
இந்த வாரம் : கலாப்ரியாபடம் : எல்.ராஜேந்திரன்
பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!
##~## |
ஆற்றின் படித் துறையில் நின்றுகொண்டு பொரி யைத் தூவியதும் ஆழத் தில் இருந்து வந்துமொய்க்கிற மீன் கூட்டம்போல, இந்த யாத்ரீகனின் நினைவுகளுக்குள் இருந்து மேல் எழும்பி, ஏதேதோ எண்ணங்கள் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன... 'நானும் விகடனும்’ என்ற தலைப்பை அசைபோட ஆரம் பித்ததும்.
எழுத்துக் கூட்டிப் படிக்கிற ஆறு அல்லது ஏழு வயதுக் காலத்து நினைவு கள்கூட பசுமை மாறாமல் படம்விரிக் கின்றன.
விகடன் என் அதி முக்கியமான பால்ய கால நண்பன். விகடன் என்றதும் முதல் நினைவாக வருவது, கோபுலுவின் கார்ட்டூன் ஒன்று. நன்றாக நினைவு இருக்கிறது. ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். கோபுலு, 'அணு ஆயுத பூதம்’ ஒன்று, தன் கூரிய நகம் வளர்ந்த கைக்குள் ஐம்பெரும் பூதங்களையும் பிடித்துக் கசக்கிக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டு இருப்பார். அதைப் பார்க்கும்போது 'பாட்டிகள்’ சொல்லிப் பயமுறுத்துகிற 'கொப்பரை முழுங்கி’ இதுதானோ என்று பயமாக இருக்கும். ஆனால், அதைக் காட்டி பக்கத்து வீட்டு கண்ணனைப் பயமுறுத்த, அந்த விகடனை நான் எடுத்துவைத்து இருந்தேன். அவனைப் பயமுறுத்தி என் பயத்தைப் போக்கிக்கொண்டு இருந்திருக்கி றேன் என்று இப்போது தோன்றுகிறது. அப்போது எல்லாம் தொடர்கதைகளை வாரம்விடாமல் பிரித்து எடுத்து, பைண்ட் செய்துவைத்துக்கொள்வார்கள். நான் பிறப்பதற்கு முந்தைய காலத்து விகடனின் பைண்டிங்குகள் எல்லாம்கூட எங்கள் வீட்டில் உண்டு. வண்ணதாசன் வீட்டில் கணக்கில் அடங்காத புத்தக பைண்டிங்குகள் உண்டு.

அப்புறம், 'ஒளவை சுழலும் படிப்பகம்’, 'நண்பன் சுழலும் படிப்பகம்’ என்றெல்லாம் சைக்கிளில் கொண்டுவந்து, மாதச் சந்தாவுக்கு வீடு வீடாகப் புத்தகங்கள் போடும் படிப்பகங்கள் புதிதாக வந்துவிட்டன. சுழலும் படிப்பகப் புத்தகங்களை வளவின் (காம்பவுண்ட்) மற்ற வீட்டில் உள்ளவர்கள் சௌகர்யமாக இரவல் வாங்கிப் போய்த் தனியாகப் படிக்க முடியாது என்பதால், ஒரு புதிய வழக்கத்தை மேற்கொண்டார்கள். 'நண்பன் சுழலும் படிப்பகம்’ நடத்துபவர், (ஓட்டுபவர் என்று சொல்வதே பொருந்தும்) எனது அண்ணனின் நண்பர், அதனால் வெள்ளிக்கிழமையே விகடனைத் தந்துவிடுவார். படிப்பதற்கு இரண்டு நாள் தவணையும் போனஸாகத் தருவார். சனிக்கிழமை ஆகிவிட்டால் போதும், மத்தியானம் நடுநாயகமாக அக்காவும் அவளைச் சுற்றி வளவின் எல்லாப் பெண்களும் தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொள்வார்கள். யாராவது ஒருவர் தொடர்கதையை வாசிக்க... மற்றவர்கள் கேட்பார்கள். ஒரு நிகழ் கலை போல பெரிய அக்கா, (குஞ்சம்மக்கா) நன்றாக ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பாள். தில்லானா மோகனாம்பாளைத் தொடர்ந்து கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி என்ற பெயரில்) 'ராவ்பகதூர் சிங்காரம்’ என்று ஒரு தொடர் எழுதி வந்தார். அதை வாசித்துக்கொண்டு இருந்தார்கள். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். 'நான் வாசிக்கிறேனே...’ என்று கேட்கவும் 'சரி’ என்று தந்தார்கள். நான் நன்றாகத்தான் வாசித்தேன். திடீரென அக்கா, ''சரி போதும்டா... நீ போய் விளையாடப் போ'', என்றாள். அவள்தான், ''ஏன், இந்த 'வேணா வெயிலில் தெருவில் விளையாடுகிறாய், என்ன நிலவா அடிக்கி...'' என்று சத்தம் போட்டு, வீட்டுக்குள் அழைத்திருந்தாள். நானே வாசிக்கிறேன் என்று அடம்பிடித்ததும் எல்லாப் பெண்களும் அர்த்த புஷ்டியுடன் சிரித்துக்கொண்டார்கள். 'அது ஏதோ பெரியவங்க சமாசாரம் வருகிற பகுதி’ என்று மர மண்டைக்கு அப்புறம்தான் புரிந்தது. (நான் அந்த ஒன்பது வயதிலேயே வெம்பிப் பழுத்தவன் என்பது அப்போது ரகசியம் - இப்போது 'பரசியம்’!)
'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...’ என்ற தாயுமானவர் வரிகளைத் தாரக மந்திரமாகக்கொண்ட விகடனில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருந்ததுஇல்லை. ரவி, ராஜு, மாலி, தாணு என்று ஓவிய மேதைகள் அலங்கரித்த விகடனில் கோபுலுதான் என் ஹீரோ. என்ன அற்புதமான படங்கள்! 'மனிதன்’, 'ஆலவாய் அழகன்’, 'தில்லானா மோகனாம்பாள்’, 'நடைபாதை’, 'மனைவியின் நண்பன்’, 'கலங்கரைத் தெய்வம்’ (25,000 ரூபாய் பரிசு பெற்ற தொடர் நாடகம் - துரோணன் எழுதியது) என்று தொடர்கதைகளில் எல்லாம் கோபுலுவின் கைவண்ணம் மிளிரும். அட்டையில் வருகிற நகைச்சுவை இன்றுகூட ரசனை மிக்கவை. 'மந்திரவாதிகள் சங்கம்’ என்று ஒரு போர்டு தொங்கும். நிலை, தூண், படிகள் எல்லாம் இருக்கும். ஆனால், கதவுக்குப் பதிலாக வாசல்போல் பூசப்பட்ட, ஒரு சுவர் மட்டுமே இருக்கும். மந்திரவாதிகள்தானே, கதவே இல்லாமல் உள்ளே போய்விடுவார்கள். சொல்லுவதற்கு இவ்வளவு சிரமமாக இருக் கிறது. ஆனால், கோபுலுவின் குறைவான கோடுகள், சிரிக்காதவனையும் சிரிக்க வைத்துவிடும். முட்டாளைக்கூட யோசிக்க வைத்துவிடும். விகடனை விரித்தவுடன் முதல் பக்கத்தில் நீளவாக்கில் அரைப் பக்கத்துக்கு மூன்று கட்டமாகப் பெரும் பாலும் 'வசனமே’ இல்லாத 'ஜோக்’ ஒன்றைத் தவறாமல் கோபுலு தீட்டுவார்.
அதில் முதல் கட்டத்தில், தூரத்தில் ஒரு மலை, அதற்கான பாதை ஆரம்பத்தில் 'எதிரொலி மலை’ என்ற போர்டு தொங்கும்... இரண்டாம் கட்டத்தில் ஒருவன் அதை வியப்பாகப் பார்த்த வண்ணம், 'இப்போது மணி ஒன்பது’ என்று சத்தமாகக் கூவுவான். மூன்றாவது கட்டத்தில், மலை எதிரொலிக் கும்... 'இப்போது மணி ஒன்பது ஒன்று...’ என்று. இதெல்லாம் அற்புதமான, ஆங்கில நகைச்சுவைக்கு ஒப்பானது. இன்னொன்றில் முதல் கட்டத்தில் 'ரோடு ரிப்பேர்’ என்று ஒரு போர்டு, ரோட்டுக்கு நடுவில், வழியை மறைத்துத் தொங்கும். அடுத்த கட்டத்தில் போர்டு உடைந்து கீழே விழுந்துகிடக்கும். மூன்றாம் கட்டத் தில் புதிய போர்டு மாட்டி இருக்கும். அதில் எழுதி இருக்கும் 'போர்டு ரிப்பேர்’ என்று!
இதெல்லாம் எப்படி நினைவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதில் அநேகமானவற்றை அநேகமானவர்கள் 'சுட்டு’ - தினத்தந்தியில் தினமும் வெளிவரும் 'சிரிப்புப் படம்’ பகுதியில் 'மேற்கண்ட சிரிப்புப் படத்துக்கு வசனம் தேவையில்லை’ என்று போட்டு ஐந்து ரூபாய் பரிசும் பெற்றுவிடுவார்கள். (ஹி...ஹி... அந்த அநேகரில் நாங்களும் அடக்கம்!)
தேவனின் சொற்களை உள்வாங்கி கோபுலுவின் தூரிகை தீட்டிய துப்பறியும் சாம்புவைப் பார்த்து நகைக்காதவர் யார் இருக்க முடியும்? நகைச்சுவை என்று இல்லை... ஜெயகாந்தனின் 'பாரிஸுக்குப் போ’ சாரங்கனும், 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ ஹென்றியும், அந்தந்த குணாதிசயங்களை உள்வாங்கிக்கொண்ட மறக்க முடியாத சித்திரங்கள் அல்லவா! சாவியும் கோபுலுவும் இணைந்து கலக்கிய தொடர்கள் ஒன்றா இரண்டா? 'விசிறி வாழை’ போன்ற சீரியஸான தொடர் ஆகட்டும். 'வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவைத் தொடர் ஆகட்டும், என்ன ஓர் இணைவு. சாவி, 'இங்கே போயிருக்கிறீர்களா?’ என்று ஒரு பயணத் தொடர் எழுதி வந்தார். அதில் போட்டோ எல்லாம் கிடையாது. அவர் போகிற இடங்களுக்கு எல்லாம் அவருடன் செல்லுகிற கோபுலுவின் 'கண்கள்’தான் கேமரா. நடுப் பக்கத்தில் 'கோட்டோவியங் களாகத் தீட்டித் தள்ளியிருப்பார். 'மாதுங்கா தமிழர் காலனி’, 'நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்’ அல்லது 'கோலார் தங்கச் சுரங்கம்’ என்று வாராவாரம் ஒரு விசிட். அதில் கோலார் விசிட் சித்திரங்கள் ஒன்றில் கோபுலு, சுரங்கத்தை வேடிக்கை பார்க்கிற, கோபுலுவையே, அதாவது தன்னையே, வரைந்திருப்பார். அப்பா... அற்புதம். (சார், அதெல்லாம் இருந்தால் பொக்கிஷத்தில் போடுங்களேன்!) அது போக, 'கேரக்டர்கள்’ என்று ஒரு தொடர். 'அப்பர் பெர்த் அண்ணாசாமி’ என்று மாநகரத்தின் அபூர்வ கேரக்டர்களை எல்லாம் கேரிகேச்சராக எழுதியும் வரைந்தும் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.
சாவிக்கு கோபுலு என்றால், மணியன் கதைகளுக்கு மகாதேவன் என்கிற 'மாயா’வின் படங்கள் அழகூட்டும். 'காதலித்தால் போதுமா’ தொடர்கதையின் வெற்றிக்கு மாயாவின் வாஷ் டிராயிங் படங்கள் அதிகப் பங்கு அளித்தன. டபிள்யூ ஆர்.ஸ்வர்ணலதா என்ற பெயரில் எழுதி, விகடனில் வெளிவந்த 'தெருவிளக்கு’ கிரைம் தொடர்கதையும் அதற்கு மாயாவின் படங்களும் எங்கள் பள்ளிப் பருவத்தில் ஒரு 'ஹாட் டாபிக்’. அதில் வருகிற டி.எஸ்.பி. ஒருவரின் முகமும், சிறுவனின் முகமும் இன்றைக்கும் நினைவு இருக்கிறது. பிலஹரியின் கதைகளுடன் அவரது 'நெஞ்சே நீ வாழ்க’, ஒரு பிரமாதமான நாவல். ஆலயம் என்ற பெயரில் பீம்சிங் அதை சினிமாவாக ஆக்கியிருந்தார். முத்திரைக் கதைகளுக்கு 'சிம்ஹா’ ஓவியங்கள் வரைவார்.
விகடனில் சினிமா விமர்சனங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அன்றைக்கும் சரி... இன்றைக்கும் சரி... விகடனின் மதிப்பெண்ணுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரைத் துறையினர் மத்தியிலும் தனி மரியாதை உண்டு. அந்த நாட்களில் சினிமா விமர்சனத்தை இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வதாக எழுதி இருப்பார்கள். எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் முனுசாமி- மாணிக்கம். சிவாஜி, ஜெமினி படங்கள் என்றால் சேகர் - சந்தர், தெய்வப் பிறவி, படிக்காத மேதை போன்ற கே.எஸ்.ஜி. டைப் படங்கள் என்றால், சண்முகம் பிள்ளை மீனாட்சியம்மாள்... என்று இருவர் பேசிக் கொள்வதாக விமர்சனங்கள் வரும். நாடோடி மன்னன் பட விமர்சனத்தின், கடைசிப் பகுதியில் முனுசாமி சொல்லுவார். 'தம்பி, இந்தப் படத்தைப் பார்க்காதே’ என்று.
'ஏன் அண்ணே?’ என்று கேட்கும் மாணிக்கத்திடம், 'ஒரு தடவை பார்த்தால், இன்னொரு தரம் பார்க்கச் சொல்லுமப்பா...’ என்று சொல்லுவார்.
நுணுக்கத்துக்கும் விகடன் விமர்சனக் குழுவுக்கும் அப்படி ஒரு பொருத்தம். கலைஞரின் 'பூம்புகார்’ பட விமர்சனத்தில் ஒரு பாடலின் வரியில் வரும் யாருமே கண்டுகொள்ள முடியாத குறை ஒன்றைச் சுட்டியிருப்பார்கள். கோவலனும் மாதவியும் பாடுவதாக ஓர் பாடல். அதன் பல்லவியில் 'என்னை முதன்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்...’ என்று கோவலன் கேட்க, மாதவி, 'நான் உன்னை நினைத்தேன்...’ என்று பாடுவார். பாட்டின் போக்கில் அதையே மாதவி கேட்க... கோவலன், 'நான் உன்னை நினைத்தேன்’ என்று பாடுவார். ஆனால், கதைப்படி கோவலன் மாதவியைப் பார்த்தவுடனேயே ஆசைகொள்ள மாட்டார். சத்தியமாகச் சொல்லுகிறேன். இதை யாருமே கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். விகடன் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இப்போது எல்லாம் பாடலின் வார்த்தைகள் காதில் விழுந்தால்தானே 'லாஜிக்’கைப்பற்றிப் பேச முடியும்!
இந்த 40 வருட வாசகனுக்கு, ஒருநாள் விகடன் ஆசிரியர் குழுவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. ஜூனியர் விகடனில் 'காதல் படிக்கட்டுகள்’ தொடருக்கு நீங்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டு... 'இப்படியரு பகுதி தொடங்குவதுபற்றியும் அதில் யார் யாரை எல்லாம் எழுத வைக்கலாம் என்பதுபற்றியும் விவாதித்தபோது, ஒட்டு மொத்தமாக ஆசிரியர் குழுவும் சிபாரிசு செய்த பெயர் உங்களுடையதுதான்’ என்று எழுதியிருந்தார்கள். என் காதலே விகடனில் நான்

அறிமுகமாவதற்கான பலமான படிக்கட்டாக அமைந்தது, எனக்குத் தந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அதில் இருந்து இந்த பதினான்கு வருட விகடனுடனான என் உறவு எந்த நிபந்தனையும் சமரசம் இன்றி, வனவாசம் புகாமல், வளர்ந்துகொண்டே வருகிறது. நான் என்றில்லை, தமிழுக்கு வளம் சேர்க்கிற எந்தத் தலைமுறை எழுத்தாளரையும், ஆதரிக்க விகடன் தவறுவதே இல்லை. விகடன் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக்கொள்பவன் என்பதையே இது காட்டுகிறது.
'தாங்கள் இன்னும் நேர்மையாகவும் முழுமையாகவும் இல்லை என்பதை உணர்பவர்களே, உண்மையில் நேர்மையாகவும் முழுமையாகவும் இருப்பவர்கள்’ என்பார்கள். அது விகடனுக்குத்தான் பொருந்தும். இன்னும் முழுமை, இன்னும் நேர்மை, இன்னும் புதுமை என்று விகடன் நடை போட்டுக்கொண்டு இருக்கிறான்!''