மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 13

பேப்பர் பேக்... செய்வது சுலபம்... லாபம் அதிகம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள் : எம். உசேன்

ற்சாகமாக ஆரம்பிக்கிறார், பெங்களூருவிலிருக்கும் 'ஐடியல் விங்க்ஸ் கிராப்ஃட்' நிறுவனத்தைச் சேர்ந்த ரவீனா...

''ஹேண்ட் மேட் பேப்பர் பேக், கிஃப்ட் பாக்ஸ்... இதுக்கெல்லாம் இப்ப மவுசு அதிகம். அதிலும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம்ங்கிற விழிப்பு உணர்வு அதிகமா இருக்கறதால... வரவேற்பு அதிகரிச்சுட்டே இருக்கு.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 13

எம்போஸ்டு பேப்பர்லதான் இதைச் செய்றோம். திருப்பூர் பனியன் கம்பெனி வேஸ்ட் துணிகள் மூலமாக தயாரிக்கப்படும் பேப்பரில்தான் செய்கிறோம். ஷோரூம்கள்ல மொத்த ஆர்டர் எடுத்து, செஞ்சு கொடுக்கிறோம். இயற்கை ஆர்வலர்கள், தங்களோட வீட்டு விசேஷங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கவும் இந்தப் பைகளுக்கு ஆர்டர் கொடுக்கறாங்க. அதனால, எங்களுக்கு லாபத்துக்கு பஞ்சமில்லை.

அடுத்தகட்டமா... நோட் புக், நோட் பேட், ஃபோல்டர்ஸ்னு நிறைய வேலைகளையும் இந்த மெட்டீரியல்லயே செய்றோம். என் நண்பர் சுதாகருக்கு இந்தத் தொழில்ல உள்ள அனுபவம், எனக்கு ரொம்பவே உதவியா இருக்கு. எங்க நிறுவனத்தோட கிளைகள் நாமக்கல், சென்னையிலும் இருக்கு!'' என்று சொல்லும் ரவீனா, அடிப்படையான பேப்பர் பேக் ஒன்றை  செய்து காண்பித்தார்.

தேவையான பொருட்கள்:

எம்போஸ்டு பேப்பர் - ஒரு சார்ட் அளவுக்கு, கட்டர் - 1, ஃபெவிகால் - 1, பன்ச்சிங் மெஷின் - 1, நைலான் நூல் - 2, ஸ்கேல் - 1, பேனா அல்லது ஸ்கெட்ச் - 1.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 13

செய்முறை:

எம்போஸ்டு பேப்பரில் பாதியை கட் செய்துகொள்ளவும்.

படம் 1, 2: கட் செய்த பேப்பரை, நீளவாக்கில் வைத்து, முதலில் இடதுபுறத் தில் ஒரு இன்ச் அளவுக்கு இடம்விட்டு மடித்து, படத்தில் காட்டியுள்ளபடி, கட் டரின் பின் பாகத்தால் அழுத்தமாகக் கோடு போல உருவாக்கவும் (கவனம்... ஷீட் கிழிந்துவிடக் கூடாது). கீழ்புறத்திலும் இதேபோல ஒரு இன்ச் அளவுக்கு மடித்து, கோடு போல உருவாக்கவும்.

படம் 3, 3A: இடதுபுறத்தில் ஒரு இன்ச் விட்டு மடித்த இடத்திலிருந்து, வலதுபுறம் நோக்கி 12 இன்ச் வைத்துக் குறித்துக்கொண்டு, மீதமுள்ள வலதுபுற பேப்பரை, இடதுபுறம் நோக்கி மடக்கவும். இந்தப் பாகத்திலும் கட்டரின் பின்பாகத்தால் கோடு போல உருவாக்கவும் (இப்போது 'ப’ வடிவம் கிடைக்கும்).

படம் 4: எந்த அளவும் குறிக்காமலிருக்கும் பாகத்தை கீழ்நோக்கி மடக்கி, படத்தில் காட்டியுள்ளவாறு கீழ்ப்புறம் ஒரு இன்ச் விட்டு மடித்திருக்கும் பாகத்தின் மீது ஃபெவிகால் கொண்டு ஒட்டவும்.

படம் 5, 5B: இப்போது ஒட்டிய பாகத்துக்கு எதிர்பாகத்திலிருந்து கீழ்நோக்கி 8 இன்ச் அளவு வைத்து உள்பக்கமாக மடிக்கவும். இதேபோல, எதிர்ப்புறத்திலும் உள்பக்கமாக மடிக்கவும்.

படம் 6: ஏற்கெனவே 1 அங்குலம் விட்டு மடிக்கப்பட்டிருக்கும் கீழ்பாகத்தின் இரு முனைகளையும் மேல் நோக்கி மடித்துக் கொள்ளவும்.

படம் 7,7A: மடிக்கப்பட்ட பகுதிகளை ஆள்காட்டி விரல்கொண்டு உள்புறமாக அழுத்தி மடித்து, விரித்தால், படத்தில் உள்ளது போல இருக்கும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 13

படம் 8: மேல் உள்ள பகுதியைப் பாதியாக மடித்து, இரு ஓரங்களிலும் ஃபெவிகால் தடவி, மடக்கி ஒட்டவும்.

படம் 9: ஒட்டி முடித்த பகுதி மீது, மற்றொரு பகுதியையும் ஒட்டி முடிக்கவும். இப்போது பையின் அடிப்பாகம் தயார்.

படம் 10: அடுத்தது பையின் மேல் பாதியில் ஒரு இன்ச் அளவு ஏற்கெனவே மடிக்கப்பட்டுள்ள பகுதியை படத்தில் காட்டியுள்ளபடி உள்பக்கமாக மடித்து, கைப்பிடிக்காக பன்ச்சிங் மெஷின் மூலமாக இரண்டு பக்கங்களும் இரண்டிரண்டு துளைகள் இடவும். இதில் நைலான் கயிறு கோத்து உள்பக்கமாக முடிச்சிட்டால், அழகான எம்போஸ்டு கேரி பேக் உங்கள் கைகளில்!

''இதை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பேப்பரின் தரம், பையின் அளவு மற்றும் டிசைனைப் பொறுத்து விலை மாறுபடும். இது அடிப்படையான பேக். லோட்டஸ், பீக்காக், ஃப்ளவர் டிசைன், நேச்சுரல் சீனரிஸ்னு கற்பனைத் திறனைக் காட்டலாம். ஆரம்பத்தில் குறைவான பைகளையே செய்ய முடியும்னாலும், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல, செய்யச் செய்ய வேகம் அதிகரிக்கும். மாசம் குறைந்தது 10,000 வருமானம் ஈட்டலாம்!'' என்கிறார் ரவீனா.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...