மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 2

வட்டியும் முதலும்
News
வட்டியும் முதலும்

'பெண்மைக்குள் உண்மை எது... பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது?

'பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும், அது பொம்பளைக்கும்   தெரியும், அந்த ஆழத்துல என்ன உண்டு   யாருக்குத்தான் தெரியும்?’  

- போன வாரத்தில் ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு, பக்கத்து டீக்கடைக்குப் போனபோது, யாரோ ஒருவர் சத்தமாகப் பாடிக்கொண்டு இருந்தார். ஒயின் ஷாப்புகளில் இந்தப் பாடலை வெகு ஆத்மார்த்தமாக வெறிகொண்டு பாடும் பலரைப் பார்த்து இருக்கிறேன். இப்படி அதிகாலை தேநீர் கடையில் ஒருவர் உலகம் மறந்து பாடுவதைப் பார்க்க விசித்திரமாக இருந்தது. அப்போது இருந்து 'பெண் மனசு’ என்ற வார்த்தை என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. அந்தச் சிறு சொல் முன்னும் பின்னுமாக ஏராளமான நினைவுக் கண்ணிகளைக் கோத்துக்கொண்டு பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.

'தாயும் பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய சேயும் பகை, யுறவோரும் பகை, யிச்செகமும் பகை ஆயும் பொழுதி லருஞ்செல்வம்    நீங்கில்;   இக்காதலினாற் தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே’ - இது பட்டினத்தார் பாட்டு. ஆட்டம் எல்லாம் முடிந்து, அனைத்தையும் புறந்தள்ளி இறைவனின் பாதங்களில் சரண் அடையப் போகும்போது இந்தப் புலம்பல். தேடலின் முடிவில் எல்லாவற்றையும் பகை என்பவர், கொண்ட பெண்டிரைப் பெரும் பகை என்பது ஏன்?

வட்டியும் முதலும் - 2

'பெண்மைக்குள் உண்மை எது... பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது?

சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, அபார்ட்மென்ட் படிக்கட்டில் வழுக்கி விழுந்து, இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. 70 வயதுப் பெரியம்மா. ஸ்டான்லி மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்தது. நண்பன் பணத்துக்கு அங்கே இங்கே என அலைந்ததால் நான்தான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டேன். ஆபரேஷன் முடிந்து அரை மயக்கத்தில் அவரைப் படுக்கையில் கொண்டுவந்து போட்டார்கள்.

''பாட்டிக்கு அனஸ்தீஸியா கொடுத்திருக்கு... பழைய ஞாபகம் எல்லாம் வரும். கொஞ்ச நேரம் எதாவது பொலம்பிட்டு இருப்பாங்க...'' என்று சொல்லிவிட்டுப் போனார் நர்ஸ். நான் பக்கத்தில் உட்கார்ந்து, அம்மாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சன்னமான குரலில் ஏதேதோ முனகிக்கொண்டு இருந்தவர், சட்டென்று சத்தமாக... ''ஒரே ஒரு முத்தம் கேட்டான். பாவிப் பய... ஒரே ஒரு முத்தம் கேட்டான்... தராம வுட்டுட்டேன். போடி... போடி... அய்யோ... ஒரே ஒரு முத்தம் கேட்டான்'' - எனக் காற்றில் கை வீசியபடி புலம்ப ஆரம்பித்தார். இடைவெளிவிட்டு விட்டுச் சில நிமிடங்கள் இதையே சொல்லிவிட்டு மெதுவாகத் தூங்கிப்போனார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 70 வயதில்அனஸ் தீஸியா கொடுக்கப்பட்ட ஒரு பாட்டி, தன் நினைவு அடுக்குகளில் சஞ்சரித்து ஒரு முத்தத்தைப்பற்றிப் பேசுவது சொல்ல முடியாத உணர்வுகளை ஏற்படுத்தியது. எப்போதைய நினைவு அது? அந்த முத்தம் யாருக்கானது? கொடுக்கப்படாத ஒரு முத்தத்தை எவ்வளவு காலமாகக் கனவு களில் சுமக்கிறாள் இந்த மூதாட்டி?

கொடுக்க முடியாத ஒரு முத்தம், தீண்டல், வார்த்தை, காமம், தாய்மை எல்லா பெண்களிடமும் இருக்கின்றனவா?

அழகும் திடமும் அத்தனையும் உதிர்ந்துவிட்ட பிறகு, மரணத்தின் நிழல் படிந்த அந்திமத் தின் தெருவில் மனம் எங்கும் கனக்கும் ரகசியங்களோடு எத்தனை எத்தனை பெண்கள் செத்துப்போகக் காத்திருக்கி றார்கள் என ஏராளமான கேள்விகளை எழுப்பியது அந்த நிகழ்வு.

இன்னொரு முறை ஒரு மருத்துவ மனைக்குப் போயிருந்தபோது, ஒருவர் தன் மனைவியை அபார்ஷனுக்காக அழைத்து வந்திருந்தார். கருவைச் சுமக்கிற தெம்பு அவர் உடலில் இல்லை. அபார்ஷன் முடிந்து அனஸ்தீஸியா கொடுக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை அறைக்குக் கொண்டுவந்தார்கள். உள்ளே ஓடிய கணவரை மறித்து டாக்டர் சொன்னார்,

''சார்... அவங்களுக்கு அனஸ்தீஸியா கொடுத்திருக்கு. உங்களைத்தான் நல்லா திட்டுவாங்க. கொஞ்ச நேரத்துல சரியா கிடும்.'' அவர் உள்ளே ஓடினார். நான் டாக்டரிடம் கேட்டேன்,

''ஏன் டாக்டர் அப்படி?''

வட்டியும் முதலும் - 2

''அப்படித்தான் சார்... அபார்ட் பண்ண பிறகு அவங்களுக்கு நிறைய வலி இருக்கும். எல்லாத்துக்கும் ஹஸ்பண்ட்தானே கார ணம்னு சப்-கான்ஸியஸ்ல இருக்கும். எதாவது திட்டிப் புலம்பிட்டே இருப்பாங்க!''

கொஞ்ச நேரம் கழித்து வந்த அந்த நபர்,  ''ஆமா டாக்டர்... ஏதேதோ சொல்லித் திட்றா. பார்க்கவே கஷ்டமா இருக்கு... வலி குறைஞ்சிரும்ல டாக்டர்!'' என்றார். சிறிது நேரத்தில் மனைவியைத் தோளில் சாய்த்த படி அந்தக் கணவர் நீண்ட வராந்தாவில் நடந்து சென்ற காட்சி என் மனதில் ஒரு நிழல் புகைப்படமாகிவிட்டது.

இதைப்பற்றி அப்பாவான நண்பர் ஒருவரிடம் சொன்னபோது சொன்னார், ''அடப் போடா... சுகப் பிரசவம்னாலே, பிரசவ நேரத்துல வலி தாங்க முடியாம புருஷனைக் காய்ச்சி எடுத்துருவாளுங்க. எம் பொண்டாட்டில்லாம் என்னைப் 'போடா... வாடா’னு ஏசித் தள்ளிட்டா. அப்பத்தான் தெரிஞ்சுது பொம்பளைங்க வலியை நம்மளால காலத்துக்கும் புரிஞ்சுக்க முடியாது சாமீ!''  

அந்தக் கணம் தோன்றியது... பெண்களின் சப்-கான்சியஸில் இன்னும் எவ்வளவு அன்பு இருக்கும்..? இன்னும் எவ்வளவு கோபம் இருக்கும்?

வசந்தா அத்தை... எங்கள் ஏரியா கவுன்சிலர். அது பெண்களுக்கான வார்டு என்பதால், அ.தி.மு.க. லோக்கல் புள்ளியான மாமா, அத்தையை நிறுத்தி கவுன்சிலராக்கிவிட்டார். இரண்டு முறை 'கோழி’ சின்னத்தில் அத்தை ஏகப்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து கவுன்சிலராக வந்தது. நிறைய இடங்களைப்போலவே இங்கும் பேருக்குத்தான் அத்தை கவுன்சிலர், அதிகாரம் எல்லாம் மாமாதான்.

பஞ்சாயத்து போர்டு மீட்டிங்குகளுக்கு மட்டும்தான் அத்தை போகும். முந்தியை இழுத்து இழுத்துச் செருகிக்கொண்டே, வேடிக்கை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு வரும். மற்றபடி காலையில் திண்ணையில் குத்தவைக்கிற பஞ்சாயத்தில் இருந்து, நிதி தள்ளுவது வரை கவுன்சிலர் வேலை அத்தனையும் செய்வது மாமாதான். பழ வாசம் வீச வீச... மாமா எப்போதும் லோக்கல் பிரச்னைகளில் பிஸியாகத் திரிவார். அத்தை, மகமாயிக்கு மாவிளக்கு போட்டு, பிள்ளைகளுக்கு ஈருளியில் பேன் எடுத்து, பால் டிப்போவில் பேரம் பேசி, சீரியல் பார்த்து... வாழ்ந்தது. எப்போதாவது பக்கத்து டவுனுக்கு கட்சிப் புள்ளிகள் வந்தால், அத்தைக்கு கட்சிக் கரைப் புடவை கட்டிக் கொண்டுபோய் நிறுத்திவிடுவார் மாமா. ''அங்கே போய் என்ன பேசுவீங்க அத்த..?'' என்றால், ''போடா, அந்த பொசகெட்ட பயலுவள்ட்ட நான் என்னா பேசுறது?'' எனச் சிரிக்கும். மாமாவோடு தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸுக்குப் போய்விட்டு வரும் தினங்களில், கூடை நிறைய மாம்பழமும் 'பாம்பே ஸ்வீட்ஸ்’ அசோகா அல்வாவும் வாங்கி வரும்.

போன வருஷம் மாமா செத்துப்போனார். திடுதிப் என்று ஒரு அதிகாலை நெஞ்சு வலி வந்து தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரி போனவர் அப்படியே போய்விட்டார். கட்சிக் கொடி போர்த்தப்பட்டு, கரகாட்டம் பின்னி எடுக்க, சந்திக் கரையில் அத்தை 'மடேர் மடேர்’ என நெஞ்சில் அறைந்து அழ...  மாமா குட் பை சொன்னார்.

அடுத்த மாதம் திண்ணையில்கிடந்த மாமாவின் நாற்காலியில் அத்தை வந்து உட்கார்ந்தது. உண்மையில் அது அற்புத மான காட்சி. குளம் தூர் வாருவதற்காக வந்த வசூல் பணத்தை வைத்துக்கொண்டு, ஊர்க்காரர்களிடம் அத்தை பஞ்சாயத்து பேசியபோது, ஊரே திகைத்து நின்றது. அன்று முதல் அத்தைதான் நிஜமாகவே கவுன்சிலர். பஞ்சாயத்து போர்டில் இருந்து கலெக்டர் ஆபீஸ் வரை ஒத்தை ஆளாகப் போய் வந்ததையும், அங்கே பேசியதையும் பல பேர் கதை கதையாக இப்போது பேசுகிறார்கள். இலவச கலர் டி.வி. கொடுக்கும்போது வந்த தகராறில், புடவையை வரிந்து கட்டிக்கொண்டு தெருவில் இறங்கிக் கத்தியபோது, ஊரில் அத்தனை ஆண்களும் அடங்கிப்போனார்கள். திண்ணையில் உட்கார்ந்து மாமா கத்தும்போது, கொல்லை யில் மீன் ஆய்ந்துகொண்டு இருந்த அத்தையா இது என இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. அத்தைகளைப் புரிந்துகொள்வதற்கு மாமாக்கள் உயிருடன் இருப்பது இல்லை!

'பிள்ளைகள் தூங்கிவிட்டன’ என்ற நினைப்பில் நாங்கள் விழித்து இருப்பது தெரியாமல், என் அம்மா எப்போதும் பின்னிரவுக்குப் பின்தான் அப்பாவோடு சண்டை போடும். ஒருமுறை 'உங்களுக்கு என்ன பழக்கம்தான் இல்லை?’ என்று அம்மா சொன்ன பட்டியல் இப்போதும் என் தூக்கத்தைக் கலைத்துப்போடுகிறது. இப்போது வரை இப்படி எத்தனை ரகசியங்களை அம்மா பூட்டிவைத்து இருக்கிறதோ?

வனிதா அக்கா ஒருமுறை எதற்காகத் தற்கொலை முயற்சி செய்தது என அவள் புருஷனுக்கே இன்று வரை தெரியவில்லை. காதலனுடன் சில வருடங்கள் 'லிவிங் டு கெதர்’ வாழ்ந்த கலகலப்பான தோழி, அவனுடன் சண்டை வந்து, எங்கோ டெல்லி பக்கம் ஒருவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு போய், இன்று வரை யாருடனும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறாள். கல்யாணமாகி 20 வருடங்களாகி குழந்தை இல்லாத விமலா அத்தை... ஊரில் திரியும் அத்தனை குழந்தைகளையும் மடியில் போட்டுக் கொஞ்சும். விமலா அத்தையின் கண்களில் ஆயிரமாயிரம் குழந்தைகள் சிரிப்பதை யார் அறிவார்?

மாதா கோயில் ஹாஸ்டலில் எப்போது போனாலும் வீடியோவில் 'மரோசரித்ரா’ படத்தை ரசித்து ரசித்துப் பார்த்துக்கொண்டு இருக்கும் லீமா சிஸ்டர் எதற்காக கன்னியா ஸ்திரி ஆனார்?

இள வயதில் கணவனை இழந்து ஒற்றை ஆளாக நின்று பிள்ளைகளை ஆளாக்கும் தாய்களை, ஒரே நாளில் பிறந்து, வளர்ந்த மண்ணில் இருந்து பிடுங்கிக்கொண்டு எங்கோ ஊன்றி விருட்சமாகும் சகோதரிகளை, அழுக்கு கைப்பை நிறையக் கனவுகளோடு எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் தேய்ந்து கருகும் தோழிகளை, மிகப் பெரிய அரசுப் பொறுப்புகளில் சர்வீஸ் கமிஷன் துறைகளில் அவமானங்களையும் வலி களையும் பொறுத்து முட்டி முளைக்கும், பெரும் குடும்பத்தைத் தோளில் சுமந்து உழைக்கும் பெண்மணி களை... எவ்வளவு பேரைப் பார்க்கிறோம்.

வட்டியும் முதலும் - 2

ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி என இன்றைக்கு இந்தியாவின் மூன்று பெண் முதல்அமைச்சர்களும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாத, தனி நபர்கள் என்பது ஆச்சர்யமான ஒற்றுமை! இந்த இடத்துக்கு இவர்கள் கடந்து வந்த பயணம் எவ்வளவு வலி மிகுந்தது என்பதை அவர்களே அறிவார்கள். வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!        

சமீபத்தில் பழைய வகுப்புத் தோழி தன் குழந்தையின் பிறந்த நாளைக்கு அழைத்து இருந்தாள். புறநகரில் இருக்கும் அவள் வீட்டில் என்னையும் சேர்த்து ஏழு பேர்தான் இருந்தோம். அவளது அப்பா உள் அறையில் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்தார். அவளே பலூன்களை ஊதிக் கட்டி, கொதித்துக்கொண்டு இருந்த பாயாசத்தை இறக்கி, குழந்தைக்குப் புது டிரெஸ் போட்டு, கேக் வெட்டவைத்தாள். டி.வி. மேல் இருந்த புகைப்படத்தில் அவளும் அவள் கணவனும் குழந்தையோடு சிரித்துக்கொண்டு இருந்தார்கள். குழந்தை மெழுகுவத்தி அணைத்து, கேக் வெட்டி, மொபைலில் போட்டோக்கள் எடுத்து... என்னை வழியனுப்ப வெளியே வந்தாள் தோழி. உள்ளே பிளாஸ்டிக் பூவில் சுழலும் மெழுகுவத்தியோடு குழந்தை தனியே விளையாடிக்கொண்டு இருந்தது.

''ஏம்மா... உன் ஹஸ்பண்ட் எங்கே..?''

''ஓ... உனக்குத் தெரியாதுல்ல. நாங்க இப்போ தனித் தனியாத்தான் இருக் கோம்!''

''ஏன்..?''

''அவனால எங்களுக்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியலைடா. அவனுக்கு அது பிடிக்கலையானும் புரியலை. நிறையப் பிரச்னை. டைவர்ஸ் அப்ளை பண்ணலா மானு யோசிக்கிறோம். நிஜமா என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை முருகா!''

''என்ன இது... முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்கம்மா!''

''இல்லப்பா... நிறையப் பேசியாச்சு. இப்போதைக்கு எந்த முடிவும் வரலை!'' கொஞ்ச நேரம் உள்ளே விளையாடும் குழந்தையையே பார்த்துவிட்டுத் திரும்பியவள், ''எங்க அப்பா, இவன்... யாரையுமே என்னால புரிஞ்சுக்க முடியலை. இந்த ஆம்பளைங்க ஏன் இப்பிடி இருக்காங்க..?'' என்று கேட்டாள்.

கண்ணீர் உடையும் ஒரு பெண்ணின் கேள்வி என்னை அங்கே இருந்து துரத்தியது.

வரும்போது தோன்றியது... இங்கே ஏராளமான பெண் பட்டினத்தார்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் அனஸ்தீஸியா கொடுத்தால்... உலகத்தில் ஓர் ஆணும் வாழ முடியாது!    

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan