ஓவியங்கள் : சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200,
நோயாளிகளை நோகடிக்காதீர்!

மருத்துவப் பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். எனக்கு ஈ.சி.ஜி பார்க்கும் பணியைச் செய்த பெண்ணுக்கு யார்மீது, என்ன கோபமோ தெரியவில்லை.... முகத்தை படுசீரியஸாக வைத்துக்கொண்டு, வேகவேகமாகக் கையிலிருந்த ஒயர்களை இழுத்து உருவினாள். என்னை முன்னால் நகர்ந்து படுக்கும்படி வாய் திறந்து கூறாமல், இறுகிய முகத்தோடு, பிரியாத உதடுகளோடு கைகளால் சைகை செய்தாள். எனது கை, கால்களில் வளையங்களை அவசரமாக மாட்டி இழுத்தபோது எனக்கு மிகவும் வலி ஏற்பட்டது. அவள் இதுபோல பலரிடமும் கடுமையாக நடந்துகொண்டபோதும், அங்கு நடமாடிக்கொண்டிருந்த மேலாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
பல்வேறு வகையான வலி,
வேதனையோடு, மருத்துவக் கட்டணங்களைச் சமாளிப்பது பற்றிய கவலையும் சேர்ந்துகொள்ள... தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடம், பணியாளர்கள் கனிவோடு நடந்துகொள்வதுகூட சிகிச்சை முறையில் ஒன்றுதானே? மருத்துவப் பணி யாளர்களுக்கு வேலையை சொல்லிக் கொடுப்பது போலவே, மனவேதனைக்கு மருந்திடவும் பயிற்றுவிப்பது மருத்துவமனைகளின் கடமை!

- லலிதா சண்முகம், திருச்சி
சபாஷ்... சரியான அப்ரோச்!
ஒருநாள் என் தோழியைப் பார்க்கச் சென்றிருந்தேன். பள்ளியில் இருந்து திரும்பிவந்த பிள்ளைகளை, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ''விளையாடச் செல்லுங்கள்'' என்று அனுப்பி வைத்தாள். ''ஏண்டி... ஹோம்வொர்க் இருந்தால் செய்யச் சொல்லக் கூடாதா?'' என்று கேட்டதற்கு, ''பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் விளையாடும்போது இவர்களை மட்டும் ஹோம்வொர்க் செய்யச் சொன்னால், இவர்களின் சிந்தனை விளையாட்டிலேயே இருக்கும். இதனால், தப்பாக செய்து டீச்சரிடம் திட்டு வாங்குவார்கள். அதான் விளையாட விட்டுட்டேன். விளையாடிய பிறகு புத்துணர்ச்சியுடன் ஹோம்வொர்க்கை சிறப்பாக செய்வார்கள்'' என்றாள்.
என் தோழியின் அணுகுமுறைக்கு ஒரு 'சபாஷ்’ போட்டுவிட்டு வந்தேன்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
'மாற மாட்டார்களா... மாப்பிள்ளை வீட்டார்..?’
அழகான, நற்பண்புகள் கொண்ட, ஆசிரியர் தொழிலுக்குத் தகுந்த முதுகலைப் பட்டம் பெற்ற பெண் அவள். பெண்ணின் தங்கைகள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். சம்பந்தம் பேசுவது

தொடர்பாக பையனின் சித்தப்பா, அந்தப் பெண் வீட்டுக்கு வந்தார் (பையனின் தந்தை இறந்துவிட்டார்). டிபன், காபி ருசித்து முடித்து பெண் பார்க்கும் படலம். வேண்டுமென்றே பெண்ணை அங்கும் இங்குமாக நடக்கவிட்டார். பெண்ணின் சர்ட்டிஃபிகேட்டுகளை வாங்கிப் பார்த்தார். ''உன் தங்கைகள் பரவாயில்லை... நீ மட்டும் ஏன் இப்படி ஆசிரியர் தொழிலுக்குப் படித்திருக்கிறாய்?'' என்று அந்தப் பெண் வருத்தப்படும்படி கேள்வி கேட்டார். இதுபோதாதென்று, இன்டர்வியூ பண்ணி வேலை கொடுப்பவர் போல், பெண்ணின் பெற்றோரிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்டு குடைந்தெடுத்தார். பெண்ணின் போட்டோ ஆல்பத்தை கேட்டு வாங்கி, சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாகப் புரட்டிப் புரட்டி பார்த்தார்.
காலையில் வந்த அவர், தேவையில்லாமல் தன்னுடைய நேரத்தையும், பிறருடைய நேரத்தையும் வீணாக்கிவிட்டு, ''ஒரு வாரத்தில் மாப்பிள்ளையின் சார்பாக போன் பண்ணுகிறேன்'' என்று கூறி, மதிய நேரத்தில் புறப்பட்டுச் சென்றார். நீண்ட நாட்களாக அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும், பிள்ளை வீட்டு பந்தாவை கைவிடாமல், பெண்ணையும் அவளை பெற்றவர்களையும் கிள்ளுக்கீரை போல நடத்தும் இதுபோன்றவர்கள் திருந்துவது எப்போது?!
- தி.பாலசுந்தரி, திருநெல்வேலி