மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 27

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

குற்றுக் கருவேல மரங்களும், காய்ந்த புற்களும் செறிந்துகிடந்த அந்தச் சமவெளிக் காட்டின் காலை அமைதியை, வலிக்காமல் வருடிக்கொண்டிருந்தது காற்று. சிங்கம், முள்ளம்பன்றி, சிறுத்தை போன்ற முரட்டு விலங்குகள் வேட்டைக்குப் பின்பான ஓய்வில் இருந்தன. புள்ளினங்கள் சிறகடிக்க, இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். மான்கள், படுத்தபடி வாய் அருகே இருந்த வசதியான புற்களை வெறுப்பாகக் கொறித்தன. காட்டின் கடிகாரமே மெதுவாக ஓடியது.

இயற்கையின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் செரங்கட்டி வலசைப் பகுதி அது. ஆப்பிரிக்காவின் 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் காட்டுவளம். தான்சானியாவில் இருந்து கென்யா வரை பரவிய பச்சைத் திட்டு.

பெண் சிங்கம் ஒன்று, தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் இன்னும் சில பெண் சிங்கங்கள். சற்று தூரத்தில் பிடறியை அடிக்கொரு தரம் உலுக்கியபடி, சினிமாவில் வரும் தசரத மகாராஜா மாதிரி இருந்தது கணவன் சிங்கம். தங்களின் அனகோண்டா கழுத்துகளால் பிணைந்தபடி இருந்தன சிவிங்கிகள். பைஜாமா போட்ட வரிக்குதிரைகள் தியானம் போல நின்றிருந்தன.

யானைகள், கழுதைப் புலிகள், வரையாடுகள்... என, சுமார் 70 வகையான பாலூட்டிகள் நீருக்காகவும் உணவுக்காகவும் காட்டின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மந்தை மந்தையாக இடம்பெயரும் இயற்கையின் விதி. 800 கிலோமீட்டர் உணவுத் தேடல். விலங்குகள், பறவைகள் எல்லாமே இயற்கையாக இருந்தன. அங்கே உயரமான ஓர் இடத்தில் மறைவாக நின்றிருந்த ஜீப்பைத் தவிர!

ஆபரேஷன் நோவா - 27

காட்டில் பயணிப்பதற்கான அந்தப் பிரத்யேக ஜீப்பில் கென்யாவைச் சேர்ந்த அபாஸியுடன் மூன்று கென்யர்கள் இருந்தனர். அந்தக் கண்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத வெளிறிய நிறத்தில் ஒருவன் மட்டும் இருந்தான்.

''பிரைவேட் ஜூ?'' - அபாஸிக்கு ஆச்சரியமாக இருந்தது.

வெள்ளைக்காரனுக்கு விவரிக்கும் நோக்கமே இல்லை. ''சிங்கம் பத்து, யானை பத்து, சிவிங்கி பத்து... எனத் தலைக்குப் பத்து வேண்டும். சிட்னி எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லியிருப்பாரே. அப்புறம் பறவைகள்... எத்தனை தினுசு இருக்கின்றனவோ அத்தனையும்...''

''அதிலும் பத்து பத்தா..! எப்படி எடுத்துச் செல்வீர்கள்?''

''அதற்குத் தனி வாகனம் இருக்கிறது.''

அபாஸிக்கு, வழக்கமாக ஏதோ காண்டாமிருகத் தோலோ, முதலைத் தோலோ கேட்டு ஆர்டர் வரும். சில வேட்டைப் பைத்தியங்கள் சிங்கத்தைச் சுட வேண்டும் என்று வெறியோடு வரும். இரவில் கிழச் சிங்கமாகக் காட்டி சுடுவதற்கு ஆவன செய்வான். அரசாங்கமே வயதான சிங்கங்களைச் சுடுவதற்கு அனுமதித்திருக்கிறது. இப்போது வந்திருப்பவன் எல்லாவற்றிலும் பத்துப் பத்து கேட்கிறான்; அதுவும் உயிரோடு. சுளையாக 100 மில்லியன் டாலர்களை மூன்று சூட்கேஸ்களில் போன வாரமே கொண்டுவந்து இறக்கிவிட்டான். அத்தனையும் சலவை சுத்தமானவை!

'வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்!’ என்று சொல்லியிருந்தான். அபாஸியுடன் வந்த கென்யர்கள் சாயம் போகாத காட்டுவாசிகள். மோப்பம் பிடித்தே அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வருவது சிங்கமா, நெருப்புக்கோழியா என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

''ஆரம்பிக்கலாமா?'' என்றான் வெள்ளையன்.

அபாஸி, கட்டை விரலை உயர்த்தினான்.

பேட்டரி சக்தியில் அந்த ஜீப் சத்தம் இல்லாமல் புறப்பட்டது. விலங்குகளுக்கு, சத்தத்தை மீறி வேறு ஏதோ உள்ளுணர்வு எச்சரித்திருக்க வேண்டும். மிரண்டுபோய் தலையை உயர்த்திப் பார்த்தன. வெள்ளையனின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து மயக்க ஊசி குண்டுகள் சீறின. சிங்கங்கள், வரிகுதிரைகள், மான்கள் எல்லாம் நான்கு கால் பாய்ச்சலில் அங்கிருந்து சிதறின.

''முதலில் சிங்கம்'' - வெள்ளைக் காரன் ஆணையிட்டான். ஜீப், சிங்கங்களைக் குறிவைத்துப் பாய்ந்தது. ஜீப்பில் இருந்து மயக்க குண்டுகள் தாக்கி விலங்குகள் பல வரிசையாக மண்ணில் சாய்ந்தன.

டந்த விஷயங்களை, மைக்கேல் ஒன்றுவிடாமல் சொன்னார்.

அகிலன், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தான். ரோஸி என்பவள் இருக்கிறாள்; ஆனால் இல்லை. அவள் பேசுகிறாள்; சிந்திக்கிறாள்; கேட்கிறாள்; ஆனால், உருவம் இல்லை. நடமாட முடியாது!

கேத்ரின்தான் அங்கு என்ன நடக்கிறது என்பதை ஓரளவுக்கு ஊகித்துச் சொன்னாள். 'செரிபுரோ ஸ்பைனல் ஃப்ளுயட்’ என்பது மூளையைச் சுற்றியுள்ள திரவம். சுருக்கமாக சி.எஸ்.எஃப். அந்தத் திரவத்தில் ரோஸியின் மூளையை மிதக்கவிட்டிருக்கிறார்கள். மூளையில் ஆக்ஸான், நியூரான்களுடன் சென்சர் முறையில் இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். ராபின் குக் நாவல் போல லட்சம் சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறனை ஒரு மூளையில் அடைக்கலாம். அதற்கு உடம்பு இல்லாமல் இருந்தால்தான் வசதி. செக்ஸ், அழகு, ஆடை, குடும்பம், அரசியல், சினிமா போன்ற குப்பைகளை அகற்றிவிட்டாலே மூளையில் நிறைய இடம் கிடைக்கும். புதிய புரோகிராம்... புதிய திறமை... புதிய லாஜிக்!

மகள் என்ற பெயரில் ஒரு மூளையைக் காட்டினால், பெற்றவன் மனம் என்ன பாடுபடும்.

மைக்கேல், நிலைகொள்ளாமல் துடித்தார். கேத்ரினும் ஆலீஸும் அவரைக் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர். க்ரீனிகள் நிறைந்த பகுதியில் அவரைப் புத்துணர்வுக்காக அமரவைத்தனர். அவருக்கு ஆத்திரம் தாளவில்லை. கேப்ரியலைக் கொல்வதா? இந்த சிஸ்டத்தைக் கொல்வதா?

அகிலன், அவரைத் தேற்றும்விதமாக, ''கேப்ரியலின் நோக்கம்தான் என்ன?'' என்று கேட்டான்.

''இரண்டு உலகங்களையும் அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கிறான். உலகை விஞ்ஞானபூர்வமாக மாற்றுவதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தது. இப்போது அதிகாரத்தை ருசிப்பவனாக மாறிவிட்டான். இது ஆபத்தானது!''

இயற்கையோடு இணைந்த விஞ்ஞானம்தான் ஜெயிக்கும். உயிர்ப்பொருளும் வேதிப்பொருளும் கைகோக்க வேண்டும். ரோஸியின் மூளையின் புரோகிராமை மாற்ற முடிந்தால்..?

கேப்ரியல் இல்லாத இந்த நேரத்தில், மத்திய கேந்திரத்தில் நுழைந்து பார்த்தால் என்ன என்பதுதான் அகிலனின் எண்ணம்.

ழீனும் கேத்ரினும், ''அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல'' என்றனர்.

அகிலனுக்கு அதுவே சவாலாக இருந்தது. எல்லாப் பூட்டுகளுக்கும் ஒரு கள்ளச் சாவி தயாராக இருக்கிறது. எல்லா சாஃப்ட்வேர்களுக்கும் ஒரு பைரேட்டட் வெர்ஷன் இருக்கிறது. சொர்க்கத்துக்குச் சவால்தான் திரிசங்கு சொர்க்கம். அகிலனுக்கு ஆவேசம் பெருகிக்கொண்டிருந்தது. எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

பரந்து விரிந்திருந்த அந்தத் தோட்டத்தில் காற்றின் சலனம் மட்டும் இருந்தது. எல்லோரும் மௌனமாக இருந்தனர். வினோதினி அங்கிருந்த தக்காளித் தோட்டத்தில் இருந்து ஒரு செடியை வேரோடு பிடுங்கி வந்தாள். செடியில் பூக்கள் காய்க்காமலேயே கருகிப்போவதைக் காட்டினாள்.

''ஏன் இப்படி ஆகுது?''

அகிலன், அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ''வேதியியலின் விபரீதம் இது...'' என்றான்.

''புரியவில்லை'' என்றாள் ஆலீஸ்.

ஆபரேஷன் நோவா - 27

''சுவர் வெடிப்புகளில் ஆலமரம் வளரும். எத்தனை முறை பிடுங்கிப் போட்டாலும் மறுபடி மறுபடி வளரும். அதற்கு, மண் தேவை இல்லை; எரு தேவை இல்லை. செடியை அழிப்பதற்காகச் சிலர் அமிலத்தை எல்லாம் ஊற்றுவார்கள். அப்போதும் செடி மீண்டும் மீண்டும் துளிர்க்கும். அதே ஆல விதையை நீங்கள் எடுத்து வந்து எரு போட்டு வளர்த்தால் பல சமயங்களில் வளராமல் போய்விடும். இயற்கை உரம் போட்டு விதைப்பதும்கூட ஒரு வகையில் செயற்கைதான்!'' - அகிலன் தீவிரமாக எதையோ சொல்ல ஆரம்பித்தான்.

''சுவர் வெடிப்பில் வளர்ந்த ஆல விதையை யார் போட்டார்கள்? ஒரு பறவையின் எச்சத்தில் இருந்து அது வந்திருக்கும். ஆசிட் ஊற்றினாலும் சாகாவரம் அந்த எச்சத்தில்தான் இருக்கிறது.''

என்ன சொல்லி முடிக்கப்போகிறான் என்ற ஆர்வத்தில் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

''நமக்கு நம் தாவரங்கள் வேண்டுமானால் நம் உயிரினங்கள் வேண்டும். ஒரு விதையில் இருந்து மீண்டும் மீண்டும் விதைகள் எடுப்பதால், அதன் வீரியம் குறைந்துகொண்டிருக்கிறது. இயற்கை உரங்கள் வேண்டும். விலங்குகள் வேண்டும்!''

புல்தரையில் சாய்ந்திருந்த மைக்கேல் சுதாரித்து எழுந்தார். ''ஓ... அதனால்தான் விலங்குகள் ஒரு லோடு ஏற்றி வர வேண்டும் என்றானா?'' என்றார்.

''யார்?'' என்றான் அகிலன்.

''கேப்ரியல்தான். நோவா செய்கிற எல்லா வேலைகளையும் செய்கிறான். ஆனால், நோக்கம்தான் வேறாக இருக்கிறது!''

மைக்ரோசாஃப்ட் ஆசாமிகள், சினிமா நட்சத்திரங்கள், வனவிலங்குகள்... பாரபட்சம் இல்லாமல் எல்லாவற்றையும் சராசரியாகத்தான் பார்த்தார் கேப்ரியல். எல்லாவற்றையும் திரட்டி வருவதற்குக் கொஞ்சம் காலம் ஆகும். ரோஸியின் மூளை இணைப்புகளைப் பிரிப்பதற்கு இதுதான் சரியான தருணம். அகிலன், மனதுக்குள் தீர்மானித்தான். மைக்கேலின் கையில் கட்டியிருந்த வாட்ச் போன்ற பட்டியை வாங்கித் தன் கையில் கட்டிக்கொண்டான்.

வினோதினி எழுந்தாள். ''நானும் வருகிறேன்'' என்றாள்.

மைக்ரோசாஃப்ட் தலைமை அலுவலகம். மெலிண்டா கேட்ஸ், 'என் கணவர் எப்படி இருக்கிறார்?’ என்று நூறு முறையாவது கேட்டிருப்பார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அவர்தான் நிர்வகித்து வந்தார். அவருக்கு, கீழை நாட்டுத் தத்துவயியலில் ஈடுபாடு இருந்தது. கழுத்துக்கு மேலே பணம் புரளும் யாருக்கும் ஏற்படும் தொண்டு மனப்பான்மையும்  ஆன்மிக ஈடுபாடும் அவருக்கும் ஏற்பட்டிருந்ததில் வியப்பு இல்லை. ஆப்பிள் கம்ப்யூட்டரின் கர்த்தாக்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், அப்படித்தான் கொஞ்ச நாள் ஹிப்பியாக மாறி இமயமலை அடிவாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். மிஸஸ் பில்கேட்ஸ் அந்த அளவுக்கு இல்லை. பிலன்த்ரே£பிஸ்ட் லெவலோடு நிறுத்திக் கொண்டார்.

பில்கேட்ஸ் தந்த பட்டியலோடு மெலிண்டா முன் அமர்ந்திருந்தார் கேப்ரியல்.

அந்த அம்மாவுக்கு, கணவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதில் கவனம். 'பிரமாதமாக இருக்கிறார்; சிறப்பாக இருக்கிறார்’ என்று கேப்ரியல் விதவிதமாகச் சொல்லிப் பார்த்தார்.

''ஒரு போட்டோ எடுத்து வந்திருக்கலாமே!'' என்று கேட்டார்.

ஆபரேஷன் நோவா - 27

''புதிய கிரகத்தில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அங்கிருந்தே நேரடியாக ஒளிபரப்பும் யோசனை இருக்கிறது'' என்று ஒரு வரியில் முடித்துவிட்டார்.

மெலிண்டா, பட்டியலை நிதானமாகப் பார்த்தார். பில்கேட்ஸ் கேட்டிருந்த நபர்கள், அவர் கேட்டிருந்த மென்பொருள்கள் எல்லாமும் வேகமாகச் சேகரிக்கப்பட்டன.  100 பெடாபைட் ஹார்டுடிஸ்க்கில் ஏறத்தாழ எல்லா சாஃப்ட்வேர்களும் ஏற்றப்பட்டன.

ஜி 581 ஜி-க்கு செல்லவேண்டிய நபர்கள் வேகமாக அவரவர் வீட்டுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அலாஸ்காவுக்கு அவசர வேலையாகச் செல்வது மாதிரி கிளம்பி வந்தனர். எத்தனை செட் துணி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பலருக்கும் எழுந்த உடனடி சந்தேகம்.

எல்.டபிள்யூ சேம்பர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொட்டைமாடிக்கே வரவழைக்கப்பட்டிருந்தது. பில்கேட்ஸ் கேட்ட நபர்கள், கேட்ட பொருள்கள் எல்லாம் நேர்த்தியாக அனுப்பிவைக்கப்பட்டன.

கேப்ரியலுக்கு வந்த வேலை சீக்கிரம் முடிந்துவிட்ட திருப்தி. அடுத்தகட்ட வேலையாக கேப்ரியல் ஹாலிவுட்டுக்குக் கிளம்பினார்.

அவர் கிளம்பிய அதே நொடியில், ''மேடம் தவறு நடந்துவிட்டது'' என்று மெலிண்டாவை நோக்கி பதறி ஓடிவந்தான் சீஃப் புரோகிராமர் வித்யாதர்.-

- ஆபரேஷன் ஆன் தி வே...