
கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்
ஒரு கத சொல்லுவாக ஊருல
எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாகளாம். பாவம் பண்ணுன ஆளுக இடப்பக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வலப்பக்கம் நிப்பாகளாம்.
புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துக்குப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.

பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையையும் புடிச்சு 'வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கிற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்; பாம்புப் புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்; எரியிற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.
இப்பிடி எமதர்மன் 'நல்லாட்சி’ நடத்தி வந்த காலகட்டத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.
அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்துப் பாத்தா, அது போகுதாம் லட்சக்கணக்குல.
எமதருமருக்குத் தல சுத்துது; கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.

கொப்பர கட்டுபடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?
அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலு மாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப்பசுமாடுக வேல நிறுத்தமாம்.
புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசன கேக்கறது?
சிவபெருமானைக் கேக்கலாம்னா, மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட மனத்தாங்கல் இன்னும் தீரல.
விஷ்ணுவப் போய்க் கேட்டு வரலாம்னா, நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா, அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரிய மாட்டேங்குது.
ஒண்ணும் புடிபடல எம தருமருக்கு.
பாசக்கயித்துல அவரா முடிச்சுப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.
திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா -வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டு கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டிருக்காரு நாரதரு.
'வாய்யா வாய்யா’ன்னாரு எமதருமரு.
வந்தாரு நாரதரு.
''எனக்கொரு பிரச்சின...'' இழுத்தாரு எருமைக்காரரு.
''என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?''
''அட, அதில்ல நாரதரே. பாவக்கணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்.''
''அட, நீங்க ஒண்ணு... இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வளவுதான? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பிவச்சீங்கன்னு வச்சுக்குங்க - வேலை முடிஞ்சது.''
''ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும்போல இருக்கு''ன்னு எந்திருச்சாரு எமதருமரு.

தம்புராவத் தவறவிட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.
நாரதர் சொன்ன யோசனப்படி, இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது - இன்னைக்கு வரைக்கும் நின்னபாடில்ல.
ஏற்கெனவே மழை இல்ல - தண்ணி இல்ல - உழுக மாடில்ல - ஒண்ட நெழல் இல்ல. வயித்துல ஈரத் துணியக் கட்டிப் படுத்திருக்கான் வெவசாயி. இந்த லச்சணத்துல கெணத்துத் தண்ணி ரத்தமா ஒழுகுதுன்னா... வகுத்துல தீப்புடிக்குமா புடிக்காதா?
கருத்தமாயி கெணத்துல ரத்தம்னு சேதி கேட்டதும் எல்லாரும் அவுகவுக கெணத்த எட்டி எட்டிப் பாத்துருக்காக.
''யாத்தே என் கெணத்துலயும் ரத்தம்...'' நெஞ்சிலடிச்சு ஓடி வந்தா ஒத்த வீட்டு மூளி.
''ஆமாப்பா என் கெணத்துலயும் செகப்பா ஒழுகுதப்பா...'' கட்டாப்பு வழியாக் கத்தி வாராரு கெடாவீரன்.
கருத்தமாயி கெணத்தச் சுத்தி ஹே... ஹேன்னு கூடிருச்சு கூட்டம்.
எல்லாரும் எட்டி எட்டிப் பாக்குறாகக் கெணத்துக்குள்ள. கெணறு பழைய கெணறு; சுத்தி முள்ளு மண்டிக்கெடக்கிற மொட்டக் கெணறு.
தென்மேற்கு மூலையில மொத்தம் மூணு ஊத்து. அதுல ஒண்ணு - எப்பவும் காசு கேட்டுக் கண்ணக் கசக்கற சவலப் புள்ள மாதிரி - தண்ணி வந்தும் வராம ஒழுகிக்கிட்டிருக்கும்.
கடன் கேட்டுப் போனா, சில கஞ்சப் பயலுக சலசலன்னு பேசிக்கிட்டேயிருந்துட்டுக் கடைசியில கைய விரிச்சிருவாக பாருங்க - அந்த மாதிரி ரெண்டாம் ஊத்து. சத்தம் மட்டும் வரும்; சலவை வராது.
மூணாவது ஊத்து இருக்கே - பொட்டச்
சிக்குப் பொறந்த வீட்டுச் சீதனம் மாதிரி. செழிப்பான காலத்துல மூட்ட மூட்டையா வரும். பஞ்ச காலத்துல பையிலயாவது வந்து சேந்துரும்; வராம இருக்காது.
இப்ப மூணும் ஒழுகுது செக்கச் செவேர்னு.
''அழியப்போகுதா உலகம்? அறிகுறி காட்டறாளா ஆத்தா பூமாதேவி?''
''பட்டாளம்மன் கோயில் மரத்துல இடி விழுந்தப்பவே சொன்னேன்... சாமி குத்தம் ஆகப் போகுதுன்னு... ஆயிருச்சா இல்லையா?
''இனி வெவசாயம் பண்ணி வெளங்கிரும்.''
''வெளச்சல் இருந்தா, வெலை இருக்காது; வெலை இருந்தா, வெளச்சல் இருக்காது. காசு இருந்தா, ஆள் கெடைக்காது; ஆள் கெடைச்சா, காசு இருக்காது; கரண்டு இருந்தாத் தண்ணி இருக்காது; தண்ணி இருந்தாக் கரண்டு இருக்காது. இந்த லச்சணத்துல கெணறு வேற ரத்தக் கண்ணீர் வடிச்சா எந்தக் கோயில்ல போயி சூடம் காமிக்கிறது? எடஞ்சல் மேல எடஞ்சலாகிப் போச்சேப்பா கலப்(¬)ப புடிச்சவன் பொழப்பு.''
ஆளாளுக்கு ஒண்ணு சொல்ல அது வரைக்கும் பொறுமையா இருந்த கருத்தமாயி பொசுக்குன்னு கோபிச்சுட்டாரு:
''ஏலே கிழிஞ்ச வாயா! எடஞ்சல் இல்லாத பொழப்பு எங்க இருக்கு? சும்மா பழத்த உரிச்சு வாய்க்குள்ள வச்சுவிட்டுப் போயிருமாக்கும் கடவுளு? தேனை எங்க கொண்டு வச்சிருக்கு தேனீ? எடஞ்சல்லதான். தங்கத்த எங்க வச்சிருக்கு பூமி? எடஞ்சல்லதான். ஆம்பள பொம்பள சொகத்த எங்க வச்சிருக்கான் ஈசன்? எடஞ்சல்லதான். ஆணியாப் பொறந்துட்டம், அடிபடாமத் தப்பிக்கவா முடியும்? பலிச்சளவுக்குப் பாப்பமப்பா'' அதட்டி ஆறுதல் சொன்னவர், ''ஏலே சின்னப்பாண்டி எறங்குடா கெணத்துல''ன்னு பெருஞ் சத்தம் போட்டார்.
கெணத்துமேட்டுப் பூவரச மரத்துல ஒரு கயித்தக் கட்டி சரசரன்னு எறங்கிட்டான் சின்னப்பாண்டி. கால் ரெண்டையும் மோட்டார் பைப்பு மேல கவட்டை போட்டுப் பின்னிக்கிட்டு, ஒரு கையில கயித்தப் புடிச்சு மறுகையில புடிச்சுப் பாத்தான் ஊத்துத்தண்ணிய. பிசுபிசுன்னு இருந்துச்சு; ஆனா ஒட்டல கையில. லேசா மோந்து பாத்தான்.
''ச்சீ... கெட்ட வாடை வீசுதே.''
காஞ்சும் காயாத ஈரத் துணியப் பொட்டிக்கு அடியில மடிச்சு வச்சிருந்து ஏழெட்டு நாள் கழிச்சுப் பிரிச்சுப் பாத்தா - குப்புன்னு ஒரு வாடை வந்து கொமட்டுமே? அப்பிடி வீசுது.
இது ரத்தமில்ல, வேற என்னான்னு தெரியலையே! பாம்பு மாதிரி வாய்க்கு வெளிய நாக்கை நீட்டி நுனி நாக்குல ரெண்டு சொட்டு விட்டுப் பாத்தான். ஒரு ருசியும் தெரியாம மதமதன்னு ஆகிப் போச்சு நாக்கு. உள்ளங்கையில புடிச்ச தண்ணிய ஒழுகவிட்டுப் பாத்தா சிவீர்னு செவப்பு நெறம் மட்டும் ஒட்டி நிக்குது உள்ளங்கையில. அதையே கொஞ்சநேரம் உத்துப் பாத்தவனுக்குப் பொட்டுன்னு பொறிதட்டிப் போச்சு நெத்தியில.
கிணத்துல விழுந்த அணிலு தடதடன்னு தவ்வித் தரைக்கு வார மாதிரி மேல வந்துட்டான்.
''ஏலே அய்யா சின்னப்பாண்டி! என்னடா ஆச்சு?''
''இங்கேயே இருங்க இந்தா வந்துர்றன்.''
தோட்டத்துக்குத் தெம்பக்கம் ஊரை ஒட்டிக் கழிவு தண்ணி வாய்க்கா ஒண்ணு ஓடுது காலங் காலமா. தக்காளிச் செடிய மிதிச்சுக்கிட்டு வரப்போரமா நட்டு வச்சிருக்கிற ஆமணக்கங்குட்டிகள ஒடிச்சுக்கிட்டு ஓடறான் பய தல தெறிக்கக் கழிவு வாய்க்காப் பக்கமா. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அஞ்சே நிமிசத்துல திரும்பி வந்தான்.
''தெரிஞ்சுபோச்சப்பா. தெரிஞ்சுபோச்சு.''
கெணத்தடியில கூடி நிக்கற ஒரு அறுப்பாளுக் கூட்டமும் அவன் மூஞ்சியவே 'ஆ’ன்னு பாத்து நிக்குது.
''கெணத்துல வடியிறது ரத்தமுமில்ல; சாமி குத்தமுமில்ல. கரட்டுல மில்லுக் கட்டியிருக்காகல்ல... மில்லு. அவுக சாயத் தண்ணியக் கழிவுவாய்க்கா வழியாக் கடத்திக்கிட்டிருக்காங்க. அந்தக் கழிவு தண்ணிதான் கசிஞ்சு கசிஞ்சு நம்ம கெணறுகள்ல செந்தண்ணியா எறங்குது.''
''சரியாப்போச்சு. அந்த செவப்புத் தண்ணியத்தான் நான் ரத்தம்னு நெனச்சிட் டேன் போலயிருக்கு'' ஓங்கி இழுத்து ஒரு பெருமூச்சு விட்டா ஒத்த வீட்டு மூளி.
''நல்லவேளை... கெணறு வீட்டுக்கு விலக்காகிப் போச்சுன்னு சொல்லாமப் போனியே'' அவ காதுக்குள்ள சொல்லிப் பொக்கைவாய்க்குள்ள அவளாச் சிரிச்சுக்கிட்டா வெத்தலக் கிழவி.
''ஏப்பா சின்னப்பாண்டி! இத இப்பிடியே விட்டாப் பெரிய பாதிப்பாகிப் போகுமா இல்லையா?''
''ஆகும். மொதல்ல தண்ணி தண்ணியா இருக்காது. அப்பறம் நெலம் நெலமா இருக்காது.''
கசமுச கசமுசன்னு பேசுது கூட்டம்.
''இது என்னப்பா இது! நெனப்புல மண்ணு விழுந்துருச்சே. மில்லு வந்தாக் குடிக்கக் கஞ்சி கெடைக்கும்னு சொன்னாக. இப்பக் குடிக்கத் தண்ணி கெடைக்காது போல இருக்கே.''
''யப்பா... நமக்கு ரெண்டே சாமி. மேல ஆகாயம்; கீழ பூமி. ஒண்ணு தண்ணி; ஒண்ணு மண்ணு. ரெண்டு சாமிக்கும் மோசம் வந்துருச்சுன்னா, ஊர்ல குடியிருக்க முடியுமா?''
''இது அரசமரத்துல கூடிப் பஞ்சாயத் துல பேசற விசயம் இல்லப்பா. பாம்பு குட்டியா இருக்கறப்பவே கொல்லணுமா இல்லையா? வாங்கப்பா மொத்தமா மில்லுக் குப் போயி மல்லுக்கட்டுவம்.''
''ஏய்... எதுக்கும் கெழமை, நாளு, கெடுன்னு இருக்கப்பா. மொதல்ல பஞ்சாயத்து மூலமாச் சொல்லி அனுப்புவோம். அய்யா! பூமி பெறந்த நாள்ல இருந்து எங்க ஊர்ல மாடு கன்னு செத்திருக்கு; மரம் மட்டை செத்திருக்கு; மனுசன் செத்திருக்கான். ஆனா மண்ணையும் தண்ணியையும் மட்டும் நாங்க சாகவிட்டதில்ல. கொன்டுபுடாதீங்க சாமின்னு கும்பிட்டுக் கேட்டுப் பாப்போம். கேட்டாப் பாப்போம், இல்லேன்னா - கடப்பாரை புடிச்ச கைக்குக் கத்தி புடிக்கவா தெரியாது. போங்கய்யா போங்க, போயிட்டு வாங்க.''
கருத்தமாயி கையெடுத்துக் கும்பிடவும் கசகசன்னு பேசிக்கிட்டே கலைஞ்சு போனாக ஆளுக.
அதுவரைக்கும் அங்க கூடாரம் கட்டி ஒக்காந்திருந்த சத்தம் கொஞ்சம் கொஞ்ச மாய் பிரிஞ்சிருச்சு.
சலசல... சலசல... சலசல... சலசல...
கெணத்துக்குள்ள செந்தண்ணி விழுகுற சத்தம் மட்டும் கெட்டியாக் கேட்டுக்கிட்டே யிருந்துச்சு.
கலஞ்சுபோன கூட்டத்துல மூஞ்சி தெரியாத ஒரு குரல் சொல்லிட்டுப் போச்சு: ''என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தானப்பா. ஏ தக்குறிகளா! இதான் விவரம்னு கணக்காக் கண்டுபுடிச்சுச் சொல்லிட்டான்ல சின்னப்பாண்டி. கருத்தான பயலப் பெத்திருக்காரப்பா கருத்தமாயி!''
காது குளுந்துபோனாரு கருத்தமாயி.
ஆள் காட்டி வெரல அணவு கொடுத்து எடப்பக்கமும் வலப்பக்கமும் மீசைய ரெண்டு மூணு நீவு நீவி, தலையில கட்டியிருந்த உருமாலை அவுத்து ஒரு ஒதறு ஒதறித் தோள்ல மாலையாப் போட்டுக்கிட்டாரு மாப்ள மாதிரி.
படிச்ச மக்க பெருமையப் படிக்காதவன் கொண்டாடற மாதிரி படிச்சவன் கொண்டாடறதில்ல.
ஒரு பரீட்சை எழுதிட்டு லீவுல வந்திருக்கிற மகனத் தடவித் தடவிப் பாக்கிறாரு தகப்பன்.
மூஞ்சி - அவர் மூஞ்சி; நெறம் அவங்கம்மா நிறம் - மாநிறம். படிச்ச பளபளப்பு லேசாப் படந்து நிக்குது தேகத்துல. முண்டா பனியன் போட்ட அவன் தோள வச்ச கண்ணு மாறாமப் பாத்துப் பாத்துப் பூரிச்சுப் போறாரு. அஞ்சாறு பால்மாடு வச்சிருந்த அந்தக் காலத்துல எங்காத்தா தயிரு கடையறப்ப சும்மா விறுவிறுவிறுன்னு தெரண்டு வருமில்ல வெண்ணெ அப்படியில்ல ரெண்டு தோளும் திரண்டு நிக்குது எம் பிள்ளைக்கு. ஐப்பசி, கார்த்திகையில அருகம்புல்லு தழவு எடுக்கற மாதிரி படந்து வருதய்யா பயபுள்ளைக்கு மீச. கல்லுல செதுக்கி வைப்பாங்கல செலைகாரங்க அப்பிடி ஒரு மூக்கு நான் பெத்த பிள்ளைக்கு. என்னா ஒண்ணு...
கண்ணு கொஞ்சம் சின்னது. ஆனா, பய முழியில ஒரு ஒளி இருக்கே... வேட்டைக்குப் போகையிலே லைட் அடிச்சாக் கண்ணு மின்னி நிக்குமா இல்லையா காட்டு மொச? அப்படி ஒரு பளபளப்பு இந்தப் பாவிப்பய மகனுக்கு. கைலிவேட்டி கட்டி நின்னாலும் களையாத்தான் இருக்கான் பய.
மகனையே குறுகுறுன்னு பாத்த கருத்தமாயி கண்ணுல விறுவிறுன்னு கண்ணீரு ஊறுது.
''ஏ என்னப்பா இது! ஏன் கண்ணு கலங்குது?''
கிட்ட வந்து அப்பன் கைரெண்டையும் கெட்டியாப் புடிச்சான் சின்னப்பாண்டி, சுக்காம்பாறை மாதிரி சொரசொரன்னு இருந்துச்சு கருத்தமாயி கையி.
''அய்யா ராசா சின்னவனே... பெருமையா இருக்குடா... நீ என் பேரைக் காப்பாத்திருவடா. எத்தனையோ மேடு பள்ளம் தாண்டிட்டேன். பாக்காத எடத்தயும் பாத்துட்டு வந்துட்டேன். மத்தவகளுக்குப் பாடுபட்டுப் பாடுபட்டே ஒடம்பு அத்துப் போச்சு; உசுரு இத்துப்போச்சுடா பாண்டி. நான் இன்னமும் நம்பறது ஒன்னையும் இந்த மண்ணையும்தான்டா மகனே.''
கீழ குனிஞ்சாரு. செக்கச் செவேர்னு கெடந்துச்சு ஒரு செம்மண் உருண்டை. உள்ளங்கையில வச்சு ஒரு நசுக்கு நசுக்குனாரு. அது பொலபொலன்னு உதுந்துச்சு பொடிப் பொடியா. உதுந்த மண்ண பூமியில ஒழுகவிட்டுக்கிட்டே சொல்றாரு:
''இந்த மண்ணுதான்டா... எங்கப்பனுக்கும் ஒங்கப்பனுக்கும் கஞ்சி ஊத்துனது இந்த மண்ணுதான்டா; ஒங்காத்தாங்கற ஒரு பொம்பளைய இந்த வெறும்பயல நம்பி வரவச்சதும் இந்த மண்ணுதான்டா; உங்கண்ணனப் படிக்கவச்சதும் கல்யாணம் பண்ணினதும். ஒந்தங்கச்சியக் கரை சேத்ததும் - இப்ப ஒன்னிய நாலெழுத்துப் படிக்கவைக்கிறதும் இதே மண்ணுதான்டா... இது பரம்பரை பூமிதான்; ஆனா பத்திரம் நம்ம கையில இல்லடா மகனே. அதை மட்டும் மீட்டுக் குடுத்துடறா; என் உள் கூட்டுல கெடந்து துடிக்கிறது ஒரே ஒரு ஆசதான்டா.''
மகன் தோள்ல கை வச்சாரு; ஆசையா அழுத்துனாரு.
அவர் சொல்ல வாயெடுக்கு முன்ன காடுவெளி கிழியக் கத்துறா சிட்டம்மா:
''ஏலே சின்னப்பாண்டி! தக்காளிக்குப் பொ(¬)க போட்ட சட்டி ஆறி அமந்து அனாதையாக் கெடக்குடா. வேலைய விட்டுட்டு வெட்டிப் பேச்சு வேணாம்னு சொல்லிப்புடு.'' ஆத்தா பக்கம் திரும்பி 'இந்தா வந்துர்றோம்’னு கத்திச் சொன்ன வன், தணிஞ்ச குரல்ல அப்பனைப்பாத்துக் கேக்கறான்: ''என்னமோ ஆசைன்னையே... நீ சொல்லப்பா.''
''வா சொல்றேன்'' கிணத்துக்கு நேர வடகிழக்கா நடந்து ஈசானிய மூலைக்கு வந்தாரு; எல்லை முடியற இடத்துல நின்னாரு.
அங்க ரெண்டு தேக்கு மரமும் ஒரேயரு புங்க மரமும் ஒரே வரிசையில பசபசன்னு வளந்து நிக்குதுக.
சந்தனம் பூசிப் பொட்டு வச்சிருக்காரு ஒரு தேக்கு மரத்துக்கு; சந்தனம் குங்குமத் தோட ஒரு சுத்துப் பூவும் கட்டிவிட்டுருக்காரு மத்த ரெண்டு மரத்துக்கும். மூணு மரத்தை யும் தொட்டுத் தொட்டுப் பாத்தாரு; கட்டிப் புடிச்சாரு; கண்ணும் கலங்குனாரு.

''மகனே சின்னப்பாண்டி! இப்பச் சொல்றன்டா என் ஆசைய. நான் சொந்த வீட்டுல சாகணும். என்னிய இந்தச் சொந்த மண்ணுல புதைக்கணும். இந்த ஆசய ஒங்கிட்ட மட்டும் சொல்லலப்பா... நம்ம வம்சத்தையே வச்சுச் சொல்லியிருக்கேன். ஏன்னா, இந்த மரம் மூணும் மரமில்லடா மகனே... இந்த ரெண்டு தேக்கு மரமும் உன் தாத்தனும் உன் பாட்டியும். இந்தப் புங்க மரம் இருக்கே இது என் தங்கச்சி - உன் அய்த்தடா.''
சொல்லி முடிக்குமுன்ன சொல்லொடஞ்சு போனாரு. சும்மா கட்டி ஏறுது கண்ணீரு. அடிச்ச காத்துல அந்த மூணு மரங்களும் ஒரு ஆட்டம் ஆடி 'ஹோ’ன்னு பெருங்குரலெடுத்துப் பேசுதுக.
மூணு மரமும் சேந்து ஒரே கத சொல்லுதுக. அது ஒரு பெருங்கொண்ட கத.
- மூளும்