... இதில் எதை டிக் செய்வது என்றே தெரியவில்லை.

பூமியில் என்ன சொல்லி அழைத்து வந்தார்களோ... அது எதுவுமே இங்கே இருக்காது எனத் தோன்றியது. இங்கே நிறைய தங்கம் இருக்கும், வைரம் இருக்கும் என்றார்கள். அதை எல்லாம் வைத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை.

''திரும்பிப் போய்விடலாமா?'' என்று கேட்டார் பிராட் பிட். ஏஞ்சலினா ஜோலி பதில் சொல்லவில்லை. அப்படி ஒரு வாசல் இருப்பதாகவே அவருக்குத் தெரியவில்லை.

ஆபரேஷன் நோவா - 25

''இன்னும் பலர் வரட்டும். வந்தால் ஏதோ ஒரு சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டியிருக்கும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோம்'' என்றார். அதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

இரண்டு நிலவுகள் இருந்தும் ரசிக்க முடியவில்லை. பால்கனி போல இருந்த பகுதியில் நின்றபடி, இருட்டு போர்த்தியிருந்த அந்தக் கோளைப் பார்த்தார் ஜோலி. அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இன்னொரு கண்ணாடி மாளிகை இருந்தது. அது பிரமாண்டமானது. ஆட்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அமானுஷ்யமான அமைதி. இங்கே யாரை நம்புவது எனத் தெரியவில்லை.

உலகம் என்பது ஒரு நம்பிக்கை. தினமும் பொழுது விடியும்; காபி குடிப்போம்; மேக்கப் போடுவோம்; படம் ரிலீஸ் ஆகும்; ரசிகர்கள் மொய்ப்பார்கள். அது எதுவுமே இங்கே நடக்காது; நம்பியது எதுவுமே நடக்காது; விரும்பியது எதுவுமே கிடைக்காது; மிச்ச வாழ்க்கையை இப்படியே ஓட்டிவிட முடியுமா? உயிருக்குப் பயந்து ஓடி வந்தோமே... உயிரா முக்கியம்? எப்படி வாழ்ந்து வந்தோமோ அப்படி இனி வாழவே முடியாது என்பதைவிட தொடர்ந்து இருப்பது முக்கியமா?

ஏஞ்சலினாவுக்கு புத்தர், கிறிஸ்து, நபிகள் எல்லாரும் சுருக்கமாக நினைவுக்கு வந்துவிட்டுப் போனார்கள். ஒரு வெறுமை... வெற்றிடம், உள்ளே புகுந்து வாட்டியது. பிராட்  பிட் அவள் தோள் மீது கை வைத்து வளைத்துப் பாந்தமாக அணைத்தார். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவள் பார்த்துக்கொண்டிருந்த பிரமாண்ட கண்ணாடி மாளிகையின் மேல் இருந்து ஓர் உருவம் கயிற்றில் இறங்குவது தெரிந்தது. ''கிட்டி... அங்கே பாருங்கள்'' என்றார். பிராட்  பிட்டின் செல்லப் பெயர் அது.

யாரோ கட்டடத்தின் மீது இருந்து இறங்குகிறார்கள். ஆணா, பெண்ணா... என்பதுகூடத் தெரியவில்லை.

''என்னவோ நடக்குது'' என்றார்

ஏஞ்சலினா.

பிராட் பிட், ''வாழ்வதற்கான ஏதோ ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது'' என்றார்.

- ஆபரேஷன் ஆன் தி வே...