மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அகோரியின் பிரசாதம்!

##~##

ப.சிவகுமார் பிரபு, திருப்பூர்-6.

பெண்கள் காலில் கொலுசு அணிவது எதற்காக?

ஒரு காலத்தில் பெண் கொலுசு அணிந்தே தீர வேண்டிஇருந்தது. அருகில்தான் அவள் இருக்கிறாள் என்பதை வீட்டுப் பெரியவர்கள் தெரிந்துகொள்ள. கொஞ்ச நேரம் கொலுசுச் சத்தம் இல்லை என்றால், 'அங்கயற்கண்ணி எங்க போயிருக்கா?’ என்று அப்பா கேட்பார். தவிர, 'காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்...’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். காதலன் வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், அவள் நடை சற்று மாறுகிறது - கொலுசுச் சத்தமும்! அதெல்லாம் போய், இப்போது கொலுசு மீண்டும் பிரவேசித்து இருக்கிறது. ஜீன்ஸ், மெல்லிய கொலுசு சகிதம் mall-ல் நடமாடும் பெண் 'டேய்... கொலுசை எங்கேயோ தொலைச்சுட்டேன்... தேடுடா!’ என்று பாய் ஃப்ரெண்டை ஏவுகிறாள். அவனும் மண்டிபோட்டுத் தேடிக் கண்டுபிடித்துவிடுகிறான்!

டி.எஸ்.பெட்ரோ, சென்னை-88.

நிர்வாணமாக இருந்த ஆதாமும் ஏவாளும் இறைவனின் ஆணையைக் கடைப்பிடிக்கத் தவறிய பின்பு, தங்கள் உடலில் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றி இருக்கும்?

ஆதாம் - ஏவாளே முதல் மனிதர்களாகக் கருதப்படும் புராணப் பாத்திரங்கள்தான். ரொம்பப் பிற்காலத்தில் ஓவியர்கள் அவர்களை வரைந்தபோது, தங்கள் ஓவியங்களை மக்கள் பார்ப்பார்களே என்று எச்சரிக்கையாக அப்படி வரைந்தார்கள். பழத்தைச் சாப்பிட்டவுடன் (ஆப்பிள் என்கிற வார்த்தையே பைபிளில் கிடையாது!) குழந்தை உள்ளத்துடன் தெய்வீகமாக இருந்த அவர்கள், சாதாரண மானுடர்களாக மாறி, புரிதல் ஏற்பட்டு... கூச்சம் எல்லாம் வந்துவிடுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்!

கண்.சிவகுமார், திருமருகல்.

பங்காளி... பெருச்சாளி பூமிக்கு அடியில் எவ்வளவு தூரம் பயணிக்கும்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹோட்டல் சர்வர் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடப்பார்? அதை எல்லாம் கூட்டி, நேரடியாக அவர் நடந்தால் அந்தத் தொலைதூரம் சென்னையில் இருந்து தாம்பரம் வரையாவது இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் நாலைந்து ஏக்கர் நிலத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு, அடியில் சிக்கலான சுரங்கப் பாதைகளை அமைத்துக்கொண்டு ('கோடௌன்’கள் உட்பட!) பெருச்சாளிகள் 'சுறுசுறு’ என்று நடமாடுகின்றன. ஏதாவது ஆபத்து என்றால், உடனே தப்பிப்பதற்கு ஏராளமான ஓப்பனிங்ஸ் வேறு!

அமெரிக்காவின் பாலைவனப் பகுதிகளில் 'கோல்டன் மோல்’ என்கிற எலி, பூமிக்கு அடியில் (வெளியே சில சமயம் 120 டிகிரி வெயில் அடிக்கும்) 'ஸ்ட்ரெய்ட்’ ஆக சுரங்கம் தோண்டும் - ஒரே இரவில் ஐந்து கி.மீ. தூரத்துக்கு. இப்போது நிறைய பெருச் சாளிகள், இங்கே இருந்து சுவிஸ் வங்கி வாசல் வரைநேராகப் பயணிக்கின்றன! (சிவா! பங்காளியாச்சே என்று பஞ்சாயத் துக்கு எல்லாம் கூப்பிட்டுக்கொண்டு இருக்கக் கூடாது!)

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

சவசாதகம் (தியானம்) பிணத்தின் மேல் அமர்ந்துகொண்டு செய்யும்போது, பிணம் வாயைத் திறக்குமாமே? பொரி போட்டால் அமைதியாக வாயை மூடிக்கொள்ளுமாமே. உண்மைதானா?

'பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’ என்கிற பழமொழி தெரியும்-பொரியா?!

அகோரிகளின் 'பூஜை’ முறைபற்றிக் கேட்கிறீர்கள். அதைப் பார்க்க நீங்கள் நடுநிசியில் காசியில் உள்ள மணிகர்ணா படித்துறைக்குப் போக வேண்டும். பொரி எல்லாம் கிடையாது. அவர்கள் வழிமுறை கொஞ்சமும் சாத்வீகமாக இருக்காது, உஷார்!

கூடிய மட்டும் இளம் பெண்ணின் பிணம் சற்று எரிந்த பிறகு, அதன் வாயைக் கிண்ணம்போலத் திறந்து எண்ணெயை ஊற்றி, திரிகள் மூலம் வாயில் அக்னி வளர்த்து, பிணத்தின் வயிற்றின் மீது அமர்ந்து, மந்திரங்கள் சொல்லி, பிறகு எரிந்து முடிந்த 'ஃப்ரெஷ்’ ஆன ஒரு மண்டை ஓட்டை எடுத்து, அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மூளைப் பகுதிகளை அகற்றாமல், அதிலேயே அரிசியை இட்டுக் கொதிக்க வைத்துக் கலந்து 'பிரசாதமாக’ உண்ணுவார்கள். பிறகு... சரி, விடுங்க... எல்லாரும் ஏற்கெனவே பேஜாராயிட்டாங்க!

சுருக்கமாக, அகோரிகள் வாழும்போதே இறந்தவர்கள். அதாவது, மரணத்தை வென்றவர்கள். ஆகவே, அச்சம் அடியோடு போய்விடுகிறது. அது ஒரு வகையான, முழுமையான துறவறம். நல்ல காலமாக, இயக்குநர் பாலா அதை எல்லாம் காட்டவில்லை!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

பிரபல பாடகி, நடிகையான 41 வயது ஜெனிஃபர் லோபஸ், இந்த ஆண்டுக்கான உலகின் 'அழகிய பெண்’ என்று 'பீப்பிள்’ இதழ் அறிவித்து உள்ளதே... எதன் அடிப்படையில் சார்?

ஜெ.லோ-வை நீங்கள் அருகில் பார்த்து இருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன் (அட, டி.வி-யில்தானுங்கோ!). 41 வயதில்  உடல் என்ன வழுவழுப்பு. ஆனால், அவர் அழகா? நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் தன் 'பின்னழகை’ மில்லியன் டாலருக்கு மேல் இன்ஷ்யூர் செய்திருக்கிறார் என்பது மட்டும் தெரியும்! (அட, ஜெயப்பிரகாஷ§க்கு ஒரு நல்ல படமா போட்டுக் காமிங்கப்பா!)