மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 26

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

கிலனும் வினோதினியும் சொர்க்கத்துக்கு வந்தவர்கள் போல சந்தோஷமாக இருந்தனர். அந்த விசாலமான அறையில் வேலை நேரம் போகத் திகட்டத் திகட்ட காதல் செய்தனர்.

''நீதான் இங்கே முன்னாள் புரட்சிக்காரனா?'' - தன் மடியில் படுத்திருந்த அகிலனின் நெற்றி முடியைத் தன் விரல்களால் சுழற்றிவிட்டபடி கேட்டாள்.

''உனக்கு யார் சொன்னாங்க வினோ?''

''இந்த உலகமே சொல்லுதே... டாக்டர் மைக்கேல்கூட, 'உன்னிடம் பேச விரும்பவில்லை. நீ ஒரு அவசரக்காரன்’னு சொன்னாரே...''

''ஓ... அதுவா! அப்புறம் என் கோபம் எல்லாம் நியாயம்தான்னு அவரே சொன்னாரே...''

''இப்ப, புரட்சி எல்லாம் என்னாச்சு?''

''அப்படியேதான் இருக்கு. நடுவுல இப்பத்தான் கொஞ்ச நாளா இந்தக் காதல்'' - அகிலன், அவள் விரல்களைச் சொடுக்கிவிட்டான்.

ஆபரேஷன் நோவா - 26

''புரட்சிக் காதலா?''

''மார்க்ஸ் - ஜென்னி, லெனின் - க்ரூப்ஸ்கயா, சே குவேரா - அலெய்டா... மாதிரினு வெச்சுக்கோயேன்.''

''எதுக்குப்பா பெரிய மனுஷங்க பேரை எல்லாம் டேமேஜ் பண்றே?''

''புரட்சியாளர் என்றால் வெளிநாட்டில்தான் இருப்பார்களா? உங்கள் பிரபாகரன் - மதிவதனி நினைவுக்கு வரவில்லையா?'' - ழீன் கதவு இல்லாத அந்த அறைக்குள் சிரித்தபடி நுழைந்தாள்.

அகிலன், வினோதினியின் மடியில் இருந்து பதறி எழுந்து, பழக்கதோஷத்தில் வெட்கப்பட்டான். வினோதினியும் மரியாதை நிமித்தமாக எழுந்து, காது கருவியைப் பொருத்திக்காண்டாள்.

''வெட்கம் எல்லாம் தமிழில் கொஞ்சம் அதிகம்தான்!''

''உங்களிடம் கேட்க வேண்டும் என்று இருந்தேன். உங்களுக்குத் தமிழ் மீது எப்படி ஆர்வம் வந்தது? இதற்கு முன்னர் ஆதிச்சநல்லூர் பற்றிச் சொன்னீர்களே..!'' என்று கேட்டான் அகிலன்.

''என்னுடைய ஆராய்ச்சியே அதுதானே! 2,300 வருடங்களுக்கு முன் ரோமானியர்களின் செனட்டில் ஒரு விவாதம். 'டமெரிகாவின் மொள்குக்கும் பர்த்திக்கும் நாம் அடிமையாகிவிட்டோம்; நம்முடைய தங்கத்தை அவர்கள் காலடியில் கொண்டுபோய்க் கொட்டுகிறோம். இது நல்லதுக்கு அல்ல’ என்று அந்த விவாதம், வரலாற்றில் பதிவாகியுள்ளது. அது அரிஸ்டாட்டில் காலகட்டம். அதில் இருந்துதான் தமிழ் மீது ஈடுபாடு வந்தது.''

வினோதினி புருவம் சுருக்கிப் பார்த்தாள். ''எனக்கும் புரியவில்லை'' என்றான் அகிலன்.

''டமெரிகா என்பது தமிழகம்... புரியவில்லையா..? மொள்கு என்பது மிளகு; பர்த்தி என்பது பருத்தி.''

''எனக்குத் தெரிந்து உலகிலேயே தமிழ்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். ஐரோப்பிய மொழிகள் எல்லாம் ஆயிரம் வருட சரித்திரத்தைத் தாண்டவில்லை. உலக அளவில் கிரேக்கம், சீனம் என்று 4,000 வருட சரித்திரம்தான் இருக்கிறது. தமிழில்தான் 10 ஆயிரம், 20 ஆயிரம் வருட ஆதிச்சநல்லூர் ஆவணங்கள் இருக்கின்றன.

50 ஆயிரம் வருடங்களுக்கு முன் கோண்டுவானாவில் இருந்து பிரிந்துபோன ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடிகளின் மொழியில் தமிழ் இருக்கிறது'' - ழீன் பேசப் பேச, ஒருவித பூமிப் பாசம் அகிலனைப் பிடித்து ஆட்டியது. '193 டிரில்லியன் கி.மீ. தூரத்தில் தமிழ்ப் பற்றா?’ என்ற பரவசம்.

''பல முறை கடலால் அழிக்கப்பட்ட சமூகம் அது. இப்போதுள்ள குஜராத்தின் காம்பே துறைமுகம், தமிழ் பிராமி இலக்கியத்தில் கொம்பைத் துறைமுகம் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல் நங்கூரம் கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானில் பேசப்படும் பிராக்யூ மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் கிடைத்த சித்திர எழுத்துகள், வாழ்க்கைத் தடயங்கள் எல்லாமே தமிழகக் கல்வெட்டுகளில் இயைந்து போகின்றன. இந்தியாவின் மேற்குக் கரை முழுக்கத் தமிழ்த் தொல்குடிகள் இருந்தனர். கிழக்குக் கடற்கரையில் ஒடிசா வரை... கடாரம் கொண்டான் தெரியும் இல்லையா? அசோகரின் கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்கள் அவருக்கு உதவியதாகச் சொல்லியிருக்கிறார்.''

''இனிமேல் அதை எல்லாம் பேசி என்ன ஆகப்போகிறது?'' என்றாள் வினோதினி.

''ஆகும்...'' - ழீன் ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, ஆலீஸ் அங்கே பதற்றமாக ஓடி வந்தாள்.

''டாக்டர் மைக்கேல்... மைக்கேல்...'' என்றாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. சைகையாலேயே தன் பின்னாடி வரச் சொல்லிவிட்டு, வந்த திசையிலேயே ஓடினாள்.

அவர்கள் குடியிருப்பின் வாசலில் மைக்கேல் கிடந்தார்.

''கேப்ரியல்தான் கொண்டுவந்து போட்டார்'' என்றாள்.

''கேப்ரியலா?''

''ஆமாம். 'எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தப்பித்துப்போகப் பார்த்தான். இந்த ஆளை வைத்துக்கொண்டு ஒரு புண்ணியமும் இல்லை’ என்று திட்டிவிட்டு ஹைட்ரோகாப்டரில் பறந்துவிட்டார்'' என்ற தகவலையும் சொன்னாள் ஆலீஸ்.

நால்வரும் மைக்கேலை உள்ளே தூக்கிவந்து ஆலீஸின் படுக்கையில் கிடத்தினர்.

மைக்கேல், சுற்றி நிற்பவர்களை இறைஞ்சலாகப் பார்த்தார். ''என் மகள் ரோஸியை, கேப்ரியல் கொன்றுவிட்டான்'' என்றார் திணறலோடு.

''அம்மாவையா?'' என்று எல்லோரும் கேட்பதற்குள் அவர் மீண்டும் மயங்கிவிட்டார்!

''நீங்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை''  - வடிகட்டிய கோபத்துடன் சொன்னார் பில்கேட்ஸ்.

அவருடைய சுபாவத்துக்கு இது ரொம்பவும் அதிகம். மத்தியக் கேந்திரத்தின் நான்காவது மாடியில் ஆக்சிஜன் முடுக்கம்பெற்ற சுத்தமான அறையில் இரண்டு பேர் மட்டும் இருந்தனர். இன்னொருவர் கேப்ரியல்.

'என்ன சொன்னேன்... எப்படி நடந்துகொள்ளவில்லை..?’ என்று பார்வையிலேயே விசாரித்தார் கேப்ரியல். சாதாரண பில்கேட்ஸுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இருந்தது அந்த நடவடிக்கை. 'அழைத்து வரும்போது சாக்லேட் கலந்து பேசியவர் இவர்தானா..? நாம்தான் ஆள் தெரியாமல் பேசுகிறோமா..?’ என்று அதிர்ச்சியாக இருந்தது பில்கேட்ஸுக்கு.

''ஒன்று சொல்கிறேன் பில். இது யூஸர் ஃப்ரெண்ட்லி உலகம். கோபப்படவேண்டியதே இல்லை. நீங்கள் நினைத்தால், உங்களுக்குத் தேவையானபடி இந்த உலகத்தை வடிவமைக்கலாம். முர்டோக் வந்திருக்கிறார்; ஏஞ்சலினா வந்திருக்கிறார்; மக்களை எப்படி வேண்டுமானாலும் ஊறுகாய் போடுங்கள்... ஆனால், அவர்கள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

''ஊறுகாய் என்று சொல்லாதீர்கள்.  பொழுதுபோக்குவது...''

''எனக்குப் பொழுதே இல்லை. அப்புறம் எப்படி அதைப் போக்குவது?''

பில்கேட்ஸ், தன் முன் இருக்கும் மனித இயந்திரத்தை வினோதமாகப் பார்த்தார்.

ஆபரேஷன் நோவா - 26

''சினிமா பார்க்கட்டும்; சாட் பண்ணட்டும்; மந்தை மந்தையாகப் போய் சாமி கும்பிட்டு அழியட்டும். எனக்கு மக்கள் வேண்டும். அப்போதுதான் நான் அவர்களை ஆள முடியும்.''

''உங்கள் கெடுபிடியெல்லாம் உங்களுக்கு எதிராகத் திரும்பும். ஹிட்லர், முசோலினி என்று மக்கள் நிறையப் பார்த்துவிட்டார்கள்.''- நிதானமாகச் சொன்னார் பில்கேட்ஸ்.

கேப்ரியல் அதை ரசித்தார்; சிரித்தார். ''அவர்கள் நாடு பிடித்தார்கள்; நான் உலகம் பிடிப்பவன். என்ன செய்வது பில்... இந்த ஜனங்களைத் திருத்தவே முடியவில்லை. 300 வயசு வரைக்கும் வாழச் சொன்னால் வலிக்கிறது இவர்களுக்கு.

20 வயதிலேயே சர்க்கரை நோய் வந்து டாக்டருக்கு அழுகிறார்கள். நான் நோயை அகற்றிவிட்டேன். உழைப்புக்கு ஏற்ற உணவு செலுத்துகிறேன்; வேலை தருகிறேன்; அவனவனுக்குப் பிடித்த பெண்ணோடு ஆனந்தமாக இருக்கச் சொல்கிறேன். ஒருத்தனும் சரிப்பட்டு வரவில்லை. இவர்களுக்கு ஏதோ குறைகிறது. அதனால்தான் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறேன்'' - கேப்ரியல், பணிகிறாரா... மிரட்டுகிறாரா என்பது பில்கேட்ஸின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. பில்கேட்ஸ் பயந்துதான் போனார். அவசர உதவியாக போலீஸையும் நாட முடியாது.

''உங்கள் திட்டம் என்ன என்பதை என்னிடம் முழுதாகச் சொல்லுங்கள். என்ன பண்ண முடியும் என்று சேர்ந்து யோசிக்கலாம். எல்லாவற்றையும் விஞ்ஞானத்தின் மூலமாகச் சாதித்துவிட முடியாது. பலர் இதயத்தால்தான் தீர்மானிக்கிறார்கள்.''

''என்ன பைத்தியக்காரத்தனம்? இதயம் என்பது, ரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு. அதில் எப்படித் தீர்மானிக்க முடியும்?''

''அது பைத்தியக்காரத்தனம் அல்ல. அவர்கள் உங்களைப் போன்றவர்களைப் பைத்தியங்கள் என்பார்கள்.''

இப்போது யார் பைத்தியம் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை என்று கேப்ரியல் நினைத்தார். தாம் இரண்டு உலகங்களுக்கும் அதிபதியாக இருக்க விரும்புவதைச் சொன்னார். இரண்டிலும் மக்கள் வாழ்வதற்கு விரும்ப வேண்டும்.

''உங்கள் டீமில் யாரை எல்லாம் இங்கே அழைத்து வர வேண்டும் என்று பட்டியல் கொடுங்கள்; எல்லோரையும் இன்டர்நெட்டால் இணையுங்கள்; ஃபேஸ்புக், ட்விட்டர், வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுகள் என்று எல்லாக் கும்மாளங்களையும் இறக்குமதி செய்யுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். சேட்டிலைட் தயாராக இருக்கிறது. 4 ஜி-யில் இருந்தே தொடங்குங்கள். மக்களுக்கு சாப்பாட்டைவிட செக்ஸைவிட இது தேவையாக இருக்கிறது'' என்றார்.

பில்கேட்ஸ் யோசித்தார். புதிய உலகில் இப்படி ஒரு சவாலா? ''நான் பட்டியல் தருகிறேன். நான் சொல்கிற நபர்கள், உபகரணங்கள்... எல்லாம் வந்து சேர்ந்தால்தான் வேலையை ஆரம்பிக்க முடியும்'' என்றார்.

ஆபரேஷன் நோவா - 26

பாக்கெட்டில் இருந்து சின்ன நோட் பேடை எடுத்து நீட்டினார் கேப்ரியல். மறந்துவிட்ட மளிகை சாமான்களை ஒவ்வொன்றாக ஓடிப் போய் வாங்கிவருவது மாதிரி இயலாது. மிகத் தீவிரமாக எல்லாவற்றையும் பட்டியலிட்டார்.

கேப்ரியல், அந்தப் பட்டியலைப் பார்த்தார். நீளமாக இருந்தது.

இதே போல் ஏஞ்சலினா அவரிடம் ஒரு பட்டியல் கொடுத்திருந்தார். அதில் ஜேம்ஸ் கேமரூன் முதல் டாம் க்ரூஸ் வரை இருந்தார்கள். இதையெல்லாம் முன்னரே செய்து முடித்திருக்கலாம். வந்தோமா, ஆண்டோமா என்று இல்லாமல் இப்போதுதான் முதல் ஐந்தாண்டுத் திட்டம் போலத் திட்டமிட வேண்டியிருப்பதால் சின்ன எரிச்சல் ஏற்பட்டது, கேப்ரியலுக்கு. மரணமற்ற நமக்கு என்ன அவசரம்? நிதானமாக ஆண்டு அனுபவிக்க வேண்டியதுதானே என்றும் இருந்தது.

ஆனால், அந்த நிதானத்திலும் ஓர் அசுரத்தனம் இருந்தது. வேகமாகக் குடியிருப்புகள் எழுந்தன. ஹைட்ரோகாப்டர் தொழிற்சாலை, சிந்தட்டிக் அக்ரோ, சுரங்கப் பணிகள்... சாலைகளால் நகரங்களை இணைக்கும் முறைக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். எல்லா இடங்களுக்கும் ஹைட்ரோகாப்டர்கள்தான். மேம்பாலங்கள், சாலைகள் என்று எதுவுமே அங்கு இல்லை. ஒரு கோடிப் பேர் வந்தாலும் பெட்டிப் படுக்கையை வைத்துவிட்டு அன்றில் இருந்தே வாழ ஆரம்பிக்கலாம். அவ்வளவு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன.

இந்தப் பரபரப்பில் பில்கேட்ஸ் கொடுத்த பட்டியலில் இருந்த ஒரு சங்கேதக் குறிப்பை கேப்ரியல் கவனிக்கவில்லை!

- ஆபரேஷன் ஆன் தி வே...