நல்லவர்கள்!? க.பாலமுருகன் படங்கள்: தி.விஜய்
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் அஹமதுநகர் கன்டோன்மென்ட் செக்போஸ்ட்டில், 15 ரூபாய்க்குப் பதில் 180 ரூபாய் கொடுத்துவிட்டு கனத்த மௌனத்துடன் அந்த ஏரியாவைக் கடந்தோம். அடுத்து, ஷீரடி... இரவு முழுக்கத் தூங்காததால், எனக்கு கண்களைச் சுழற்றிக் கொண்டுவந்தது. கேபின் கதவோரம் சாய்ந்து அமர்ந்திருந்த நான், எப்போது தூங்கினேன் என்பது தெரியாமல் விடிந்த பிறகு கண் விழித்தேன். ''ஷீரடி போயாச்சா?'' என ஆயாசத்துடன் கேட்டபோது, ''100 கிலோ மீட்டர் தாண்டிட்டோம்'' என்றார் சேட்டு. சரவணன் தூங்கிக்கொண்டு இருந்தார். இவர்கள் எப்போது ஷிஃப்ட் மாறினார்கள் என்பதுகூடத் தெரியாது.

காலை 7 மணி. துலே என்ற ஊரைக் கடந்து சென்றுகொண்டு இருந்தோம். நமது பயணத்தில் டெல்லி என்ற இலக்கை அடைய, இன்னும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களைக் கடக்க வேண்டும். பயணம் தொடங்கி மூன்று நாட்கள் ஆகியிருந்தன. ஸ்ரீபூர் என்ற இடத்தில் காலை உணவுக்காக லாரியை நிறுத்தினோம். லாரியில் இருந்து கீழே இறங்கிய என்னால், நேராக நிமிர்ந்து நடக்க முடியவில்லை. பயணம் முழுக்க முழு உடலை நீட்டியோ அல்லது நாற்காலியில் அமர்வதுபோல சாய்ந்து அமர்ந்தோ, லாரியில் பயணிக்க முடியாது. அப்படி மூன்று தினங்கள் அமர்ந்திருந்ததன் விளைவு, ஆதி மனிதன்போல குனிந்தவாறு நடக்க ஆரம்பித்தேன். நிமிர முயற்சித்தால், கடுமையான வலி.
சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் புறப்பட்டபோது 12 மணி ஆகியிருந்தது. நெடுஞ்சாலையில் உள்ள டோல் பூத்தின் கட்டணங்கள் கட்டுபடி ஆகக் கூடியவை அல்ல.

அதனால், கிடைத்த இடங்களில் எல்லாம் வலதும் இடதுமாக கிராமத்து சாலைகளுக்குள் நுழைந்து காசை மிச்சம் பிடிப்பது லாரி டிரைவர்களின் சாமர்த்தியம். மேலும், நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கியரை நியூட்ரல் செய்து டீசலைச் சேமிப்பதும் உண்டு. இது ஆபத்தானது என்றாலும் அதிக வேகத்தில் செல்வது இல்லை என்பதால், பெரும்பாலான லாரி டிரைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நாம் பயணித்த லாரியின் டிரைவர்களான சரவணனும் சேட்டுவும், அவ்வப்போது நியூட்ரல் அடித்து ஓட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். மதியம் 2 மணி. மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் இருந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லாரியை ஓரங்கட்டினார் சேட்டு. அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லாரியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆளாளுக்கு டிரைவர்களிடம் ஏதோ கேட்க... அவர் மறுத்துக்கொண்டே இருந்தார். என்ன என்று புரியாமல் விழித்தபோது, விளக்கினார் சேட்டு.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓவர்லோடு இருந்தால், 2,000 ரூபாய் அபராதம். அது, கொள்ளளவைவிட சில கிலோக்கள் அதிகமாக இருந்தாலும் பொருந்துமாம். அதனால், எடையைக் குறைத்துக் காட்ட ஸ்டெப்னி டயர், ஜாக்கி, தார்ப்பாய் என எடையுள்ள பல பொருட்களை லாரியில் இருந்து எடுத்துச் சென்று, செக்போஸ்ட் தாண்டி தருவதுதான் லாரியைச் சூழ்ந்துள்ளவர்களின் வேலை. இவர்களுக்கு, பொருட்களுக்குத் தகுந்தபடி 50 முதல் 100 ரூபாய் கூலி. ஆனால், டயரை உருட்டிச் செல்வது, மற்றப் பொருட்களைத் தூக்கிச் செல்வது எல்லாமே செக்போஸ்ட் அதிகாரிகளின் கண் முன்னேதான் நடக்கிறது. அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் மாநில அரசின் முக்கியமான துறைகளின் ஒப்புதல் பெற்று, புறப்பட மாலை 5 மணி ஆகிவிட்டது.

பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்திலும் லாரிக்கு மாதம், வருடம் அடிப்படையில் ஒரு கேஸ் எழுதி ஃபைன் வசூலிப்பது வழக்கமாக இருக்கிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மாதம் 1,000 ரூபாய், 2,000 என இந்த கேஸ் இருக்கும். இது இல்லாமல் ஓவர்லோடு போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்குத் தனியாக அபராதம் செலுத்த வேண்டும். சரி, இவை எல்லாம் அரசுக்கு வருமானம் வாங்கித் தருவதற்கு என வைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்களுக்குத் தரவேண்டிய மாமூலும் கொடுத்துவிட வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறார்கள்.
சில மாநிலங்களில், காவல் துறையினர் மிக நல்லிதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது, மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணம் கொடுத்தால் போதும்; ஆயிரக்கணக்கில் சென்றுவரும் லாரிகளில் பணம் கொடுத்த லாரி, கொடுக்காத லாரி என்று எப்படி அடையாளம் காண்பது? அதற்கும் சிறப்பான ஒரு வழி உண்டு. பணம் வாங்கிக்கொண்டு ஒரு சீட்டு தருகிறார்கள். அதில் நாய், குடை அல்லது டெலிபோன் படம் இருக்கிறது. அதைக் காண்பித்தால் போதும்; அதில், தேதி அல்லது மாதம் இருக்கிறது. ஆஹா... 'அருமையான திட்டம்’தான். அதேசமயம், குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து ஒருநாள் தாண்டியிருந்தாலும் பணம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதில் பாரபட்சம் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஆனால், இந்த சீட்டை டூப்ளிகேட் செய்துவிட்டால்? அதுதான் முடியாது. ஒவ்வொரு மாதமும் இந்தச் சீட்டு வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில், அடையாளங்களில் மாறிக்கொண்டே இருக்கும். இதன் சங்கேதங்கள் தெரியாமல் டூப்ளிகேட் செய்து மாட்டிக்கொண்டால்... பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. அதற்கும் நீங்கள் தனியாக அபராதம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான்.
இப்படி விஞ்ஞானப்பூர்வமாகப் பணம் வசூலிப்பதில், 'எந்த மாநில போலீஸ் சிறந்தது’ என அகில இந்திய அளவில் ஒரு போட்டியே நடத்தலாம். இதை எல்லாம்விட கொடுமை, எந்தத் துறை என்றே தெரியாமல், ரசீது கொடுத்து பணம் பிடுங்கும் கும்பல்களும் இருப்பதுதான்.
அதாவது, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 200 ரூபாய் கொடுத்து அந்த ரசீது வாங்க வேண்டும். அந்த ரசீதில், மோட்டார் சட்ட விதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், யார் எதற்காக இதை வசூலிக்கிறார்கள் என்ற விபரம் மட்டும் இல்லை. லாரியின் பின் பக்கம் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்; ரிஃப்ளெக்ட்டர் பொருத்த வேண்டும் என்றுதான் இந்தக் காசு வாங்குகிறார்கள். ஆனால், அதைச் செய்வது இல்லை.
லாரி டிரைவர்களிடம், பான் கார்டைக் காட்டினால்கூட அரசு அதிகாரி என்ற பய உணர்வு ஏற்படுகிறது. இந்த பயம்தான் இவர்களின் மூலதனம்.
(நெடுஞ்சாலை நீளும்)